Tuesday, October 24, 2006

தொண்டையில் தண்ணி பார்க்கலாம்

இப்பதிவு எனது சித்தூர்கட் செலவு பதிவின் தொடர்ச்சி. உலகில் இது வரை நடந்துள்ள ரத்தம் தோய்ந்த யுத்தங்களுக்குக் காரணங்களாக அமைந்தவை மூன்று - மண்ணாசை, பொன்னாசை, பெண்ணாசை. இதில் கடைசியாகச் சொல்லப்பட்ட பெண்ணாசை என்பது மனிதனை எந்த அளவுக்கு மிருகமாக்கும் என்பதற்கும், பெண்ணாசை காரணமாக, பெரும் போர்கள் மூளும் போது, அந்நிலையை நமது "இந்திய பெண்மை" எவ்வாறு எதிர் கொண்டிருக்கிறது என்று அறிந்து கொள்வதற்கும் ஒரு மிகச் சிறந்த வரலாற்றுச் சான்று சித்தூர்கட் கோட்டை.


சித்தூர்கட் என்று சொன்னதும் சில வரலாற்றுப் பெயர்கள் நினைவிற்கு வரும் எனச் சென்ற பதிவில் கூறியிருந்தேன். மீரா பாயைப் பற்றிச் சென்ற பதிவிலேயே பார்த்தோம். சித்தூர்கட்டுடன் தொடர்புடைய இன்னுமொரு முக்கியமான வரலாற்று பாத்திரம் ராணி பத்மினி. 14ஆம் நூற்றாண்டில் சித்தூர்கட்டை ஆட்சி புரிந்த ராஜா ரதன்சேனின் (Ratansen) மனைவி தான் ராணி பத்மினி. சித்தூர்கட்டின் வரலாற்றில் நடைபெற்ற மிகக் கொடூரமான போர்களில் ஒன்று ஏற்படுவதற்குக் காரணமாக இருந்தவர் ராணி பத்மினி. அதன் பின்னணியில் இருந்தது ராணி பத்மினியின் 'அழகு'. எப்படிப்பட்ட அழகு என்று கூற வேண்டுமானால், நீர் எடுத்து ராணி பருகினால், தொண்டை வழியாக நீர் செல்லுவது தெளிவாகத் தெரியும் அளவிற்கு அழகு என்று கைடு கூறினார். இப்பேர்ப்பட்ட அழகிகள்(legendary beauties) என்று சொல்லத் தக்கவர்கள் மூன்று பேர் இந்திய வரலாற்றில் இருந்திருக்கிறார்கள் என்றும் கூறினார். அவர்கள் -

1. ராணி பத்மினி - இப்பதிவை எழுதிக் கொண்டிருக்கும் போது மேவார் ராஜியத்தின் வரலாற்றைக் கூறும் இத்தளத்தைக் கண்டேன். அதில் ராணி பத்மினியின் பூர்வீகம் சின்ஹல் த்ரீபம் (Sinhal Dripa எனப்படும் அக்கால இலங்கை என ஒரு தியரி குறிப்பிடப் பட்டுள்ளது). சிங்கள நாட்டு இளவரசி எவ்வாறு ராஜஸ்தான் மாநில மருமகள் ஆனாள்? இது எனக்கும் ஒரு புதிய செய்தி. எங்களுடைய கைடு இதைப் பற்றி எதுவும் சொல்லவில்லை. நீங்கள் யாராவது இதைப் பற்றி ஏதாவது கேள்விப் பட்டிருக்கிறீர்களா?

2. ராணி ரூப்மதி - ராணி ரூப்மதியைப் பற்றி நான் ஏற்கனவே கேள்வி பட்டிருந்தேன். மத்தியப் பிரதேசம் மாநிலம் இந்தூரிலிருந்து 120 கி.மீ தொலைவில் அமைந்துள்ள மாண்டு அல்லது மாண்டவ்கட்(Mandavgarh) என்ற சிற்றரசை ஆண்ட பாஸ் பகதூர்(Baz Bahadur) என்ற அரசனின் மனைவி ராணி ரூப்மதி. இயல், இசை, நாடகத்தில் ஈடுபாடு கொண்ட பாஸ் பகதூர் ஆடு மேய்த்து கொண்டிருந்த இந்து பெண்ணான ரூப்மதியை காதலித்துத் திருமணம் செய்து கொள்ள காரணமாக இருந்தது அவளின் அழகும், குரல் வளமும் தான். பின்னாளில் அக்பரின் படைத் தளபதியான ஆதம் கான் என்பவன் மாண்டுவின் மீது படை தொடுத்து பாஸ் பகதூரினைத் தோற்கடித்தான். ராணி ரூப்மதியை அபகரிக்கும் திட்டத்தினை நிரைவேற்றுவதற்கு முன்னரே மாற்றான் கையில் சிக்கக் கூடாது என்று விஷம் அருந்தி உயிர் நீத்தாள் ராணி ரூப்மதி. இந்தூரில் வேலை செய்து கொண்டி கொண்டிருக்கும் போது, இரு வருடங்களுக்கு முன் இவ்விடத்தைக் கண்டிருக்கிறேன். ஆனால் ரூப்மதி இப்பேர்ப்பட்ட பேரழகி என்று எங்கள் சித்தூர்கட் கைடு சொல்லித் தான் தெரியும்.

3. பாஜிராவ் மஸ்தானி - இப்பெயரை எங்கள் கைடு சொல்லக் கேட்டதும் 'என்னடா கதை விடுறாரே' என்று தான் நினைத்தேன். காரணம் "பாஜிராவ் மஸ்தானி" என்ற பெயரில் Black திரைப்படத்தை இயக்கிய சஞ்சய் லீலா பன்சாலி ஒரு திரைப்படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார். "சரி எதோ நம்மளை இளிச்சவாயன் என்று நினைத்து சினிமா பேரெல்லாம் சொல்லறார்" என்று அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்து விட்டு பிற்பாடு விகிபீடியாவில் பார்த்ததும் ஆச்சரியம். மஸ்தானி என்ற பெயரில் உண்மையில் ஒரு வீராங்கனை, ஒரு அழகி இருந்திருக்கிறாள். மராட்டிய அரசர்களின் அரசவையில் மிக முக்கியமான அமைச்சராகக் கருதப் பெற்ற பேஷ்வா பாஜிராவ் என்பவரின் இஸ்லாமிய மனைவி தான் மஸ்தானி. பாஜிராவ் மரணம் அடைந்து அவருடைய உடல் தகனம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது யாரும் எதிர்பாரா வண்ணம், கணவரின் சிதையில் உடன்கட்டை ஏறியவள் மஸ்தானி. மேலே கொடுக்கப் பட்டுள்ள விகிபீடியா லிங்கைப் படித்துப் பாருங்கள், மஸ்தானியின் கதை படிக்க மிகவும் சுவாரசியமாக இருந்தது.

சரி இப்போது ராணி பத்மினியுடைய வரலாற்றைப் பார்க்கலாம். கைடு சொன்ன கதையை ஒரு சில விழுக்காடு சேதாரங்களுடனும்(transit loss), ஆங்கில விகிபீடியா உதவியுடனும், சித்தூர்கட்டைச் சேர்ந்த நண்பர் கூறிய விபரங்களின் உதவியுடனும் நான் இங்கு எழுதியிருக்கிறேன். தன்னுடைய குடிகள் போற்றும் ஒரு சிறந்த அரசனாகத் திகழ்ந்தவர் ராஜா ரதன்சேன். அறநெறி வழுவாமல் ஆட்சி புரிந்த அத்தகைய அரசனின் அவையில் ராகவ் சேத்தன் என்றொரு மந்திரவாதி இருந்தான். குடிமக்களுக்குத் தீங்கு ஏற்படும் சில செயல்களில் அவன் ஈடுபட்டதால் கடுங்கோபம் கொண்ட ராஜா, அவனை கரும்புள்ளி செம்புள்ளி குத்தி அவமானப் படுத்தி கழுதை மீதேற்றி நாட்டை விட்டே துரத்தி விட்டார். நாடு கடத்தப்பட்ட ராகவ், ராஜா ரதன்சேனைப் பழிவாங்கும் நோக்கோடு நேராக தில்லி சுல்தானாக இருந்த அலாவுதீன் கில்ஜியிடம் சென்று ராணி பத்மினி என்ற ஒரு அழகி, மேவார் ராஜியமான சித்தூர்கட்டில் இருக்கிறாள் என்றும் அப்பேர்ப்பட்ட அழகுகளை எல்லாம் உன் வசம் இல்லாத நீ எல்லாம் என்ன சுல்தான் என்று அலாவுதீன் கில்ஜியைத் தூண்டி விட்டான். உடனே ராணி பத்மினியை அடையும் எண்ணத்தோடு சுல்தான் சித்தூர்கட் மீது போர் தொடுத்தான். ஆயினும் சித்தூர்கட்டை நெருங்கியதும் வலுவான அரணினைக் கொண்ட கோட்டையைக் கண்டு சுல்தான் மலைத்துப் போனான்.

ராணியின் மாளிகையினுள் அமைந்த ரோஜா தோட்டத்தில் எடுத்த படம் கீழே. நல்லாருக்கா?


சித்தூர்கட் கோட்டை ஏழு அடுக்கு(seven layer security cordon) பாதுகாப்பு அரணை உடைத்த மிக வலுவான கோட்டை. ஆசியாவின் மிகப் பெரிய கோட்டை எனக் கருதப் பெறும் பாந்தவ்கட் கோட்டைக்கு அடுத்தபடி மிக வலுவான கோட்டை இதுவென்று எங்கள் கைடு கூறினார். உடனே ராஜா ரதன்சேனுக்கு அலாவுதீன் கில்ஜி ஒரு தூது அனுப்பினான். ராணி பத்மினியைத் தன் சகோதரியாகத் தான் பாவிப்பதாகவும் அவரை ஒரு முறை கண்ணால் கண்டு விட்டுத் திரும்பிச் சென்று விடுவதாகவும் செய்தி அனுப்பினான். நல்ல மனம் கொண்ட ராஜாவும் இதை உண்மை என நம்பி பத்மினியைத் தன் "சகோதரனை" ஒரு முறை காணுமாறு வேண்டினார். ஆனால் சுல்தானின் உள்நோக்கில் சந்தேகம் கொண்ட ராணி, நேரடியாக அவனைக் காண மறுத்துவிட்டார். பல வற்புறுத்தல்களுக்குப் பிறகு, நீரில் தன்னுடைய பிரதிபிம்பத்தை வேண்டுமானால் சுல்தான் பார்த்துக் கொள்ளட்டும் என ராணி அனுமதி அளித்தாள். நீரில் ராணியினுடைய பிரதிபிம்பத்தையும் நேரடியாக சுல்தானுக்குக் காட்டாமல், நீரில் விழுந்த பிரதிபிம்பத்தையும் கண்ணாடியின் வழியாகத் தான் அலாவுதீன் கில்ஜிக்குக் காட்டினார்களாம். கீழே உள்ளது ஜல்மஹலின் படம்(Jal Mahal), ராணியின் அரண்மனைக்கு அருகில் இருக்கும் ஏரியின் நடுவில் அமைந்துள்ள ஒரு மாளிகை இது. இம்மாளிகையின் கடைசி படிக்கட்டில் ராணி நின்று கொண்டு தன் பிரதிபிம்பத்தை நீரில் காட்டினாராம்.

அந்த பிரதிபிம்பத்தை கிட்டத்தட்ட நூறு மீட்டர் தூரமுள்ள ஒரு மண்டபத்தில் நிற்க வைத்து கண்ணாடி பிரதிபலிப்பின் மூலமாக சுல்தானுக்குக் காட்டினார்களாம். இந்த மண்டபத்தின் நான்கு சுவற்றிலும் நான்கு கண்ணாடிகள் இருந்தன. அதில் ஒன்றைத் தான் நீங்கள் கீழே காண்கிறீர்கள்.



இதில் ஏரியோ, கண்ணாடிகள் அமைந்துள்ள மண்டபத்தின் வெளிசுவர்களைப் பார்த்தவாறு இருந்தது. கண்ணாடியோ மண்டபத்தின் உள்சுவர்களில் இருந்தது.
நூறு மீட்டர் தூரத்தில் உள்ள மண்டபத்தில் உள்சுவற்றில் இருக்கும் கண்ணாடியில் எப்படியப்பா பிரதிபலிப்பு தெரியும் என்று கேட்டதற்கு இந்த ஆங்கிள், அந்த ஆங்கிள் என்று ஏதேதோ ஆங்கிள் எல்லாம் எங்கள் கைடு சொன்னார்...ஆனால் எங்களுக்குத் தான் பிரதிபலிப்பு அவ்வளவு தூரம் எப்படி வந்திருக்கும் என விளங்கவில்லை. இத்தளத்தில் எவ்வாறு கண்ணாடிகளை அமைத்திருந்தார்கள் என்றும் விவரித்துள்ளார்கள்.


ராணியின் நிழலுருவத்தைப் பார்த்தே(!) இப்படியொரு அழகா என்று வியந்த சுல்தான், அவளை அடையாமல் விடுவதில்லை என்று தீர்மானித்தான். சுல்தானை வழியனுப்ப ராஜா ரதன்சேன் வாயில் வரை வந்த போது ஏற்கனவே தயார் செய்து வைத்திருந்த தன்னுடைய வீரர்கள் உதவியுடன் அவரைக் கடத்திச் சென்றான். ராஜா உயிருடன் திரும்ப வேண்டுமென்றால், ராணி தில்லிக்கு வர வேண்டும் என்று சித்தூர்கட்டுக்குச் செய்தி அனுப்பினான். இதனைக் கேள்வி பட்டு வெகுண்டெழுந்த ராஜபுத் வீரர்கள், சுல்தானுக்கு அவனது பாணியிலேயே பாடம் கற்பிக்க முடிவு செய்தார்கள். ராணி சுல்தானைச் சந்திக்க வருகிறாள் என்று செய்தி அனுப்பி விட்டு பல்லாக்குகளில் பெண் வேடம் தரித்த ராணுவ வீரர்கள் தில்லி சென்றனர். கடுமையாகப் போரிட்டு ராஜா ரதன்சேனை மீட்டு வந்தனர். ராஜாவை மீட்டு வருவதில் பெரும்பங்கு வகித்தவர்கள் ராணி பத்மினியின் மாமா கோராவும்(Gora) பன்னிரெண்டு வயதே நிரம்பிய மாமாவின் மகன் பாதலும்(Badal). இவ்விடத்தில் நானறிந்து கொண்ட இன்னொரு பொதுவான விஷயத்தைச் சொல்லிக் கொள்ள நினைக்கிறேன். நாம் மாமா மகன்களை முறை மாப்பிளைகளாகவும், மாமா மகள்களை முறைப்பெண்களாகவும் கருதுவது போல வட இந்தியர்கள் கருதுவதில்லை. மாமா மகள்களையும் சகோதரிகளாகத் தான் கருதுகிறார்கள். ரக்ஷா பந்தன் தினத்தன்று மாமன் மகள்களிடத்தும் ராக்கி கட்டிக் கொள்வார்கள். முதன் முறையில் இதை கேள்விபட்டதும் ஆச்சரியமாக இருந்தது.


பெண்ணாசை கண்ணை மறைக்க, பிறன்மனை நோக்குகிறோம் என்ற எண்ணமும் இன்றி மறுபடியும் தன்னுடைய பெரும்படையைத் திரட்டிக் கொண்டு வந்து சித்தூர்கட்டின் மீது போர் தொடுத்தான் சுல்தான் அலாவுதீன் கில்ஜி. இருப்பினும் சித்தூர்கட் கோட்டையானது மலை மேலே அமைந்துள்ள ஒரு ஊருக்குச் சமமானது. மலையின் மீதே விளைச்சல் எல்லாம் நடைபெற்று கொண்டிருந்தது. கீழே உள்ள படத்தைப் பாருங்கள் கோட்டை மேலிருந்து எடுத்த படம். இது கோட்டையின் ஒரு சிறிய பகுதி தான். இதன் மூலம் கோட்டையின் பரப்பளவை அரிதியிட்டுக் கொள்ளலாம்.


இம்முறை மலை அடிவாரத்தில் ஆறு மாதங்களுக்கும் மேலாக தன் படைகளுடன் காத்திருந்து கோட்டைக்குச் செல்லும் அனைத்து supply routesகளையும்(தமிழ்ல என்னங்க?) தடுத்து நிறுத்தினான். கடுமையான போருக்கு இடையே இன்றியமையா பொருட்களின் வரத்து நிற்கத் தொடங்கியதும், தாங்கள் போரில் தோற்கப் போகிறோம் என்று உணர்ந்த ராணி பத்மினி ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்க முடிவை எடுத்தார்.

அதாவது மாற்றான் கையில் சிக்கி மானத்தை இழப்பதைக் காட்டிலும், ஜோஹர் புரிந்து உயிரை இழப்பது என்பது தான் அது. சரி! ஜோஹர்(Jauhar) என்பது என்ன? ஒரு மிகப் பெரிய சிதையில் தீ வளர்த்து நகரத்துப் பெண்கள் எல்லாம் அதில் குதித்து உயிரை மாய்த்துக் கொள்ளுதலே ஜோஹர் ஆகும். சதி(Sati) எனப்படும் உடன்கட்டை ஏறுதலுக்கும் இதற்கும் ஒரு வேற்றுமை உண்டு. சதி என்பது கணவன் மரணமடைந்ததும் அவனுடைய சிதையில் மனைவியும் இறங்கி தன் உயிர் நீப்பது ஆகும். ஜோஹர் என்பது சமுராய் வீரர்கள் செய்து கொள்ளும் ஹரா-கிரி போன்றது...இது ஒரு மதிப்பிற்குரிய தற்கொலை முயற்சி. கணவனின் இறப்பு ஜோஹார் புரிதலுக்குக் காரணமாகாது. அதன்படி ராணி பத்மினியும் சித்தூர்கட்டில் உள்ள 16000 பெண்களும்(ஆம் பதினாறாயிரம் தான்!!!) ஒரு மிகப் பெரிய தீ வளர்த்து அதில் குதித்து தங்கள் உயிரை மாய்த்துக் கொண்டார்கள். தங்கள் வீட்டுப் பெண்கள் அனைவரும் உயிர் துறந்ததும் இனிமேல் எங்களுக்கு என்ன இருக்கு என என்ணி ஆண்கள் அனைவரும் சுல்தானின் படைகளோடு மிக ஆக்ரோஷமாகப் பொருதினர். மிகப் பயங்கரமான போர் மூண்டது. அங்கு ஓடிய ரத்த ஆற்றில் கன்றுக்குட்டிகள் அடித்துச் செல்லப் பட்டதாகக் கூறும் நாட்டுப் புறப் பாடல்கள் ராஜஸ்தானி மொழியில் இருப்பதாகச் சித்தூர்கட்டைச் சேர்ந்த நண்பர் தெரிவித்தார். ராணி பத்மினியின் மாமன் மகனான பாதல் என்ற சிறுவன் கடைசி வரை பகைவர்களுடன் போராடினானாம். அவனுடைய கால்களை வெட்டிய போதிலும் தரையில் வீழ்ந்த நிலையிலேயே தன் கைகளின் உதவியால் பகைவர் பலரை வெட்டிச் சாய்த்திருக்கிறான். (இதை கேட்டதும் வெள்ளையர்களுடன் போரிட்ட சிவகங்கைச் சீமையைச் சேர்ந்த பெரிய மருதுவின்(மருது சகோதரர்கள்) கை, கால்கள் வெட்டப்பட்ட நிலையிலும் மண்டியிடாமல் பகைவர்களைக் காரி உமிழ்ந்ததும் இறுதியில் வீரமரணம் அடைந்ததை பள்ளியில் படித்ததும் நினைவுக்கு வந்தது.) இறுதியில் ராஜபுட் வீரர்களைத் தோற்கடித்து கோட்டையைக் கைப்பற்றி உள்ளே நுழைந்ததும் அவர்களுக்குக் கிடைத்தது எரிந்த நிலையில் இருந்த பெண்களின் உடல்களும் எலும்புகளும் தான். இதை கைடு சொல்ல கேட்டதும் என்னுடைய முதல் ரியாக்ஷன் 'அட பாவிகளா!' என்பது தான். ஜோஹர் புரிந்து உயிர் நீத்த ராணி பத்மினியையும் மற்ற பெண்களையும் ராஜஸ்தானில் உள்ளவர்கள் கடவுளுக்குச் சமமாக நினைக்கின்றனர். ராணி பத்மினியின் கதையை, அவ்வரலாற்றை அறிந்த ராஜஸ்தானைச் சேர்ந்த யாரிடமாவது கேட்டுப் பாருங்கள், மிகவும் உணர்ச்சி ததும்ப விவரிப்பார்கள்(நம்மூர் நல்லத்தங்காள் கதை போல)


ராணி பத்மினியின் மாளிகையின் வாயிலில் அமைந்துள்ள tombstone.


சித்தூர்கட் பயணக்குறிப்பை இப்பதிவுடன் முடித்துவிட வேண்டும் என்று தான் எண்ணியிருந்தேன். நான் கேட்ட, படித்த ராணி பத்மினியின் வரலாற்றை எழுத எழுத நீண்டுக் கொண்டே சென்றது. பதிவின் நீளம் குறித்து இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன். வேறென்ன...சித்தூர்கட் செலவு தொடரும் :)

45 comments:

  1. கைப்புள்ள, எனக்குத் தெரிஞ்ச வரை சிங்கல் என்றால் அகர்வால் குலத்தின் ஒரு பிரிவு. அப்படித்தான் கேள்விப் பட்டிருக்கிறேன். நீங்க சொன்ன மாதிரி சிங்கள நாட்டு இளவரசின்னு யாரும் சொல்லவே இல்லை. அங்கே உள்ள ம்யூசியத்திலும் சரி, உதயப்பூர் ம்யூசியத்திலும் சரி, வரலாறு எழுதி இருக்கும் ஓலைச் சுவடிகளிலும் இப்படி எதுவும் பார்க்கவில்லை. ராணி பதுமனி, இதுதான் சரியான உச்சரிப்பு என்று சொல்லுவார்கள். ஒரு ராஜபுத்திர இளவரசிதான்னு சொல்லுவாங்க. எதுக்கும் எங்க ராஜஸ்தான் சிநேகிதர்கள் கிட்டே உறுதி செஞ்சுக்கறேன். அப்புறம் மாமா பையன், பெண் மட்டும் இல்லை, அத்தை பையன், பெண்ணும் கூட சகோதர சகோதரிகளாக நினைப்பார்கள். மாமா குழந்தைகளை mameri bai, bahan என்றும், அத்தை குழந்தைகளை buferi bai, bahan என்றும் குறிப்பிடுவார்கள். முதல் பின்னூட்டம்னு நினைக்கிறேன். ஏற்கெனவே யாராவது கொடுத்திருக்காங்களா? தெரியலை.

    ReplyDelete
  2. தல,

    சித்தூர்கட் செலவினிலே... 'எ பிலிம் பை மோகன்ராஜா' னு கரகர னு ஏத்தி விட்டோம்னா பரபர னு பத்திக்கும், என்ன சொல்றீங்க. சித்தூர்கட் செலவு - III எதிர்பார்த்து இரயில்வே ஸ்டேஷன் ப்ளாட்பாரம் ல காத்துக்கிட்டு இருக்கேன்.

    ReplyDelete
  3. நல்லா விரிவாக எழுதி உள்ளீர்கள்.
    நல்லா இருக்கு மோகன்.

    ReplyDelete
  4. மிக விவரமாகவும் எளிமையாகவும் எழுதிவருகிறீர்கள். தொடர்ந்து எழுதவும். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  5. //உலகில் இது வரை நடந்துள்ள ரத்தம் தோய்ந்த யுத்தங்களுக்குக் காரணங்களாக அமைந்தவை மூன்று - மண்ணாசை, பொன்னாசை, பெண்ணாசை. //

    மிகவும் வருத்தமான உண்மை. இன்றும் பெண்ணாசை தவிர மற்ற இரண்டுக்காகவும் யுத்தங்கள் நடந்து கொண்டு தான் இருக்கின்றது. அதிலும் மண்ணாசை தான் உச்சம்

    ReplyDelete
  6. கைப்புள்ள பலத் தெரியாத தகவல்களைத் தெரிந்துக் கொண்டேன். பயனுள்ளப் பதிவு. படங்கள் ஒன்றிரண்டு சரியாகத் தெரியவில்லை. சித்தூர்கட் பார்க்க வேண்டும் என்ற ஆவலை இப்பதிவு ஏற்படுத்திவிட்டது எனச் சொன்னால் அது மிகையாகாது.

    ReplyDelete
  7. //கைப்புள்ள, எனக்குத் தெரிஞ்ச வரை சிங்கல் என்றால் அகர்வால் குலத்தின் ஒரு பிரிவு. அப்படித்தான் கேள்விப் பட்டிருக்கிறேன். நீங்க சொன்ன மாதிரி சிங்கள நாட்டு இளவரசின்னு யாரும் சொல்லவே இல்லை. அங்கே உள்ள ம்யூசியத்திலும் சரி, உதயப்பூர் ம்யூசியத்திலும் சரி, வரலாறு எழுதி இருக்கும் ஓலைச் சுவடிகளிலும் இப்படி எதுவும் பார்க்கவில்லை. ராணி பதுமனி, இதுதான் சரியான உச்சரிப்பு என்று சொல்லுவார்கள். ஒரு ராஜபுத்திர இளவரசிதான்னு சொல்லுவாங்க. எதுக்கும் எங்க ராஜஸ்தான் சிநேகிதர்கள் கிட்டே உறுதி செஞ்சுக்கறேன்.//

    வாங்க கீதா மேடம்,
    சிங்கல் என்பது வியாபாரிகள்(merchants) குலத்தின் ஒரு பிரிவு என்பது சரி. ஆனால் இது நீங்கள் சொல்லும் சிங்கல்(Singhal) அல்ல. "போது மேவார் ராஜியத்தின் வரலாற்றைக் கூறும் இத்தளத்தைக் கண்டேன். " எழுதியிருக்கும் லிங்கைக் க்ளிக் செய்து பாருங்கள். அங்கு ராணி பத்மினி இலங்கையிலிருந்து இந்தியா வாழ வந்ததாகக் குறிப்பிடப் பட்டுள்ளது(அதுவும் அது சில வரலாற்று ஆசிரியரின் பார்வையில் தான்). எனக்கும் இதை படித்ததும் ஆச்சரியமாகத் தான் இருந்தது. நீங்களும் உங்கள் நண்பர்களைக் கேட்டுச் சொல்லுங்கள்.

    //அப்புறம் மாமா பையன், பெண் மட்டும் இல்லை, அத்தை பையன், பெண்ணும் கூட சகோதர சகோதரிகளாக நினைப்பார்கள். மாமா குழந்தைகளை mameri bai, bahan என்றும், அத்தை குழந்தைகளை buferi bai, bahan என்றும் குறிப்பிடுவார்கள். //
    ஆமாமா நீங்கள் சொல்வது ரொம்ப சரி தான். நான் அத்தை மகள், அத்தை மகன் பத்தி குறிப்பிட மறந்துவிட்டேன்.

    //முதல் பின்னூட்டம்னு நினைக்கிறேன். ஏற்கெனவே யாராவது கொடுத்திருக்காங்களா? தெரியலை.//
    ஆமாம் மேடம்! நீங்கள் தான் ஃபர்ஸ்ட். மிக்க நன்றி.
    :)

    ReplyDelete
  8. //தல,

    சித்தூர்கட் செலவினிலே... 'எ பிலிம் பை மோகன்ராஜா' னு கரகர னு ஏத்தி விட்டோம்னா பரபர னு பத்திக்கும், என்ன சொல்றீங்க.//
    :)))


    //சித்தூர்கட் செலவு - III எதிர்பார்த்து இரயில்வே ஸ்டேஷன் ப்ளாட்பாரம் ல காத்துக்கிட்டு இருக்கேன். //

    ஏங்க? நான் எதோ பரட்டை மேல கல்லைத் தூக்கிப் போட்டுட்டு ஜெயிலுக்குப் போற மாதிரியும், நீங்க எதோ நான் திரும்ப வர்ற வரைக்கும் காத்துருக்கற மாதிரி இல்ல எழுதிருக்கீங்க?
    :)

    ReplyDelete
  9. //நல்லா விரிவாக எழுதி உள்ளீர்கள்.
    நல்லா இருக்கு மோகன். //

    நன்றி சிவா! வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி.

    ReplyDelete
  10. //மிக விவரமாகவும் எளிமையாகவும் எழுதிவருகிறீர்கள். தொடர்ந்து எழுதவும். வாழ்த்துக்கள்//

    வாங்க மஞ்சூர் ராசா,
    உங்கள் பின்னூட்டம் மிகுந்த ஊக்கத்தினை அளிக்கிறது. வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி.

    ReplyDelete
  11. //மிகவும் வருத்தமான உண்மை. இன்றும் பெண்ணாசை தவிர மற்ற இரண்டுக்காகவும் யுத்தங்கள் நடந்து கொண்டு தான் இருக்கின்றது. அதிலும் மண்ணாசை தான் உச்சம்//

    ஆம் சிவா! இவையெல்லாம் நின்று விட்டால் கண்டிப்பாக உலகம் அழகானதாகி விடும் என்பதும் உண்மை.

    ReplyDelete
  12. //நல்ல எழுத்து நடை.
    அசத்துறீங்க!//

    வாங்க மோகன்,
    உங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் ரொம்ப நன்றிங்க.

    ReplyDelete
  13. //கைப்புள்ள பலத் தெரியாத தகவல்களைத் தெரிந்துக் கொண்டேன். பயனுள்ளப் பதிவு. //
    வாங்க தேவ்,
    மிக்க நன்றி.

    //படங்கள் ஒன்றிரண்டு சரியாகத் தெரியவில்லை. //
    ஆமாம் எனக்கும் அது சரியாகத் தெரியவில்லை. ஆனால் ஒருமுறை க்ளிக் செய்து பார்த்தால் படம் தெரிகிறது. என்னவென்று பார்த்து சரி செய்கிறேன்.

    //சித்தூர்கட் பார்க்க வேண்டும் என்ற ஆவலை இப்பதிவு ஏற்படுத்திவிட்டது எனச் சொன்னால் அது மிகையாகாது.//
    உங்க பின்னூட்டத்தைப் படித்ததும் மகிழ்ச்சியாய் இருக்கிறது. நன்றி.

    ReplyDelete
  14. கைப்புள்ள உங்களிடமிருந்து எப்பொழுதும் நகைச்சுவையான பதிவுகளையே படித்து வந்துள்ளேன்.

    இந்தப்பதிவு மன நெகிழ்ச்சியை ஏற்படுத்திவிட்டது.அருமையான பதிவு

    ReplyDelete
  15. அருமையா இருந்தது வாசிக்க!
    பல தகவல்களை தெரிந்து கொள்ள நேர்ந்தது இப்பதிவை படிக்கும்போது. குறிப்பாக ஜோஹர் இதற்கு முன் கேள்விப்பட்டதே இல்லை. மேவார் ராஜ்ஜியத்தை பற்றியும் ரஜபுத்ர வீரர்கள் பற்றியும் சாண்டில்யன் கதையில் படித்ததாக ஞாபகம்.

    கைப்ஸ் அழகான எழுத்து நடை.

    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  16. யப்பா, செலவு ஜாஸ்தியாயிக்கிட்டே போகுது பார்த்து!!!

    நல்லா எழுதறீங்கப்பா.

    ReplyDelete
  17. திரு.மோகன்,
    ராணி பத்மினியையும் சித்தோட்கட்டையும்
    நிஜத்தில் கொண்டுவந்து விட்டீர்கள். அருமையான பதிவு.
    இப்படி ஒரு வரலாற்றுப் பதிவு எல்லா ஊர்களையும் பற்றி வந்தால் , சரித்திரம் உயிர் பெறும்.
    நன்றியும் வாழ்த்துக்களும் உங்களுக்கு.

    ReplyDelete
  18. //கைப்புள்ள உங்களிடமிருந்து எப்பொழுதும் நகைச்சுவையான பதிவுகளையே படித்து வந்துள்ளேன்.

    இந்தப்பதிவு மன நெகிழ்ச்சியை ஏற்படுத்திவிட்டது.அருமையான பதிவு//

    வாங்க சுப்பையா சார்,
    இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்ததை அறிந்து உவகை கொள்கிறேன். மிக்க நன்றி.

    ReplyDelete
  19. //அருமையா இருந்தது வாசிக்க!
    பல தகவல்களை தெரிந்து கொள்ள நேர்ந்தது இப்பதிவை படிக்கும்போது. குறிப்பாக ஜோஹர் இதற்கு முன் கேள்விப்பட்டதே இல்லை. மேவார் ராஜ்ஜியத்தை பற்றியும் ரஜபுத்ர வீரர்கள் பற்றியும் சாண்டில்யன் கதையில் படித்ததாக ஞாபகம்.

    கைப்ஸ் அழகான எழுத்து நடை.

    வாழ்த்துக்கள் //

    வாங்க தம்பி,
    இதையெல்லாம் நானும் சித்தூர்கட் கோட்டை சென்ற போது தான் முதன்முறையாகக் கேள்விபட்டேன். சாண்டில்யனும் எழுதியிருக்கிறாரா? எனக்கு அது புதிய செய்தி. உங்களிடமிருந்து நான் இன்று அதை தெரிந்து கொண்டேன். தங்கள் பாராட்டுகளுக்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  20. //யப்பா, செலவு ஜாஸ்தியாயிக்கிட்டே போகுது பார்த்து!!! //

    ஆமாங்க கொத்ஸ்! இன்னிக்கு இதை முடிச்சிடணும்னு தான் பார்த்தேன்...ஆனா ரொம்ப பெருசா ஆயிட்டதால தொடரும் போட வேண்டியதாப் போச்சு.

    //நல்லா எழுதறீங்கப்பா//
    ரொம்ப டேங்ஸுங்க கொத்ஸ்.

    ReplyDelete
  21. //திரு.மோகன்,
    ராணி பத்மினியையும் சித்தோட்கட்டையும்
    நிஜத்தில் கொண்டுவந்து விட்டீர்கள். அருமையான பதிவு.
    இப்படி ஒரு வரலாற்றுப் பதிவு எல்லா ஊர்களையும் பற்றி வந்தால் , சரித்திரம் உயிர் பெறும்.
    நன்றியும் வாழ்த்துக்களும் உங்களுக்கு.//

    வாங்க மேடம்,
    தங்கள் பாராட்டுகளைப் படித்து மிகவும் மனம் மகிழ்ந்தேன். மிக்க நன்றி.

    ReplyDelete
  22. ரொம்ப நல்ல இருக்கு தல...அப்படியே அங்க போய்ட்டு வந்த எபக்ட்...அதிலும் அந்த ஏரிக்குள்ள இருந்த கோட்டை மிகவும் அருமை.... :-)

    ReplyDelete
  23. //எப்படிப்பட்ட அழகு என்று கூற வேண்டுமானால், நீர் எடுத்து ராணி பருகினால், தொண்டை வழியாக நீர் செல்லுவது தெளிவாகத் தெரியும் அளவிற்கு அழகு என்று கைடு கூறினார்//

    இத வெச்சு அழகுன்னு எப்படி சொல்ல முடியும் வேனா நல்ல கலருன்னு சொல்லலாம் :-)

    ReplyDelete
  24. ////முதல் பின்னூட்டம்னு நினைக்கிறேன். ஏற்கெனவே யாராவது கொடுத்திருக்காங்களா? தெரியலை.//
    ஆமாம் மேடம்! நீங்கள் தான் ஃபர்ஸ்ட். மிக்க நன்றி.
    :)
    //

    தல இப்படிதான் இருக்கனும்...தலைவி வயசுக்கு மரியாதை குடுத்து மேடம் எல்லாம் போட்டு....கக்கக்கபோ :-)

    ReplyDelete
  25. ஏதோ இப்போவாவது பதிவின் நீளம் நினைவுக்கு வந்துதே :) ஆஜர் மட்டும் போட்டுக்கறேன், படிச்சிட்டு அடுத்து போடறேன்..

    ReplyDelete
  26. //ரொம்ப நல்ல இருக்கு தல...அப்படியே அங்க போய்ட்டு வந்த எபக்ட்...அதிலும் அந்த ஏரிக்குள்ள இருந்த கோட்டை மிகவும் அருமை.... :-) //

    ரொம்ப டாங்க்ஸ் ஸ்யாம்.
    :)

    ReplyDelete
  27. //இத வெச்சு அழகுன்னு எப்படி சொல்ல முடியும் வேனா நல்ல கலருன்னு சொல்லலாம் :-)//

    அட! பேர் அண்ட் லவ்லின்னு நாமளே புரிஞ்சிக்கணும்யா 12பி. இதெல்லாமா வெளக்கிச் சொல்லிக்கிட்டு இருப்பாங்க? ஏற்கனவே பொற்கொடி பாப்பா வேற நீளம் ஜாஸ்தின்னு படிக்காமலயே உள்ளேன் ஐயா போட்டுட்டு ஓடிப் போச்சு.
    :)

    ReplyDelete
  28. //தல இப்படிதான் இருக்கனும்...தலைவி வயசுக்கு மரியாதை குடுத்து மேடம் எல்லாம் போட்டு....கக்கக்கபோ :-)//

    12ப்ப்ப்ப்பீஈஈஈஈஈஈ,
    தலைவியின் புகழுக்குக் களங்கம் கற்பிக்கும் வகையில் இடப்படும் பின்னூட்டங்கள் மிகக் கடுமையான முறையில் தயவு தாட்சண்யமின்றி மட்டுறுத்தப்படும் என்று கண்ணடிப்பாக மிகக் கண்ணடிப்பாக எச்சரித்துக் கொள்கிறேன். நன்றி. வணக்கம்!!

    ReplyDelete
  29. //ஏதோ இப்போவாவது பதிவின் நீளம் நினைவுக்கு வந்துதே :)//
    ஹ்ம்ம்ம்...என்னா பண்றது? வர்ற நாலு பேரையும் வெரட்டி விடற மாதிரி இருக்கப் பிடாதுன்னு தான் நிறுத்திக்கிட்டேன்.
    :)

    // ஆஜர் மட்டும் போட்டுக்கறேன், படிச்சிட்டு அடுத்து போடறேன்.//
    ஏதோ நீங்க சொல்றீங்க...நானும் நம்பறேன்.
    :)

    ReplyDelete
  30. ராணி பதுமனி (அதான் பாட்டி சொல்லிட்டாங்களே) கதயை கேட்டதும் எனக்கு கண்கள் பனித்து விட்டது.
    அல்லவுதீன் கில்ஜி சிறந்த ஆட்சியாளன்! என்று படித்து உள்ளேன்.

    ஆனால் பிறர் மனை நோக்கி, அதுவும் தங்கச்சி! என்று கபடமாடி சே! இதேல்லாம் ஒரு பொழப்பா?னு மோதி மிதித்து அவன் முகத்தில் உமிழ தோன்றுகிறது.

    உங்கள் கதை சொல்லும் நடை மிக அருமை கைப்பு! waiting for the next release. :D

    ReplyDelete
  31. தல,

    சூப்பரா வந்திருக்கு பதிவு....

    ReplyDelete
  32. கைப்புள்ள, உங்கள் பக்கத்தில் பின்னூட்டம் இடுவது இன்று தான். இந்தப் பதிவை படித்து விட்டேன்.. உங்கள் எழுத்தைப் பற்றி இங்கே சொல்ல வேண்டாம் என்று அங்கேயே சொல்லிவிட்டேன்.

    உங்களின் seven Rupee Bill-க்கு நான் எழுதியுள்ளதை வாசியுங்கள் ப்ளீஸ்.

    வாழ்த்துக்களுடன்
    கடல்கணேசன்

    ReplyDelete
  33. //ஆனால் பிறர் மனை நோக்கி, அதுவும் தங்கச்சி! என்று கபடமாடி சே! இதேல்லாம் ஒரு பொழப்பா?னு மோதி மிதித்து அவன் முகத்தில் உமிழ தோன்றுகிறது.//

    வாங்க அம்பி! எவ்வளவு திறமையான ஆட்சியாளனாக இருந்தாலும் சிலருக்குச் சில வீக்னெஸ்கள் இருக்கத் தான் செய்யுது. முதல்முறையா ராணி பத்மினியோட வரலாறைக் கேள்விப்படும் போது எனக்கும் கஷ்டமாகத் தான் இருந்தது.
    :(

    //உங்கள் கதை சொல்லும் நடை மிக அருமை கைப்பு! waiting for the next release. :D //
    ரொம்ப டேங்ஸ் அம்பி! சீக்கிரமே ரிலீஸ் பண்ணிடறேன்.
    :)

    ReplyDelete
  34. //தல,

    சூப்பரா வந்திருக்கு பதிவு.... //

    ரொம்ப டேங்ஸ்பா ராயல்.
    :)

    ReplyDelete
  35. //கைப்புள்ள, உங்கள் பக்கத்தில் பின்னூட்டம் இடுவது இன்று தான். இந்தப் பதிவை படித்து விட்டேன்.. உங்கள் எழுத்தைப் பற்றி இங்கே சொல்ல வேண்டாம் என்று அங்கேயே சொல்லிவிட்டேன்.

    உங்களின் seven Rupee Bill-க்கு நான் எழுதியுள்ளதை வாசியுங்கள் ப்ளீஸ்.

    வாழ்த்துக்களுடன்
    கடல்கணேசன் //

    வாங்க கணேசன் சார்,
    தங்கள் வருகைக்கு மிக்க நன்றி. தாங்கள் அங்கு இட்டுள்ள பின்னூட்டத்தைப் படித்தேன். தங்கள் வாழ்த்துக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி.

    ReplyDelete
  36. //மோதி மிதித்து அவன் முகத்தில் உமிழ தோன்றுகிறது//

    @ambi, அவன் இப்போ இல்லனு தான இந்த டயலாக் விடுற... :-)

    ReplyDelete
  37. thalai,

    Guide velai onnu kaivasam readya irukku vareengalae romba nalla elutthareengae!!!


    Vino..

    ReplyDelete
  38. Hi

    A newcomer here (via Dubukku > VVSangam). Excellent Chittorgarh travelog. Read the first part while earlier. very professionally written and comprehensive. Hats-off

    Cheers
    SLN

    ReplyDelete
  39. //@ambi, அவன் இப்போ இல்லனு தான இந்த டயலாக் விடுற... :-) //

    12பி,
    நாட்டாமைங்குறதை அப்பப்போ ப்ரூவ் பண்ணிக்கிட்டே இருக்கியேப்பு. ஒருத்தரு ஒன்னு சொல்லக்கூடாதுங்கறியே?
    :)

    ReplyDelete
  40. //Guide velai onnu kaivasam readya irukku vareengalae romba nalla elutthareengae!!!//

    வாங்க வினோ!
    கைடு வேலை ஏற்கனவே பாத்தாச்சு. அத பத்தி அடுத்த பதிவுல எழுதறேன்.
    :)

    ReplyDelete
  41. //Hi

    A newcomer here (via Dubukku > VVSangam). Excellent Chittorgarh travelog. Read the first part while earlier. very professionally written and comprehensive. Hats-off

    Cheers
    SLN //

    வாங்க எஸ் எல் என்,
    உங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும் ரொம்ப நன்றி. உங்கள் கமெண்டைப் படித்ததும் ரொம்ப சந்தோஷமா இருந்தது. அடிக்கடி வாங்க.

    ReplyDelete
  42. //அவன் இப்போ இல்லனு தான இந்த டயலாக் விடுற... :-)
    //

    @syam, எலே ஷ்யாம்! அவன் மட்டும் இப்ப இருந்திருந்தா உன்னை மனித வெடிகுண்டாக்கி அவனை க்ளோஸ் பண்ணி இருப்பேன்.
    எனக்காக இது கூட செய்ய மாட்டியா என்ன? :)

    ReplyDelete
  43. //@syam, எலே ஷ்யாம்! அவன் மட்டும் இப்ப இருந்திருந்தா உன்னை மனித வெடிகுண்டாக்கி அவனை க்ளோஸ் பண்ணி இருப்பேன்.
    எனக்காக இது கூட செய்ய மாட்டியா என்ன? ://

    ஏய் அம்பி அம்பி! இந்த வெளாட்டு நல்லாருக்கும் போலிருக்கே? நான் கூட இந்த மனுச டப்பாசை எல்லாம் பாத்ததேயில்லப்பா. நீ வெடிக்கும் போது எனக்கும் ஒரு குரல் குடுத்துடு. ஆமா...ஒரு சின்ன சந்தேகம். இந்த டப்பாசைக் கொளுத்துறது திரி கிள்ளியா? திரி கிள்ளாமலேயா?
    :)

    ReplyDelete
  44. கைபுள்ளெ,

    சூப்பர் நடைப்பா.

    ஜோஹர் பகுதி படிக்கும்போதே மனசைப் பிழிஞ்சுருச்சு.

    அரண்மனையிலே ஒரு அறையிலே நிலைக் கண்ணாடியை வச்சு,
    அதுக்கு மறுபக்கம் இன்னொரு கண்ணாடி வச்சு பிம்பத்தை இன்னொரு கண்ணாடியிலே
    பிரதிபலிக்க வச்சதாய் ச்சின்ன வயசுலே டீச்சர் சொல்லிக் கேட்ட ஞாபகம்.

    ReplyDelete
  45. //கைபுள்ளெ,

    சூப்பர் நடைப்பா.

    ஜோஹர் பகுதி படிக்கும்போதே மனசைப் பிழிஞ்சுருச்சு.

    அரண்மனையிலே ஒரு அறையிலே நிலைக் கண்ணாடியை வச்சு,
    அதுக்கு மறுபக்கம் இன்னொரு கண்ணாடி வச்சு பிம்பத்தை இன்னொரு கண்ணாடியிலே
    பிரதிபலிக்க வச்சதாய் ச்சின்ன வயசுலே டீச்சர் சொல்லிக் கேட்ட ஞாபகம். //

    வாங்க துளசியக்கா,
    உண்மையிலேயே மனதைப் புழியற சோக நிகழ்வு தான் அது. வரலாறுங்கிறதும் ஒரு விதத்துல வாழ்க்கை பாடம் தானே? தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் ரொம்ப டேங்க்ஸ்.
    :)

    ReplyDelete