போன பிராஜெக்ட் அப்போ ராஜஸ்தான்ல பாத்த சில விஷயங்களை அதிகமாகப் பேசாம(வளவளனு எழுதாம) சுமாரான, படுசுமாரான சில படங்களை வச்சு விஷுவலாச்(!) சொல்லற ஒரு முயற்சி தான் இந்தப் பதிவு.
நாத் த்வாரா(Nathdwara) என்னும் இடத்தில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீநாத்ஜி எனும் இறைவனின் படம். ராஜஸ்தான் மாநிலம், உதய்பூரிலிருந்து 50 கி.மீ.தொலைவில் உள்ளது இத்தலம். படத்தின் கீழே குஜராத்தி மொழியில் எழுதியிருப்பது "ஜெய் ஸ்ரீ கிருஷ்ணா", ஆகஸ்ட் 9,2006
ஸ்ரீநாத்ஜியின் இன்னுமொரு திரு உருவம், , ஆகஸ்ட் 9,2006
ஜிலேபி சுடறாங்க. நாத்த்வாரா, ஆகஸ்ட் 9,2006
சலவைக்கல்(மார்பிள்) தொழிற்சாலை, நாத் த்வாரா - உதய்பூர் சாலை, ஆகஸ்ட் 9,2006
உங்களுக்கு எத்தனை கன அடி வேணும்?, நாத் த்வாரா - உதய்பூர் சாலை, ஆகஸ்ட் 9,2006
"அழகான சரி சோடி, ஆனை மேல அம்பாரி...", உதய்பூர் பேலஸ் செல்லும் வழியில், ஆகஸ்ட் 9,2006
மகாராணா பிரதாப் சிங் தன்னுடைய தாத்தாவின் நினைவாக உருவாக்கிய உதய்பூர் நகரிலுள்ள, உதய்பூர் மாளிகையின்(சிட்டி பேலஸின்) முகப்பு, ஆகஸ்ட் 9,2006
அருங்காட்சியகத்தைத் தன்னகத்தே கொண்ட சிட்டி பேலஸின் இன்னுமொரு படம், ஆகஸ்ட் 9,2006
சூரியவம்சத்தினரின் முதற் கடவுளான சூரியனார் மீசையோடு, ஆகஸ்ட் 9,2006
முகலாயர்களுடன் நடைபெற்ற ஹல்திகாட்டி யுத்தத்தில் (Battle of Haldighati), காலில் பலத்த காயங்கள் ஏற்பட்ட போதும் தன் தலைவனான மகாராணா பிரதாப்சிங்கைப் பாதுகாப்பான இடத்திற்குக் கொண்டுச் சேர்த்து விட்டப் பின்னரே தன் உயிரை விட்ட சேத்தக்(Chetak) குதிரையின் உருவ பொம்மை. யானைப்படைகளையும் கொண்டு போரிட்ட முகலாய ராணுவத்தைப் போலல்லாமல், ராஜபுத் வீரர்கள் குதிரைகளை மட்டுமே கொண்டு போரிட்டனர். குட்டி யானை போலத் தோன்றி தாக்க வரும் முகலாய யானைகளை ஏமாற்றுவதற்காகத் தும்பிக்கை போன்ற முகமூடி அணிந்திருக்கும் சேத்தக். உதய்பூர் சிட்டி பேலஸ் அருங்காட்சியகம், அகஸ்ட் 9,2006
தாஜ் லேக் பேலஸ் ஐந்து நட்சத்திர தங்கும் விடுதி. உதய்பூர் அருங்காட்சியகத்திலிருந்து காணக் கிடைக்கும் கோணம், ஆகஸ்ட் 9,2006
தார் பாலைவனத்தில் வெள்ளம் ஏற்படக் காரணமாயிருந்த அபரிமிதமான மழையினால் தளும்பி நிற்கும் உதய்பூர் ஏரி, ஆகஸ்ட் 9,2006
தங்களுடைய நாட்டுப்புறப் பாடலான "நிம்பூடா நிம்பூடா" பாடும் பார்மேர் மாவட்ட இசை கலைஞர்கள். "ஹம் தில் தே சுகே சனம்" படத்தில் வரும் பாடல் இவர்களுடைய இசையிலிருந்து தான் திருடப்பட்டது என வருத்தத்துடன் தெரிவித்தார்கள்(ஏனெனில் காலம் காலமாக அவ்விசையைப் பாதுகாத்து வரும் இவர்களுக்கு ஒரு கிரெடிட்டும் கிடைக்கவில்லையாம்). திரைப்படத்தில் வரும் பாடலைப் போலவே இப்பாடலும், துள்ளல் இசையோடே அமைந்திருந்தது, சித்தூர்கட், ஆகஸ்ட் 8,2006
ஸ்பிக் மேகே நடத்திய இக்கலாச்சார நிகழ்ச்சியில் 'கல்பேலியா'(Kalbeliya) நடனம் ஆடும் பெண், சித்தூர்கட், ஆகஸ்ட் 8,2006
'கல்பேலியா' பாரம்பரிய நடனம் - இன்னொரு படம். பளிச்சிடும் பரோட்டாவையும், செங்கண் குறைப்பையும்(Red Eye Reduction) கவனிக்காம விட்டதுக்கு அடிக்க வந்துடாதீங்கப்பா:), சித்தூர்கட், ஆகஸ்ட் 8,2006
Thursday, December 28, 2006
ராஜஸ்தான் - ஒரு போட்டோ பயணம்
Saturday, December 23, 2006
ஷேன் வார்னும் இளையராஜாவும்
இசைஞானி இளையராஜாவுக்கும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஷேன் வார்னுக்கும் என்ன தொடர்பு இருக்க முடியும்? தொடர்பு இருக்குன்னு சொல்றாரு சமீபத்துல ப்ளாக் உலகத்துல, கோதாவுல குதிச்ச நம்ம கல்லூரி நண்பர் 'மாம்ஸ்' தியானேசுவரன். ஆங்கிலத்துல இருந்தாலும் புள்ளி விவரங்களையும், டெக்னிக்குகளையும் உதாரணங்களாகக் கொடுத்து நல்லா எழுதிருக்காரு. நீங்க ஷேன் வார்ன் ரசிகராக இருந்தாலும், ஷேன் வார்னைப் பத்தி ஏன் அவ்வளவு உயர்வாகப் பேசுகிறார்கள் எனத் தெரிந்து கொள்ள வேண்டுமென்றாலும் மாம்ஸின் இந்தப் பதிவைப் படித்துப் பாருங்கள்.
Shane Warne - The best ever
நண்பர் தியானேசுவரனைப் பற்றி முன்னரே என் பதிவில் ஒரு முறை சொல்லியிருக்கேன்.
கிண்டி டைம்ஸ், எனும் இந்தப் பதிவில் இருக்கும், இந்தப் படத்தை வரைந்தவரே அவர் :)
Tuesday, December 19, 2006
தடிப்பசங்க #7
காட்சி #7 : செல்லமே செல்லம்
இந்த சின்ன வயசு, சின்ன வயசுன்னு ஒன்னு இருக்குதே...அந்த வயசுல தாங்க ஒரு மனுஷனால சக உயிர்களிடத்துல அதிக பட்சம் அன்பு பாராட்ட முடியும். இதுக்கு தடிப்பசங்களோட சின்ன வயசு மட்டும் விதிவிலக்கா என்ன? அன்புன்னா...சும்மா உங்க வீட்டு அன்பு எங்க வீட்டு அன்பு இல்ல...ரோட்டுல போறது வானத்துல பறக்குறது, இதையெல்லாம் வீட்டுல வச்சி வளர்த்து அழகு பாக்கறதுக்கு அம்மாவை நச்சரிக்கிற அளவுக்கு 'அன்போமேனியா' தான். ஆனா செல்லப் பிராணி வளர்க்க தடிப்பசங்க ஆசைப்பட்டா போதுமா, தடிப்பசங்களை வளர்க்கறவுங்க ஆசைப்பட வேணாமா? என்ன தான் பெட்(bet) கட்டி பெட்(pet) வளர்க்க ஆசை பட்டாலும் அதுக்கெல்லாம் ஒரு குடுப்பினை வேணுமில்ல? பெட்டு வளர்க்கற ஆசையை எப்படியாச்சும் சாம பேத தான தண்டங்களை உபயோகிச்சு கெடப்புல போட்டுருவாங்க. அட போங்கப்பா...யாருன்னு வேற சொல்லனுமாக்கும்?
"ஒரு அல்சேஷன் நாயை வளர்த்து பெரிய சங்கிலியை ஒன்னை கழுத்துல போட்டு(நாய் கழுத்துல தான்) தெருவுல பந்தாவா, வாக்கிங் கூட்டிட்டுப் போவனும்டா"இது தான் நம்ம இளவலோட நெடுநாளைய ஆசை.
ஆனாலும் அல்சேஷன் வளக்கறதுக்கும் அஸ்டிராலஜில எடம் இருக்கனும் போலிருக்கு. அல்சேஷனுக்கும் தடிப்பசங்களுக்கும் எப்பவும் ஏழாம் பொருத்தம் தான். "நம்ம வீடே ரொம்ப சின்னது, இதுல நாய் வீட்டுக்கு வந்துச்சுன்னா எங்கே வச்சி வளர்ப்பீங்க?" அப்படீங்கறது தான் அல்சேஷன் வளர்ப்புக்கு எதிரா ஏவப்படற முதல் ஏவுகணை.
"நாயெல்லாம் ஒரு ஓரமா பால்கனியில படுத்துக்கும்மா. ஒரு சின்ன பப்பியாச்சும் வாங்கி குடுங்க" அப்படின்னு சொன்னா "சின்ன பப்பி மட்டும் சீப்புன்னு நெனக்கிறியா? அது என்ன வெலைன்னு தெரியுமா ஒங்களுக்கு? ஒரு சின்ன குட்டியே நாலாயிரம் அஞ்சாயிரம் இருக்குமாம். ஒங்களை வளக்கறதே பெருசு, இதுல நாய் வேற வளர்க்க போறீங்களா? அதெல்லாம் ஒன்னும் வேணாம்" அப்படின்னு தான் அநேகமா பதில் வரும்.
"சே! இந்த அம்மா எப்பவுமே இப்படி தாண்டா. எது கேட்டாலும் முடியாது முடியாதும்பாங்க. ஒரு சின்ன குட்டி நாலாயிரமா இருக்கும்? வாங்கித் தராம இருக்கறதுக்குன்னு ஓவரா டூப்படிக்கிறாங்கடா" - இது இளையவரு
"நாலாயிரமா இருந்தாலும் இருக்கும்டா"- இது நானு.
"அல்சேஷன் வெலை அதிகமா இருந்துச்சுன்னா ஒரு ராஜபாளையம் நாய் வாங்கி வளக்கலாமா? சின்ன குட்டியா வாங்குனா நூறு ரூபாக்குள்ள வாங்கிடலாம்" - வில்லு போல உடம்பு கொண்ட திமிறிக்கிட்டு ஓடற ஒரு அழகான நாயை வாக்கிங் கூட்டுட்டுப் போறதுன்னா சும்மாவா? அதுக்காக எல்லா விதமான முயற்சிகளையும் மேற்கொள்ளத் தம்பி தயாராவே இருந்தாரு.
எடப் பிரச்சினையை அல்சேஷனுக்குக் காரணமா சொன்னவங்க "ராஜபாளையம் மட்டும் ஒனக்கு நூறு ரூபால குடுக்கறாங்க வா. ராஜபாளையம் ரொம்ப கோவக்கார நாய். நீ கொஞ்சம் சரியா கவனிக்கலைன்னா உன்னையே கடிச்சி வைக்கும். கடிக்கிற நாயெல்லாம் வேணாம். வயித்தை சுத்தி பதினாறு ஊசி போட்டுக்க ரெடின்னா சொல்லு"ம்பாங்க. வேணாம்னு சொல்லறதுக்குக் காரணத்துக்கா பஞ்சம்? ஆனாலும் நாய் கடிக்கு வயித்தைச் சுத்தி பதினாறு ஊசி போட்டுக்கிட்ட ஒரு பையனையும் அவன் அழுத அழுகையையும் பாத்ததுக்கப்புறம் நாய் கடின்னா லைட்டா(லைட்டாத் தான்) ஒரு பயம். அதுனால வயித்தைச் சுத்தி 16 ஊசி அப்படீங்கற காரணம் நல்லா வர்க்அவுட் ஆகும்.
அதுக்கப்புறம் ஒவ்வொரு சீசன்லயும் ஒவ்வொரு நாய் வளர்க்கனும்னு தோனும். சில சமயம் ஜெர்மன் ஷெப்பர்டு, சில சமயம் வாலில்லாத டாபர்மேன் நாய், சில சமயம் புசுபுசு பொமரேனியன் நாய் இப்படின்னு. ஒவ்வொரு நாய் வளக்கறதுக்கும் என்னெல்லாமோ தில்லாலங்கடி வேலை எல்லாம் பண்ணி பாத்தோம். ஆனா நம்மளைப் பெத்தவங்க நாம சின்னப்பசங்களா இருக்கறதுக்கு முன்னாடியே சின்னப்பசங்களா இருந்துட்டாங்களா? அதனால நமக்கு எல்லா சீசன்லயும் ஸ்டாண்டர்டா எதாச்சும் ஒரு காரணத்தைக் காட்டி பல்பு குடுத்துருவாங்க.
"ஜெர்மன் ஷெப்பர்டு மாட்டுக் கறியைத் தான் சாப்புடுமாம். அதெல்லாம் வேணாம்", "டாபர்மேனா? வாலில்லாம எவ்வளவு அசிங்கமா இருக்குப் பாரு","பொமரேனியன் முடி வீடெல்லாம் கொட்டும். வீடே அசிங்கம் ஆயிடும்" இப்படின்னு நாங்க கேக்கற கேள்விக்குத் தகுந்த மாதிரி எதாச்சும் ஒரு சால்ஜாப்பு வந்துரும்.
காசு குடுத்து தான் நாய் வாங்க முடியலை. எங்கேயாச்சும் வெளில போகும் போது ரொம்ப அழகா, குட்டியூண்டா இருக்கற ஒரு நாக்குட்டியைப் பாத்தா அப்படியே வீட்டுக்கு எடுத்துட்டு வந்து எதாச்சும் டாமி, ஜிம்மின்னு பேரு வச்சி வளக்கனும்னு ரொம்ப ஆசையா இருக்கும். ரோட்டுல திரிஞ்சிட்டு இருக்கற குட்டி நாயைத் தூக்கிட்டு வர காசா? பணமா? காஸ்லியான நாயை வாங்கித் தர சொன்னாத் தான் முடியாதுங்கறாங்க, ரோட்டோரத்துல ஃப்ரீயா கெடைக்கிற நாயைத் தூக்கி வளக்கலாம்னு நெனச்சா...அது தான் ராசா முடியாது.
"அம்மா அந்த குட்டி நாய் அழகா இருக்குதும்மா. அதை தூக்கிட்டுப் போய் நம்ம வீட்டுல வச்சி வளக்கலாம்மா"
"அதெல்லாம் ஒன்னும் வேணாம். அதோட அம்மா இங்க தான் எங்கேயோ பக்கத்துல போயிருக்கு. நீ குட்டியைத் தூக்கற நேரம் உன்னை பாஞ்சு வந்து கடிச்சிடும்" அப்படின்னு குட்டியோட அம்மா எதோ எங்கம்மா கிட்ட பாத்துக்கங்கன்னு சொல்லிட்டுப் போன மாதிரி ஒரு பதில் வரும்.
"ரோடு காலியா இருக்கு. அதோட அம்மாவையும் காணும். அது வர்றதுக்குள்ள தூக்கிட்டு வந்துடலாம்மா" இது தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்ரமாதித்தனான தம்பி.
"சரி! சும்மா குட்டியைத் தூக்கிட்டு வரேன் வரேன்னு சொல்லறியே? அது சின்ன குட்டியா இருக்கே? அதாலத் தானா சாப்புட முடியாதே? அதுக்கு யாரு சாப்பாடு குடுப்பா. அதுனால அதோட அம்மா கிட்டவே அது இருக்கட்டும். வா போலாம்" அப்படின்னு ஒரு பதில் வரும்.
"இல்லம்மா. அதை வளக்கனும்னு ஆசையா இருக்கும்மா. ப்ளீஸ்மா" அப்படின்னு அடுத்த முயற்சி எடுக்கப்படும்.
"நாய் வீட்டுல வச்சி வளத்தேன்னா அது கண்ட எடத்துல டூ பாத்ரூம்லாம் போவுமே? அதையெல்லாம் யாரு சுத்தம் பண்ணுவா? நான்லாம் ஒன்னும் பண்ண மாட்டேன். அதெல்லாம் சரி படாது, வா போவலாம்"அப்படின்னு அடுத்த பிரம்மாஸ்திரம் ஏவப்படும்.
"டூ பாத்ரூம்லாம் போச்சுன்னா நான் பாத்துக்கறேன்மா. ப்ளீஸ்மா"
"ஆமா, இவருக்கே ஒரு ஆளு வேணும். இவுரு நாயைப் பாத்துக்கறாராம். அடம் புடிக்காம் பேசாம வா. சும்மா ரோட்டுல கெடக்கற சொறி நாயெல்லாம் வீட்டுல கூட்டிட்டு வந்து வச்சிக்கிட்டா நீயும் அதை மாதிரி தான் சொறிஞ்சிக்கிட்டு நிப்பே". கரெக்டா அந்த நேரம் பாத்து தான் நாய்க்கும் சொறிஞ்சிக்கனும் போல தோணனுமா? "பாத்தியா? நான் சொன்னேன்ல எப்படி சொறியுது பாரு? நாய் வளக்கறாராம் நாய். பேசாம வா" அப்படின்னு சாம பேத தான தண்டத்துல நாலாவதான தண்டமும் உபயோகிக்கப் படும்.
அதுக்கப்புறம் எங்கேருந்து நாயைத் தூக்கிட்டு வர முடியும்? திருவல்லிக்கேணியில ஒரு சின்ன வீட்டுல வாழ்ந்ததுனால, எட நெருக்கடியைக் காரணம் காட்டி காட்டி, நாய் வளக்கற ஆசை அப்படியே படிப்படியா குறைஞ்சி போச்சு. அதுக்கப்புறம் வீட்டு மொட்டை மாடில டிவி சரியா தெரியலைன்னு(டிவி ஸ்டேஷன் ரொம்ப கிட்டத்துல இருந்ததுனால) ஆண்டெனா திருப்பப் போகும் போது எப்பவாச்சும் உக்காந்துருக்கற கிளியைப் புடிச்சு வளக்கலாம்னும் முயற்சி பண்ணி பாத்தோம். ஆனா நாங்க கிளி புடிக்கிறதுல கில்லாடின்னா, கிட்டப் போய் "தோ புடிச்சிட்டோம்"னு கத்தற நேரத்துல எஸ்கேப் ஆகறதுல கிளி கில்லாடிகளின் கில்லாடி. வீட்டு பக்கத்துலேயே நெறைய பூனைங்க திரிஞ்சிட்டு இருக்கும்ங்கிறதுனால எப்பவுமே பூனை வளர்க்கனும்னு தோணுனதேயில்லை.
இப்படியெல்லாம் பெட்டு எதுவும் வளக்க முடியாத ஏக்கத்துனாலேயே ஸ்கூல் பசங்களுக்காக என் தம்பி மொதலை வளக்க ஆரம்பிச்சிட்டாரு. ஸ்கூல்ல யாராச்சும் "எங்க வீட்டுல நாய் இருக்கு"ன்னு சொன்னா, இவரும் "எங்க வீட்டுல கூடத் தான் மொதலை இருக்குடா"ம்பாரு.
"என்னது முதலையா? உங்க வீட்டுக்கு நான் நாளைக்கு வந்து பாக்கறேன்" அப்படின்னு இளிச்சவாயன் யாராச்சும் சொன்னா "இல்லடா, அதுக்கு ஒடம்பு சரியில்லை. மொதலைக்குத் தக்காளி மட்டும் குடுக்கக் கூடாதுன்னு டாக்டர் சொல்லிருந்தாரு. எங்கண்ணன் தெரியாம மொதலைக்குத் தக்காளி குடுத்துட்டான். அது சாப்புட்டுட்டு பயங்கரமா அழ ஆரம்பிச்சுடுச்சு. எங்கப்பா கூட ஏன் தக்காளி குடுத்தேன்னு எங்க அண்ணனை அடிச்சிட்டாரு. அதுனால அதை இப்ப ஆஸ்பிட்டல்ல சேத்துருக்கோம்"அப்படின்னு அவங்க அண்ணனை லூசாக்கி அடியும் வாங்க வச்சிடுவாரு.
சின்னப் பசங்களா இருந்த போது இருந்த "அன்போமேனியா" அப்படி அப்படியே குறைய ஆரம்பிச்சிட்டது. அதுக்கப்புறம் நாய் வளக்கனும்னு தோணவேயில்லை. புது வீட்டுக்குப் போன நேரம்(நான் அப்போ சென்னையில இல்லை), எதோ ஒரு ரோட்டுல போற நாய் க்கு ஒரு வேளை சோறு போட்டதும் அப்படியே வீட்டுப் பக்கமே சுத்த ஆரம்பிச்சுடுச்சு. போன்ல பேசறப்ப அம்மா இதெல்லாம் சொல்லிருந்தாங்க, ஆனா நான் அப்படியே மறந்துட்டேன்.
ரொம்ப நாளைக்கு அப்புறம் கடந்த மார்ச் மாசம் சென்னைக்கு வீட்டுக்குப் போயிருந்த போது...வீட்டுல புதுசா ஒரு நாய் படுத்துருந்துச்சு. புது ஆளான என்னைப் பாத்து மூடியிருந்த கேட்டுக்குள்ள படுத்துருந்த நாய் பயங்கரமா கொலச்சுது. என்னடா இது நம்ம வீட்டுல புதுசா ஒரு நாய் படுத்துருக்குது, அது என்னடான்னா நம்மளையே பாத்து கொலைக்குதேன்னு நெனச்சிக்கிட்டேன். ஆனா கேட்டைத் தெறந்து விட வந்த எங்கம்மா நாயை சமாதானம் படுத்த சொன்னதைக் கேட்டு தான் ஒரு நிமிசம் ஆடிப் போயிட்டேன்.
அப்படி என்ன சொன்னாங்கன்னா கேக்கறீங்க? "டேய் டைசன்! ஒன் அண்ணண்டா" அப்படின்னாங்க. உங்க வீட்டுல ஒரு நாய் வளத்தாங்கன்னா அந்த நாய்க்கு அண்ணன், தம்பி, மாமன், மச்சான் எல்லாமுமா நீங்களாத் தான் இருக்கணும். அது வீட்டுக்குள்ள போன உடனே தான் தெரிஞ்சிக்கிட்டேன்.
"டேய்! அல்சேஷன், ஜெர்மன் ஷெப்பர்டு, ராஜபாளையம் இதெல்லாம் பந்தாவா வளக்கனும்னு சொல்லிட்டு எதோ ஒரு தெரு நாயை வளக்குறே, அதுக்கு வேற நான் எதோ அண்ணனாம், அம்மா சொல்றாங்க" இது தடிப்பசங்கள்ல இளையவரு கிட்ட நானு.
"ஆமா! டைசன் என் தம்பி தான்" அப்படின்னான்.
"என்னடா பேரு அது டைசன்னு, வைக்கிறது தான் வைக்கிறே...ஒரு நல்லவன் பேரை வைக்கக் கூடாது?"
"அப்படியெல்லாம் இருந்தா தான் ஒரு பந்தா. எல்லாரும் அதப் பாத்து பயப்படுவாங்க"
"பயப்படறதுக்கா? மத்த நாய்ங்களோட சண்டை எல்லாம் போடுமா" அப்படின்னு நான் கேட்டதுக்கு "உஹூம், வீட்டுக்குள்ளேருந்து சவுண்டு வுடறதுன்னா நல்லாச் சத்தமா விடுவாரு, வெளியே போனா செமத்தியா ஒத வாங்கிட்டுத் தான் வருவாரு"அப்படின்னான்.
"என்னமோ போ... ஒரு பயந்தாங்கொள்ளி நாய்க்கு ஒரு அக்யூஸ்டு பயலோட பேரு"
"டாய்! என் தம்பியைப் பத்தி எதாவது சொன்னே? அப்புறம் நான் மனுசனா இருக்க மாட்டேன்" - டைசனோட சின்ன அண்ணாத்தே.
"பாத்தியா இந்த டைசன் பயலுக்குக் திமிரை? எதிர் வீட்டுல எலும்பைத் தின்னுட்டு வந்துட்டு நான் சாம்பார் சாதத்தைப் போட்டதும் தின்ன மாட்டேங்கறான். அப்படியே ஒன் தம்பிங்களை(என் தம்பியும், என் சித்திப் பையனும்) மாதிரி தான் இவனும், எல்லாம் நாக்குக்கு ருசியாத் தான் கேக்கும்" -டைசனோட அம்மான்னு சரியாக் கண்டு பிடிச்சிருந்தீங்கன்னாலும் பரிசு எதுவும் கெடயாது.
"ஒரு வேளை டைசனுக்கும் கடக ராசியா இருக்குமோ?" - சொல்லிட்டு மொத்து வாங்கறதுக்கு முன்னாடி ஜூட் விட்டவரு திருவாளர் டைசன் அவர்களோட பெரிய அண்ணாத்தை.
Wednesday, December 13, 2006
பால் காய்ச்சல்
அன்புடையீர்,
நிகழும் விய ஆண்டு கார்த்திகை திங்கள் 27 ஆம் நாள் (டிசம்பர் மாதம் 13 ஆம் தேதி 2006 ஆம் வருடம்) காலை 7 மணியிலிருந்து 11.23க்கு மத்தியில் செமத்தியாகக் கடிபடும் ராசியும், ஒட்டுமொத்தமாக பஞ்சர் ஆகக் கூடிய நட்சத்திரமும் கூடிய சுபயோக சுபதினத்தில்(!) எனது புதிய வார்ர்புரு புகுவிழாவிற்கும் அதையொட்டிய பால் காய்ச்சும் விழாவினையும் தாங்கள் தங்களது சுற்றமும் நட்பும் சூழ வருகை புரிந்திருந்து வாழ்த்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
இங்ஙணம்,
கைப்புள்ள
அவ்வண்ணமே கோரும்
மாஞ்சா போட்டு காத்தாடி வுடற மொட்டை பாஸ்.
சரி, ரொம்ப ஜம்பமா பால் காய்ச்சுற விழான்னு போஸ்ட் போட்டு கூப்புட்டாச்சு. புது டெம்பிளேட்டை போணி பண்ண எதாச்சும் மொக்கை பதிவு போடோணுமில்ல...அதுக்காக யோசனை பண்ணதுல ஒரு கதை சொல்லலாம்னு தோணுச்சுங்க. நா....னே சொந்தமா எழுதுன கதை இது. கதைன்னதும் நெல்லிக்கா மாதிரியோ, கதிரேசன் கதை மாதிரியோ எதையாச்சும் எதிர்பாத்து வந்தீங்கன்னா ஏமாந்து போயிடுவீங்க. ஏன்னா நம்ம கதை அதை எல்லாத்தையும் தாண்டுன ஒரு சூப்பரான சூப்ரீமான மெகாஹிட் ப்ளாக்பஸ்டர் கதை. சரி...சரி...பில்டப்பு போதும். கதையைச் சொல்றேன் கேளுங்க. அதாவது நம்ம கதையில ஒரு பயங்கர நேர்மையான போலீஸ்காரர் இருக்காருங்க. அவரு தான் நம்ம கதையோட ஹீரோ. அவரு பேரு...ஆங்...சி.ஐ.டி.சங்கர். மனுசனுக்கு ஒடம்பு பூரா மூளை...சின்ன வயசுலேருந்து டன் கணக்குல வெண்டைக்கா சாப்புட்டதுனால, லைட்டா நம்ம சி.ஐ.டி.மண்டையில கொட்டுனா கூட கொட்டுறவங்க விரல்ல மூளை ஒட்டிக்கும்...அம்புட்டு மூளை. சங்கருக்குக் எந்த அளவு கொழந்தை மனசோ அந்த அளவுக்கு நேர்மையும் நாணயமும் ரொம்ப முக்கியம். புள்ளைத்தாச்சி பொண்டாட்டிக்கு தோசை போட்டுத் தர்றதுல காட்டுற அதே இண்டரெஸ்டைத் திருட்டுப் பயலுங்களைப் புடிக்கறதுக்காக வாத்து டிசைன்ல ஒரு பைக்கை வச்சிக்கிட்டு தண்ணிக்குள்ளேருந்து பாஞ்சு சண்டை போட்டு கெலிக்கிறதுலயும் காட்டுவாரு.
சி.ஐ.டி.சங்கர்னு இருந்தா சி.ஐ.டி.சகுந்தலா இல்லாமலயா இருப்பாக? அவிங்களும் இருக்காக. ஆனா அவங்க நம்ம கதையில சங்கருக்கு ஜோடி கெடையாது. காலேஜ்ல ஒன்னா படிக்கும் போது சங்கரை ரகசியமா சைட்டடிச்ச 'ஜஸ்ட் ஃப்ரெண்டு' தான். இங்கே நம்ம சகுந்தலாவைப் பத்தி சொல்லியே ஆவனும். ஸ்பாகெட்டி டாப்ஸ், ஜீன்ஸ் இதெல்லாம் போட்ட நல்ல 'வடிவான பெண்டு' தான். ஆனா கடமைன்னு வந்துட்டா பெண்டு நிமித்துறதுலயும் கில்லாடி. நம்ம சி.ஐ.டி.சங்கரோட தோஸ்த் ஒருத்தரு இந்த கதையில இருக்காப்புல. அவரு பேரு...என்னாதது?...ஆங்...ஆங்...சாரி. Sorry இல்ல Chaari. நம்ம சாரியிருக்காரே, பாக்கறது ஏட்டு வேலைன்னாலும் கடலை போடறதுல கிங். சி.ஐ.டி.சகுந்தலாவுக்கு நம்ம சாரி வுடற நூல் பாதியிலியே டீலாகிப் போறதுன்னால சீ...சீ...இந்தப் பழம் புளிக்கும்னு, அதை அப்படியே விட்டுட்டு புடிபடப் போறத் திருட்டுப் பயலைத் தப்பிக்க வைக்கிற கஷ்டமான தொழிலைச் செய்யறாரு.
இது இப்படியிருக்க மலையூர் மம்பட்டியான் மலையூர் மம்பட்டியான்னு ஒருத்தரு நாடு நாடாக் கொள்ளை அடிக்கிறாரு. எந்த நாட்டு போலீசாலயும் அவரைப் புடிக்கவே முடியாது. அப்படிப்பட்ட ஜெகஜால கில்லாடி அவரு. ஆயா வேஷம் போட்டு பாயா திருடறது, பணக்காரங்க கிட்டேருந்து கொள்ளை அடிச்சி ஏழைகளுக்குக் குடுக்காம தானே வச்சிக்கிறது, திருடுன பணத்தை வச்சி அடுத்த திருட்டுக்குப் பளான் போடறதுன்னு இப்படியே ஜாலியாப் போவுது அவரு பொழப்பு. இப்படியே பல எடத்துல திருடுனாலும், நம்ம மம்பட்டியானுக்கு ஒரு பழக்கம்ங்க. அதாவது திருடப் போற எடத்துலெல்லாம் சிலேட் பல்பத்தைத் தேடி ஏபிசிடின்னு எதனா கிறுக்கி வைக்கிற ஒரு எல்கேஜி பழக்கம். இப்படி ஒரு தபா ஒரு எடத்துல திருடிட்டு வரும் போது சிலேட்ல நம்மாளு ஏ ன்னு எழுதி வைக்க, அது நம்ம ஹீரோ சி.ஐ.டி.சங்கர் கையில மாட்டிக்குது...யார் கையில மாட்டிக்குது...நம்ம சி.ஐ.டி.சங்கர் கையில மாட்டிக்குது. ஒடனே சங்கரும், படக்குன்னு ஒரு கால்குலேட்டரை எடுத்து சொம்மா ஸ்டைலா ரெண்டு பட்டனை அழுத்தறாரு, கூட்டிக் கழிச்சு கணக்கு போட்டு நம்ம கால்குலேட்டர் மம்பட்டியான் அடுத்ததா திருடப் போற எடத்தைக் கரீட்டாச் சொல்லிடுது. அதைக் கண்டு புடிச்சி சொன்னதும் மம்பட்டியானைப் புடிக்கறதுக்காண்டி சி.ஐ.டி.சங்கரையும், சி.ஐ.டி.சகுந்தலாவையும், ஏட்டு சாரியையும் வச்சி ஒரு தனிப் படை அமைச்சு 'போய் லபக்குன்னு கோழி அமுக்கு அமுக்கிக்கின்னு வாங்கப்பா'ன்னு போலீஸ்ல அனுப்பி வைக்கிறாங்க.
மலையூர் மம்பட்டியானைப் புடிக்கறதுன்னா சொம்மாவா? சகுந்தலாக்கா எஃபெக்டுக்காக ஒரு பனியனை எடுத்து மாட்டிக்குது, "ஐ நீ மட்டும் தான் எஃபெக்டு காட்டனுமா? நாங்களும் தான் காட்டுவோம்"னு சொல்லி சங்கரும், சாரியும் சோக்கா பீச்சுல வைப்பாங்கல்ல கலர் கண்ணாடி அதை வாங்கி மாட்டிக்கிறாங்க. மூனு பேரும் அவுங்களுக்குள்ளேயே பேசிக்கிறதுக்காண்டி ஒரு மாடர்ன் டிரான்ஸிஸ்டர் வித் இயர்ஃபோன் எடுத்து காதுல மாட்டிக்கிறாங்க. ஆனா எம்புட்டுத் தான் டிரான்சிஸ்டர்ல இவுங்கல்லாம் பேசிக்கினாலும் நம்ம மம்பட்டியான்க்குறாரே மம்பட்டியான் சோக்கா செலை வேசம் போட்டு எப்படியோ லவட்ட வேண்டிய சமாச்சாரத்தை லவட்டிக்கிறாரு. நம்ம சி.ஐ.டி.சங்கருக்கு எப்படியோ இது தெரிஞ்சிப் போவ, சாரியை டிரான்சிஸ்டர்ல கூப்புட்டு உசார் பண்ணியும் நம்ம மம்பட்டியான் தாத்தா வேசம் போட்டு சாக்கடைக்குள்ள பூந்து எஸ்கேப் ஆயிடறாரு. நீ பாட்டுக்கு வரலாம், வந்து திருடிட்டுப் போலாம்னு பாத்தா சங்கரும், சாரியும், சகுந்தலாவும் வுட்டுருவாங்களா? எலிகாப்டர்லயும், மாட்டுவண்டிலயும் பயங்கரமா மம்பட்டியானைச் சேஸ் பண்ணுறாங்க...உங்க வீட்டு சேஸ் எங்க வீட்டு சேஸ் இல்ல...பயங்கரமான ஒரு சேஸ் பண்ணி...கடைசியா கோட்டை வுட்டுடறாங்க.
"சரி அடிச்சிக்கினு போனா போறான்...அடுத்தது ராஜா காலத்து அரை பிளேடு ஒன்னை அபேஸ் பண்ண மம்பட்டியான் கண்டிப்பா வருவான்" அப்படின்னு அங்கே அவனைப் புடிக்க எலிப் போன்ல மசால் வடை வைக்கிற மாதிரி லேசர் லைட்டெல்லாம் செட் பண்ணி ரெடியா நின்னுக்குனு இருக்காங்க சி.ஐ.டி.சங்கரும், சகுந்தலாவும். ஆனா மம்பட்டியான் வந்து பிளேடை அடிக்கிறதுக்கு முன்னாடி ஒரு பொண்ணு வந்து அபேஸ் பண்ணிடுது. ஆனா பிளேடை அபேஸ் பண்ணற நேரம் பாத்து சி.ஐ.டி.சங்கர் தன்னோட சகப் பரிவாரங்களோட ஸ்பாட்ல ஆஜராயிடுறாரு. ஆனா கையில வெலங்கு மாட்டிப் பொண்ணை அரெஸ்ட் பண்ணி எஃப் ஐ ஆர் எழுதறதுக்குள்ள, மம்பட்டியான் பறந்து வந்து பொண்ணையும் பிளேடையும் எஸ்கேப் பண்ணி கூட்டுக்கினு ஓடிடறாரு. இவுங்க ரெண்டு பேரும் எஸ் ஆகி மம்பட்டியானோட ரெசிடென்ஸுக்குப் போறாங்க. அங்கே அந்த பொண்ணு தன்னோட முகமூடியை வெலக்குது...அடங்கொக்க மக்கா சக்கை அழகுடான்னு கண்ணாத்தா (அதான் பாப்பா பேரு) அழகைப் பாத்து மம்பட்டியான் அப்படியே மயங்கி நிக்கிறாரு. அப்பால சில பல மோதல்களுக்கு அப்பால பாஸ்கெட் பால் ஆடிக்கினே கண்ணாத்தாவையும் தன்னோட தொயில்ல பார்ட்னராச் சேத்துக்கிறாரு நம்ம மம்பட்டியான். ஆனா நம்ம கண்ணாத்தாவுக்கு மராட்டிய மகராஜா பேரைக் கேட்டா மட்டும் புடிக்கவே புடிக்காது. அது ஏன்னு கேக்கப் பிடாது. அதெல்லாம் அப்படித் தான். ஆனா மம்பட்டியானோட, கர்ச்சீப்ல செஞ்ச டிரெஸ் எல்லாம் போட்டுக்கினு டான்ஸ் ஆடுவாங்க. அதுவும் அப்படித் தான்.
இந்த நேரம் பாத்து நம்ம சி.ஐ.டி.சகுந்தலாவுக்கு சி.ஐ.டி. வேலையெல்லாம் வேலையத்த வேலைன்னு ஒரு ஞானோதயம் தோணவே அவுங்களும் அப்படியே சைக்கிள் கேப்ல எஸ்ஸாயிகிடறாங்க. ஆனாலும் எஸ்ஸாவறதுக்கு முன்னாடி தன்னை மாதிரியே இருக்கற அவங்க தங்காச்சி ஒருத்தங்க ரிகோலெத்தா பார்டர் தோட்டத்தாண்ட தனியா தங்கியிருக்கறதைச் சொல்லிட்டு எஸ்ஸாயிடறாங்க. தற்செயலா, அட படு தற்செயலா நம்ம கண்ணாத்தாவும், மம்பட்டியானும் அதே எடத்துக்கு வந்துருக்கறதா சங்கருக்கும், சாரிக்கும் தகவல் கெடைக்குது. சரி...கம்பெனி செலவுல கடலைக்கு கடலையும் ஆச்சு...அப்படியே முடிஞ்சா மம்பட்டியானைப் புடிக்க முயற்சி பண்ணுவோம்னு சங்கரும், சாரியும் பார்டர் தோட்டம் வந்து சேருறாங்க.
இந்த எடத்துல கதையில ஒரு திருப்புமொனை இருக்கற நேரத்துல பதிவு ரொம்ப நீளமாயிடுச்சுன்னு "பால் காய்ச்சல்" தொடரும்னு ஒரு வெயிட்டீஸ் வுட்டுக்கலாமான்னு நெனச்சேன். ஆனா பதிவு நீளமா தெரியாம இருக்கறதுக்காண்டித் தானே டெம்பிளேட்டையே மாத்துனோம்ங்கிறது நெனப்பு வர, அந்த ஐடியாவை அப்படியே குழித் தோண்டி ரிகோலெத்தா தோட்டத்தாண்டையே பொதச்சிட்டு கதையை மேலே சொல்றேன் கேளுங்க. இண்டிரெஸ்டா உம் கொட்டிக்கினே கேக்கனும் ரைட்டா? அப்ப தான் கதை சொல்றவனுக்கும் ஒரு ஃபீலிங்ஸ் வரும். திருப்புமொனைன்னு சொன்னேனே அது என்ன திருப்புமொனை?
இந்த கண்ணாத்தா இருக்கே கண்ணாத்தா...அது மம்பட்டியானைப் புடிக்க சி.ஐ.டி.சங்கர் செட்டப் பண்ண ஆளு. அடங்கொக்கமக்கா!!! என்ன இப்படி ஒரு மெகா திருப்பம்னு நீங்கல்லாம் கேக்கறது புரியுது. மறுக்கா ஒரு டேங்க்யூ. கதை த்ரில்லிங்காப் போவுதில்ல? ஆனா பாருங்க கண்ணாத்தாவுக்கு மம்பட்டியான் மேல மெய்யாலுமே லவ்ஸ் உண்டாகிப் போவுது. ஆனா இந்த நேரம் பாத்து கண்ணாத்தா சி.ஐ.டி.சங்கரோட ஆளுன்னு மம்பட்டியானுக்குத் தெரிஞ்சிப் போவ ரோல் கேப் துப்பாக்கியால கண்ணாத்தாவுக்கு பயம் காட்டறாரு. பயத்துல கண்ணாத்தாவுக்கு லவ்ஸ் இன்னும் அதிகமாவ...ஒரு சின்ன லா லா லா நடக்குது:) அதுக்கப்புறம் என்ன... கண்ணாத்தாவும் மம்பட்டியானும் ஒன்னு சேர்ந்து சி.ஐ.டி.சங்கர் கண்ணுல மண்ணைத் தூவிட்டு ரிகோலெத்தாலயும் ஒரு மெகா ஆட்டையைப் போட்டுட்டு தாடி வேசம் எல்லாம் போட்டு எஸ்கேப் ஆக முயற்சி பண்ணறாங்க. ஆனா ரெண்டு பேத்தையும் சி.ஐ.டி.சங்கரும், சாரியும் ஹவர் சைக்கிளை எடுத்துக்குன்னு போயி தொறத்தோ தொறத்துன்னு தொறத்துறாங்க. அப்படியே தொறத்திட்டுப் போகும் போது, மலை மேல ஒரு முகனையில கண்ணாத்தாவும், மம்பட்டியானும் மாட்டிக்கிறாங்க.
அதுக்கப்புறம் என்ன நடந்துச்சுன்னு தானே கேக்கறீங்க? ஐ...ஐ...அஸ்கு புஸ்கு! நான் எப்படி சொல்லுவேன்? இப்பேர்ப்பட்ட என்னோட இந்த இண்டர்நேஷனல் கதையைத் தமிழ்ல கேப்டனை வச்சிப் படமாப் பண்ண நான் முயற்சி பண்ண நேரத்துல, "தர்மபுரி"க்குக் கேப்டன் பேரரசுக்கு டேட் குடுத்ததுனால, சும்மா இருக்க வேணாமேன்னு சி.ஐ.டி.சங்கரா அபிஷேக் பச்சனையும், சி.ஐ.டி.சகுந்தலாவா பிபாஷா பாசுவையும், மலையூர் மம்பட்டியானா ரித்திக் ரோஷனையும், கண்ணாத்தாவா ஐஸ்வர்யா ராயையும், சாரியா உதய் சோப்ராவையும் வச்சி "தூம் 2"ன்னு ஒரு இண்டர்நேஷனல் படம் எடுக்க வைச்சேன். அந்த கதை தான் நீங்க மேலே படிச்சது. கதையைப் படிச்சதும் இல்லாம க்ளைமாக்ஸையும் கேக்கறீங்களே? இது நியாயமா?
Tuesday, December 05, 2006
பஸ் பயணங்களில் #3
பஸ் பயணங்களில் #2
பஸ் பயணங்களில் #1
ஓட்டுநர், நடத்துனர், பணிமனை இதப் பத்தியெல்லாம் போன பதிவுகள்ல ஏதேதோ உளறிக் கொட்டியாச்சு. இருந்தாலும் பயணிகளைப் பத்தியும், பயண அனுபவங்களைப் பத்தியும் மாட்லாடலன்னா எப்படி? பேருந்துல பயணிகளையும், அவங்க நடவடிக்கைகளையும் கவனிச்சாலே நகைச்சுவை துணுக்குகளுக்கும், கொஞ்சம் வளமான கற்பனை கொண்ட எழுத்தாளர்களா இருந்தா எத்தனையோ சிறுகதைகளுக்கும் கதை களமா அமையக் கூடியது(ஏற்கனவே அமைந்தது) பேருந்து பயணம். மக்களைக் கவனிக்கறதுலயும் அவங்க செய்கைகளை ரசிக்கறதுலயும்(ரசிக்கக் கூடியவற்றிற்கு மட்டும்) ஒரு ஈடுபாடு வந்துடுச்சின்னா ரொம்ப மகிழ்ச்சியான அனுபவங்களாக அமையக் கூடியது இப்பயணங்கள்.
வெளியூர் செல்லும் பேருந்துகளில் இந்த மாதிரி பயணங்களின் போது தான் எங்காவது மோட்டலில் நின்று விட்டு பஸ் கெளம்புவதற்கு முன்னால், வெளியில் நின்று தம்மடித்துக் கொண்டிருக்கும் கணவர் வராததால், 'கொஞ்சம் நிறுத்துங்க இன்னும் அவர் வரலை' என்று யாராவது ஒரு பெண் பரிதாபமாகக் கெஞ்சுவதும், 'பத்து நிமிசத்துல வந்துடுங்கன்னு அப்பவே சொன்னேனேமா' என ஓட்டுநர் அலுத்துக் கொள்வதும் சம்பந்தப்பட்ட 'தம்-புரானின்' குடும்பத்தவர்களின் இதயத் துடிப்பை அதிகப் படுத்துவதற்காக ''ட்ர்ன்ன்ன் ட்ர்ன்ன்ன்ன்' என்று வண்டியை சவுண்டு அதிகமாகக் கொடுக்கச் செய்வதும், தம் அடித்துக் கொண்டிருந்தவர் எங்கிருந்தோ அவசரமாக அவசரமாக ஓடி வந்து ஏறுவதும் 'இப்ப அந்த சிகரெட் குடிக்கலைன்னா தான் என்னா?'னு வூட்டுக்கார அம்மாவிடம் பாட்டு வாங்கி அசடு வழிவதையும் காண முடியும். 'திண்டிவனத்துலேருந்து மூனு மணி நேரத்துல வண்டி தாம்பரத்துக்குப் போய்டும்ங்க' என வாக்கு கொடுத்துவிட்டு சீட் நிரம்பவில்லை என்பதால் புளியமரத்திற்குப் புளியமரம் தனியார் பேருந்து நின்று நின்று செல்வதையும், மூனு மணி நேரத்தில் செங்கல்பட்டைக் கூடத் தாண்டாத பேருந்தின் ஓட்டுநரையும், நடத்துனரையும் ஏகவசனத்தில் கரித்துக் கொட்டும் பயணிகளையும் காணலாம். ப்ராட்வே பேருந்து நிலையத்தில் ஒவ்வொரு வெளியூர் பேருந்தாக ஏறி இஞ்சி மரப்பாவும், டைம்பாஸ் கடலையும், பெப்சி ஐசும் விற்கும் சிறுவர்களால் ஒரு நாளைக்கு எவ்வளவு ஊதியம் ஈட்டிவிட முடியும் எனப் பலமுறை யோசித்ததுண்டு. இரயில் கடப்பதற்காகப் பேருந்து நிற்கும் அந்த சில மணித் துளிகளில் 'யக்கா பிஞ்சு நுங்குக்கா...வாங்கிக்கக்கா' என எட்டடி உயரத்தில் இருக்கும் எட்டாத ஜன்னல் வழியே நுங்கைப் பேரம் பேசி விற்க முயலும் சிறுமியின் ஏழ்மையைக் கண்டும் காணாமல் போகச் செய்யும் இயந்திர வாழ்க்கையினையே நாம் வாழ்கிறோம் என உணர்த்துவதும் பேருந்து பயணம்.
சென்னை நகரத்துப் பேருந்துகளில் 'ஒரு நந்தனம் ஹவுசிங் போர்ட் குட்ணா' என நடத்துனரைக் கேட்கும் லுங்கி கட்டிய கறுத்த இளைஞனின் சமூக நிலையை எடை போட பொருளாதார மேதையாக இருக்க வேண்டிய அவசியமில்லை. அதே நேரம் பேருந்தின் 'இறங்கும் வழி' வாயிலாக ஏறும் கல்லூரி மாணவி 'ஒரு டூ ஃபிப்டி பாஸ் பண்ணுங்க' என அருகில் நிற்பவரிடம் பத்து ரூபாயைத் தருவதையும், ஸ்டேஜ் மாறுவதை உணர்ந்த நடத்துனர் 'எங்கம்மா போவனும்?' எனக் கேட்கும் கேள்விக்கு 'ஏத்ராஜ்' என நுனிநாக்கில் பதிலளிப்பதையும், கேட்கும் வழிப்போக்கனான நமக்கு, நம் வீட்டருகில் மாடு கட்டி பால் கறக்கும் எத்துராஜும், பகலிலேயே சரக்கடித்து விட்டு மல்லாந்து கிடக்கும் ரிக்ஷாகார எத்திராஜும் தங்கள் பெயர்களையும் இவ்வளவு அழகாக உச்சரிக்க முடியும் என்பதை அறிந்தால் மகிழ்வார்கள் என்றே தோன்றும். கையில் கொண்டு வந்திருக்கும் ஒத்தை நோட்டையும் பெண்கள் பகுதி சன்னலின் வழியாகப் பேருந்தினுள் வீசிவிட்டு வேகமாக ஓடும் பேருந்தில் படுலாவகமாக வித்தவுட்டும் ஃபுட்போர்டும் அடிக்கும் இளைஞன், அவன் பெற்றோரின் எதிர்பார்ப்புகளை எவ்வாறு நிரைவேற்றுவானோ எனத் தோன்றியதுண்டு. 'படிகட்டுப் பயணம் பரலோகப் பயணம்' என அறிந்தும் படியில் நிற்பவனை 'தம்பி மேலே வா மேலே வா' என அன்பாக அழைத்துப் பலனில்லை என உணரும் நடத்துனர் "டேய் சொல்றேன்ல மேல வாடா! காலங்காத்தால நம்ம தாலி அறுக்குறதுக்குன்னே வர்றானுங்க"என்று கடுமையாகப் பேசும் போது அப்பணியும் எளிமையானதல்ல என்றும் விளங்கும். மாறுவேடத்தில் பெண் போலீஸ் இருக்கக் கூடும் என்ற பயத்தினால், மாநகரப் பேருந்துகளில் உண்டான ஒழுங்கு தானாகவே உண்டாகியிருக்கும் பட்சத்தில் 'ஈவ் டீசிங்' இந்நேரம் இல்லாமல் போயிருக்கும் என்பதும் திண்ணம்.
இதெல்லாம் ஒருபுறம் என்றால் பேருந்தில் நண்பர்களுடன் மகிழ்ச்சியாகப் பேசிக் கழித்த நினைவுகளை மறக்கவும் முடியுமோ? ராயப்பேட்டையிலிருந்த பள்ளிக்கூடத்திலிருந்து திருவல்லிக்கேணியில் இருந்த வீட்டுக்குச் செல்ல தலையைச் சுற்றி மூக்கைத் தொடும் முயற்சியாக 'இராதாகிருஷ்ணன் சாலை எல்லோ பேஜஸ்' நிறுத்தத்தில் நண்பன் மன்னாரிடம்(பட்டப்பெயர் தாங்க) 45B பஸ்சுக்குக் காத்து நிற்கும் நேரத்தில் நீதிக் கட்சியும், தி.க.வும் தோன்றிய விதத்தினைப் பற்றியும், அவனைக் கவர்ந்த ஹிட்லர் எனும் 'பெருந்தலைவனை பற்றியும் கேட்ட கதைகள் இன்னும் பசுமையான நினைவுகளாக நிறைந்துள்ளன. தவறுதலாக ஒரு முறை, காலியாக இருந்த 'மகளிரும் சிறுவரும்' பேருந்தில் (நான் சிறுவனாக இல்லாத போது) ஏறிவிட்டு சட்டென்று உணர்ந்து கீழிறங்கியதையும், அருகில் இருக்கும் சில்ரன்ஸ் கார்டன் பெண்கள் பள்ளியைப் பற்றி 'ஈரமான ரோஜாவே மோகினி படிச்ச ஸ்கூல்டா இது' என நண்பனிடம் பகிர்ந்து கொண்ட வெட்டிப் பேச்சுகளையும் இன்று நினைத்தாலும் 'அந்த நாளும் வந்திடாதோ?' என ஏக்கம் பிறக்கும். வீட்டிலிருந்து கடற்கரை சாலையில் இருந்த எழிலகம் நிறுத்தம் வரை 'மினி டிராஃப்டரும்', 'இஞ்சினியரிங் டிராயிங் சார்ட்களும்' சுமந்துச் சென்று அண்ணா பல்கலைக்கழகத்துக்குப் பேருந்து ஏறிய அந்த நான்கு ஆண்டு காலமும், வானொலி நிலையப் பேருந்து நிறுத்தத்தில் வழக்கமாக ஏறும் வேற்றுத் துறை மாணவியின் அழகினையும், அடக்கத்தினையும், சிரிப்பினையும், சின்ன அசைவுகளையும் ரசித்த நண்பன் சுரேஷினை வெறுப்பேற்ற 'டேய் மாம்ஸு, அந்த பொண்ணு இ.சி.ஈ.டா...பெரிய எடம். நாமெல்லாம் கட் ஆஃப்லியே அடிபட்டுப் போயிருவோம்டா. ஃபஸ்ஸி லாஜிக்கும்(Fuzzy Logic), இண்டக்ரேட்டடு சர்க்யுட்ஸும்(Integrated Circuits) எங்கே, நம்மளோட பீமும்(Beam), காலமும்(Column) எங்கே?' எனப் பேசியதும் 'டேய்! இ.சி.ஈ. என்னடா இ.சி.ஈ? எனக்கு கூட தான் ஐ.ஐ.டி. மெட்ராஸ்ல சீட் கெடச்சது...ஆனா நான் சிவில் படிக்கலை?' என அவன் பதிலிறுத்ததும் அதைக் கேட்டு வியப்பில் 'பின்னே ஏண்டா நீ ஐ.ஐ.டி.யில் சேரலை?' எனக் கேட்டதற்கு, 'ஹை கோர்ட்லேருந்து வர எல்.எஸ்.எஸ் பஸ் எதுவும் ஐ.ஐ.டி ஸ்டாப்புல நிக்காதுல்ல...அதனால தான்' என அவன் அந்த நிமிஷத்தில் செய்த 'நார்த் மெட்ராஸ் நெக்கலைக்' கேட்டுக் குலுங்கிச் சிரித்ததும் நினைவில் நிற்கின்றன.
இறுதியாக, பேருந்து பயணங்களைப் பற்றி எழுதப் போய் என்னென்னமோ பழைய நினைவலைகளுள் மூழ்கி, மைல் நீளப் பதிவுகள் மூன்று போட்டாயிற்று. இது வரை படித்தவர்கள் பலரும், தங்கள் நினைவுகளையும் பகிர்ந்து கொண்டு இப்பதிவுகளுக்குச் சிறப்பு சேர்த்திருக்கிறீர்கள். பசுமை நிறைந்த நினைவுகளைத் துளிர்க்கச் செய்த தங்கள் அனைவருக்கும் நன்றி கூறி நிறைவு செய்கிறேன்.
Sunday, December 03, 2006
பஸ் பயணங்களில் #2
பஸ் பயணங்களில் #1 இங்கேயிருக்கு...படிச்சிப் பாருங்க
The Whole is Greater than the sum of its Partsனு சொல்லுவாங்க. "Whole" ஆகிய பேருந்து பயணத்தினை முழுமையாக்கும் "Parts"கள் பேருந்தின் ஓட்டுநர், நடத்துனர், பயணிகள், செக்கிங் இன்ஸ்பெக்டர் இன்னும் நம் கண்ணுக்குத் தெரியாத எண்ணற்றவர்கள். ஆனால் சில சமயம் இந்த பார்ட்ஸ்களைத் தனித் தனியே கவனிப்பதும் சுவாரசியமாகவே இருக்கும். உதாரணத்துக்கு இந்த நடத்துனர்களை எடுத்துக்கங்களேன்...தென்னாற்காடு மாவட்டத்தில் தனியார் பேருந்துகளில் காவி வேட்டி கட்டிய நடத்துனர்கள் 'யார் சீட்டு...கேட்டு வாங்கிக்க' என்று கேட்பதிலாகட்டும், கோயம்புத்தூரில் சேரன்(முன்னாள்) பேருந்துகளில் ரைட்டு சொல்வதற்குப் பதிலாகத் தந்தி அடிப்பதிலாகட்டும், சென்னையில் நடத்துனர்கள் 'ரேய் ரேய்'வும் 'எறங்கி ஏறு'வும் 'அடுத்த ஸ்டேஜ்ல செக்கிங் வராங்க"ன்னுசொல்வதிலாகட்டும், கூட்டம் நிறைந்த வேளைகளில் பெங்களூர் கேஎஸ்ஆர்டிசி நடத்துனர்கள் கீழே இறங்கி 'பேகே இள்றி' என்று துரிதப் படுத்துவதிலாகட்டும், புது தில்லியில் டிடிசி(DTC) நடத்துனர்கள் உட்கார்ந்த இடத்தில் இருந்து கொண்டே ஹரியான்வி(கிரிக்கெட் வீரர் விரேந்தர் சேவாக் பேசற மொழி) மொழியில் 'டிகிட் போள் பாய்' எனக் கூறுவதிலாகட்டும், நடத்துனர்களின் 'மேனரிசங்களைக்' கவனிப்பதும் ஒரு தனி ஜாலி தான். டிக்கட் கிழிப்பதிலும் நகரத்திற்கு நகரம், நடத்துனர்களுக்குள் பல விதமான வேறுபாடுகள். முன்னாள் திருவள்ளுவர்(இந்நாள் அரசு விரைவுப் பேருந்து, தமிழ்நாடு) பேருந்துகளில் நெயில்கட்டர் போன்ற ஒரு கருவி கொண்டு டிக்கட்டில் ஸ்டேஜை பஞ்ச் பண்ணி கொடுப்பார்கள். நம்ம சென்னை பேருந்து நடத்துனர்களின் டிக்கட் கிழிக்கும் வேகம் சும்மா சொல்லக் கூடாது...செம ஃபாஸ்ட். எவ்வளவு கூட்டம் இருந்தாலும் சர்சர்ருன்னு கையாலேயே டிக்கட் கிழிச்சி குடுத்துட்டு "யாரு டிக்கட் யாரு டிக்கட்"னு கூட்டமான வண்டிக்குள்ளேயும் போய்க்கிட்டும் வந்துக்கிட்டும் இருப்பாங்க. இதுவே தில்லியை எடுத்துக்கிட்டீங்கன்னா அரசு பேருந்துகளில் நடத்துனர்கள் வண்டி கெளம்பும் போது மட்டும் தான் சீட்டுக்கு வந்து டிக்கெட் குடுப்பாங்க, அதுக்கப்புறம் உக்காந்த எடத்தை விட்டு எந்திரிச்சு வர மாட்டாங்க. மும்பை பெஸ்ட்(BEST) பேருந்துகளின் நடத்துனர்களைப் பாத்தீங்கன்னா சீருடையிலேயே ஒரு ஒழுங்கு தெரியும். சட்டையிலே பெயர் பலகை(Name Plate) குத்தியிருக்கும், சட்டை பட்டன்கள் கூட போலிஸ் சீருடையில் இருக்கற மாதிரி உலோக பட்டன்கள் இருக்கும், அதோட டிக்கட்களை அடுக்கி வச்சிக்க உலோகத்திலான ஒரு பலகை வச்சிருப்பாங்க.
நகரத்துக்கு நகரம் நடத்துனர்களுக்குள்ளே வேறுபாடுகள் இருந்தாலும், ஒரே நகரத்துக்குள்ளேயும் ஒவ்வொரு நடத்துனருக்குன்னும் ஒவ்வொரு ஸ்டைல் இருக்கும். சில பேரு பல நாள் ஆனாலும் நம்ம நினைவுலேயே நிப்பாங்க. அது மாதிரி சென்னையில் திருவல்லிக்கேணியிலிருந்து தி.நகர் செல்லும் 13 எண் வழித்தடத்தில் வரும்(இந்நேரம் ஓய்வு பெற்றிருப்பாரு) ஒரு நடத்துனர், 'I knew him well and every truant knew' மாதிரியான மனிதர். ஏன்னா அந்த ரூட்டுல போறவங்க எல்லாருக்கும் அவரைப் பத்தி தெரிஞ்சிருக்கும். என்னோட பதிவுக்கு அப்பப்ப வரும் கல்லூரி நண்பன் ஜனாவுடன் கல்லூரி முடிந்து வீடு வரும் போதும் அவரைப் பத்திப் பேசிப்போம். ஏனோ அப்ப அவரோட பேரைக் கேட்டுக்கணும்னு தோணலை. எதாச்சும் செஞ்சிக்கிட்டே இருப்பார்...அவர் அந்த பேருந்துல இருக்கறது பயணிகள் எல்லாருக்கும் தெரிஞ்சிட்டே இருக்கும். நடத்துனராக இருப்பதைப் பெருமையாகக் கருதுபவர் என அவரைப் பார்க்கும் போதெல்லாம் தோன்றும். கம்மி சம்பளம், சில சமயம் பண்டிகை நாட்களில் கூட வேலை என்றிருந்தாலும் மகிழ்ச்சியாகத் தன் பணியைச் செய்து கொண்டு இருப்பவர்களைப் பார்த்தால் அதிசயமாகவும், சில சமயம் பொறாமையாகக் கூட இருக்கும். பஸ் பாஸ் எடுத்து நீட்டும் பிள்ளைகளிடம் "நீயே பஞ்ச் பண்ணிக்க பாப்பா" எனச் சிரித்து விட்டு சிநேகமாகக் கண்ணடிப்பார். ஸ்கூல் குழந்தைகள் எறங்கும் போது ஓட்டுநர் அவசரப் படுத்தி வண்டியை எடுக்க முயற்சிக்கும் போது "யோவ் இருய்யா...புள்ளைங்கள்லாம் எறங்குதில்ல? என்ன அவசரம்" என்று ஓட்டுநரைக் கடிந்து கொள்வார். பாரதி சாலை(Pycrofts Road) தணிகைவேலன் இனிப்பகம் வந்ததும் "வண்டியைக் கொஞ்சம் ஸ்லோ டவுன் பண்ணிக்கய்யா, மதியான சாப்பாட்டுக்கு பொகடா வாங்கிட்டு வந்துர்றேன்"அப்படீம்பாரு. கேக்கறதுக்கே காமெடியா இருக்கும். அதோட எப்பவும் "ரைட்டு ரைட்டு" என்றும் "ஹோல்ட் ஆன்" என்றும் திருத்தமாகத் தான் சொல்வார். டபுள் விசில், ஷார்ட் விசில் என்று உதட்டு நுனியிலிருந்து விசில் அடிக்கும் இளம் வயது நடத்துனர்களின் மத்தியில் நம்மாளு தனியாத் தெரிவாரு. பேருந்து நிறுத்தத்தை அடைந்ததும் "பெரிய தெரு புள்ளார் கோயில் எல்லாம் எறங்கு" அப்படின்னு சத்தமா சொல்லுவார். என்ன அதுல விசேஷம்னா அவரு சொல்றது Pullaar இல்லை Bullaar. அதைக் கேட்டதும் உங்களையும் அறியாமல் உங்கள் உதட்டில் ஒரு புன்னகை வந்து தொற்றிக் கொள்ளும். வழுக்கைத் தலையும், பெரிய உதடுகளும், சோடாபுட்டிக் கண்ணாடியும் போட்ட ஒரு வயதான நடத்துனர் தான் என்றாலும் என்னைப் பொறுத்தவரையில் அடுத்தவர் வாழ்வில் கடுகளவேனும் மகிழ்ச்சியை விதைக்கும் அத்தகையவர்கள் 'வாழும் முன்னாபாய்கள்' தான்.
நடத்துனர்களைப் போலவே ஓட்டுநர்களுக்குன்னு சில பழக்கங்கள் இருப்பதை கவனித்திருக்கிறேன். பயணிகள் ஏறி இறங்கும் வழியாகச் சுலபமாக ஏற முடிந்தாலும் சில ஓட்டுநர்கள் ஓட்டுநர் சீட் அருகில் இருக்கும் சிறிய கதவு வழியாகத் தான் கஷ்டப் பட்டு ஏறுவார்கள். கியர் பாக்ஸ் மேல் யாராவது உக்காந்தா ஓட்டுநர்களுக்குச் செம கோபம் வரும். ஒரு முறை ஒரு பயணி 'நிக்கிறதுக்குக் கஷ்டமா இருக்குன்னு தானே உக்காருறோம், இதுக்குப் போய் கோவப் படறீங்களே" எனக் கேக்க "எங்களுக்கு சோறு போடற தெய்வம்யா அது, அது மேல உக்காருறேன்னு சொல்றியே" என வெடுக்கென்று பதிலளித்தார். அதே போல பேருந்தில் தூங்குபவர்களைக் கண்டால் ஓட்டுநர்களுக்கு ஆகவே ஆகாது. கிண்டியிலிருந்து அண்ணா சதுக்கம் செல்லும் 45B வழித்தடத்தில் நான் ஸ்கூல் படிக்கும் போது நடந்தது இன்னும் ஞாபகமிருக்கிறது. கூட்டமான அந்த பேருந்தில் டிரைவருக்கு அருகாமையில் ஒருவர் நின்று கொண்டே தூங்கிக் கொண்டிருந்தார். அதைப் பார்த்த டிரைவருக்கு வந்ததே கோபம் "என்னா சார்? நின்னுக்கிட்டே சாமியாடுறீங்களா? நான் சாமியாடுனா எல்லாரும் சாமியாட வேண்டியது தான்" என்று கூறியதைக் கேட்டு அங்கிருந்தவர்கள் எல்லாம் சிரித்து விட்டார்கள். பேருந்தில் பயணம் செய்யும் பயணிகளின் உயிரின் பொறுப்பு ஒரு ஓட்டுநரிடத்தில் இருப்பதால், பெரும்பாலான ஓட்டுநர்கள் மத்தியான சாப்பாடு கூட சரியா சாப்புட மாட்டாங்க...சாப்பிட்டா தூக்கம் வந்துடும்னு. அதோட உக்காந்தே வேலை பார்ப்பதனால் பைல்ஸ் நோய் ஓட்டுநர் வேலை பார்ப்பவர்களை மிக எளிதாகத் தாக்குகிறது என்று எப்போதோ படித்திருக்கிறேன். ஓட்டுநர்களை வித்தியாசப் படுத்திக் காட்டும் ஸ்டைல் விஷயம்னு பாத்தா அது கியர் போடுவதும், ஸ்டியரிங் வீலைப் பிடிப்பதிலும் தான். மற்றபடி ரோட்டைப் பார்த்து கவனமாக ஓட்டுவதில் ஓட்டுநர்களின் கவனம் இருக்கும் என்பதால் அதிகமாகப் பேசமாட்டார்கள். அதனால நடத்துனர்களைப் பத்தி எழுதுன அளவுக்கு ஓட்டுநர்களைப் பத்தி எழுதுறதுக்கு விஷயம் கெடைக்கறது கஷ்டம் தான்.
சென்னையின் பேருந்துகளில் பேருந்து வழித்தட எண்களைத் தவிர்த்து பேருந்துகளின் பக்கங்களிலும் பின்புறத்திலும் ADH505, TAG972, PRA912 போன்ற எண்கள் எழுதப்பட்டிருப்பதை கவனித்திருக்கிறீர்களா? அந்த குறிப்பிட்ட பேருந்து எந்த டெப்போவினைச் சார்ந்தது(ராத்திரிக்கும் பேருந்து படுத்துக்கப் போற எடம் :) என்று தெரிந்து கொள்ளத் தான் அந்த குறியீடு. உதாரணமாக AD என்பது அடையாறு பணிமனையையும், TA என்பது தாம்பரம் பணிமனையையும், PR என்பது பெரம்பூர் பணிமனையையும் குறிக்கும் குறியீடு. பணிமனையைக் குறிக்கும் அந்த இரண்டு எழுத்துகளுக்குப் பின் வரும் G,H என்னும் எழுத்துகள் போக்குவரத்து கழகத்தில் புதிதாக பேருந்துகள் வாங்கும் போது அளிக்கப்படும் ஒரு சிரீஸ்(series). அதன் பின்னர் வரும் எண்கள் ஒவ்வொரு பேருந்துக்கும் வித்தியாசப்படும். நீங்கள் உங்கள் ரூட்டில் வரும் பேருந்துகளை உன்னிப்பாகக் கவனித்தால் இந்த எண்களும் நினைவில் நின்றுவிடும். பலமுறை பேருந்துகளின் பக்கவாட்டில் இந்த எண்களை அடையாளம் கண்டு கொண்டே பேருந்துசை ஓடிச் சென்று பிடித்த அனுபவங்களும் உண்டு. ஆனால் சில சமயம் ஒரே பணிமனையைச் சேர்ந்த பேருந்துகளை வேறு வழித்தடத்தில் மாத்தி விட்டுடுவாங்க...அப்போ மட்டும் உங்களுக்கு மனப்பாடம் ஆனது வேஸ்ட் ஆயிடும். என்னங்க ரொம்ப போர் அடிக்குதா? இந்த மாதிரி 'பொழுது போகாத பொம்மு' வேலை நெறைய பண்ணிருக்கோம்ல? இத மாதிரி பல பொ.போ.பொ வேலைகள்ல நம்ம கிட்ட அதிகமா மாட்டிக்கிட்டு முழிச்சவனும் ஜனா தான். அதெல்லாமும் வரலாற்றுல எடம் பெற்றுத் தானே ஆகனும்? அதான் இன்னிக்கு வச்சி ப்ளேடு போட்டாச்சு :)
"எல்லாம் சரி தான்...ஆனா பயணிகள் இல்லாத பேருந்து என்னய்யா பேருந்து. அத பத்தி நீ ஒன்னுமே எழுதலியே"னு கேள்வி கேக்கறீங்க...எனக்கும் அது புரியாம இல்லை. ஆனா பாருங்க திவ்யாவுக்கு ஆன்லைன்ல வந்து அட்வைஸ் பண்ண 'பாடிகாட் வெறகுவெட்டீஸ்வரர்' நேத்து நம்ம கனவுல வந்தாருங்க. எல்லா ரம்பத்தையும் ஒரே பதிவுல போடாதே...1, 2, 3ன்னு நம்பர் போட்டு போடுன்னு அருள்வாக்கு சொன்னாருங்க. அதுனால 'பாடிகாட் வெறகுவெட்டீஸ்வரர் துணை'யோட ரெண்டு சிங்கிளை முடிச்ச நம்ம பேருந்து, ஓட்டுநர் கண்டக்டர் டீ சாப்புட்டுட்டு வந்ததும் மூனாவது சிங்கிளை சீக்கிரமாவே ஆரம்பிக்கும்ங்க.
Saturday, December 02, 2006
பஸ் பயணங்களில் #1
இது ஒரு இன்ஸ்பிரேஷன் பதிவு. ஜூலை மாதம் கப்பி எழுதுன 'பஸ் பயணங்களில்' பதிவு படிச்சதுலேருந்து அதை போலவே நானும் ஒரு பதிவு எழுதனும்னு ரொம்ப நாளா நெனச்சி வச்சிருந்தேன். பொருத்தமான வேற தலைப்பு எதுவும் தோணாததால என் பதிவுக்கும் அதே பேரை வச்சிட்டேன். கப்பி பதிவுல நான் போட்ட பின்னூட்டத்தையும் ராயல்டி தராம இங்கே யூஸ் பண்ணிக்கிட்டேன். சின்ன வயசுல எனக்கும் என் தம்பிக்கும் பிடிச்சமான விளையாட்டுன்னு ஒன்னு சொல்லனும்னா அது பஸ் விளையாட்டு தாங்க. அது வெளையாடும் போது தான் ரெண்டு பேரும் சண்டை போட்டுக்காம, அடிச்சிக்காம இருப்போம். இல்லன்னா ரெண்டு பேரையும் மேக்கிறதுக்கே எங்க அம்மாவுக்குச் சரியா இருக்கும்.
டீச்சர் விளையாட்டு, டாக்டர் விளையாட்டு இதெல்லாம் கேள்வி பட்டுருப்போம்...அது என்ன பஸ் வெளையாட்டு? ஒன்னும் இல்லீங்க என் தம்பி டிரைவர், நான் கண்டக்டர் ரெண்டு பேரும் வாயாலேயே பஸ்சை ஓட்டிக்கிட்டுப் போவோம். எங்க வீட்டு மாடிக்குப் போற ஒரு படிக்கட்டுல என் தம்பி ஒக்காந்துக்குவான், படிக்கட்டுக்கும் செவுத்துக்கும் நடுவுல இருக்குற ஒரு சின்ன இடுக்குல ஒரு மொத்தமான குச்சியைச் சொருகி வச்சிக்குவான், அது தான் எங்க பஸ்சோட கியரு. நான் கண்டக்டராச்சே? என்னோட தொழிலுக்கான உபகரணங்கள்னு பாத்தா அம்மாவோட பழைய ஹேண்ட்பேக் ஒன்னு... அது தான் நம்ம கண்டக்டர் பை. அதுக்குள்ளே ரெண்டு விசில் கெடக்கும்...10 காசு 20 காசுன்னு சில்லறை கொஞ்சம் இருக்கும்(அப்போ தான் பையைக் குலுக்குன்னா கண்டக்டர் பையைக் குலுக்கற ஒரு எஃபெக்ட் கெடைக்கும்), அதோட பழைய பல்லவன் பஸ் டிக்கட் நெறைய இருக்கும். நாங்க பஸ்ல போகும் போதெல்லாம் கெடைக்கிறது, எங்க வீட்டுக்கு யாராவது வந்தாங்கன்னா அவங்க கிட்ட கேட்டு வாங்கறது இப்படின்னு 40காசு, 50காசு, 90காசு, 1.10ரூ இப்படின்னு பலவிதமான பஸ் டிக்கட் கண்டக்டர் பைல இருக்கும். பஸ் விளையாட்டு வெளையாடும் போது டிக்கட் எல்லாம் அழகா அடுக்கி என் கையில இருக்கும்...விசில் வாயில இருக்கும். நான் விசில் குடுத்ததும் டிரைவர் கியரைப் போட்டு டுர்ர்ர்...டுர்ர்ன்னு பஸ்சை எடுத்துக்கிட்டு கெளம்பிடுவாரு.
நெஜ பஸ்சுல கியர் போடும் போது ஏற்படற ஒரு உராய்வு சத்தம் (எனக்கென்னமோ அதை கேக்கும் போதெல்லாம் அரிசி கீழே கொட்டற மாதிரி இருக்கும்), பிரேக் போடும் போது ஏற்படற சத்தம் இப்படின்னு டிரைவர் வாயாலேயே ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ்லாம் வேற தருவாரு. நடுவுல நடுவுல "யோவ் பாத்து போயா"ன்னு சவுண்டு வேற விடுவாரு எங்க கோவக்கார டிரைவரு(ரோட்டுல வண்டி ஓட்டிக்கிட்டு போறவரைக் கண்டிக்கிறாராம்) கண்டக்டர் நானு "டிக்கட் வாங்கிக்கங்க, டிக்கட் வாங்கிக்கங்க"னு குரல் விடுவேன். அது போதாதுன்னு"எங்க சார் டி.நகரா? பத்து ரூவா குடுத்தா எப்படி? சில்லறை இல்லியா?"ன்னு காத்தைப் பாத்து ஒரு அலம்பல் வேற. எங்களுக்குப் பிடிச்ச பஸ் ரூட்னு பாத்தா அது 6V தான். ஏன்னா சென்னையில அப்போ தான் எல்.எஸ்.எஸ் பஸ் விட்ட புதுசு. ஆனா நார்த் மெட்ராஸ்லே இருக்கற எடத்தோட பேரு எதுவும் தெரியாததுனால எங்க 6V பஸ் அமீர் மஹால், பெரிய தெரு, ராயப்பேட்டைன்னு எங்களுக்குத் தெரிஞ்ச எடங்களுக்குள்ளாவே போகும். அப்போ திருவல்லிக்கேணியிலிருந்து சுங்கச்சாவடி வரைக்கும் போயிட்டு இருந்த பஸ் அது. இப்போ அது பெசண்ட் நகர்லேருந்து சுங்கச்சாவடி போற 6Aன்னு நெனக்கிறேன். ஹ்ம்ம்ம்...அதெல்லாம் ஒரு காலம்!!!
படிக்கிறதுக்கு டெல்லிக்குப் போன புதுசுல பிராஜெக்ட் விஷயமா எங்கேயாச்சும் வெளியே போகனும்னா நண்பர்க்ள கிட்ட "பஸ்ல போலாம்டா"ன்னு சொல்லுவேன். என் கூட படிச்ச சில பசங்க "நான் என் வாழ்க்கையிலேயே இது வரைக்கும் பஸ்ல ஏறுனதில்லை. பஸ்ஸெல்லாம் நமக்கு ஒத்துவராது. இன்னிக்குக் காரை எங்க அண்ணன் எடுத்துட்டுப் போயிட்டான். வேணா ஆட்டோல போலாம்"பானுங்க. இப்படி அவங்க பேசறதைக் கேட்டுட்டு எனக்கு எப்பவும் மொதல்ல தோணுறது என்னன்னா "பஸ்லயே ஏறாம வாழ்க்கையில நெறைய எழந்திருக்கீங்கடா"ன்னு தான். ஏன்னா அந்த அளவு பஸ் பயணம் மனிதர்களைச் சந்திக்கிறதுக்கும், அவங்களோட பழக்க வழக்கங்களைத் தெரிஞ்சிக்கிறதுக்கும் ஒரு வழி ஏற்படுத்திக் குடுக்குது. பஸ்களில் காணக் கிடைக்கும் சில உரையாடல்களும், நகைச்சுவை சம்பவங்களும் எங்கும் காணக் கிடைக்காதவை. அதே சமயம் இன்றளவும் சில மனதைக் கஷ்டப் படுத்தும் சம்பவங்களும், பேருந்து பயணங்களில் நடக்கத் தான் செய்கின்றன என்றாலும் வாழ்வின் சின்ன சின்ன சந்தோஷங்களை நினைவுகளாக்கிப் பொக்கிஷமாகப் பாதுகாக்கறவங்களா நீங்க இருந்தீங்கன்னா பஸ் பயணம் என்பது நிரம்பி வழியும் கூட்டத்தையும், எல்லையில்லா காத்திருப்பையும் கூட சிறியதாய் தோன்றச் செய்யும் ஒரு சுகானுபவம் தான்.
என் வாழ்நாளின் பெரும்பகுதியைச் சென்னையிலும், நான்கில் ஒரு பகுதியை வெளிமாநிலங்களிலும் கழித்தவன் நான். அதிகமாக கிராமங்களையும் சிறு நகரங்களையும் கண்டதில்லை. இருந்தாலும் தென்னாற்காடு மாவட்டத்தில் எங்க ஆயா(பாட்டி) வசித்த கிராமத்தை நான் பார்த்தவரை, பஸ் என்பது கிராமத்து வாழ்க்கையில் இரண்டற கலந்துவிட்ட ஒன்று என அறிந்து கொண்டேன். வள்ளிகந்தன் வந்துட்டானா? மீனாம்பிகா போயிட்டானா? என்று பிரைவேட் பஸ்களின் பெயரைச் சொல்லித் தங்கள் வீட்டுப் பிள்ளை போல விசாரிப்பதிலாகட்டும், 'விழுப்புரத்திலிருந்து பாண்டி நாப்பது கிலோ மீட்டர். ராமன் ரோடுவேஸ்ல போனீன்னா நாப்பது நிமிஷத்துல அடிச்சித் தள்ளிக்கிட்டுப் போயிடுவான்" எனப் பெருமையாகப் பேசுவதிலாகட்டும், "சீக்கிரம் கெளம்பு, பத்தரை மணி பெரியார் போயிடும்" என நம்பிக்கை தெரிவித்துத் தங்கள் வேலைகளை அதற்கேற்றாற் போல அமைத்துக் கொள்வதிலாகட்டும் பஸ் என்பது வெறும் ஒரு போக்குவரத்து சாதனம் என்பதை மீறிய ஒரு எமொஷனல் அட்டாச்மெண்டைக் காணலாம். அரசியல் காரணங்களை மேற்கோள் காட்டி போக்குவரத்துக் கழகங்களுக்கு வைத்திருந்த தலைவர்களின்(மக்களுக்காக உழைத்தவர்கள்) பெயர்களை எடுத்துவிட்டு அத்தகைய சக்தி வாய்ந்த ஒரு சாதனத்துக்கு வெறும் அரசு பேருந்து,மதுரை,திண்டுக்கல் எனப் பெயர் கொடுத்திருப்பதை ஏனோ ஜீரணிக்க முடியவில்லை. தோழர் ஜீவா, நேசமணி போன்றோர்கள் யார் என்றே தெரியாமல் வருங்கால சந்ததியினர் வாழ்ந்து மறைந்து விடக் கூடும். பஸ்களுக்கு அவர்கள் பெயர் இருந்தால், அவர்கள் யார் எனத் தெரிந்து கொள்ளும் ஒரு உந்துதலாவது ஏற்படும். இன்றளவும் என்னைப் பொறுத்தவரை ஆரஞ்சு வண்ண பஸ்கள் எல்லாம் பெரியார் தான், சாய்வு நாற்காலி கொண்ட பஸ்கள் எல்லாம் திருவள்ளுவர் தான்.
எழுதுனதுக்கப்புறம் தான் பாத்தேன்...பதிவு ரொம்ப பெருசாப் போச்சு. அதனால இதோட ரெண்டாம் பகுதியை நாளைக்குப் போடறேன்.