கடந்த சில நாளா நமக்கு ஒரு ஆசைங்க. களுதை...இந்த காதல் கவிதை காதல் கவிதைங்கிறாங்களே...அதை ஒன்னாவது எப்படியாச்சும் எளுதிப் போடோணுங்கிறது தாங்க அது. ஊருக்குள்ர நாலு பேரு நம்மளை பெரிய மனுசன்னு மதிக்கத் தேவையில்ல? அதுக்குத் தாங்க. நியாயமான ஆசை தானுங்ளே? ஆனானப் பட்ட ப்ளாக்கையே நாம மேட்டரு இல்லாமல்லாம் எழுதும் போது, காதல் கவிதை எழுதறது என்ன பெரிய கம்ப சூத்திரம், அப்படியே புஸ்ஸுன்னு ஊதித் தள்ளிரலாம்னு மண்டைக்குள்ள ஒரே கொடச்சலு. ஆனா நம்ம கூட்டாளி ஒருத்தன் அப்பப்ப சொல்ற "ஆசை இருக்கு தாசில் பண்ண அம்சம் இருக்கு கழுதை மேய்க்க"ங்கிற பொன்மொழியும் வேண்டாத நேரத்துல நெனப்பு வந்துருச்சு.
கழுதை மேய்க்க...சாரி தாசில் பண்ண ஆசை வந்துருச்சு, என்ன பண்ணா ஒத வாங்காம மேய்க்க முடியும்னு யோசிச்சப்போ, காதல் கவிதை எழுதியிருக்குற எடத்துலெல்லாம் வேவு பார்க்கறது, "கவிஞ்சருங்க" யூஸ் பண்ணற வார்த்தையை எல்லாம் பொறுக்கி வச்சிக்கிறது, கிளாசிகல் ஸ்டைல்ல காதல் கவிதை எழுதணும்னா தேனு, மானு, வேல்விழி, கொடியிடை அப்படின்னு போட்டுக்கறது, இதுவே ஆரம்ப காலத்து பழனிபாரதி ஸ்டைல்ல வேணும்னா எஃப் எம்,அனகோண்டா,தோனி,ரூனி இந்த மாதிரி பொது அறிவு விசயத்துக்கு நடு நடுவால is, was போட்டு எப்படியாச்சும் ஒரு உவம-உவமேயம்-உவமானம் குடுத்துக்கறது, காதல்ல பல்பு வாங்கினவரு எழுதற மாதிரி எழுதனும்னா கொலைகாரி, சதாம் உசேன், சொல்லடி, செய்யடி இப்படின்னு, நேரா யாரையாச்சும் பாத்து சொன்னா விளக்குமாத்துக்கு வலி எடுக்கச் செய்யற வார்த்தைங்களை எல்லாம் போட்டு தெகிரியமா எழுதறது, இதுவே கொஞ்சம் கில்மாவா எழுதனும்னா அல்வா, ரங்கோலி, உதட்டுச் சிவப்பு, கூலிங் கிளாஸ் இந்த மாதிரியான குளுகுளு வார்த்தைங்களைப் போட்டுக்கறது, அப்படி இப்படின்னு குத்துமதிப்பா சேர்த்தோம்னா காதல் கவிதை மாதிரி ஒன்னு எப்படியும் வந்துரும்...அத ப்ளாக்ல போட்டு 'பெரிய மனுசன்' ஆகிடலாம்னு ஒரு அதிரடித் திட்டம் தயாராச்சு.
ஆனா பாருங்க...நமக்கு சில்பான்ஸாத் தோனுன இந்த காதல் கவிதை எல்லம் எழுதறதுக்கு மெய்யாலுமே நெறைய கிட்னி வேணும் போலிருக்கு. கிளாசிகல், செமிகிளாசிகல், கண்டெம்பரரி, கில்மா இப்படின்னு அததுக்குமுரிய கலைச் சொற்களை எல்லாம் சேர்த்து வச்சும் கூட நம்மால ஒன்னியும் கிழிக்க முடியலை. சத்தியமா தாவு தீர்ந்துடுச்சுங்க சாமியோவ். சே...சே...இந்த பழம் புளிக்கும்னு காதல் கவிதை கடையை ஏற கட்டறதுக்கு முன்னாடி ஏற்கனவே பெரிய மனுசனுங்களா இருக்கறவங்க கிட்ட கடைசியா ஒரு தடவை உதவி கேக்கலாம்னு வரப்போரம் குந்தியிருந்தவரு கிட்ட போய் கேட்டா, அதெல்லாம் ரொம்ப சுலபமுங்க...தானா வருமுங்கன்னு எதோ குக்கர்லேருந்து ஆவி சுலபமா வர்ற மாதிரி சொன்னாரு. கச்சேரி நடத்துறவரு, காதல் கவிதை எழுதறதுக்கெல்லாம் ஆட்டீன்(இதயம்ங்க...இது கூடவா புரியல்ல?) வேணும் அப்படின்னு நம்மளை "Iam a bad man" ரேஞ்சுக்கு கலாய்ச்சி விட்டுட்டாரு. என்னடா இந்த மதுரைக்கு வந்த சோதனை...ஆஃப்டரால் ஒரு காதல் கவிதை கூட நம்மால எழுத முடியலை அப்படின்னு சோர்ந்து போய் உக்காந்துட மாட்டேன் மகாஜனங்களே! உங்கள் கலாய்ப்புகளுக்குப் பாத்திரமான கைப்புள்ளயால ஒரு ருபையத்தையோ, ஒரு மேகதூதத்தையோ, இல்ல ஒரு ஜில்ஜில் நானூறையோ எழுத முடியா விட்டாலும் எங்கேருந்தாவது சுட்டாச்சும் சில காதல் கவிதைகளை உங்களுக்காக...கவனிக்க உங்களுக்காண்டி போட பாடுபடுவான். பாடுபடுவான் என்ன பாடுபடுவான்... பாடுபட்டுட்டான்யா... பாடுபட்டுட்டான்யா.
நான் இன்னிக்கு நாட்டு மக்களுக்காக கொண்டாந்திருக்குற காதல் கவிதைங்க சாதாரணமானது கிடையாதுங்க(நான் எழுதலியே...அதனால தான்..ஹி ஹி). காதல்னு சொன்னதும் ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே இருக்கும் ஒரு மென்மையான மெல்லிதான உணர்வு தான் ஞாபகத்துக்கு வரும். ஆனா பக்தி நெறியிலயும் இந்த காதலோட பங்கு இருக்குன்னு நம்ம எல்லாருக்கும் தெரியும். தன்னை காதலியாகவும் இறைவனைக் காதலனாகவும் உருவகப்படுத்திக்கிட்டு பலரும் பல பாடல்களைப் பாடியிருக்காங்க. முண்டாசு கவிஞர் தன்னை ஒரு பெண்ணா உருவகப்படுத்திக் கொண்டு கண்ணனைத் தன் காதலனா நினைச்சு எழுதுன இந்த பாடலைப் பாருங்க.
கண்ணன் - என் காதலன்
தூண்டிற் புழுவினைப்போல் - வெளியே
சுடர் விளக்கினைப் போல்,
நீண்ட பொழுதாக - எனது
நெஞ்சந் துடித்த தடீ!
கூண்டுக் கிளியினைப் போல் - தனிமை
கொண்டு மிகவும் நொந்தேன்;
வேண்டும் பொருளை யெல்லாம் - மனது
வெறுத்து விட்டதடீ!
பாயின் மிசை நானும் - தனியே
படுத் திருக்கை யிலே,
தாயினைக் கண்டாலும் - சகியே!
சலிப்பு வந்த தடீ!
வாயினில் வந்ததெல்லாம் - சகியே!
வளர்த்துப் பேசிடுவீர்;
நோயினைப் போலஞ் சினேன்; - சகியே!
நுங்க ளுறவை யெல் லாம்
உணவு செல்லவில்லை; - சகியே!
உறக்கங் கொள்ளவில்லை.
மணம் விரும்பவில்லை; - சகியே!
மலர் பிடிக்க வில்லை;
குண முறுதி யில்லை; - எதிலும்
குழப்பம் வந்த தடீ!
கணமும் உளத்திலே - சுகமே
காணக் கிடைத்ததில்லை
பாலுங் கசந்தடீ தடீ! - சகியே!
படுக்கை நொந்த தடீ!
கோலக் கிளிமொழியும் - செவியில்
குத்த லெடுத்த தடீ!
நாலு வயித்தியரும் - இனிமேல்
நம்புதற் கில்லை யென்றார்;
பாலத்துச் சோசியனும் - கிரகம்
படுத்து மென்று விட்டான்
கனவு கண்டதிலே - ஒருநாள்
கண்ணுக்குத் தோன்றாமல்,
இனம் விளங்க வில்லை - எவனோ
என்னகந் தொட்டு விட்டான்.
வினவக் கண்விழித்தேன்; - சகியே!
மேனி மறைந்து விட்டான்;
மனதில் மட்டிலுமே - புதிதோர்
மகிழ்ச்சி கண்டதடீ!
உச்சி குளிர்ந்ததடீ! - சகியே!
உடம்பு நேராச்சு,
மச்சிலும் வீடுமெல்லாம் - முன்னைப்போல்
மனத்துக் கொத்ததடீ!
இச்சை பிறந்ததடீ! - எதிலும்
இன்பம் விளைளந்ததடீ!
அச்ச மொழிந்ததடீ! - சகியே!
அழகு வந்ததடீ!
எண்ணும் பொழுதி லெல்லாம் - அவன்கை
இட்ட விடத்தினிலே!
தண்ணென் றிருந்ததடீ! - புதிதோர்
சாந்தி பிறந்ததடீ!
எண்ணி யெண்ணிப் பார்த்தேன்; - அவன்தான்
யாரெனச் சிந்தை செய்தேன்;
கண்ணன் திருவுருவம் - அங்ஙனே
கண்ணின் முன் நின்றதடீ!
பல நாளாய் காணாதத் தன் தலைவனானக் கண்ணனை நினைந்து வருந்தி, தன் தோழியிடம் முறையிடும் ஒரு பெண்ணின் வாய்மொழியாய் அமைந்துள்ளது இப்பாடல். இறைவனின் திருவடியை அடைவது குறித்தானக் கவிஞரின் மன வெளிப்பாடே இதில் சொல்லப் பட்டிருக்கும் உட்கருத்து. பல வருடங்கள் கழித்து அழகு தமிழில் ஒரு எளிய பாடலைப் படித்ததும் மகிழ்ச்சி மேலிட்டது. உங்களுக்கும் பிடித்திருக்குமென நினைக்கிறேன். பாரதியாரின் கண்ணன் பாட்டை இங்கு வாசிக்கலாம்.
"வாரணமாயிரம்" என்ற ஆண்டாள் பாசுரப் பாடலை கேளடி கண்மணி படத்தில் தான் முதன்முதலாய்க் கேட்டேன். இசைஞானி வெகு அருமையாக இசையமைத்திருப்பார். இசையுடன் இப்பாடலை முதலில் கேட்க நேரிட்டதால் இப்போது இப்பாடலைப் படிக்கும் போது கூட இசையோடு சேர்ந்து தான் படிக்கிறேன். இறைவனுடனான தன்னுடைய திருமணக் கோலத்தை எண்ணி மகிழும் ஆண்டாளின் இப்பாசுரத்தையும் மேலும் பல பாசுரங்களையும் இங்கு காணலாம்.
வாரண மாயிரம் சூழவ லம்செய்து,
நாரண நம்பி நடக்கின்றா னென்றெதிர்,
பூரண பொற்குடம் வைத்துப் புறமெங்கும்,
தோரணம் நாட்டக் கனாக்கண்டேன் தோழீநான்
நாளைவ துவைம ணமென்று நாளிட்டு,
பாளை கமுகு பரிசுடைப் பந்தற்கீழ்,
கோளரி மாதவன் கோவிந்த னென்பான்,ஓர்
காளைபு குதக்க னாக்கண்டேன் தோழீநான்
இந்திர னுள்ளிட்ட தேவர்கு ழாமெல்லாம்,
வந்திருந் தென்னைம கட்பேசி மந்திரித்து,
மந்திரக் கோடியு டுத்திம ணமாலை,
அந்தரி சூட்டக்க னாக்கண்டேன் தோழீநான்
நாற்றிசைத் தீர்த்தங்கொ ணர்ந்துந னிநல்கி,
பார்ப்பனச் சிட்டர்கள் பல்லாரெ டுத்தேத்தி,
பூப்புனை கண்ணிப்பு னிதனோ டென்றன்னை,
காப்புநாண் கட்டக்க னாக்கண்டேன் தோழீநான்
கதிரொளி தீபம் கலசமு டனேந்தி,
சதிரிள மங்கையர் தாம்வந்தெ திர்கொள்ள,
மதுரையார் மன்ன னடிநிலை தொட்டு,எங்கும்
அதிரப் புகுதக் கனாக்கண்டேன் தோழீநான்
மத்தளம் கொட்டவ ரிசங்கம் நின்றூத,
முத்துடைத் தாம நிரைதாழ்ந்த பந்தற்கீழ்
மைத்துனன் நம்பி மதுசூதன் வந்து,என்னைக்
கைத்தலம் பற்றக் கனாக்கண்டேன் தோழீநான்
வாய்நல் லார்நல்ல மறையோதி மந்திரத்தால்,
பாசிலை நாணல் படுத்துப் பரிதிவைத்து,
காய்சின மாகளி றன்னானென் கைப்பற்றி,
தீவலம் செய்யக்க னாக்கண்டேன் தோழீநான்
இம்மைக்கு மேழேழ் பிறவிக்கும் பற்றாவான்,
நம்மையு டையவன் நாராய ணன்நம்பி,
செம்மை யுடைய திருக்கையால் தாள்பற்றி,
அம்மி மிதிக்கக் கனாக்கண்டேன் தோழீநான்
வரிசிலை வாள்முகத் தென்னைமார் தாம்வந்திட்டு
எரிமுகம் பாரித்தென் னைமுன்னே நிறுத்தி,
அரிமுக னச்சுதன் கைம்மேலென் கைவைத்து,
பொரிமுகந் தட்டக் கனாக்கண்டேன் தோழீநான்
குங்கும மப்பிக் குளிர்சாந்தம் மட்டித்து,
மங்கல வீதி வலம்செய்து மணநீர்,
அங்கவ னோடு முடஞ்சென்றங் கானைமேல்,
மஞ்சன மாட்டக்க னாக்கண்டேன் தோழீநான்
ஆயனுக் காகத்தான் கண்ட கனாவினை,
வேயர் புகழ்வில்லி புத்தூர்க்கோன் கோதைசொல்,
தூய தமிழ்மாலை ஈரைந்தும் வல்லவர்,
வாயுநன் மக்களைப் பெற்று மகிழ்வரே
மேலே உள்ள பாடலில் இந்த 'அந்தரி', 'வரிசந்தம்' இச்சொற்களுக்குப் பொருள் யாருக்காச்சும் தெரிஞ்சாச் சொல்லுங்க.
கடைசியாக சுஃபி குருவான கபீர்தாஸ் 'வ்ரஜ் பாஷா' என்ற வட்டார வழக்கில் பாடிய 'தோஹா' (தமிழில் இரண்டடியார், ஆங்கிலத்தில் கப்லெட் 'Couplet')ஒன்றைக் காணலாம். நெசவாளரான கபீர்தாஸ் முறையான கல்வி இல்லாதவர், தானறிந்த ஞானக் கருத்துகளை இரண்டடிகளாக அவர் பாடுவதை, அவரது சீடர்கள் கேட்டு எழுதி வைத்துள்ளது தான் இன்று தோஹாக்களாக உள்ள இப்பாடல்கள். இறைவனின் பெருமைகளை அறிந்து அதை பாடுபவராக இருந்த போதிலும், கபீர்தாஸ் உருவ வழிபாட்டிலும், இறைவனின் பல்வேறு வடிவங்களிலும் நம்பிக்கையற்றவர். அவரைப் பொறுத்தமட்டிலும் இறைவன் 'நிற்குண' வடிவமானவன்.(Nirguna - attributeless). அவ்வாறு தன்னுள் இரண்டறக் கலந்திருக்கும் இறைவனைத் தன் காதலனாக உருவகப்படுத்தி அவர் பாடிய ஒரு பாடல்.
"ப்ரீத்தம் கோ பதியான் லிகூன் ஜோ கஹு ஹோய் விதேஸ்
தன்மே மன்மே நைன்மே வாகோ காஹே சந்தேஸ்"
இதன் பொருள் "என்னை விட்டு நீ பிரிந்திருந்தால் தலைவா என் உள்ளக்கருத்தை எடுத்துரைக்க உனக்கு மடல் வரைய இயலும், ஆயின் என்னுள் ஊனாய் உயிராய்க் கலந்துள்ளவனே உனக்கு என்ன மடல் நான் வரைய?"
Saturday, June 17, 2006
இல்லாத காதலிக்காக
Saturday, June 10, 2006
பைத்தியக்காரத் தவளையும் பாப்கார்னும்
சில பழைய விஷயங்களை...நாம ஒரு காலத்துல ரொம்பவே ரசிச்ச விஷயங்களை...கால ஓட்டத்துல நாம மறந்து போன விஷயங்களை...எங்கேயாச்சும் எப்பவாச்சும் திரும்ப நினைவு படுத்திப் பார்க்கும் போது ஒரு சந்தோஷம் வரும் பாருங்க...அதை என்னன்னு சொல்ல? இந்த விஷயம் எதுவா வேணா இருக்கலாங்க...ஒரு திரைப்படமாவோ, நண்பர் ஒருத்தரு நமக்கு எப்பவோ செஞ்ச ஒரு உதவியாவோ...குடும்பமா போன ஒரு சுற்றுலாவோ, இல்லை எதோ ஒரு சில்லறை விஷயமாக் கூட இருக்கலாம். அப்படி என்னத்த கண்டுட்டு இப்பிடி குதிச்சிட்டிருக்கேன்?
இன்னிக்கு காலையிலே ஆபீசு கெளம்பும் போது ஜீ மியூசிக் சேனல்ல ஒரு பாட்டு (பாட்டுன்னு சொல்ல கூடாது - இன்ஸ்ட்ருமெண்டல் இசை) கேட்டேங்க. அந்த இசையைச் சின்ன வயசுல கேட்ட ஞாபகம். அடிக்கடி நம்ம சென்னை தொலைக்காட்சி நிலையத்துல அந்த இசை வரும். பல முறை அதை கேட்டிருந்தாலும், அதை நான் அப்பத்துலேருந்து ரசிச்சிருக்கேங்கிறதை இன்னிக்குத் தான் உணர முடிஞ்சுது. நான் கேட்ட அந்த ஆல்பத்தோட பேரு "பைத்தியகார தவளையோட பாப்கார்ன்" (ஹி...ஹி...Popcorn by "Crazy Frog"என்பதோட தமிழாக்கம் தான் அது). இந்த ஆல்பத்தை 3டி அனிமேஷனோட டிவியில பாக்க நல்லாருந்துச்சு. கையைக் காலை ஆட்ட வைக்கிற துள்ளல் இசை. கேட்டுப் பாருங்களேன்...அட இதுவான்னு தோணும்.
Monday, June 05, 2006
மீள்பதிவுங்ணா
நமக்கு ரொம்ப நாளா ஒரு ஆசைங்ண்ணா...இந்த மீள்பதிவு மீள்பதிவுன்னு சொல்றாங்களே...அது ஒன்னாச்சும் நம்ம வலைப்பூ வாழ்க்கையிலே எழுதிரணும்னு. எதுக்கு எனக்கு இந்த மாதிரி ஆசையெல்லாம்னு கேக்கிறீங்க...அதானே? தமிழ் வலைப்பூவை எல்லாம் படிக்க ஆரம்பிச்ச புதுசுல...இந்த பின்னூட்டம்னா என்னன்னு தெரிஞ்சிக்கிறதுக்கே ரொம்ப கஷ்டப் பட்டேன். பின்னூட்டத்துக்கு அர்த்தம் தெரிஞ்சதும், திடீர்னு மீள்பதிவு நம்ம கண்ணு முன்னால வந்து நிக்குறாரு. மீள்பதிவுன்னா இன்னான்னு தெரிஞ்சதும் - இந்த மைக்கேல் மதன காமராஜன் படத்துல தீயணைப்பு வீரரா வர்ற ராஜன் சொல்லுவாரே - "சோக்கா சொன்னய்யா...கேச் மை பாயிண்ட்...நானும் இதையெல்லாம் அப்பப்ப யூஸ் பண்ணறேன்"னு... அது மாதிரி ஒரு அல்ப ஆசை வந்து நம்மளை பாடாப் படுத்துது. முன்னே ஒரு தரம் கஷ்டப் பட்டு மீள்பதிவு எழுதுன போது, நம்ம ஆசையை நிரைவேத்திக்காம கோட்டை விட்டுட்டேன். ஆனா இந்த தடவை அந்த மாதிரி மிஸ்டேக் நடக்காது. அதனால பல்லாயிரக் கணக்கான நேயர்களின் விருப்பத்திற்கிணங்க நானே கஷ்டப்பட்டு எளுதுன ஒரு மீள்பதிவு...அதுவும் இங்கிலிபீசுல.
இது நான் சின்னப்பில்லயா இருக்கறச்சே எழுதுனது...கீழே அதோட சுட்டி இருக்குது...
ஏழு ரூபா பில்லு
முழுசையும் படிக்கிற அளவுக்குப் பொறுமை இருக்குறவங்க படிச்சிட்டு அங்கேயே மொத்தலாம்...இல்லை இங்கே வந்தும் மொத்தலாம். அப்பா...ஒரு மீள்பதிவு எழுதியாச்சு.
Friday, June 02, 2006
ஹே! காயத்ரி...
வா.மணிகண்டன் தன்னோட பேசலாம்ல நேத்து ஒரு சோக்கு சொல்லியிருந்தாரு. அதப் படிச்சி சிரிச்சிட்டு கீழே பாத்தா நம்ம தளபதி போதும் போதும்ங்கிற அளவுக்குக் கொம்பை நட்டு சங்கத்து கொடியை ஏத்திட்டிருக்காரு...ஒரே நேரத்துல ரெண்டு வருத்தப்படாத வாலிபர்களை(!) சமாளிக்கிறது அவருக்குக் கஷ்டம்னு நெனச்சி அந்நேரத்துக்கு ஜூட்டு வுட்டுக்கிட்டேன் :)- இன்னிக்கு காலையில என்னோட செல்போன்ல இருந்த பழைய எஸ்.எம்.எஸ்சை எல்லாம் அழிக்கும் போது, மணிகண்டனோட பதிவுல படிச்சது போலவே ஒரு எஸ்.எம்.எஸ் சிக்குச்சு. அது என்னாங்குறீங்களா?
நாலு கோவமான எறும்புங்க(Angry young ants) ஒரு காட்டுப் பாதையில போயிட்டிருக்காம். அதுங்க கண்ணுல ஒரு யானை மாட்டுதாம்.
முதல் எறும்பு கேக்குதாம்"டேய்! நான் அவன் காலை ஒடச்சிடவா?"
ரெண்டாவது எறும்பு சொல்லுதாம்"இல்ல மச்சான்! அவன் தும்பிக்கையைப் புடுங்கிடலாம்"
இதை கேட்டுட்டு மூணாவது எறும்பு சொல்லுதாம்"வேணாண்டா மாப்ளே! அவன் வயித்துல குத்தலாம்டா"
நாலாவது எறும்பு என்ன சொல்லியிருக்கும்னு நெனக்கிறீங்க?
என்னது தெரியலியா...அட உண்மையிலேயே தெரியலீங்களா?
நாலாவது எறும்பு சொல்லுச்சாம்"விடுங்கடா! நாம நாலு பேரு...அவன் ஒருத்தன்...பொழச்சுப் போட்டும்".
தலைப்புக்கும் பதிவுக்கும் சம்பந்தமே இல்லியேன்னு கேக்கிறீங்களா? இந்த மாதிரி விசயத்துல எல்லாம் படு ஸார்ப்பா இருப்பீங்களே? ஒங்களை ஏமாத்த முடியுமா...
"ஹே! காயத்ரி! என்னயா...காலேஜ் விட்டதும் தனியாப் பேசணும்னு சொன்னியே? என்ன விஷயம்?"
"ஆமாம்யா..."
"ஹ்ம்ம்...என்னடா சொல்லு...உன் முகமெல்லாம் வாடியிருக்கு...எனிதிங் ராங்?"
"எப்படி சொல்றதுன்னு தெரியல்ல யா"
"என்ன காயூ...சொல்லு...எதாச்சும் லவ்...பாய்ஃபிரெண்ட்... அப்படின்னு..."
"சே...சே! அப்படியெல்லாம் ஒன்னுமில்லை யா..."
"அப்புறம் என்னடா?"
"ஃபாத்திமா! ஒனக்குத் தெரியாதது இல்ல...என்னோட கனவு லட்சியம் எல்லாம் காயத்ரி ஐ.ஏ.எஸ்னு என் பேருக்குப் பின்னாடி வரப் போற அந்த மூணு எழுத்து தான்...அதுக்காக நான் படற கஷ்டமெல்லாமும் ஒனக்குத் தெரியும்"
"சரி...அதுக்கு என்ன இப்போ?"
"அந்த கனவு பொய்யாயிடுமோன்னு எனக்கு கவலையாயிருக்குது யா...என்ன ஒருத்தன் ஒரு வாரமா ஃபாலோ பண்ணி தெனமும் தொல்லை குடுத்துட்டே இருக்கான்"
"சே! இவ்வளவு தானா? நீ அவனை இக்னோர் பண்ணிட்டு ஒன் பாட்டுக்கு ஒன் வேலையைப் பாத்துட்டே இரு"
"இல்லை ஃபாத்ஸ்...அவன் நான் போற எடமெல்லாம் என் பின்னாடியே வரான்...மோசமா கமெண்ட்ஸ் வேற பாஸ் பண்ணறான்பா"
"ஸ்கவுண்டிரல்ஸ்! நீ என் கூட வா... நான் வந்து அவனை நாலு கேள்வி கேக்கறேன்."
"வேணாம்யா! அவன் கிட்ட போக வேணாம்...அவனும் அவன் லேங்குவேஜும்...பாத்தா பெரிய ரவுடி மாதிரி வேற இருக்கான்"
"சே! உன்னை மாதிரி பயந்தாங்கொள்ளிங்க இருக்குறதுனால தான், செய்யறதை எல்லாத்தையும் செஞ்சிட்டு... தீஸ் ரோக்ஸ் ஆர் ரோமிங் ஸ்காட் ஃப்ரீ"
"நான் சொல்றதைக் கொஞ்சம் கேளு யா...அவன் எவ்வளோ மோசமானவன்னு ஒனக்குத் தெரியாது...நேத்து செமிகண்டக்டர் கிளாஸ் முடிய லேட் ஆயிடுச்சு...ஈவினிங் சிக்ஸ் பி.எம், நான் பஸ் ஸ்டாப்ல பஸ்ஸுக்காக வெயிட் பண்ணிட்டு இருக்கும் போது...அவன் என் பக்கத்துல வந்து நின்னுட்டு...ஏதேதோ பேச ஆரம்பிச்சிட்டான்...இதப் பாருங்க இந்த மாதிரி பேச்செல்லாம் என்கிட்ட பேசாதீங்கன்னு சொன்னேன்...ஆனாலும் அவன் கேக்கலை...விசில்...சினிமா பாட்டு...கமெண்ட்ஸ் அப்படின்னு ரொம்ப டார்ச்சர் பண்ணான். அப்புறம் பஸ் வந்ததும் என் பின்னாடியே அவனும் ஏறுனான்...அப்புறம்...அப்புறம்... வந்து... வந்து... புஹூ...ஹூ"
"அழாதேடா காயூ...என்ன நடந்துதுன்னு சொல்லு"
"...புஹூ...ஹூ...ஐ லவ் யூ டா செல்லம்னு சொன்னான் யா...இன் ஃப்ரண்ட் ஆஃப் ஸோ மெனி பீப்பிள்"
"நீ அந்த ரேஸ்கலைச் சும்மாவா விட்ட? அங்கேயே செருப்பைக் களட்டி அவனை அடிச்சிருக்க வேணாம்? சே...இவனுங்கல்லாம் அக்கா தங்கச்சியோட பொறந்திருக்க மாட்டானுங்க?"
"இல்ல ஃபாத்ஸ்..."
"என்ன இல்ல ஃபாத்ஸ்?"
"..ஹூ..ஹூ...அவன் சொல்ற படியெல்லாம் கேக்கலைன்னா என் தங்கச்சி மாலதியையும் இதே மாதிரி ஃபாலோ பண்ணுவேன்னு மெரட்டனான்யா. அவச் சின்னப் பொண்ணு...இதெல்லாம் தாங்க மாட்டா...எங்க வீட்டுல ஜெண்ட்ஸ் யாரும் இல்லன்னு தெரிஞ்சிட்டு வீட்டு வரைக்கும் வேற வரான்...அதான் இது என்னோடேயே போகட்டும்னு..."
"திஸ் இஸ் இட்! திஸ் இஸ் தி லிமிட்!! ஸச் கேரக்டர்ஸ் டிஸர்வ் டு பீ பீட்டன் டு டெத்!!! நீ ஒன்னும் கவலை படாதே காயூடா...நாளைக்கு நான் எங்க பெரிய அண்ணன் தாஹிர் கிட்டச் சொல்லி, உன்னை ஃபாலோ பண்ணறவனை நல்லா கவனிக்கச் சொல்றேன்"
"எனக்கு ரொம்ப பயமாயிருக்கு யா"
"ஒனக்கு என்ன பயம்டா?...நான் இருக்கேன்...அவன் எப்படி இருப்பான் எங்கே இருப்பான்னு மட்டும் சொல்லு"
"அதோ பாரு...அங்கே விசில் அடிச்சிட்டு வேகமாப் போயிட்டிருக்கானே... அவனே தான்"
"ஹே! காயூ....வா...வா...நாம இப்போதைக்கு இங்கேருந்து போயிரலாம்...நீ சொல்லும் போது கூட நான் நம்பலை...பாத்தா பொறுக்கியாட்டம் தான் இருக்கான்"