
"கணபதி பப்பா மோரியா" - விநாயகர் சதுர்த்தி அன்னிக்குத் தான் வே.வி. பாத்தோம்னு இனிமே மறக்குமா என்ன?
டேய்! இதெல்லாம் ஒனக்கே ரொம்ப ஓவராத் தெரியலியாடானு கேக்கறவங்களுக்காக...கடைசியா நான் கொட்டாயில பாத்த படம் அமிதாப் பச்சனோட "ப்ளாக்"னு(Blog லேது... Black) நெனக்கிறேன். ரொம்ப யோசிச்சு பாத்ததுல கடைசியா கொட்டாய்ல பாத்த தமிழ் படம் சென்னை மாயாஜால்ல பாத்த "பிதாமகன்"னு ஞாபகம்.

டிஜிட்டல் தானே? காசா? பணமா? அதான் சும்மா மைக் டெஸ்டிங்...
ஒடனே இவன் விசிடி பார்ட்டி தான்னு முடிவு கட்டிடாதீங்க சாமி! நான் இருக்குற காட்டுல புதுசா ரிலீஸ் ஆன இந்தி படம் வர்றதுக்கே ஒரு மாசம் ஆகும். முன்ன இருந்த இந்தூர்லயும் தமிழ் படம் எதுவும் வராது. சித்தூர்கட்ல ஒரு தியேட்டர்ல 80களில் வெளியான ஒரு மிதுன் சக்ரவர்த்தி படம் இன்னும் ஓடிட்டு இருக்கு :) இதுல எங்கேருந்து தமிழ் படம் எல்லாம்? அப்பப்போ லீவுல மெட்ராஸுக்கு வரும் போதும், ஒரு வாரம் லீவுல வரோம் அதுலயும் இந்த பாடாவதி படத்தை எல்லாம் போய் அவசியம் பாக்கனுமான்னு நெனச்சிட்டே உருப்படியா எதாவது பண்ணலாம்னு வீட்டுலயே இருந்துடுவேன்.(சே! சே! நமக்கும் சோம்பேறித் தனத்துக்கும் ரொம்ப தூரமுங்க.)
பிதாமகன் படம் பாக்கப் போனது தீபாவளிக்கு மறுநாள்...எந்த வருசம்னு சரியா ஞாபகம் இல்ல. மாயாஜாலுக்குப் போனா அப்பச் சென்னையில கிரிக்கெட் வெளாட வந்த நியூசிலாந்து டீம் மொத்தமும் அங்கே நிக்குது. கிறிஸ் கெயிர்ன்ஸ் டிவியில பாக்க அப்படி ஒன்னும் வித்தியாசமாத் தெரியலன்னாலும் நெசத்துல பாக்க பார்ட்டி பூதாகரமா இருந்தான்(கொஞ்சம் லோக்கலாச் சொல்லனும்னா 'டெல்லி எருமை' மாதிரி). ஸ்டீபன் ஃப்ளெமிங் கிட்ட ஆட்டோகிராப் வாங்கிட்டு வர்றேன்னு என் தம்பி என்கிட்டச் சொன்னதும், சும்மா அவனை ஓட்டறதுக்காக "பிளடி இண்டியன்ஸ்! ஒங்களுக்கு எல்லாம் நான் ஆட்டோகிராப் போடற்தில்ல மேன்"னு அவன் சொல்லிட்டான்னா என்னடா பண்ணுவன்னு என் தம்பியைக் கேட்டதுக்கு அவன் சொன்ன பதில் தான் இன்னும் அந்த படம் பாத்ததை ஞாபகத்துல இருக்க வச்சிருக்கு. "அப்படி சொல்லிட்டு அவனால ஈஞ்சம்பாக்கம் கூட தாண்ட முடியாது. அவன் மூஞ்சை ஒடச்சிட மாட்டோம்" அப்படின்னான். என்னமோ நமக்கு படம் பாக்கப் போகும் போது நடக்கற சின்ன விஷயங்கன்னாலயும் படம் பாத்த சூழல்னாலயும் தான் படம் மனசுல நிக்குது.
சரிங்க இப்ப "வே.வி." பத்தி சில பல மேட்டர்ஸ்.
காமெடிக்குன்னு தனியாப் படத்துல யாரும் இல்ல. ஆனா அது இல்லாத குறையை(நக்கலுக்கு இல்ல) சில வசனங்கள் (and certain witty conversations) தீர்த்து வைக்குது. உதாரணத்துக்குச் சில
1. "I hate violence against women, even if its not my jurisdiction"
(இது போன்ற ரசிக்கத்தக்க, இன்னும் சில பீட்டர் வசனங்கள் படத்துல இருக்குதுங்க)
2. "ஸாஃப்ட்வேரா நானா?... இல்லீங்க நான் ஹார்ட்வேருங்க"
3. "உங்க கூட பேசுனதும் என்னோட கஷ்டங்கள் எல்லாம் கொறஞ்சா மாதிரி இருக்கு"
"என் கூட பேசுனதும் எல்லாரும் இத தான் சொல்றாங்க"
(இந்த டயலாக்குக்கு முன்னாடி தான், ஜோதிகா அவங்க வாழ்க்கையில் நடந்த சோகங்களைப் பத்தியும், கமல் அவருடைய சோகங்களைப் பத்தியும் பேசிப்பாங்க)
4. "நல்லதாப் போச்சு...நீங்க தமிழா போயிட்டீங்க"
"இல்லை...தெலுங்கா இருந்தாலும் காப்பாத்தியிருப்பேன்"


ஆகஸ்டு திங்கள் 27ஆம் தேதி ஞாயிற்றுக் கிழமை...12 மணி ஆட்டம். அப்பா! வரலாற்றுல பதிவாயிடுச்சு.
படத்தோட ஒளிப்பதிவு கண்ணுலயே நிக்குது. குறிப்பா தெள்ளத்தெளிவான நீல வானம் வரும் ஒரு சில காட்சிகள், அமெரிக்காவில் படமாக்கப் பட்ட இன்னும் நெறைய காட்சிகள் visual treatனு சொன்னாத் தப்பாகாது. இசையும் நல்லாருக்கு. பாடல்களை முதல் முறையா நான் நேத்து படத்துல தான் பாத்ததுங்கிறதுனால பாடல் வரிகள் எதுவும் நினைவு இல்ல. ஆனா "வெண்ணிலவே"ன்னு(இல்ல வெள்ளி நிலவேவா) வர்ற பாட்டு ரொம்ப நல்லாருக்கு, படமாக்கிய விதமும் அருமை.
முக்கியமான ஒரு மேட்டரை விட்டுப் போட்டேனுங்க. அமைதியானவரு, நல்லவருன்னு நம்பியிருந்த விவசாயி "இளா", இந்த படத்துல செய்யற அழிசாட்டியத்தை எல்லாம் சொல்லி மாளாதுங்க. நீங்களே அவரை என்னான்னு கேளுங்க :)

நம்ம சிற்றறிவுக்கு எட்டுன, மிகவும் கவனம் எடுத்து சொல்லிருக்குற சில விஷயங்கள்.
1. ப்ளாஷ்பேக்குல கமல் ஓட்டுற புல்லட்டோட நம்பர் ப்ளேட் சரியா கறுப்பு பலகை மேலே வெள்ளை நிற பெயிண்டுல எழுதிருக்கு(8-10 வருசத்துக்கு முன்னாடிங்கிறதுனால). ஆனா ஒன்னு கவனிக்காம விட்டுட்டாங்க...அந்த மாடல் புல்லட் 2004ல தான் வந்தது.
2. கொலையில உபயோகப் படுத்தப் பட்ட துப்பாக்கி பேரு கூடச் சொல்லிருக்காங்க - அது வால்தர் பிபிகே(Walther PPK). ஹிட்லர் தற்கொலை பண்ணிக்க உபயோகப் படுத்துன அதே துப்பாக்கியோட பேரு. ஆராய்ச்சி எல்லாம் நல்லாத் தான் பண்ணிருக்காங்க.
3. ஜோ தமிழ் பொண்ணுங்கிறதை மேசை மேல இருக்குற திருவாசகம் சிடியை வச்சு கமல் கண்டுபிடிச்சுடறாரு(ஒரு வார்த்தை கூட பேசாம...ஆனா அதுனால தான் கண்டுபிடிச்சாருங்கிற மாதிரி படத்துல வலியுறுத்தி சொல்லலை)
4. டைம்ஸ் ஸ்குவேர்ல மும்பை மாதிரி எப்பவும் கூட்டம் இருந்துட்டே இருக்கும்னு ஜோ சொல்ற டயலாக்கைக் கேட்டதும் மும்பை மக்கள் சந்தோசம் ஆகி உய் உய்னு விசில் அடிக்க ஆரம்பிச்சிட்டாங்க.
படத்தைப் பத்தி இன்னும் ஒன்னே ஒன்னு சொல்லிக்கிறேனுங்க. நம்ம ஜோ சொல்ற மாதிரி(ஜோதிகா இல்லீங்க...கடற்புறத்தான் ஜோ:) ) "இது நிராகரிக்கப் பட வேண்டிய படம் இல்லீங்க". அம்புட்டு தான்.
படம் பாத்தது மும்பை, மாதுங்காவுல இருக்குற ஆரோரா(Aurora) தியேட்டர்ல. படம் ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடி இந்த தியேட்டர்ல தேசிய கீதத்தை இசைச்சாங்க. தேசிய கீதத்தை இசைக்கும் போது எந்திரிச்சு நிக்கனும்னும் மறக்காம எழுதி வச்சிருந்தாங்க. படத்தைப் பாத்து முடிச்சிட்டு வரும் போது மைசூர் கேப்ங்கிற ஓட்டல்ல ஃபுல் மீல்ஸ்(கர்நாடகா ஸ்டைல்ல). சாம்பார்ல் மட்டும் வெல்லம் போட்டு விட்டுருவாங்கங்குறதுனால வித்தியாசமா இருந்துச்சு. மத்தபடி ஆந்திரா ஸ்டைல் சாப்பாடு (காரம் மட்டும் சரியா இருந்துச்சுன்னா) தமிழ் நாட்டு சாப்பாட்டுக்கு ரொம்ப நெருக்கம். எதோ கெடச்ச வரைக்கும் லாபம்னு நல்லா கொட்டிக்கிட்டு வெளியே வந்தா ஒரு பேப்பர் கடைல தமிழ் பேப்பர், புக் எல்லாம் விக்குறாங்க.
குமுதம், விகடன், குங்குமம் மூனும் வாங்குனேன். இந்தியாவுக்கு சுதந்திரம் கெடச்சுடுச்சுன்னு தெரிஞ்சிக்கிற மாதிரி நான் தெரிஞ்சிக்கிட்ட ஒரு அதி முக்கியமான சமாச்சாரம் லைலாவுக்குக் கல்யாணம் ஆகிடுச்சுங்கிறது தான். விகடன்ல ஜோ-சூர்யா, சோனியா-செல்வராகவன் ஜோடிகளுக்கு அறிவுரை எல்லாம் சொல்லிருக்காங்க. பெரிய இவனாட்டம் பொது அறிவு பதிவெல்லாம் போடுறோம், நமக்கு இது கூட தெரியாமப் போச்சே...நம்ம பசங்களும் யாரும் சொல்லாம போயிட்டாங்களேன்னு கொஞ்சூண்டு "ஃபீலிங்ஸா" இருந்துச்சு :(

பெஸ்ட் கண்ணா பெஸ்ட்டு(மும்பை ஞாபகார்த்தமா)
(பி.கு: சனிக்கிழமை சாயந்திரம் ஆரோரா தியேட்டருக்குப் போன் பண்ணி "எந்த தமிழ் படங்க ஓடுது"ன்னு இந்தியில கேட்டதுக்குக் கெடச்ச பதில் தான் "வெட்டேயாடூ விலயாடூ" :))













