Saturday, February 16, 2008

வாலாட்டி நின்னானாம் சீமைத்துரை...

வந்தானாம் வந்தானாம் ஊமைத்துரை...பதிவின் தொடர்ச்சி.

பாளையங்கோட்டையிலிருந்து பின் தொடர்ந்து வந்து தாக்குதல் மேற்கொண்ட சிறு படையினால் கோட்டையை வீழ்த்த முடியாது என அறிந்த வெள்ளையர்கள் சென்னையிலிருந்தும், திருச்சியிலிருந்தும் கூடுதல் படைகளையும், தளவாடங்களையும் தருவித்தனர். கடுமையான பீரங்கித் தாக்குதலுக்குப் பின் அக்கோட்டை தகர்ந்தது. கன்னிமரா நூலகத்தில் நாங்கள் மிக ஆவலாகத் தேடிய ஜேம்ஸ் வெல்ஷ் எழுதிய 'போர் நினைவுகள்' புத்தகத்திலும் நாங்கள் எதிர்பார்த்த வகையில் கோட்டையின் கட்டுமானத்தைப் பற்றிய குறிப்புகள் கிடைக்கவில்லை. கோட்டையின் நீளம், உயரம், அகலம் மற்றும் அமைப்பு ஆகியவற்றைப் பற்றி குறிப்புகள் இருந்த அளவுக்கு கட்டுமானத்தைப் பற்றி எதுவும் இருக்கவில்லை. ஒரு ஆங்கிலேய அதிகாரியினுடைய போர்க் குறிப்புகளில் எதிரியினுடைய கட்டுமானத் நுட்பத்தைப் பற்றிய குறிப்புகளை எதிர்பார்த்தது எங்கள் தவறு தான்.

அதன் பின்னர் போர்ட்லாண்ட் சிமெண்டின் மூலக்கூறுகளைக் குறித்து படித்தோம். அதிலிருந்து எதாவது பிடிபடுமா என்ற எண்ணத்தில். கட்டுமானத்தில் உபயோகப்படுத்தப் படும் எந்தவொரு பொருளுக்கும் தாங்குதிறன்(Strength) இன்றியமையாத மூலக்கூறு(attribute). இத்தாங்கு திறன் இருவகைப்படும் -அவையாவன அழுத்தம் தாங்குதிறன்(Compressive Strength), இழுவை தாங்குதிறன்(Tensile Strength). அழுத்தம் தாங்குதிறன் ஆனது ஒரு பொருளின் மீது அதன் கொள்ளளவைக்(Volume) குறைக்கும் அழுத்தம் கொடுக்கப்படும் போது அதனால் தாங்கக் கூடிய சக்தியின் அளவு ஆகும். இழுவை தாங்கிதிறன் ஆனது ஒரு பொருளின் மீது அதன் நீளத்தை அதிகரிக்கக் கூடிய இழுவை சக்தி கொடுக்கப்படும் போது அதனால் தாங்கக் கூடிய சக்தியின் அளவு ஆகும். சுண்ணாம்பு, சிலிகா மற்றும் பல கேல்சியம் தாதுக்கள் அடங்கிய வெறும் சிமெண்டுக்கு அழுத்தம் தாங்குதிறன் அதிகம், ஆனால் இழுவை தாங்குதிறன் குறைவு. சிமெண்டினை இந்த குறைபாட்டினைக் களையவே மணல், சிமெண்ட் மற்றும் கருங்கல் கலவையான கான்க்ரீட் உபயோகிக்கிறார்கள். இக்கலவை நீரோடு நடத்தும் வேதியியல் மாற்றத்தை Hydration என்கின்றனர். Hydration எனும் மாற்றத்தால் கான்க்ரீட் கல் போன்ற தோற்றத்தைப் பெறுகிறது. சிமெண்டினைக் காட்டிலும் கான்க்ரீட்டின் அழுத்தம் தாங்குதிறன் அதிகமானது. ஆயினும் இழுவை தாங்குதிறன் ஆனது அதே அளவீட்டில்(proportion) பெருகுவதில்லை.

சிமெண்டினை விட தாங்குதிறன் அதிகமாகக் கொண்ட கான்க்ரீட்டினால்(Plain Cement Concrete -P.C.C) கூட அதிகமான இழுவையைத் தாங்க இயலாது. இக்குறைபாட்டினைப் போக்குவதற்காக கான்க்ரீட்டுடன் அதிக இழுவை தாங்குதிறன் கொண்ட எஃகினைப்(steel) பயன்படுத்துகின்றனர். இவ்வகை கான்க்ரீட்டினை(Reinforced Cement Concrete -R.C.C) பயன்படுத்துகின்றனர். பாஞ்சாலங்குறிச்சி கோட்டையினைக் கட்டுவதற்குப் பயன்படுத்தப்பட்ட கரும்புச் சக்கையின் பயன்பாடு களிமண், சுண்ணாம்பு, பதநீர் கலவையைப் பலப் படுத்துவதற்காகத்(reinforcement) தான் இருந்திருக்க வேண்டும். ஆனாலும் RCCயில் பயன்படுத்தப் பெறும் ஸ்டீல் வழங்கும் தாங்குதிறனைக் கரும்புச் சக்கை வழங்குமா என்பது சந்தேகமே. Reinforcement ஆன கரும்புச் சக்கையை விடுத்து வெறும் களிமண், பதநீர் கலவையானது போர்ட்லாண்ட் சிமெண்டினைக் காட்டிலும் அதிக அழுத்தத் தாங்குதிறன் கொண்டாலும் இழுவை தாங்குதிறன் இல்லாமல் தற்கால கட்டுமானப் பணிகளுக்கு நம் "பழங்கால சிமெண்டினைப்" பயன்படுத்துவது சிரமமே என்று சிறுவர்கள் ஆகிய நாங்கள் பரிசோதனை சாலைக்கு செல்லாமல் நாங்களாகவே ஒரு முடிவுக்கு வந்தோம். அதன் பிறகு நான் 'C' படிப்பதிலும் 'CAT'க்குத் தயார் செய்வதிலும், நண்பன் ஃப்ரான்சிஸ் GREக்குத் தயார் செய்வதிலும் கவனம் செலுத்தத் துவங்கி விட்டோம்.

பல ஆண்டுகளுக்குப் பிறகு 2008இல் அப்போது நாங்கள் அவ்வளவு கஷ்டப் பட்டு தேடிய "போர் நினைவுகள்" புத்தகம் கூகிளில் மின்நூல் வடிவில் கண்டேன். அப்புத்தகத்தை நீங்களும் தரவிறக்கம் செய்யலாம், படிக்கலாம். கல்லூரியில் படிக்கும் போது சிமெண்டிற்காக மட்டும் ஆராய்ச்சி செய்த அப்புத்தகத்தை தற்போது மீண்டும் "ஊமைத்துரை" எனும் தலைவனுக்காகப் படித்தேன். ஏன் எனில் ஊமைத்துரை பெரும்பங்கு வகித்து வெள்ளையர்களை எதிர்த்த இரண்டாம் பாளையக்காரர்கள் போர்(Second Poligar War), ஆங்கிலேயர்களின் ஏகாதிபத்தியத்தை எதிர்த்து தமிழ் மண்ணில் விளைந்த முக்கியமான ஒரு போராகும். 1857 ஆம் ஆண்டு நடைபெற்ற சிப்பாய் கலகத்திற்கு முன்னோடியாகவும் விளங்கியது இப்போர். அதுவரை கும்பினியர் கண்டிராத அளவு அவர்களுடைய தரப்பில் பெரும் உயிர்ச் சேதத்தையும் விளைவித்த ஒரு போருமாகும். அப்போரில் ஊமைத்துரையின் பங்கினைக் குறித்து தேடிக் கொண்டிருந்த போது, வெல்சின் "போர் நினைவுகள்(Military Reminiscences)" மின்நூலையும், தமிழ் அரங்கத்தில் வேல்ராஜன் அவர்கள் எழுதிய "தென்னிந்தியாவில் துவங்கிய முதல் சுதந்திரப் போரின் தமிழகக் களம்" என்ற பதிவையும் படித்தேன்.



"ஆங்கிலேயர்களால் தரைமட்டமாக்கப்பட்டு, உழுது, எருக்கு விதைக்கப்பட்ட பாஞ்சாலங்குறிச்சிக் கோட்டை ஆறே நாட்களில் அதிசயம் போல் எழுந்து நின்றது. தலித் மக்கள், மீனவர்கள் என்று எல்லாப் பிரிவு உழைக்கும் மக்களையும் திரட்டி ஊமைத்துரையும், சிவத்தையாவும் மக்களோடு மக்களாய் மண் சுமந்து இரவும் பகலும் அந்தக் கோட்டையைக் கட்டினார்கள். வெள்ளையனுக்கு எதிராக மக்களைத் திரட்டும் கலையில் தம்பிகள் அண்ணனை விஞ்சினார்கள். சிவத்தையா பாஞ்சாலங்குறிச்சியின் அரசனாக அறிவிக்கப்பட்டார்" என எழுதுகிறார் வேல்ராஜன்.

ஆறு நாட்களில் எழுந்து நின்ற கோட்டையையும் அதை பாதுகாத்துக் கொண்டிருந்த பாளையக்காரர்களையும் கண்டு மலைத்த ஆங்கிலேயப் படைகள், போரிட்டு மடிவது மூடத்தனம் என எண்ணி பாளையங்கோட்டைக்கு திரும்பச் சென்றனர் என எழுதுகிறார் வெல்சு.


பாளையங்கோட்டை சிறையிலிருந்து தப்பி வரும் அவசரத்தில், சிறை இருந்த வழியிலிருந்து ஒரு மைல் தூரத்தில் விருந்தில் கலந்துக் கொண்டிருந்த ஆங்கிலேயரைக் கவனிக்காமல் வந்துவிட்டனர் பாஞ்சாலங்குறிச்சி வீரர்கள். சிறையிலிருந்து தப்பிய அவர்கள் மட்டும் ஆங்கிலேய உயரதிகாரி வீட்டில் விருந்தில் ஆயுதங்கள் ஏதுமின்றி கலந்து கொண்டிருந்த படையினர் மீது தாக்குதல் நடத்தியிருந்தால் நாங்கள் அனைவரும் மடிந்திருப்போம் என எழுதுகிறார் கர்னல் ஜேம்ஸ் வெல்ஷ். பாஞ்சாலங்குறிச்சி வரலாறும் வேறு விதமாக இருந்திருக்கும்.


"போர் நினைவுகள்" நூலில் அச்சிடப்பட்டிருக்கும் பாஞ்சாலங்குறிச்சி கோட்டையின் படம்.


1977 ஆம் ஆண்டு தமிழக அரசால் கட்டப்பட்ட பாஞ்சாலங்குறிச்சி கோட்டை நினைவுச் சின்னம்.


திருச்சியிலிருந்து கர்னல் அக்னியூ தலைமையில் பாஞ்சாலங்குறிச்சி வந்து சேர்ந்த பீரங்கிப் படையினர், அக்கோட்டையைக் கண்டதும் இதை அழிக்கவா உங்களுக்குத் தளவாடங்கள் போதவில்லை என்று அங்கு ஏற்கனவே சண்டையிட்டுக் கொண்டிருந்த படையினரைப் பார்த்து ஏளனம் செய்தனராம். அக்கோட்டையை முதலில் கண்டவர்களுக்கு அக்கோட்டை "முட்டைக்கோசுகளைச் சேமித்து வைக்கும் ஒரு கிடங்கு போலத் தோன்றியதாம்".


சென்னையிலிருந்தும் திருச்சியிலிருந்தும் படைகள் வந்து சேருவதற்கு முன்னர், பாஞ்சாலங்குறிச்சி வீரர்கள் காடல்குடியிலும் தூத்துக்குடியிலும் ஆங்கிலேயப் படைகளைத் தாக்கி வெற்றி பெற்றனர். தூத்துக்குடி கோட்டையில் இருந்த ஆங்கிலேய அதிகாரி பேக்கார்ட் என்பாரைப் போர்க் கைதியாகத் தூக்கி வந்துவிட்டனர் வீரர்கள். அவர்களைத் தொடர்ந்து கோட்டைக்கு வந்த பேக்கார்ட்டுடைய மனைவி தன் கணவனுக்கு உயிர்ப் பிச்சை கொடுக்குமாறு வேண்டினார். அதற்கு செவிமடுத்து அவ்வதிகாரியின் உயிருக்கு ஆபத்தில்லாமல் விடுவித்த மனிதாபிமானம் 'கேட்' என்று ஆங்கிலேயரால் அழைக்கப்பட்ட 'கட்டபொம்மன் நாயக்"கிடம் இருந்தது என்று எழுதுகிறார் வெல்சு. ஆனால் 1799ஆம் ஆண்டு தூக்கிலிடப்பட்ட கட்டபொம்முவைக் குறித்து 1801 ஆம் ஆண்டில் வெல்சு தன் குறிப்புகளில் ஏன் குறிப்பிட வேண்டும் என்ற ஐயம் எழுகிறது. வேல்ராஜன் அவர்கள் அவ்வாறு உயிர்ப்பிச்சை தந்தவர் ஊமைத்துரை என்றே எழுதுகிறார். அவர் சொல்வது போல் அது ஊமைத்துரையாகத் தான் இருந்திருக்க வேண்டும்.


மற்ற பாளையக்காரர்களோடு நெருக்கமாகப் பழகி அவர்கள் அன்பினைப் பெற்றது போல் அல்லாமல் பாஞ்சாலங்குறிச்சி பாளையக்காரரான கட்டபொம்மனோடு பேனர்மேன் தலைமையிலான ஆங்கிலேயர் கடுமையான முறையில் நடந்து கொண்டது ஏன் என்று தனக்கு தெரியவில்லை எனவும், அதன் காரணமாகவே அவர்கள் தங்களை எதிரிகளாகக் கருதினர் என்றும் தெரிவிக்கிறார் வெல்சு.


பாஞ்சாலங்குறிச்சி கோட்டை வீழ்ந்ததற்குப் பின் ஊமைத்துரை வெள்ளையர்களிடமிருந்துத் தப்பிக்கும் போது கடும் காயமடைகிறார். அச்சமயத்தில் அவரருகே இன்னொரு போர்வீரனும் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிறான். அவனைக் காண வரும் தன் தாயிடம் "அம்மா நான் பிழைக்க மாட்டேன், என் தலைவரைக் காப்பாற்றுங்கள்" எனக் கூறி உயிர் விடுகிறான். அச்சமயத்தில் எட்டையபுர படையினர் பின் தொடர அத்தாய் ஊமைத்துரையின் மீது வெள்ளைத் துணி போர்த்தி, பின் தொடர்ந்து வந்த படையினரிடம் "என் மகன் அம்மை நோயினால் இறந்து விட்டான்" எனக் கூறுகிறாள். இதைக் கேட்ட வீரர்கள் தலைதெறிக்க ஓடுகின்றனர். இவ்வாறாக ஊமைத்துரையின் உயிரைக் காப்பாற்றுகிறாள் அந்த ஏழைத்தாய். அதன் பின்னர் ஊமைத்துரை கமுதி சென்றடைகிறார். மருது சகோதரர்களின் துணையோடு போரைத் தொடர்கிறார். ஆனாலும் 1801ஆம் ஆண்டின் இறுதியில் வெள்ளையரால் கைது செய்யப்பட்டுத் தன் சகோதரர் துரைசிங்கத்துடன் தூக்கிலிடப் படுகிறார்.

இரண்டாம் பாளையக்காரர் போரில் தன்னுடைய அனுபவங்களைப் பகிர்ந்து கொண்ட கர்னல் ஜேம்ஸ் வெல்சு "தான் இதுவரை கண்ட மனிதர்களிலேயே மிகவும் மேன்மையும் சிறப்பும் கொண்ட தங்கிய மனிதனாக ஊமைத்துரையைக் காணுகிறேன் எனக் குறிப்பிட்டுள்ளார். ஊமைத்துரையின் தலைமையை ஏற்று அவர் சொல்படி நடப்பதற்கு ஒவ்வொரு பாளையக்காரரும் தயாராக இருந்தனர் என்றும், அவருடைய வாக்கை வேதவாக்காக ஏற்றனர் என்றும் எழுதுகின்றார். ஒரு கையில் வைக்கோல் துண்டுகளை ஏந்தி தன் வாயால் அவற்றை ஊதி இது போல வெள்ளையர்களையும் ஊதி அழித்துவிடுவேன் என சைகையாலேயே தெரிவிப்பாராம்.


கடைசியாக, மே 2006இல் கீற்று இதழில் "கதையாடல்களில் கட்டபொம்மன் வரலாறு" எனும் தலைப்பில் பேராசிரியர்.மாணிக்கம் அவர்களுடனான பேட்டியில் அவர் சொல்லியுள்ள கருத்துகள் நினைவில் நிறுத்தத் தக்கன -
"கடந்த கால வரலாற்றைச் சரியாக உணர்ந்து கொண்டால் தான் சிறந்த எதிர்காலத்தை உருவாக்க முடியும் என்பது வரலாற்றுத் தத்துவம். அது ஒருபுறம் இருக்க, கட்டபொம்மன் ஊமைத்துரை, மருது பாண்டியர் போன்றவர்கள் ஆதிக்க சக்தியின் அடக்குமுறையை எதிர்த்த ஒரு பண்பின் கூறு, அல்லது வடிவமாகும். இத்தகைய பண்பு மனித சமுதாயத்திற்கு வேண்டிய ஒன்று. எல்லாக் காலங்களிலும் அதிகாரத்தில் இருப்பவர்கள். அடக்கு முறையை ஏவி மக்களை ஒடுக்குவதையே குறிக்கோளாகக் கொண்டுள்ளதை வரலாறு உணர்த்துகிறது. எல்லாக் காலங்களிலும் ஏதாவது ஒரு இயக்கம் உரிமைக்காகப் போராடிக் கொண்டே இருக்கிறது"

"விடுதலைப் போராட்ட காலத்தில் மக்களிடம் விடுதலை உணர்வை ஏற்படுத்த கட்டபொம்மன் கதைப்பாடல்கள் பாடப்பட்டதை இங்கு நினைவில் கொள்ள வேண்டும். எனவே தென்னாட்டு விடுதலைப் போராட்ட வீரர்களாகிய அழகுமுத்து சேர்வை, புலித்தேவர், கட்டபொம்மன், மருதுபாண்டியர், ஊமைத்துரை, வ.உ.சி., பாரதி போன்றவர்களைச் சாதிக் கூண்டுக்குள் அடைத்துவிடாமல், ஆதிக்கச் சக்திகளின் கொடுமையை எதிர்த்த விடுதலைப் போராட்ட வீரப் பண்பின் அடையாளமாக - வடிவமாகக் கொண்டு சென்றால் மனித குலத்திற்கு நன்மை விளையும்."

ஒரு வாரமாக தமிழ்மண நட்சத்திரமாகப் பதிவிட வாய்ப்பளித்த தமிழ்மண நிர்வாகத்தினருக்கும், பின்னூட்டமிட்டு பெருமளவு ஆதரவு அளித்த நண்பர்கள் அனைவருக்கும் என் நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டு என் நட்சத்திர வாரத்தை இனிய நினைவுகளுடன் நிறைவு செய்கிறேன். வணக்கம்.

42 comments:

  1. வழக்கத்தினை விடவும் அதிகமாகப் பதிவு மிகவும் நீளமாகி விட்டது. மன்னிக்கவும் :(

    ReplyDelete
  2. நீளமாக இருந்தால் என்னா? மிகவும் சுவாரய்ஸ்மாக இருக்கிறது.

    அருமை!!!

    ReplyDelete
  3. இரண்டு தொடர் பதிவுகளும் மிக அருமை. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  4. வழக்கம் போல தகவல் செறிந்த பதிவு! நன்றி தல!!

    ReplyDelete
  5. இந்த வாரம் முழுக்க கலக்கல் வாரம்!! அருமையான இடுகைகள் கொடுத்து பட்டையைக் கிளப்பிட்டீங்க!! வாழ்த்துக்கள் தலி :)))

    ReplyDelete
  6. WoW!!

    அநியாயத்துக்கு ஆராய்ச்சி செஞ்சிருக்கீங்க போல!!
    சூப்பரு!! B-)

    ReplyDelete
  7. வரலாறு படிக்க மிகவும் சுவையானது. அந்தச் சுவை அதைச் சொல்லும் முறையிலிருந்து வருகின்றது. நன்றாகச் சொல்லியிருக்கின்றீர்கள். நம்ம பக்கத்து ஊர்ல இவ்வளவு நடந்திருக்கு தெரியாமப் போச்சேய்யா!!!!!

    ReplyDelete
  8. என்னமோ ரொம்ப அனுபவிச்சுப் படிச்ச புஸ்தகம் போலத் தெரியுது. நமக்கு இதெல்லாம் புரியுதா சொல்லுங்க. இருந்தாலும் ஒரு உள்ளேன் ஐயா போட்டுக்கிட்டு அப்பீட் ஆகிக்கறேன்.

    ReplyDelete
  9. நட்சத்திர வாரத்துக்கு முத்தாய்ப்பான நிறைவுப் பதிவு.

    ReplyDelete
  10. கடலைப் பார்த்துக் கவிதை கிறுக்கவும், எதாவது குண்டக்க மண்டக்கன்னு எழுதி சிரிப்பு மூட்டவும் பல பதிவர்கள் இருக்கிறார்கள். பின்னூடங்களைஎல்லாம் பற்றிக் கவலைப் படாமல் இந்த மாதிரி நல்ல ஆராய்ச்சிக் கட்டுரை எழுதத் துணிந்த உனக்கு என் பாராட்டுக்கள்.

    ReplyDelete
  11. நம்முடைய வரலாற்றை தெரிஞ்சுக்க அன்னிய நாட்டின் டைரிக் குறிப்புகளை படித்து (சலித்து? ) பார்க்க வேண்டிய நிலைமை. வரலாற்றை நம் முன்னோர்கள் செவி வழிக் கதைகளாகவும், சிறந்த இலக்கியக் காப்பியங்களாகவும்தான், நாட்டுப்புற பாடல்களாகவும்தான் பதிவு செய்திருக்கிறார்கள் - இதை எல்லாம் இந்தக் காலத்து வரலாற்று அறிவு ஜீவிகள் 'செல்லாது, செல்லாது' என்று புறந்தள்ளி விடுகிறார்கள். அப்ப எல்லாம் கடிதங்கள், கட்டுரைகளெல்லாம் எழுதாமலா இருந்திருப்பார்கள்? கல்வெட்டுகளில் கூட நெறைய பில்ட்-அப், கொஞ்சம் உண்மைகள் இருப்பதா கண்டு பிடிச்சிருக்காங்க. இதை பற்றி இன்னொரு ஆராய்ச்சி தேவை.

    ReplyDelete
  12. நல்ல பதிவு. மிகவும் நீளமாகிவிட்டால்தான் என்ன.. நமக்குத்தான் நீண்ட நெடிய வரலாறு உண்டே, பொறுமையுடன் படிப்போம். பதிவுக்கு நன்றி.

    //நம்முடைய வரலாற்றை தெரிஞ்சுக்க அன்னிய நாட்டின் டைரிக் குறிப்புகளை படித்து (சலித்து? ) பார்க்க வேண்டிய நிலைமை. //
    என்ன செய்ய, வெளிநாட்டவர் எழுதிய நம் வரலாற்றைத்தானே நம் உண்மையான வரலாறு என்று நமது பாடபுத்தகங்கள் ஏற்றுக்கொண்டிருக்கிறது.

    ReplyDelete
  13. முதலில் இப்பதிவிற்கும் இதற்கு முந்தைய பதிவிற்குமான பெயர்க் காரணத்தைச் சொல்லி விடுகிறேன்.

    தூங்காதே தம்பி தூங்காதே திரைப்படத்தில் வரும் "வருது வருது விலகு விலகு" என்னும் பாடலுக்கிடையே வரும் சில வரிகள்...

    "வந்தானாம் வந்தானாம் ஊமைத்துரை
    வாலாட்டி நின்னானாம் சீமைத்துரை..."

    :)

    ReplyDelete
  14. //நீளமாக இருந்தால் என்னா? மிகவும் சுவாரய்ஸ்மாக இருக்கிறது.

    அருமை!!!//

    பாராட்டுக்கு மிக்க நன்றி குசும்பன்.

    ReplyDelete
  15. //இரண்டு தொடர் பதிவுகளும் மிக அருமை. வாழ்த்துக்கள்//

    வாழ்த்துகளுக்கு நன்றி கையேடு அவர்களே.

    ReplyDelete
  16. //Good one....//

    நன்றி அனானி நண்பரே.

    ReplyDelete
  17. மிகத்திறமையான ஆய்வு-அதுவும் மாணவப் பருவத்திலேயே...
    அறிவியல்களிலீடுபாடு உடையவர்கள்
    (வரலாறு உள்ளிட்ட) கலையியல்களில் ஆர்வம் காட்டமாட்டார்கள் என்பது தவறான நம்பிக்கை என்று மெய்ப்பிக்கின்றீர்கள்.
    வாழ்க! வளர்க!!

    ReplyDelete
  18. //வழக்கம் போல தகவல் செறிந்த பதிவு! நன்றி தல!!//

    //இந்த வாரம் முழுக்க கலக்கல் வாரம்!! அருமையான இடுகைகள் கொடுத்து பட்டையைக் கிளப்பிட்டீங்க!! வாழ்த்துக்கள் தலி :)))//

    வாழ்த்துகளுக்கு மிக்க நன்றிப்பா பருத்திவீரா :))

    ReplyDelete
  19. //WoW!!

    அநியாயத்துக்கு ஆராய்ச்சி செஞ்சிருக்கீங்க போல!!
    சூப்பரு!! B-)//

    வாங்க சீவீஆர்,
    வாழ்த்துகளுக்கும் கில்ல பரிந்துரைக்கும் மிக்க நன்றி.

    ReplyDelete
  20. //வரலாறு படிக்க மிகவும் சுவையானது. அந்தச் சுவை அதைச் சொல்லும் முறையிலிருந்து வருகின்றது. நன்றாகச் சொல்லியிருக்கின்றீர்கள்.//

    இந்த வாரம் முழுதும் என் அனைத்து இடுகைகளையும் படித்து கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி அட்லாஸ் சிங்கமே.
    :)

    ReplyDelete
  21. //என்னமோ ரொம்ப அனுபவிச்சுப் படிச்ச புஸ்தகம் போலத் தெரியுது. நமக்கு இதெல்லாம் புரியுதா சொல்லுங்க. இருந்தாலும் ஒரு உள்ளேன் ஐயா போட்டுக்கிட்டு அப்பீட் ஆகிக்கறேன்//

    ஹி...ஹி...ரொம்ப பெருசா போயிடுச்சா? சீக்கிரம் ஒரு சோடா குடிங்க
    :)

    ReplyDelete
  22. //
    நட்சத்திர வாரத்துக்கு முத்தாய்ப்பான நிறைவுப் பதிவு//

    ரொம்ப நன்றிப்பா.

    //பின்னூடங்களைஎல்லாம் பற்றிக் கவலைப் படாமல் இந்த மாதிரி நல்ல ஆராய்ச்சிக் கட்டுரை எழுதத் துணிந்த உனக்கு என் பாராட்டுக்கள்//

    ஆராய்ச்சி கட்டுரையா இல்லையான்னு எல்லாம் தெரியாது. ஆனால் 1995இல் இக்கோட்டையோடு வாழ்ந்து பல பரிட்சைகளில் கோட்டை விட்ட அனுபவங்கள் உண்டு. உன் தொடர் ஊக்கத்துக்கு நன்றி நண்பா.
    :)

    ReplyDelete
  23. //நம்முடைய வரலாற்றை தெரிஞ்சுக்க அன்னிய நாட்டின் டைரிக் குறிப்புகளை படித்து (சலித்து? ) பார்க்க வேண்டிய நிலைமை. வரலாற்றை நம் முன்னோர்கள் செவி வழிக் கதைகளாகவும், சிறந்த இலக்கியக் காப்பியங்களாகவும்தான், நாட்டுப்புற பாடல்களாகவும்தான் பதிவு செய்திருக்கிறார்கள்//

    இதைப் பத்தி பேராசிரியர் மாணிக்கம் அவர்கள் சொல்லிருக்கறதைப் படிச்சிப் பாரு. பில்ட்-அப்கள் இருந்தாலும் இவை வரலாற்றுச் சான்றுகள் தாம் என்பதை மறுப்பதற்கில்லை.

    http://keetru.com/kathaisolli/may06/manikkam.php

    ReplyDelete
  24. //நல்ல பதிவு. மிகவும் நீளமாகிவிட்டால்தான் என்ன.. நமக்குத்தான் நீண்ட நெடிய வரலாறு உண்டே, பொறுமையுடன் படிப்போம். பதிவுக்கு நன்றி//
    மிக்க நன்றி பாரதியா நவீன இளவரசன்.

    //என்ன செய்ய, வெளிநாட்டவர் எழுதிய நம் வரலாற்றைத்தானே நம் உண்மையான வரலாறு என்று நமது பாடபுத்தகங்கள் ஏற்றுக்கொண்டிருக்கிறது//
    இதில் உண்மை இல்லாமல் இல்லை :(

    ReplyDelete
  25. //மிகத்திறமையான ஆய்வு-அதுவும் மாணவப் பருவத்திலேயே...
    அறிவியல்களிலீடுபாடு உடையவர்கள்
    (வரலாறு உள்ளிட்ட) கலையியல்களில் ஆர்வம் காட்டமாட்டார்கள் என்பது தவறான நம்பிக்கை என்று மெய்ப்பிக்கின்றீர்கள்.
    வாழ்க! வளர்க!!//

    தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் பாராட்டுதல்களுக்கும் நன்றி ஐயா.

    ReplyDelete
  26. ""கோட்டையோடே வாழ்ந்து"" அத்தனைக்கு அதுக்குள்ள புகுந்து வெளிவந்திருக்கீங்க.. நல்லா எழுதி இருக்கீங்க .. நட்சத்திரவாரம் நல்லா இருந்தது நன்றி.

    ReplyDelete
  27. //வழக்கத்தினை விடவும் அதிகமாகப் பதிவு மிகவும் நீளமாகி விட்டது. மன்னிக்கவும் :(//
    சேகரித்த விடயங்கள் விடுபடாமல், மேலும் படித்து தெரிந்து கொள்ள உசாத்துணைகளுட ன் கூடிய முழுமையான பதிவு.

    பரீட்சைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்காமல் முதல் வகுப்பிலிருந்தே ஆராய்ச்சிக் கட்டுரை எழுதச் சொல்லும் அமெரிக்க பாடத் திட்டங்களால் புல்லுக்கும் கொஞ்சம் படிக்கமுடிகிறது.

    //ஆனால் 1995இல் இக்கோட்டையோடு வாழ்ந்து பல பரிட்சைகளில் கோட்டை விட்ட அனுபவங்கள் உண்டு.//

    அப்போது பரீட்ச்சைகளுக்கும் இப்போது பணிகளுக்கும் இடையில் நல்ல பதிவைத் தந்ததற்கு நாங்கள்தான் நன்றி தெரிவிக்க வேண்டும்.

    ReplyDelete
  28. நம் வரலாறும் நீளமே, கைப்ஸ்.

    அந்த நாட்களுக்குப் போக முடியாவிட்டாலும்,
    உங்கள் பதிவின் மூலம்
    கொஞ்சமாவது தெரிந்து கொள்ள்முடிந்தது.
    இவ்வளவு கவனம் எடுத்து எழுதீருக்கிறீர்கள். நன்றீ.

    ReplyDelete
  29. நட்சத்திர நிறைவுப் பதிவு.. நிறைவான பதிவு.

    :)

    ReplyDelete
  30. உணர்வு பூர்வமாக எழுதியுள்ளீர்கள். நான் ஆரம்ப சுகாதார நிலையத்தில் (ஒட்டப்பிடாரம் வட்டத்தில் உள்ள புதியம்புத்தூர் மற்றும் ஒட்டநத்தம்) வேலை பார்த்த காலத்தில் இந்த கதைகளையெல்லாம் கேட்டிருக்கிறேன். இவை புத்தக வடிவமாக இருப்பது தெரியாது.

    பாஞ்சாலங்குறிச்சி அருகில் கட்டபொம்மன் மற்றும் ஊமைத்துரையால் கொல்லப்பட்ட வெள்ளையர்களின் கல்லறை உள்ளது.

    ஆங்கிலேயரின் குறிப்புகளில் அந்த கோட்டை “ஜிப்ரால்டரை” போல உள்ளதாக கூறுவார்கள்.

    ----

    ஆங்கிலேயர் மூன்று விதமான எதிர்ப்பை ச்ந்தித்ததன்ர்....

    1. போர்க்களம்
    2. எழுத்து / நாடகம் மூலம் சுதந்திர வேட்கை (உதாரணம் பாரதி)
    3. வாணிபம்....

    வீரத்தில் --> கட்டபொம்மன் தான் அவர்களுக்கு (தற்காலிகமாகவேனும்) முதலில் தண்ணி காட்டியவர் (மங்கள் பாண்டேக்கு 60 வருடங்கள் முன்னர்) என்பது குறிப்பிடத்தக்கது

    வாணிபத்தில் அவர்களை எதிர்த்த வ்.உ.சியின் ஒட்டப்பிடாரம் பாஞ்சாலங்குறிச்சியில் இருந்து 5 கி.மீ கூட கிடையாது. (தற்பொழுது வ.உ.சியின் வீட்டை பார்த்தால் கண்ணீர் வரும் என்பது வேறு விசயம்)

    இவர்களின் வாரிசுகள் என்ன செய்கிறார்கள்

    1. கட்டபொம்மனின் வாரிசான வீமராஜா என்பவர் கோட்டை முன் அமர்ந்து 10 ரூபாய்க்கு கைரேகை பார்கிறார். :( :( :(

    2. வ.உ.சியின் வாரிசு அந்த பகுதியில் நடக்கும் ஒவ்வொரு மனுநீதிநாளிலும் வ.உ.சி நினைவிடத்தை சீரமைக்க மனு அளிப்பார். :( :( :(
    ---
    சுதந்திர தினத்தன்று இவர்களுக்கு மாலை போட / சால்வை அணிவிக்க மட்டும் யாரும் மறப்பதில்லை
    ---

    ReplyDelete
  31. //""கோட்டையோடே வாழ்ந்து"" அத்தனைக்கு அதுக்குள்ள புகுந்து வெளிவந்திருக்கீங்க.. நல்லா எழுதி இருக்கீங்க .. நட்சத்திரவாரம் நல்லா இருந்தது நன்றி//

    வணக்கம் மேடம்,
    வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி.

    ReplyDelete
  32. ///சேகரித்த விடயங்கள் விடுபடாமல், மேலும் படித்து தெரிந்து கொள்ள உசாத்துணைகளுட ன் கூடிய முழுமையான பதிவு.

    பரீட்சைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்காமல் முதல் வகுப்பிலிருந்தே ஆராய்ச்சிக் கட்டுரை எழுதச் சொல்லும் அமெரிக்க பாடத் திட்டங்களால் புல்லுக்கும் கொஞ்சம் படிக்கமுடிகிறது.

    //ஆனால் 1995இல் இக்கோட்டையோடு வாழ்ந்து பல பரிட்சைகளில் கோட்டை விட்ட அனுபவங்கள் உண்டு.//

    அப்போது பரீட்ச்சைகளுக்கும் இப்போது பணிகளுக்கும் இடையில் நல்ல பதிவைத் தந்ததற்கு நாங்கள்தான் நன்றி தெரிவிக்க வேண்டும்//

    வாங்க குலவுசனப்பிரியன் சார்,
    தங்கள் பின்னூட்டம் மிகுந்த ஊக்கத்தையும் மனநிறைவையும் தருகின்றது. வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி.

    ReplyDelete
  33. //அந்த நாட்களுக்குப் போக முடியாவிட்டாலும்,
    உங்கள் பதிவின் மூலம்
    கொஞ்சமாவது தெரிந்து கொள்ள்முடிந்தது.
    இவ்வளவு கவனம் எடுத்து எழுதீருக்கிறீர்கள். நன்றீ//

    வாங்க வல்லியம்மா,
    இந்தப் பதிவு பயனுள்ளதாக இருப்பதை அறிந்து மிக்க மகிழ்ச்சி. உங்கத் தொடர் ஊக்கத்துக்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  34. //நட்சத்திர நிறைவுப் பதிவு.. நிறைவான பதிவு.

    :)//

    வாங்க அரைபிளேடு,
    தங்கள் வாழ்த்துக்கு என் மனமார்ந்த நன்றி.

    ReplyDelete
  35. வாங்க டாக்டர் ப்ரூனோ,
    இப்பதிவு எழுதும் போது கூகிளில் தேடிக் கொண்டிருந்த போது தமிழ் விக்கிபீடியாவில் உங்களுடனான ஒரு உரையாடல் பக்கத்தைக் கண்டேன். அதில் ஊமைத்துரைக்கு ஆயுதங்கள் வழங்கி உதவிய மீனவத் தலைவன் எனும் குறிப்பையும் படித்தேன். திரு.வேல்ராஜன் அவர்கள் தன்னுடைய கட்டுரையில் எழுதியுள்ளதை போல ஊமைத்துரை ஒரு மக்கள் தலைவனாக விளங்கியிருப்பதைத் தங்கள் குறிப்பில் இருந்து அறிந்து கொண்டேன். ஆதோடு என்னைப் பொறுத்த வரை ஊமைத்துரை ஒரு 'Unsung Hero' தான். வரலாற்று பக்கங்களில் அவருக்குக் கிடைக்க வேண்டிய பங்கு கிடைக்கவில்லை என்றே எண்ணுகிறேன். வீரபாண்டிய கட்டபொம்மன் திரைப்படத்தில் கூட ஊமைத்துரையைப் பற்றி அதிகமாக இருப்பதாக ஞாபகம் இல்லை. அப்படத்தில் அப்பாத்திரத்தில் நடித்தவர் யார் என்றும் நினைவில் இல்லை.

    தாங்கள் இங்கு வந்து பின்னூட்டம் இட்டு இருப்பது மகிழ்ச்சியைத் தருகிறது.

    ////ஆங்கிலேயரின் குறிப்புகளில் அந்த கோட்டை “ஜிப்ரால்டரை” போல உள்ளதாக கூறுவார்கள்//
    ஜிப்ரால்டர் பாறை வலிமையின் சின்னமாக அனைத்து இடங்களிலும் அறியப்படுவதால்...இவ்வுவமை சரியானது என்றே நம்புகிறேன்.

    தமிழ் விக்கிபீடியாவில் நடக்கும் உரையாடல்களைப் பற்றி சிறிது விளக்கம் தர இயலுமா? இதன் அமைப்பாளர்கள் யார்? உரையாடலில் கலந்து கொள்வது யார்...இது போன்றன.

    நன்றி.

    ReplyDelete
  36. தமிழ் விக்கிபீடியாவில் வெளியாகியுள்ள டாக்டர்.ப்ரூனோ அவர்களுடனான உரையாடல் பக்கத்தின் சுட்டி.

    http://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:Mariano_Anto_Bruno_Mascarenhas/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81_2

    ReplyDelete
  37. நான் விக்கீபிடியாவில் தீவிரமாக இருந்தது 2006ல்.. தற்பொழுது அங்கு நேரம் ஒதுக்க முடியவில்லை
    0
    ---
    எனக்கு தெரிந்தவை
    //தமிழ் விக்கிபீடியாவில் நடக்கும் உரையாடல்களைப் பற்றி சிறிது விளக்கம் தர இயலுமா? //
    யார் வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம். சில நேரங்களில் சும்மா informal chat தான்.. பல நேரங்களில் சீரியஸ் விவாதங்களுல் நடக்கும்

    //இதன் அமைப்பாளர்கள் யார்?//
    இது ஆங்கில விக்கீபிடியாவின் ஒரு அங்கம். ஆங்கில விக்கீபிடீயா போலவே இதிலும் member, admin, bureaucrat ஆகிய level உண்டு

    http://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Listusers/Bureaucrat
    http://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Listadmins

    //உரையாடலில் கலந்து கொள்வது யார்...//
    அனைவரும்

    ----
    விக்கீபிடியாவில் எனது முன்னோடி இவர்தான்.
    http://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D:Sundar
    திரு சுந்தர்.
    எட்டயாபுரத்துக்காரர்.
    அவர் தமிழ் விக்கீயில் அதிகாரி (3ஆவது நிலை)
    அவரிடம் உங்கள் சந்தேகங்கள் கேட்கலாம்.
    ---

    ReplyDelete
  38. http://bruno.penandscale.com/2005/04/panchalankurichi.html
    http://bruno.penandscale.com/2005/04/ettayapuram.html

    பாஞ்சாலங்குறிச்சி குறித்து பல பதிவுகள் எழுத ஆசைதான். கொஞ்சம் மேட்டர் கைவசம் உள்ளது. ஆனால் நேரம் தான் இல்லை.
    ----

    ReplyDelete
  39. உங்கள் தொடர் பதிவின் மூலம் நிறைய விஷயங்களை அறிந்து கொள்ள முடிந்தது. மிக்க நன்றி கைப்புள்ள அவர்களே

    ReplyDelete
  40. சின்ன வயசுல ஒழுங்கா படிக்காததெல்லாம் படிச்சி தெரிஞ்சிகிட்டேன். நன்றி!

    ReplyDelete
  41. அப்படியே "பூலித்தேவர்" பற்றியும் ஆராய்ச்சி செய்திருக்கலாம், உங்கள் நட்சத்திரப் பதிவுகளை எல்லாம் இன்னிக்குத் தான் படிக்க முடிஞ்சது. கட்ட பொம்மனின் வாரிசுகள் இப்போது குறி சொல்லிப் பிழைத்துக் கொண்டிருக்கிறார்கள். :(

    ReplyDelete