Monday, November 26, 2007

தசரதர்கள் வாழ்வதில்லை

"You are reading this letter since Iam not alive" என்று தொடங்கி தெளிவான சரளமான ஆங்கிலத்தில் ஆறு பக்கங்களுக்கு எழுதப்பட்ட அந்த கடிதத்தைப் படிக்கும் போது - "இது நிஜமாகவே என் வாழ்க்கையில் தான் நடக்கிறதா? ஒரு மனிதனின் வாழ்வின் கடைசி மணித்துளிகளில் எழுதப்பட்ட அந்த எழுத்துகளைப் படிப்பது நான் தானா?" போன்ற எண்ணங்கள் மேலோங்கியது. எது எப்படியோ முதன்முதலாக ஒரு 'suicide note'ஐப் படிக்கும் போது ஒரு இனம் புரியாத உணர்வு ஏற்பட்டது. அது பரபரப்பா? ஆர்வமா? வருத்தமா? கனவா நிஜமா என்ற சந்தேகமா? என்னவென்று சொல்லத் தெரியவில்லை. மேலே உள்ள வரிகள் யாவும் நான் எழுதப் போகும் கற்பனை கதையின் முதல் வரிகள் என்று நினைப்பீர்களாயின் அது தவறு. துரதிருஷ்டவசமாக நான் சொன்னதும் சொல்லப் போவதும் கற்பனை இல்லை. உண்மை.

அப்போது நான் தில்லியில் வேலைக்குச் சேர்ந்த புதிது. ஒரு முறை விடுமுறையில் சென்னைக்கு வந்து விட்டுத் திரும்பச் செல்வதற்கு முன்னர் பெங்களூரில் இருக்கும் தாத்தாவையும் பார்த்து விட்டுச் செல்லலாம் என்று பெங்களூர் சென்றிருந்தேன். அவருடன் பல விஷயங்களையும் பேசிக் கொண்டிருக்கும் போது, தன்னுடைய நண்பரின் மறைந்த மகனைப் பற்றிச் சொன்னார். அவர் இறந்தது ஒரு லவ் மேட்டரில் தற்கொலை செய்து கொண்டாம். அத்தோடு அந்த பையனின் மரணத்திற்குப் பிறகு போலீஸ் விசாரணையின் போது கிடைத்த அந்த இறுதி கடிதத்தின் நகலையும் எனக்கு காட்டினார். அக்கடிதத்தின் முதல் வரி தான் இப்பதிவின் முதல் வரி. விறுவிறுவென ஒரே மூச்சில் படித்தேன்.

நன்கு படித்து நல்ல வேலையில் இருந்த அந்த பையன், வேலை நிமித்தமாக ஐதராபாத் சென்ற பொழுது காதல் வயப்படுகிறான். அந்த பெண்ணும் இவளை விரும்புகிறாள். உயிருக்குயிராய் காதலித்த பெண்ணின் குடும்பத்தார் மொழி, இனம் போன்றவற்றைக் காரணம் காட்டி இவர்கள் காதலுக்குத் தடை விதிக்கிறார்கள். "என் வீட்டார் சம்மதம் இல்லாவிட்டாலும் பரவாயில்லை, நாம் எங்காவது சென்று திருமணம் செய்து கொள்ளலாம்" என்று சொல்லியிருக்கிறாள் அப்பெண். "என் வீட்டில் நம் காதலுக்குத் தடை ஏதுமில்லை, கொஞ்சம் பொறு ஓடிப் போய் திருமணம் செய்து கொள்வதைக் காட்டிலும் ஊரறிய உன்னை திருமணம் செய்து கொள்ளவே நான் விரும்புகிறேன்" எனச் சொல்லியிருக்கிறான் அவன். வீட்டிலும் தனக்கு வேறு ஒரு வரன் பார்ப்பதனாலும், காதலனும் பொறுமை காக்கச் சொன்னதனாலும் அவனுக்குத் தன் மேல் அன்பில்லையோ என எண்ணி "இறுதி கடிதம்" ஒன்றை எழுதி வைத்து விட்டுத் தன் உயிரை விடுகிறாள் அப்பெண். இது வரை காதலுக்கு எதிரியாக இருந்த அப்பெண்ணின் பெற்றோர், மகளின் சாவுக்கு அந்த பையனே காரணம் என எண்ணி அவன் உயிருக்கும் அவன் குடும்பத்தார் உயிருக்கும் தாங்களே எமன் என எச்சரிக்கை விடுக்கிறார்கள். காதலித்த பெண்ணின் நிரந்தரப் பிரிவின் துயர் ஒரு புறம் இருக்க, அப்பெண்ணின் மரணத்தினால் தன் குடும்பத்தாரின் உயிருக்கும் ஆபத்து என்று அறிந்து விரக்தியின் எல்லைக்கே செல்கிறான் அவன். ஐதராபாத்தில் தன் வேலையை ராஜினாமா செய்து விட்டு பெங்களூருக்குத் திரும்புகிறான். அங்கே ஊருக்கு ஒதுக்குப்புறமாக யாருக்கும் தெரியாமல் ஒரு வாடகை வீட்டை எடுத்துக் கொண்டு சிறிது நாள் தங்கி, பெண்ணின் குடும்பத்தாரோடு தொடர்பு கொண்டு தன் பக்க நிலையை விளக்க முயற்சித்திருக்கிறான். அதை கேட்டு அவர்கள் சமாதானம் அடையாததால் இந்த 'extreme step'ஐத் தான் எடுத்ததற்கு காரணம் என்னவென்று ஆறு பக்கங்களுக்கு இன்னுமொரு "இறுதி கடிதம்" எழுதி விட்டு தன் உயிரை விடுகிறான்.

"அக்கா அக்கான்னு பாசமா இருப்பாப்பான் சங்கர். மாரதஹள்ளி நம்ம வீட்டுலேருந்து எவ்வளவு தூரம்? இங்கேயே தான் இருந்திருக்கான். எங்க யாருக்கும் ஒன்னும் தெரியாது. கடைசியா பாய்சன் சாப்பிட்டுட்டு பையன் செத்துட்டான்னு அவங்க அப்பா கரூர்லேருந்து வந்து தகவல் சொல்லும் போது தான் தெரியும். இங்கே தான் இருக்குறேன்னு ஒரு தகவல் குடுத்துருந்தா அவனைச் சாக விட்டுருப்போமா?" என்று கூறியவர் என் சித்தி. பக்கத்து வீட்டுப் பையனின் மரணத்தாலேயே ஒருத்தருக்கு இவ்வளவு பாதிப்பு ஏற்படும் போது, அப்பையனைப் பெற்றவர்களுக்கு எவ்வளவு பாதிப்பு ஏற்பட்டிருக்கும், அவர்கள் மனநிலை எப்படி இருந்திருக்கும் என இப்போது நினைத்து பார்க்கிறேன். அவர்கள் நிலையிலிருந்து நினைத்து பார்க்க எனக்கு பயமாக இருக்கிறது. ஆறேழு வருடங்களுக்கு முன் அக்கடிதத்தை படிக்கும் போது எனக்கு அப்படியேதும் தோன்றவில்லை. இந்தளவுக்கு பாதிப்பும் எனக்கு ஏற்படவில்லை.

முப்பது வயதை நெருங்கிக் கொண்டு வாழ்க்கையின் "நடு செண்டரில்" நின்று கொண்டு என்னைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகளைப் பார்க்கும் போதும், எங்கோ யாருடைய வாழ்விலோ நடப்பதை பத்திரிகைகள்/இணையத்தின் மூலமாகப் படிக்கும் போதும் - அன்பு, பாசம், உறவுகள் என்றால் என்ன? அவற்றின் அருமை என்ன என சிறிது சிறிதாக உணரத் தொடங்கியிருக்கும் நேரத்தில் - என்னால் பாதிக்கப் படாமல் இருக்கமுடியவில்லை. "You are reading this letter since Iam not alive" என்று மரண வாக்குமூலத்தையும் impressiveஆக creativeஆக எழுதத் தெரிந்தவர், தன் வாழ்க்கை பிரச்னைகளையும் சற்று creativeஆக அணுகியிருப்பாரே ஆனால் அப்பெண்ணின் உயிரையும், தன் உயிரையும் காப்பாற்றி இருக்கலாம் என்றே தோன்றுகிறது. எது எப்படியோ, அப்பெண்ணின் பெற்றோரும் அப்பையனின் பெற்றோரும் "தசரத வாழ்வை" வாழ்ந்து கொண்டிருப்பார்கள் என்பதில் மாற்று கருத்து இருக்க முடியாது. தன் மறைவிற்குப் பிறகு தன் பெற்றோர் படும் துயரங்கள் என்னவென்று தற்கொலை செய்யத் துணிபவர்கள் நினைப்பார்கள் ஆயின் சிறிதேனும் தங்கள் முடிவை மறுபரிசீலனை செய்யக் கூடும்.

இதை எல்லாம் எழுதத் தூண்டியது சில மாதங்களுக்கு முன் தினமலர் வாரமலரில் "இது உங்கள் இடம்" பகுதியில் வாசகர் ஒருவர் எழுதியதை படித்தது. தன் காதலிக்கு செல்போன் வாங்கித் தர பணம் இல்லையென வருந்தி ஃபினாயில் குடித்துத் தன் நண்பனின் மகன் தற்கொலைக்கு முயன்றதை எண்ணி மிகவும் வருந்தி அவர் எழுதியிருந்தார். அதை படித்ததும் உயிரின் விலை எவ்வளவு மலிவாகப் போய்விட்டது? என நினைத்துக் கொண்டேன். அன்று மாலையே தொலைக்காட்சியில் "மாறன்" திரைப்படம் ஒளிபரப்பானது. மகனை இழந்து வாடும் தந்தையின் கதாபாத்திரத்தை உணர்ந்து நிறைவாகச் செய்திருப்பார் சத்யராஜ். படத்தின் பிற்பகுதி மட்டும் மிக comicalஆக முடிக்கப்படாவிட்டால் நல்ல படமாக இருந்திருக்கும் என நினைக்கிறேன். அப்போதில் இருந்தே இத்தலைப்பில் எழுத வேண்டும் என எண்ணியிருந்தேன். சொல்ல நினைத்தவை இன்னும் கொஞ்சம் இருக்கிறது. பதிவின் நீளம் கருதி இப்பதிவை இத்துடன் முடிக்கிறேன்.

தொடரும்...

17 comments:

  1. தலைப்பை பாத்த உடனே ஏதோ 'தவமாய் தவமிருந்து' பதிவோன்னு தப்பா நினைச்சிட்டேன் (ஒருவகையில சரிதான்). ரொம்ப முக்கியமான விஷயத்தை பதிவு பண்ணி இருக்கே, பாராட்டுக்கள். தற்கொலை பண்ணிக்கிட்டு இறந்து போறவங்களை நினைச்சு நான் ஒரு நிமிஷமும் வருத்தப்பட்டது கிடையாது. எனக்கும் உன்ன மாதிரியே, பெற்றோர் மற்றும் உறவினர் சொல்லும் விஷயங்களை கேக்கும் போது, கோபம் வரும். ஏன் இப்படி ஒரு முட்டாள்தனமா, அந்த "Extreme Step"-க்கு அவங்க போகணும்னு. எல்லோருக்கும் ஒரு காரணம் இருந்திருக்கும். நான் இது வரை இப்படி ஒரு கடிதம் படிச்சதில்லை, அதனால் அவங்களோட arguments, perspective என்னனு இது வரைக்கும் தெரிஞ்சதில்ல. நீ முடிஞ்ச வரைக்கும் அந்த கடிதத்தை மீள் பதிவு செஞ்சிருக்கலாம் - அவர் என்ன முயற்சிகளை எடுதுகிட்டார், ஏன் யாரோட உதவியும் அவர் கேக்கல - இப்படின்னு பல கேள்விகள் எல்லா தற்கொலைகளுக்கு பின்னாலயும் இருக்கு.

    எனக்கு தெரிஞ்ச சின்ன விஷயம் இதுதான் - எந்த இழப்பையும் காலம் சரி செஞ்சுடும், மரணம் ஒன்னைத் தவிர.

    தொடரும்னு போட்டிருக்கு அதனால இன்னும் விளக்கமா எழுது. இதை இப்பதான் பாத்தேன் " தென் இந்தியாதான் உலகத்தின் தற்கொலைத் தலைமாநிலமாம்" (2004 article). http://www.rediff.com/news/2004/apr/15spec.htm

    ReplyDelete
  2. படித்தவுடன் இதயம் கனத்து போனது. :(

    சேனலை மாத்துங்க தல, முப்பது தானே ஆகுது, இன்னும் எவ்ளோ இருக்கு.

    ReplyDelete
  3. ரொம்ப கனமான சப்ஜெக்ட்தான். தற்கொலை என்பது தவறான ஒரு முடிவுதான். அதற்கு முற்படுபவர்கள் உயிரின் விலை அறியாதவர்கள். இது எனது எண்ணம். வேறு வகை எதிர்வினைகள் வருகிறதா எனப் பார்க்க ஆவலாய் உள்ளேன்.

    ReplyDelete
  4. எழுதி முடிங்க, எனக்கும் சொல்றதுக்கு மேட்டர் இருக்கு, வரேன். இப்போதைக்கு பதிவு கனமாக இருந்து யோசிக்க வைக்கிறது என்பதை மட்டும் சொல்லிக்கிறேன்.

    ReplyDelete
  5. எனக்கு பைசா பெறாத காரணத்துக்காக எல்லாம் தற்கொலை பண்ணிக்கும் போது கோவம் வரும். பின் அவர்கள் அறியாமையை, ஆதங்கத்தை நினைத்து வருத்தமாக இருக்கும்.

    எவ்வளவு பெரிய பிரச்சனையாக இருந்தாலும் உயிரை விடுவது தீர்வு கிடையாது என்பது தான் என் கருத்து.

    வாழவா வழியில்லை
    இப்புவியில்
    அல்லது
    வாழ்ந்திட தான்
    இடம் இல்லையா

    ReplyDelete
  6. //நான் இது வரை இப்படி ஒரு கடிதம் படிச்சதில்லை, அதனால் அவங்களோட arguments, perspective என்னனு இது வரைக்கும் தெரிஞ்சதில்ல. நீ முடிஞ்ச வரைக்கும் அந்த கடிதத்தை மீள் பதிவு செஞ்சிருக்கலாம் - அவர் என்ன முயற்சிகளை எடுதுகிட்டார், ஏன் யாரோட உதவியும் அவர் கேக்கல - இப்படின்னு பல கேள்விகள் எல்லா தற்கொலைகளுக்கு பின்னாலயும் இருக்கு//
    எனக்கும் அந்த கடிதத்தில் இருந்து என்ன படித்தோம் என்பது அவ்வளவாக நினைவில்லை. தற்கொலை செய்து கொள்பவர்களின் மனநிலையைப் பற்றி நான் எழுத எண்ணவில்லை. அவர்களால் அவர்களின் சுற்றத்தினருக்கு ஏற்படும் பாதிப்பினைக் குறித்தே எழுத விரும்பியதால் அக்கடிதத்தைப் பற்றி விலாவரியாக எழுதத் தோன்றவில்லை.

    //எனக்கு தெரிஞ்ச சின்ன விஷயம் இதுதான் - எந்த இழப்பையும் காலம் சரி செஞ்சுடும், மரணம் ஒன்னைத் தவிர//
    முற்றிலும் உண்மை.

    //தொடரும்னு போட்டிருக்கு அதனால இன்னும் விளக்கமா எழுது. இதை இப்பதான் பாத்தேன் " தென் இந்தியாதான் உலகத்தின் தற்கொலைத் தலைமாநிலமாம்" (2004 article). http://www.rediff.com/news/2004/apr/15spec.htm//
    வருந்தத்தக்க உண்மை. உன்னுடைய வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு.

    ReplyDelete
  7. //படித்தவுடன் இதயம் கனத்து போனது. :(//
    எனக்கும் அப்படித் தான் இருந்தது.

    //சேனலை மாத்துங்க தல, முப்பது தானே ஆகுது, இன்னும் எவ்ளோ இருக்கு//
    ஒரே சேனலைப் பாத்துக்கிட்டு இருந்தாலும் போர் அடிக்கும் அம்பி. ஆனா இந்த சேனல் தொடர்ச்சியா ஓடாதுன்னும் சொல்லிக்கிறேன். முப்பதை நெருங்கிக் கொண்டிருக்கும்னு தானே போட்டிருக்கேன். முப்பது ஆயிடுச்சுன்னா போட்டுருக்கேன்...ஏன்யா அனாவசியமா வயசைக் கூட்டறீங்க?
    :)

    ReplyDelete
  8. //ரொம்ப கனமான சப்ஜெக்ட்தான். தற்கொலை என்பது தவறான ஒரு முடிவுதான். அதற்கு முற்படுபவர்கள் உயிரின் விலை அறியாதவர்கள்.//
    I cannot agree moreனு தான் சொல்லத் தோனுது :)

    //வேறு வகை எதிர்வினைகள் வருகிறதா எனப் பார்க்க ஆவலாய் உள்ளேன்//
    நானும் தான். பார்ப்போம்.

    ReplyDelete
  9. //எழுதி முடிங்க, எனக்கும் சொல்றதுக்கு மேட்டர் இருக்கு, வரேன். இப்போதைக்கு பதிவு கனமாக இருந்து யோசிக்க வைக்கிறது என்பதை மட்டும் சொல்லிக்கிறேன்.//

    வாங்க சார்,
    நேற்றிரவு தாமதமாக வீடு வந்து சேர்ந்ததனால் உடனே பதிலிட முடியவில்லை. ஆனால் பதிவின் தொடர்ச்சியை இன்றே எழுதத் தூண்டியது உங்கள் பின்னூட்டம் தான் எனச் சொல்லிக் கொள்ள ஆசை படுகிறேன். உங்கள் கருத்துகளை அறிந்து கொள்ள ஆவல் உள்ளவனாக உள்ளேன். நன்றி.

    ReplyDelete
  10. //எனக்கு பைசா பெறாத காரணத்துக்காக எல்லாம் தற்கொலை பண்ணிக்கும் போது கோவம் வரும். பின் அவர்கள் அறியாமையை, ஆதங்கத்தை நினைத்து வருத்தமாக இருக்கும்//
    தற்கொலை செய்து கொள்ள விஷத்தைக் குடித்த ஒருவன் ஐயோ என்னால தாங்க முடியலை காப்பாத்துங்க காப்பாத்துங்க என கதறியதையும் அவனைக் காப்பாற்ற முடியாமல் அவன் இறந்து போன கதையையும் கூட கேள்வி பட்டிருக்கேன். நீங்க சொல்ற மாதிரி நானும் ஃபீல் பண்ணிருக்கேன்.
    :(

    //எவ்வளவு பெரிய பிரச்சனையாக இருந்தாலும் உயிரை விடுவது தீர்வு கிடையாது என்பது தான் என் கருத்து.

    வாழவா வழியில்லை
    இப்புவியில்
    அல்லது
    வாழ்ந்திட தான்
    இடம் இல்லையா//
    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சிவா.

    ReplyDelete
  11. அது சரி, இன்னொரு பின்னூட்டம் என்ன ஆச்சு? நேத்திலே இருந்து பார்க்கறேன், என்னோட சில பின்னூட்டங்கள் வரவே மாட்டேங்குதே?????????

    ReplyDelete
  12. ம்ம்ம்ம்ம், error performing requestஅப்படினு வருதே? இதாவது வருதா பார்க்கலாம்.

    ReplyDelete
  13. போயிடுச்சுனு நம்பறேன். :(((((

    ReplyDelete
  14. தலைவியாரே!
    நீங்க பின்னூட்டம் போட்டது இந்த பதிவோட தொடர்ச்சி பதிவு.

    http://kaipullai.blogspot.com/2007/11/blog-post_27.html

    இங்கே இருக்கு பாருங்க. அது தவிர நீங்க வேற கமெண்ட் போட்டிருந்தீங்கன்னா அது வரலைன்னு தாழ்மையுடன் சொல்லிக்கிறேன். உங்க பின்னூட்டதை எல்லாம் போடாம இருக்கற தைரியம் யாருக்கு இருக்கு? அது சரி...படிச்சிட்டு உங்க கருத்தைச் சொல்லவே இல்லை? என்னை கலாய்க்கறதுலேயே கவனமா இருக்கீங்களே?
    :(

    ReplyDelete
  15. தலைவியாரே! ரெண்டு கமெண்டும் வந்தாச்சு.
    :)

    ReplyDelete
  16. தல,

    நல்லப்பதிவு.....

    //முப்பது வயதை நெருங்கிக் கொண்டு வாழ்க்கையின் "நடு செண்டரில்" நின்று கொண்டு என்னைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகளைப் பார்க்கும் போதும்,//

    எனக்கு இன்னும் மூணு வருசத்திலே நெருங்கிடும் , உங்களுக்கு இன்னும் 4 மாசத்திலே வந்திரும்லே? :)

    ReplyDelete
  17. Worth Posting, different view. Lets join the hands for reading the forthe coming posts

    ReplyDelete