கடந்த பத்து நாளாவே இங்கே நான் இருக்குற இடத்துல(சித்தூர்கட்) ஒரே திருவிழாக் கோலம் தாங்க. காரணம் தசரா பண்டிகை. வட இந்தியாவில்(வட இந்தியா என்று சொன்னாலும் மேற்கு, கிழக்கு பகுதிகளும் இதில் அடங்கும்) மிக முக்கியமான பண்டிகைகளில் ஒன்று. நம்ம ஊருல நவராத்திரின்னு சொல்றதை இங்கே 'நவராத்திரா'ன்னு சொல்றாங்க. நவராத்திரா நடக்கற ஒன்பது நாட்களும் பகல் முழுக்க எதுவும் சாப்பிடாமல் விரதம் இருப்பவர்களும் இருக்கிறார்கள், காலையில் சிற்றுண்டி சாப்பிடாமல் மதிய உணவில் வெங்காயம், பூண்டு போன்றவற்றைச் சேர்க்காமல் ஜவ்வரிசி கிச்சடி, தயிர், வாழைப்பழம் என்று மட்டும் சாப்பிடுபவர்களும் இருக்கிறார்கள்.
நாம் நவராத்திரி கொண்டாடுவதற்கும் இங்கு கொண்டாடுவதற்கும் கண்கூடான வித்தியாசம் என நான் கருதுவது 'நவராத்திரி கொலு' வட இந்தியாவில் வைப்பதாக நான் கேள்விபட்டதில்லை. கொலு என்று சொன்னாலே "மிக்சட் மெமரிஸ்" தான். சிறு வயதில் கொலு வைத்திருக்கும் வீட்டில் அழகழகான பொம்மைகளைக் காண்பது மிக மகிழ்ச்சியான ஒரு விஷயமாக இருந்திருக்கிறது. ரயில், கோயில், தெப்பக்குளம், யானை, குதிரை என்று அனைத்தையும் மினியேச்சராகக் காண்பதில் அந்த வயதுக்கே உரிய ஒரு சின்ன சந்தோஷம். பல வீடுகளில் வீட்டிற்கு வரும் பெண்களுக்கு ப்ளவுஸ் பீஸ், தாலி கயிறு, குங்குமம், மஞ்சள் டப்பா இத்யாதிகளைத் தருவார்கள். எது எப்படியோ கூடப் போகும் நமக்கும் எதாவது ஒரு சீப்போ, ஒரு சிறு கண்ணாடியோ இல்லை வேறு எதாவது ஒரு சிறு சொப்பு சாமான் பரிசாகக் கிடைத்தால் வந்ததுக்கு ஒரு லாபம். ஆனால் அதே சமயம், கொலு மண்டபத்தில் இருக்கும் எதாவது ஒரு 'பெருசு' சின்னப்பசங்க எதாச்சும் ஒரு பாட்டு பாடுங்க என்று கிளப்பி விடுவதைக் கேட்கும் போதே அங்கிருந்து ஓடி வந்து விட வேண்டும் போல இருக்கும். அப்படியே எதாச்சும் பாட்டு பாடினாலும் மிக உஷாராகப் பாட வேண்டும். அந்த வயதில் எதாச்சும் எசகுப்பிசகா காதல்-கத்திரிக்கா பாட்டைத் தெரியாத் தனமாப் பாடி விட்டால் 'கொலுவுல இந்தப் பாட்டைத் தான் பாடுவாங்களா?'ன்னு வீட்டுக்குப் போனதும் செமத்தியா திட்டு கிடைக்கும். அதற்கு பயந்து கொண்டே கொலு வைக்கும் வீட்டில் பாடச் சொன்னால் வாயை மூடிக் கொண்டு இருந்து விடுவது. ஒரு சோதனையாக அந்த மாதிரி நேரங்களில் 'சாமி பாட்டு' எதுவும் நினைவுக்கு வராது 'நிலா அது வானத்து மேலே' தான் நினைவுக்கு வரும் :)
நாம் இங்கு விஜயதசமிக்கு முதல் நாள் ஆயுத பூஜை என்று நவராத்திரி நாட்களில் கொண்டாடுவதை இங்கு இவர்கள் 'விஷ்வகர்மா தினம்' என்ற பெயரில் நவராத்திரி தினங்களுக்கு முன்னரே கொண்டாடி விடுகின்றனர். இவ்வர்டம் செப்டம்பர் 17ஆம் தேதி அன்று நான் இருக்கும் இடத்தில் விஷ்வகர்மா பூஜை செய்யப்பட்டது. வர்க் ஷாப்பில் இயந்திரங்களுக்கும் உபகரணங்களுக்கும் பூஜை செய்து எல்லோருக்கும் பிரசாதம் வழங்கினார்கள். தமிழ்நாட்டில் ஆயுத பூஜை அன்று பேக்டரிகளில் தொழிலாளர்களுக்கு இனிப்பு வழங்கிக் கொண்டாடுவது போலவே இங்கு விஷ்வகர்மா தினத்தன்று வெகு விமரிசையாகக் கொண்டாடுகிறார்கள்(நான் இந்தூரில் இருந்த போதும், அங்கும் இதே போல இத்தினத்தன்று பூஜை செய்து கொண்டாடினார்கள்). கீழே உள்ளது விஷ்வகர்மா பூஜை நடந்த இடத்தில் இருந்த பொம்மைகளின் படம். நரைத்த தாடியுடன் கொக்கு மேல் அமர்ந்திருப்பவர் தான் விஷ்வகர்மா கடவுளாம். இந்த பொம்மைகள் அனைத்திலும் மோட்டர் பொருத்தப்பட்டு அழகாக அசைந்தாடி கொண்டிருந்தது. குறிப்பாக நிற்கும் அந்த பெண்களின் பொம்மைகள் இடுப்பை அசைத்து ராஜஸ்தானி முறையில் நடனமாடியதைக் காண அழகாக இருந்தது.
நாங்கள் இருக்கும் இடத்தில் வெறும் சிமெண்ட் தொழிற்சாலை மட்டும் அல்லாமல், அதை ஒட்டியே அங்கு பணிபுரியும் ஊழியர்கள் வசிக்கும் காலனியும்(நாங்கள் தங்கி இருந்ததும் இக்காலனியில் உள்ள விருந்தினர் விடுதியில் தான்), அழகிய கோயிலும், ஸ்கூலும் கொண்ட ஒரு பெரிய வளாகம் உள்ளது(சுருக்கமாகச் சொன்னால் ஒரு மினி டவுன்ஷிப்). வேலை முடித்து இரவு கெஸ்ட் அவுஸ் திரும்பியதும் கோயிலை ஒட்டிய இடத்தில் ஒவ்வொரு நாள் இரவும் டாண்டியா(Dandia) மற்றும் கர்பா(Garba) நடனங்கள் நடைபெறும். டாண்டியா என்பது நம்மூர் கோலாட்டம் போல குச்சிகளைக் கொண்டு ஆடப்படும் நடனம். கர்பா என்பது கைகளைத் தட்டி ஒரு வட்டமாக சுற்றி வந்து ஆடும் நடனம்(கிட்டத்தட்ட நம்மூர் கும்மி மாதிரி தான்). ஆண்கள் பெண்கள் இருவரும் இந்நடனங்களில் பங்கு பெறுவார்கள். இந்நடனங்களுக்கான போட்டிகளும் அங்கு நடைபெற்றது. டாண்டியா கர்பா இரண்டுமே குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த நடனங்கள் என்பதால் இதற்கான பாடல்களும் குஜராத்தி மொழியில் அமைந்திருந்தன. ஆனால் தற்போது இந்தி திரைப்பட பாடல்களும் அதே பாரம்பரிய மெட்டில் அமைத்து ரீமிக்ஸ் நவராத்திரி பாடல்களையும் புகுத்திவிட்டார்களாம்.
கீழே காண்பது ஆண்கள் பங்கு பெற்ற டாண்டியா நடனம்.
பள்ளிக் குழந்தைகள் பங்கு பெற்ற கர்பா நடனம்.
இந்நடனங்கள் முடிவடைந்ததும் ஒவ்வொரு நாளும் இரவு கீழே உள்ள துர்கா தேவிக்குப் பூஜை நடைபெறும். இப்பூஜையை 'ஆரத்தி' என்றழைக்கிறார்கள். இந்த அம்மனையும் ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு பெயரில் அழைக்கிறார்கள். 'அம்பே தேவி, 'ஷேரோ வாலி' என பல பெயர்கள். ஜம்மு மாநிலத்தில் உள்ள "வைஷ்ணோதேவி" ஆலயம் மிகவும் பிரசித்தி பெற்றது. அங்கும் வைஷ்ணோ தேவி சிம்மவாஹினியாகக் காட்சி தருகிறாள். நமக்கு திருப்பதி போல அங்கு வடக்கில் 'வைஷ்ணோ தேவி'. பிராப்தம் இருந்தால் தான் அங்கு செல்ல முடியும் என்ற நம்பிக்கையும் உள்ளது.
அஷ்டமி, நவமி என்று நவராத்திரா நடைபெற்ற ஒவ்வொரு நாளுக்கும் ஒவ்வொரு சிறப்பு இருப்பதாகச் சொல்கிறார்கள். கிட்டத் தட்ட ஒவ்வொரு ஊரிலும் ஒன்பது நாள் நவராத்திரா முடிவடைந்து பத்தாவது நாளான தசரா அல்லது விஜயதசமிக்கு முன்னர் ஒரு திருவிழா நடத்துகின்றனர். இதை 'மேளா'(Mela) என்கிறார்கள். பல நகரங்களில் இது போன்ற மேளாக்களை நடத்துவதற்கென்றே 'தசரா மைதான்'களும் இருக்கின்றன. இங்கு பெருமளவில் மக்கள் குழுமுகிறார்கள். அக்டோபர் ஒன்றாம் தேதி அன்று தசராவிற்கு முதல் நாள் சித்தூர்கட் தசரா மேளாவிற்குச் சென்றோம். சென்னை சுற்றுலா பொருட்காட்சி போல(எனக்கு அது தான் நினைவுக்கு வந்தது) பல விதமான கடைகளும், சிற்றுண்டி சாலைகளும், வகை வகையான ராட்டினங்களும், குழந்தைகளை மகிழ்விக்கப் பொழுதுபோக்கு அம்சங்களும் நிறைந்திருந்தன. கீழே காணும் படம் 'மும்பை எக்ஸ்பிரஸ்' திரைப்படத்தில் வருவது போன்ற ஒரு 'மரணக் கிணறு' ஆகும். காரும், மோட்டார் சைக்கிளும் மரணக் கிணற்றுக்குள் ஓட்டுவதை பார்க்க மக்களை அவர்கள் அழைத்த விதம் வேடிக்கையாக இருந்தது.
தசரா அன்று நடக்கும் முக்கியமான ஒரு நிகழ்ச்சி 'ராவண் தஹண்' என்பது. அதாவது ராவணன் பொம்மையை எரித்தல். தீமையை நன்மை வெற்றி கொண்டதை குறிக்கும் வகையில் இந்த எரியூட்டு விழா நடக்கிறது. தில்லியில் நானிருந்த போதே இதை பலமுறை கண்டிருக்கிறேன்.
அக்டோபர் இரண்டாம் தேதி தசரா அன்று ராம லட்சுமணர், வானர வேடம் அணிந்த குழந்தைகள் ராவணன் எரியூட்டலுக்கு முன் ஊர்வலமாகச் சென்று கொண்டிருக்கும் போது எடுத்த படம். ஊர்வலமாக வந்தவர்கள் 'ஜெய் ஸ்ரீ ராம்' என்று கோஷமிட்டுக்கொண்டே வந்தனர்.
கீழே இருப்பது பள்ளி விளையாட்டு மைதானத்தில் எரிப்பதற்கு தயாராக ராவணன் பொம்மை. தில்லியில் தசரா நிகழ்ச்சிகளில் ராவணனுடன், கும்பகர்ணன், ராவணனின் புதல்வன் இந்திரஜித்(வடக்கில் மேக்நாத் என்றும் அழைக்கிறார்கள் - புலவர் குழந்தையின் இராவண காவியத்தில் வரும் சேயோன்) ஆகிய மூன்று பொம்மைகளையும் எரியூட்டக் கண்டிருக்கிறேன். ஆனால் இங்கு ஒரே ஒரு ராவணன் பொம்மை மட்டுமே இருந்தது. பெரிய நகரங்களில் இடம் நிறைய இருப்பதால் அவ்வாறு செய்கிறார்கள் என்றும் உண்மையில் சூரியன் மறையும் வேளையில் ராவணன் மட்டும் தான் ராமனின் அம்பால் கொல்லப்பட்டான் என்றும் கும்பகர்ணனும், சேயோனும் அதற்கு முன்னரே கொல்லப்பட்டு விட்டிருப்பார்கள் என்றும் இம்முறை தெரிந்து கொண்டேன்.
வேடம் அணிந்து வந்த குழந்தைகள் நடத்திக் காட்டிய 'இராவண வதம்'. இராமனின் அம்பினால் கொல்லப்பட்டு வீழ்ந்து கிடக்கும் இராவணன்.
இராவணன் பொம்மை எரிகிறது
ராவணனை எரியூட்டற சிச்சுவேஷனுக்குச் பொருந்துற பாட்டு ஒன்னு ஞாபகத்துக்கு வருதுங்க. 'ஹே ராம்' படத்துல ராஜா இசையில 'அஜய் சக்கரவர்த்தி'ங்கிற பாடகர் பாடுன பாட்டு. இந்துஸ்தானி இசை முறையில் அமைந்த மிக அருமையான பாடல். அஜய் சக்கரவர்த்தி இந்துஸ்தானி சங்கீத உலகில் மிகப் புகழ் பெற்றவர், பெங்காலி மொழியிலும் இவர் குரலில் பல ஆல்பங்கள் வெளி வந்துள்ளன.
இந்த சுட்டியைக் க்ளிக் செய்து "இசையில் தொடங்குதம்மா" பாடலைக் கேட்டு பாருங்கள்
பாட்டோட மூன்றரையாவது நிமிடத்துல "டும்டாக் டும்டாக் டும்டாக்"னு மேளச் சத்தம் போயிக்கிட்டு இருக்கும் போது திடீர்னு சாரங்கி இசை வந்து குழையும் பாருங்க...என்னன்னு சொல்றது...pure listening pleasure.
இராவணனை எரித்து விட்டு பள்ளி மைதானத்தில் இருந்து அனைவரும் ஊர்வலமாக 'ராம் தர்பார்' கோயிலுக்குச் சென்று வழிபட்டு விட்டு பிரசாதம் வாங்கி கொண்டு கிளம்பினோம். கோயிலைச் சுற்றி உள்ள இடத்தில் இராமபிரானின் வாழ்க்கையை விவரிக்கும் பல படங்களை வைத்திருந்தார்கள். கீழே காண்பது விஸ்வாமித்திர முனிவரிடம் இராம லட்சுமணர்கள் வில்வித்தை பயில்வது.
ராஜஸ்தான் மாநிலத்தில் நான் கொண்டாடிய முதல் நவராத்திரா(அல்லது நவராத்திரி) என்பதாலும், நவராத்திரியின் ஒவ்வொரு கட்டத்திலும் புகைப்படம் எடுத்ததாலும், அதை பற்றி என் வலைப்பூவில் விரிவாக எழுதி பதிவிட்டதாலும் 2006ஆம் ஆண்டின் இந்த தசரா பண்டிகை பல காலம் என் நினைவில் நிற்கும் என்பதில் ஐயம் இல்லை.
அருமையான பதிவு தலை.மைசூரிலும் பிரமாதமா ஊர்வலம் நடத்தி ஒன்பது நாளும் ராஜா சாம்ராஜ உடையார் அதை பார்வையிடுவார்ன்னு சொல்லுவாங்க.நம்மூரில் கொலு வைப்பதோடு சரி.ஊர்வலம் எல்லாம் கிடையாது.ஆனா நம்மூர் மாரியம்மன் திருவிழாவுக்கு போடுற ஆட்டம் இந்த விஷேஷத்தை எல்லாம் தூக்கி முழுங்கிடும்
ReplyDeleteகைப்புள்ளெ,
ReplyDeleteஅருமையான பதிவு. போட்டோக்கள்தான் கொஞ்சம் சொதப்பிருச்சு. இருட்டா இருந்திருக்கும்போல.
அது பரவாயில்லை. ராம்லீலா மைதானத்தில் ராவணனை எரிக்கிறதும் இப்படித்தான்.
இந்த வாரம் நம்ம தமிழ்ச்சங்கத்துலெ நவராத்திரி கொண்டாட்டம். இந்தியாவின் பலவேறு
இடங்களில் நவராத்திரியை எப்படிக் கொண்டாடறாங்கன்னு நான் பேசறதா இருக்கேன்.
அதுக்குத் தேவையான சில விஷயங்களை உங்க பதிவுலே இருந்து எடுத்துக்கறேன். சரியா?
வெறுப்பேத்தாதீங்க. என்னால நவராத்திரி (உங்க தசரா) கொலு கூட பாக்க முடியேல்ல. யாழ்ப்பாணத்தில கோயில்களில மட்டும்தான் கொண்டாடினதா கேள்வி. ஏன் தெரியுமோ 1 கிலோ அவல் 500.00 ரூபாய் ஒரு கிலோ கடலை 460 ருபாயாம். உங்கட பதிவை பார்த்தா நேர போன அனுபவம்.
ReplyDeleteநல்லாயிருக்குதுப்பா.. ஆமா ஆட்டத்தையெல்லாம் க்ளிக் பண்ணதோட சரியா..நீ எந்த ஆட்டமும் போடல்லியா?
ReplyDeleteமாமா
ReplyDeleteநீங்க dance ஆடலயா. நீங்க ரொம்ப நல்லா festivels enjoy பண்ணுங்க. Happy holidays. - Baby Pavan
தல! நல்ல விளக்கமாக பதிவு போட்டு இருக்கீங்க. நீங்க விரதம் மேட்டர்க்கு நம்ம கூட இருக்க பசங்க அடிச்ச கூத்த ஒரு பதிவா போடலாம் என்று இருக்கேன்.
ReplyDeleteஅந்த ஹேராம் பாடல் இந்த பதிவ படிக்க ஆரம்பித்ததும் ஞாபகம் வந்துச்சு. நீங்களும் அதை மறக்காம குறிப்பிட்டு வீட்டீர்கள் :)))
//அருமையான பதிவு தலை.மைசூரிலும் பிரமாதமா ஊர்வலம் நடத்தி ஒன்பது நாளும் ராஜா சாம்ராஜ உடையார் அதை பார்வையிடுவார்ன்னு சொல்லுவாங்க.நம்மூரில் கொலு வைப்பதோடு சரி.ஊர்வலம் எல்லாம் கிடையாது.ஆனா நம்மூர் மாரியம்மன் திருவிழாவுக்கு போடுற ஆட்டம் இந்த விஷேஷத்தை எல்லாம் தூக்கி முழுங்கிடும்//
ReplyDeleteவாங்க செல்வன்,
மைசூர்ல தசரா விழா வெகு சிறப்பாகக் கொண்டாடப் படும் என்று நானும் கேள்வி பட்டிருக்கிறேன். கண்டிப்பா மாரியம்மன் திருவிழாவுக்கு மைக்செட் கட்டி கூழைக் காய்ச்சி ஊத்திட்டா ஊரே திருவிழா கோலமா இருக்காது?
:)
//அருமையான பதிவு. போட்டோக்கள்தான் கொஞ்சம் சொதப்பிருச்சு. இருட்டா இருந்திருக்கும்போல.//
ReplyDeleteவாங்க துளசியக்கா,
ஆமாம். இன்னும் இருட்டுல தெளிவாப் படமெடுக்க சரியா கத்துக்கலை. உண்மையைச் சொல்லப் போனா இன்னும் டிஜிட்டல் கேமராவோட மேனுவலைச் சரியாப் படிக்கலை.
//அது பரவாயில்லை. ராம்லீலா மைதானத்தில் ராவணனை எரிக்கிறதும் இப்படித்தான்.
இந்த வாரம் நம்ம தமிழ்ச்சங்கத்துலெ நவராத்திரி கொண்டாட்டம். இந்தியாவின் பலவேறு
இடங்களில் நவராத்திரியை எப்படிக் கொண்டாடறாங்கன்னு நான் பேசறதா இருக்கேன்.
அதுக்குத் தேவையான சில விஷயங்களை உங்க பதிவுலே இருந்து எடுத்துக்கறேன். சரியா? //
இதெல்லாம் கேக்கணுமா என்ன? சொற்பொழிவு ஆற்றுறதுக்கு நம்ம பதிவு பயன்படும்னு கேக்கறதுக்கே ரொம்ப சந்தோஷமா இருக்கு.
//வெறுப்பேத்தாதீங்க. என்னால நவராத்திரி (உங்க தசரா) கொலு கூட பாக்க முடியேல்ல. யாழ்ப்பாணத்தில கோயில்களில மட்டும்தான் கொண்டாடினதா கேள்வி. ஏன் தெரியுமோ 1 கிலோ அவல் 500.00 ரூபாய் ஒரு கிலோ கடலை 460 ருபாயாம். உங்கட பதிவை பார்த்தா நேர போன அனுபவம். //
ReplyDeleteவாங்க பகீ,
தங்கள் முதல் வருகைக்கு மிக்க நன்றி. உண்மையிலேயே அவலும் கடலையும் யானை விலை குதிரை விலை விக்குது போல? என் பதிவு தங்களுக்குப் பிடித்திருந்ததை அறிந்து மிக்க மகிழ்ச்சி. அடிக்கடி வாங்க.
//நல்லாயிருக்குதுப்பா.. ஆமா ஆட்டத்தையெல்லாம் க்ளிக் பண்ணதோட சரியா..நீ எந்த ஆட்டமும் போடல்லியா? //
ReplyDeleteவாப்பா தேவு,
சொன்னா நம்பமாட்டே! உண்மையிலேயே ஒரு ஆட்டம் போடனும்னு ரொம்ப ஆசையாத் தான் இருந்துச்சு. குறிப்பா இந்த குச்சி வச்சி ரெண்டு தட்டுத் தட்டிப் பாக்கனும் போல இருந்துச்சு. ஆனா கூட ஆட கூட்டாளி யாரும் இல்லாததுனால நம்ம ஆசை நிறைவேறலை. இல்லன்னா அங்கேயே ஒரு குத்தாட்டம் போட்டு பட்டையைக் கெளப்பிருக்க மாட்டோம்?
:)
//மாமா
ReplyDeleteநீங்க dance ஆடலயா. நீங்க ரொம்ப நல்லா festivels enjoy பண்ணுங்க. Happy holidays. - Baby Pavan//
பவன்,
இல்லம்மா...மாமா டான்ஸ் ஆடலை. நீங்க வர்றீங்களா? நம்ம ரெண்டு பேரும் ஆடுவோம். உங்க வாழ்த்துகளுக்கு ரொம்ப தேங்ஸ் செல்லம்.
:)
//தல! நல்ல விளக்கமாக பதிவு போட்டு இருக்கீங்க. நீங்க விரதம் மேட்டர்க்கு நம்ம கூட இருக்க பசங்க அடிச்ச கூத்த ஒரு பதிவா போடலாம் என்று இருக்கேன்.//
ReplyDeleteவாங்க சிவா,
ரொம்ப நாள் கழிச்சு இந்த பக்கம் வர்றீங்க. தங்கள் வாழ்த்துக்கு நன்றி. சீக்கிரம் கூத்து பதிவைப் போட்டு தமிழ்மணத்தைக் கலகலப்பாக்குங்க.
:)
//அந்த ஹேராம் பாடல் இந்த பதிவ படிக்க ஆரம்பித்ததும் ஞாபகம் வந்துச்சு. நீங்களும் அதை மறக்காம குறிப்பிட்டு வீட்டீர்கள் :))) //
அந்த ஹேராம் பாடலைப் பற்றி யாராவது பின்னூட்டத்தில் சொல்றாங்களா என்று எதிர்பார்த்து கொண்டிருந்தேன். நீங்கள் சொல்லி விட்டீர்கள். மிக்க நன்றி.
கலக்கீட்ட தல...தசராவ பத்தி படத்த போட்டு அருமையா விளக்கி இருக்க...நம்ம தேவு கேக்கரததான் நானும் கேக்கறேன்...ஆட்டம் எல்லாம் போடலயா :-)
ReplyDeleteஹேராம் சிடியைப் பொழுதன்னைக்கும் போட்டுக் கேட்டுருக்கோம்.
ReplyDeleteஇந்த சாரங்கி பிட் கவனிக்கலை. உங்க பதிவு பார்த்துட்டு அப்புறம்
இன்னொருக்காப் போட்டுக்கேட்டோம்.
எனக்கு சாரங்கின்னதும்,'தில் ச்சீஸ் க்யாஹை ஆப் மேரி' ஞாபகம் வந்துரும்.
ஒரேதா இழைச்சு இழைச்சு........... ஆஹா..........
//கலக்கீட்ட தல...தசராவ பத்தி படத்த போட்டு அருமையா விளக்கி இருக்க...நம்ம தேவு கேக்கரததான் நானும் கேக்கறேன்...ஆட்டம் எல்லாம் போடலயா :-)//
ReplyDeleteநன்றி ஸ்யாம். வைஷ்ணோதேவி கோயிலுக்குப் போற மாதிரி பப்ளிக்ல டான்ஸ் போடவும் ஒரு பிராப்தம் வேணும். வயசாயிடுச்சோல்லியோ...அதான் இப்பல்லாம் கம்பெனி(பசங்க போதும்பா) இருந்தா மட்டும் தான் ஆடறது...
:)
//ஹேராம் சிடியைப் பொழுதன்னைக்கும் போட்டுக் கேட்டுருக்கோம்.
ReplyDeleteஇந்த சாரங்கி பிட் கவனிக்கலை. உங்க பதிவு பார்த்துட்டு அப்புறம்
இன்னொருக்காப் போட்டுக்கேட்டோம்.
எனக்கு சாரங்கின்னதும்,'தில் ச்சீஸ் க்யாஹை ஆப் மேரி' ஞாபகம் வந்துரும்.
ஒரேதா இழைச்சு இழைச்சு........... ஆஹா.......... //
ஆமாமா...எனக்கும் உம்ராவ் ஜான்ல வர்ற இந்தப் பாட்டு ரொம்ப புடிக்கும்...particularly for the lyrics. அதோட அநேக ரேகா ரசிகர்களுக்கு ரொம்ப பிடிச்சப் பாட்டுகள்ல ஒன்னு.
:)
///ஒரு சோதனையாக அந்த மாதிரி நேரங்களில் 'சாமி பாட்டு' எதுவும் நினைவுக்கு வராது 'நிலா அது வானத்து மேலே' தான் நினைவுக்கு வரும் :)///
ReplyDeleteentha pattu kuda sami pattu thanga!!!
nalla vela nethu rathiri amma pattu ellam gyabakuthuku varala
analum ungalukku over kusumbu!!!
கைப்பு.. முதல் முறையா உங்க பதிவுக்கு வர்றேன்னு நினைக்குறேன்... இந்த முதல் முறையில் படிப்பதே ஒரு பயணக்கட்டுரை சாயல் இருப்பது சந்தோஷமா இருக்கு :-)
ReplyDeleteஇருந்தாலும் கடைசியில முடிச்ச விதம் ... ஆஹா அவ்வளவு வயசாயிடுச்சா உங்களுக்கு ;-)
இங்கயும் கார்பா நடனம் இங்கிருந்த குஜராத்திகள் ஆடுனாங்க.. என்னையும் கூப்பிட்டு ஆட வைக்க, அந்த மெதுவான இசையில ஆடவே தோணலை, ஒரு குத்து குத்தீட்டு தான் வந்தேன் ;-)
அடடடா.. கொலுவுல பாடச் சொன்னா "நிலா அது வானத்து மேலே" பாடத் தோணுமா.. :) இசையில் தொடங்குதம்மா என்னோட நேயர் விருப்பமும் கூட :D
ReplyDelete//entha pattu kuda sami pattu thanga!!!
ReplyDeletenalla vela nethu rathiri amma pattu ellam gyabakuthuku varala
analum ungalukku over kusumbu!!!//
வாங்க ஜீனோ!
என்னத்த சொல்ல...ஹி...ஹி...
:)
//கைப்பு.. முதல் முறையா உங்க பதிவுக்கு வர்றேன்னு நினைக்குறேன்... இந்த முதல் முறையில் படிப்பதே ஒரு பயணக்கட்டுரை சாயல் இருப்பது சந்தோஷமா இருக்கு :-)//
ReplyDeleteவாங்க யாத்திரீகன்,
நானும் உங்களை மாதிரி வீட்டை விட்டு(தமிழ்நாட்டுக்கு வெளியே) தான் இருக்கேன். இன்னும் கொஞ்ச நாளைக்கு அப்படி தான். அதுனால அப்பப்போ பயணக்கட்டுரை மாதிரி எதையாச்சும் நீங்க எதிர்பார்க்கலாம்.
//இருந்தாலும் கடைசியில முடிச்ச விதம் ... ஆஹா அவ்வளவு வயசாயிடுச்சா உங்களுக்கு ;-)//
எல்லாம் ஒரு nostalgic effectக்குத் தாங்கோ...நான் இன்னும் சின்னப் பையன் தான் :)
//இங்கயும் கார்பா நடனம் இங்கிருந்த குஜராத்திகள் ஆடுனாங்க.. என்னையும் கூப்பிட்டு ஆட வைக்க, அந்த மெதுவான இசையில ஆடவே தோணலை, ஒரு குத்து குத்தீட்டு தான் வந்தேன் ;-) //
எங்களை யாருமே கூப்பிடலை. அதோட ஆடனும்னா முன்னாடியே பதிவு பண்ணனும்னு கண்டிஷன் வேற. அதனால நாங்க குத்தலை
:(
//அடடடா.. கொலுவுல பாடச் சொன்னா "நிலா அது வானத்து மேலே" பாடத் தோணுமா.. :) இசையில் தொடங்குதம்மா என்னோட நேயர் விருப்பமும் கூட :D //
ReplyDeleteவாங்க பொற்கொடி,
அட அந்த பாட்டு தோனுனது இப்பல்லம்மா...சின்னப்புள்ளயா இருக்கும் போது. அப்பல்லாம் நமக்கு அவ்வளவு வெவரம் பத்தாதே. இப்பல்லாம் நம்மளை யாரு பாடச் சொல்லறாங்க...மொதல்ல யாரு கொலுவுக்குக் கூப்புடறாங்க?
பாத்தீங்களா...நீங்க கேக்காமலயே உங்க நேயர் விருப்பம் பாட்டை போட்டுட்டேன்(காலரைத் தூக்கி விட்டுக்கிட்டேன்)
:)