Thursday, September 28, 2006

இது ஒரு "அசைவ" பதிவு

எச்சரிக்கை : ரொம்ப நாளா யோசிச்சி யோசிச்சி யெஸ்-நோ, யெஸ்-நோனு புத்தி குழம்பி, கடைசியா 'ஒன் ஃபைன் டே' என்னோட மிருக இச்சைகள் மேலோங்குனதால இந்தப் பதிவு. நானும் சாதாரண ஒரு மனுஷன் தானே! அதுனால தான். இப்படி பட்ட மேட்டர்ஸ் ஆஃப் இந்தியா பதிவை கஷ்டப் பட்டு எழுதிட்டு "Readers' discretion is advised"னு ஒரு வார்னிங் குடுக்கலைன்னா ஊருக்குள்ள பெரிய மனுசனா மதிக்க மாட்டாங்க. அதுனால "This presentation does not contain graphic images, it may be suitable for all readers, but still readers' discretion is advisedங்கோ சாமியோவ்"

தமிழ்நாட்டை விட்டு வெளியூருக்குப் போய் பொழப்பைத் தேடுற என்னை மாதிரி பேச்சிலர் பசங்களோட மாஸ்லோ முக்கோணத்துல(Maslow's triangle)என்னென்ன அடிப்படை தேவைகள் இருக்கும்னு நெனக்கிறீங்க? கஷ்டப்பட்டு(அட நம்புங்கப்பா!) வேலை செஞ்சிட்டோ படிச்சிப்பிட்டோ வந்தாக்கா ராத்திரி ஒண்டறதுக்கு ஒரு எடம், எட்டு மணி நேரமோ பத்து மணி நேரமோ ஆபீசுல நேரத்தைப் போக்க நாலு சேத்தாளிவ, வவுத்துக்கு ரெண்டு வேளை சோறு(மூணாவது வேளை தான் ஆபிசுலேயே போட்டுடறாங்களே)...இது தானே? இதுக்கு மேல வர்ற எந்த தேவையையும் இதெல்லாம் முக்கோணத்துல அடுத்தக் கட்ட ஒஸ்தி ரக தேவைன்னு தூர தள்ளிடலாம். ஆனாலும் இந்த மூனு அடிப்படை தேவைகள்லயும், இந்த மூனாவதாச் சொன்ன விஷயம் சில சமயத்துல ரொம்ப கஷ்டம் குடுக்கும். தமிழ் நாட்டுக்குள்ளேயே வேற ஒரு ஊர்ல வேலை பாத்தீங்கன்னா இந்த பிரச்சனை அவ்வளவு பெருசாத் தெரியாது. ஆனா என்னைய மாதிரி வடநாட்டுல போயி குப்பையைக் கொட்டுற பயலுங்களைக் கேட்டுப் பாருங்க...கதை கதையாச் சொல்லுவாங்க. குறிப்பா நீங்க அசைவம் சாப்புடறவரா இருந்து அமாவாசைக்கும் பௌர்ணமிக்கும் "நோ நான் வெஜ் டுடே"னு நான்-வெஜ் ஓட்டல்காரர்களே சொல்லக் கூடிய ராஜஸ்தான், குஜராத் போன்ற மாநிலங்கள்ல இருந்தீங்கன்னா...அய்யோ பாவம்.

ஒரு பொருளோட அருமை எப்பங்க ஒருத்தனுக்குத் தெரியும்? அது தூரத்துல இருக்கும் போதோ இல்ல அது நமக்கு கெடக்காமப் போனாலோ தானே? நம்ம கதையும் அப்படித் தாங்க. வீட்டுல சிக்கனும், மீனும் செஞ்சி வச்சி சாப்புடு சாப்புடுன்னு வலிய வலிய விருந்து வச்சாலும் இன்னிக்கு சாம்பார் ஏன் வக்கலைன்னு கேட்கற அரக்க குணம் படைத்தவன் தான் அடியேன். வீட்டுல இருந்த போதும் அசைவ சமாச்சாரங்கள் எதையும் "ராஜ்கிரண்" மாதிரியெல்லாம் வச்சி வெளாசனதும் கெடயாது. எல்லாம் ரெண்டு துண்டு மூனு துண்டு தான். ஆனா அது கூட கெடக்காம போகும் போது வர்ற 'craving' இருக்கே...ரொம்ப கொடுமையா இருக்கும். வீட்டுல நாளு கெழமையெல்லாம் பாத்து சாப்புட்டாலும், வீட்டை விட்டு வெளியே போயிட்டா வெள்ளி சனின்னு பாக்காம, அசைவம் எப்ப கெடச்சாலும் தின்ன சொல்லும். அசைவம் சாப்புடறவங்க யாராயிருந்தாலும் நாம தமிழ்நாட்டுல, வீட்டுலியோ இல்ல ஓட்டலிலேயோ சாப்பிடற அசைவ உணவுக்கு வெளி மாநில அசைவ உணவுகள் ஈடாவாதுங்கறதை ஒத்துப்பாங்க.

என்ன தான் நீங்க பஞ்சாபி, மொகலாய் மெக்சிகன், இட்டாலியன், தாய், சைனீஸ்னு அசைவம் சாப்பிட்டாலும் தமிழ்நாட்டுல தமிழ்நாட்டு ஸ்டைல்ல சாப்புடற மாதிரி வருமா? உதாரணத்துக்கு இந்த மீன் குழம்பையே எடுத்துக்குவோமே? வெறும் வெங்காயம், தக்காளி, மொளகா தூள், கொஞ்சம் வடகம் போட்டு வேற எங்கேயாச்சும் மீன் குழம்பு கெடக்குமா? வட இந்தியாவுக்கெல்லாம் போனீங்கன்னா இஞ்சி பூண்டு மசாலாவுல மீனைப் போட்டு சிக்கன், மட்டன் குருமா மாதிரி வச்சிடுவாங்க. அந்த மாதிரி இஞ்சி பூண்டு மசாலாவுல மீன் குழம்பு வச்சா ஏனோ நமக்கு புடிக்கிறதே இல்ல. இந்த மீன் குழம்பு விஷயத்துல கிட்டத்தட்ட நம்ம டேஸ்டுக்கு ஒத்து வர்றது "மேங்களூரியன்" உணவகங்கள்ல கெடைக்கிற "மீன் கஸ்ஸி" தாங்க(கொஞ்சம் தேங்கா தூக்கலாவும் புளி கம்மியாவும் இருக்கும்). அதே போல பட்டர் சிக்கனோ, கடாய் சிக்கனோ இல்ல கீரை போட்டு வைக்கிற 'சாக்வாலா முர்க்' இதெல்லாம்(அப்புறம் சிக்கனுக்கு மட்டுமே வாயில நுழையாத பல பேர்கள்) எனமோ அந்த நேரத்துக்குச் சப்பாத்தியோட சாப்பிட நல்லாருந்தாலும், மிளகு போட்டு ஒரு சிக்கன் குழம்பை வச்சு அதை நெல்லு சோத்துல பெசஞ்சு கூட ஒரு வஞ்சிர மீன் வறுவலோடவோ இல்ல ஒரு எறா வறுவலோடவோ நல்லா சாப்புட்டுட்டு ஞாயித்துக் கெழமை மதியானம் கும்முன்னு ஒரு தூக்கம் போட்டு எந்திரிச்சா...ஆஹா அதுவல்லவோ சொர்க்கம்? இல்லன்னா என்னிக்காச்சும் குடும்பத்தோட பொன்னுசாமில போய் ஒரு சிக்கன் பிரியாணி, ஒரு காடை ஃபிரை(குடும்பத்தோட போனா அம்மா அப்பா வாங்குற ஐட்டத்துலயும் சில துண்டு நமக்கு வந்து விழுந்துடும்...அப்ப செம வெரைட்டியோ வெரைட்டி தான்) இதெல்லாம் ஒரு வெட்டி வெட்டிப்பிட்டு ஒரு ஸ்வீட் பீடாவை மெல்லும் போது கிடைக்கும் அந்த திருப்திக்குப் பேரு என்னங்கோ?

ஹ்ம்ம்ம்ம்...ஆனா படிக்கிறதுக்கு புது தில்லி போன நேரத்துலேருந்தே, இந்த மாதிரி ரசிச்சி சுவைச்சி அசைவம் சாப்புடறது எல்லாம் மறந்து போச்சுங்கோ. ஹாஸ்டல்ல இருக்கும் போது வாரத்துல என்னிக்காச்சும் ஒரு நாள் ஒரு பீஸ் சிக்கன் உள்ள "சிக்கன் கறி" கெடக்கும். என்னோட ஃபிரெண்டு ஒருத்தன் இந்த விசயத்துல ரொம்ப லக்கி. அவனோட டிப்பார்ட்மெண்ட்ல வேலை செய்யற தமிழ்காரரு ஒருத்தரு ஞாயித்துக் கெழமை ஆனா அவனை அவங்க வீட்டுக்குக் கூப்பிட்டுருவாரு. மதியானம் சிக்கன், மட்டன், மீன், முட்டைன்னு மூக்குப் பிடிக்கத் தின்னுட்டு அந்த பய சாயந்திரம் ஹாஸ்டல்ல வந்து அவங்க வீட்டுல என்ன விருந்துன்னு மெனு சொல்லுவான் பாருங்க...அப்படியே ஆத்திரம் ஆத்திரமா வரும்(படையப்பா மாதிரி படம் புடிக்கிறேன்னு போட்டோ படம் எடுத்தே ஆப்பு வச்சானே அதே பய தான்). அதுக்கப்புறம் வேலை செய்ய ஆரம்பிச்சு கொஞ்சம் கையில துட்டு பாக்க ஆரம்பிச்சதும் "நன்றி கடவுளே இன்னிக்கு வெள்ளிக்கிழமை", "மரகத செவ்வாய்கிழமை"(நான் போன அன்னிக்கு எதோ ஹேலோவீன் பார்ட்டியாம்...ஹேலோவீன்னா என்னன்னு அன்னிக்குத் தான் தெரிஞ்சிக்கிட்டேன்), "கபாப் பேக்டரி", "ராஜிந்தர் தா டாபா", "பார்க் பலூச்சி" அப்படின்னு பல இடங்கள்ல போய் தின்னுருந்தாலும், இங்கே எங்கேயும் நம்ம மண்ணின் மகிமை நமக்கு தெரியாதுங்க. டெல்லி சாகர் ரத்னா க்ரூப்போட(நம்ம சரவண பவன் மாதிரி) "ஸ்வாகத்"னு ஒரு அசைவ உணவகத்தை தெறந்துருக்காங்க(இங்கே செட்டிநாடு, மங்களூரியன், கேரள ஸ்டைல்ல அசைவம் கெடக்கும்), ஆனா நம்ம நேரம்... அது ஆரம்பிச்ச கொஞ்ச நாள்லேயே நான் டெல்லியிலிருந்து இந்தூருக்கு வந்துட்டேன்.

நமக்கும் இந்த மாதிரி சவுத் இண்டியன் ஸ்டைல் அசைவம் சாப்பிட்டுட்டு யாரு கிட்டவாச்சும் மெனு சொல்லி வெறுப்பேத்தனும்னு ரொம்ப நாளா ஆசைங்கோ. எப்பவாச்சும் அந்த மாதிரி சாப்பிட சான்ஸ் கெடச்சுதுன்னா வெறுப்பேத்த எவனும் ஆள் கெடைக்க மாட்டான். கல்லைக் கண்டா நாயைக் காணோம் நாயைக் கண்டா கல்லைக் காணோம் கதை தான். ஆனா நாம நாயா இருக்கும் போது, கல்லு எப்பவும் சுலபமாக் கெடச்சிடும் போல. நாம வாங்கி வந்த வரம் அப்படி போலிருக்கு? இப்படித் தான் பாருங்க...போன மாசம் மும்பைல க்ளையண்ட் ஆபிஸ்ல இருந்தேன். அங்கே என் பின்னாடி சீட்டுல ஒக்காந்துருக்கற ஒரு ஆண்ட்டி எப்பவும் யாரோடவாச்சும் எதனா போன்ல பேசிட்டே இருப்பாங்க...அப்படி என்ன தான் மணிக் கணக்காப் பேசுவாங்களோ தெரியாது. நாம தான் கடுமையான உழைப்பாளியாச்சே. அதோட நான் உண்டு என் ப்ளாக் உண்டுன்னு இருக்கறவனாச்சே நானு? இதுல அவங்க என்ன பேசறாங்கன்னு "e(a)vesdrop" பண்ண நமக்கு ஏது நேரம்? ஆனா ஒரு நாளு சாயந்திரம் பாருங்க...ஆபிஸ் விடற நேரம் என் பின்னாடி சீட்டு ஆண்ட்டி அவுங்க வீட்டுக்குப் போன் பண்ணிப் பேசுனது என் காதுல விழுந்தது. ஒடனே நான் ஒட்டுக்கேட்டேன்னு நெனக்காதீங்கப்பா...ஒரு வழிப்போக்கனா நான் பாட்டுக்கு என் போக்குல ஒக்காந்துருக்கும் போது தற்செயலா, மிகத் தற்செயலா என் காதுல தெளிவா விழுந்தது.

"ஹோம்வர்க் எல்லாம் பண்ணிட்டியா?"
".............." (அடங்க! அந்தப் பக்கம் பேசறது எனக்கு எப்படிங்க கேக்கும்? இதெல்லாம் கொஞ்சம் ஓவரு! அத சிம்பாலிக்காச் சொல்றதுக்காவத் தானே அடைப்புக்குறிக்குள்ள நெறைய புள்ளிஸ்டாப்பு எல்லாம் வச்சிருக்கோம்?)

"எல்லாத்தயும் பண்ணி முடிச்சிட்டா என்ன...அந்த ஹிஸ்டரி போர்ஷனை எடுத்து வச்சு ரிவைஸ் பண்ணு. இன்னும் கொஞ்ச நேரத்துல வந்துடுறேன்"
".............."
"ஹ்ம்ம்ம்...சரி சரி...க்ராண்ட்மா கிட்ட குடு"
".............."
"மம்மி! நான் வரும் போது நைட்டு டின்னருக்கு எறா வாங்கிட்டு வந்துடறேன். நீங்க படாட்டாவை வேக வச்சி வையுங்க. தக்காளியையும் வெங்காயத்தையும் பொடியா அரிஞ்சு வச்சிடுங்க"
"............."
படாட்டான்னா மராட்டியில உருளைக்கிழங்குன்னு இந்தூர்ல இருக்கும் போது தெரிஞ்சிக்கிட்டேன். அவங்க வீட்டுல நைட்டு எறா கொழம்புன்னு தெரிஞ்சதும் ஜனகராஜ் மாதிரி "யம்மாடி! எனக்குக் கூட இந்த எறான்னா ரொம்ப புடிக்கும். ஆனா படாட்டாவையும் எறாவையும் போட்டுகொழம்பு வச்சா நல்லாவா இருக்கும்? அந்த காம்பினேஷன் வர்க் அவுட் ஆவாது. பேசாம உருளைக்கெழங்கை எடுத்து ஃபிரிஜ்ல வச்சிட்டு, எறாவையும் முருங்கைக்காயையும் மல்லித்தூளைப் போட்டு வெங்காயம் கொஞ்சம் தக்காளியோட எண்ணையில தாளிச்சி, உப்பு மஞ்ச மொளகாத்தூள் போட்டு சட்டுன்னு ஒரு கொழம்பு வச்சிப் பாரு...சூப்பரா இருக்கும்"னு சொல்லறதுக்கு இந்த நாக்கு இருக்கில்ல நாக்கு... அது டிப் வரைக்கும் வந்துடுச்சு. அப்புறம் எதுக்கு நம்ம தொழில் ரகசியத்தை எல்லாம் மராட்டிய தேசத்துக்குப் பரப்பனும்னு அப்படியே கையதைக் கொண்டு மவுத் அதைப் பொத்திக்கிட்டு கப்சிப்னு அடங்கிட்டேன். ஆனா ஒன்னு மட்டும் எனக்கு இன்னமும் புரியலைங்க...பகலெல்லாம் மராட்டியில போன் பேசற அந்த ஆண்ட்டி எதுக்கு அன்னிக்கு அவங்க வீட்டுல இந்தியில பேசுனாங்கன்னு தான். எது எப்படியோ...வழக்கம் போல நமக்கு மெனுவைக் கேட்டு சந்தோஷப் பட்டுக்கற பொழப்புத் தான், இதுல மராட்டி எறாவா இருந்தா என்ன இந்தி எறாவா இருந்தா நமக்கென்ன?

அப்படியே கட் பண்ணாக்கா ஒரு ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி நான் டெல்லியில இருக்கும் போது நடந்தது நெனப்பு வந்துச்சுங்க. இதே எறா முருங்கைக்காய் கொழம்புக்கு ஒருநாள் ரொம்பவே ஆஸ்பட்டு "அல்கபீர்ஸ்"(Al-Kabeers') குளிர்பதனம் செய்யப்பட்ட "ஃப்ரோசன் எறா" வாங்கி வச்சிட்டேன். ஆனா நான் இருந்த ஏரியாவுல முருங்கைக்காய் எல்லாம் கெடக்காதுன்னு வண்டியை எடுத்துக்கிட்டு முனிர்கா ராமா ஸ்டோர்ஸுக்குப் போனேன். முனிர்காவுக்குப் போனா டெல்லியில இருக்குற நெனப்பே வராது...எதோ தமிழ்நாட்டுலேயே இருக்குற ஒரு ஃபீலிங் வரும். அந்தக் கடை வாசல்ல எப்பவும் நம்ம காய்கறி ஐட்டங்களான முருங்கைக்காய், கறிவேப்பிலை, கீரை இதெல்லாம் கெடக்கும். அங்கே முருங்கைக்காயைக் கூறு கட்டி வச்சி வித்துட்டு இருந்தாரு ஒரு ஆளு. முறுக்கி பாக்கத் தேவையில்லாத படிக்கு நல்லா பிஞ்சு முருங்கைக்காயாத் தான் இருந்துச்சு....ஆனா பத்து முருங்கைக்காய் உள்ள ஒரு கூறு அஞ்சு ரூவான்னு இல்ல சொல்லறாரு? நானு, என் கூட இருந்த இன்னொரு பையன் ரெண்டு பேரும் சாப்புடறதுக்கு ஒரு பாக்கெட் ஃப்ரோசன் எறாவைப் (என்னா ஒரு கால் கிலோ இருக்கும்) போட்டு கொழம்பு வைக்க பத்து முருங்கைக்காயா? இத்தினி முருங்கைக்காய்ல முருங்கைக்காய் எறா போட்டு கொழம்பு வச்சிட்டு, முருங்கைக்கா ரசம், முருங்கைக்கா பொரியல், முருங்கைக்கா தயிரு எல்லாம் பண்னலாமே? இம்புட்டை வாங்கிட்டு நாம என்ன பண்ணறது அப்படின்னு நெனச்சி வாங்கலாமா வேணாமான்னு தயங்கி மயங்கி நின்னுட்டு இருந்தேன்.

இந்த நேரம்னு பாத்து, பாவம் ஒரு பய கொழம்பி போய் கெடக்கானேன்னு நெனச்சி என் பின்னாடி நின்னுட்டு இருந்த நடுத்தர வயசுள்ள ஒரு அம்மா "நல்ல பிஞ்சு முருங்கைக்காங்க! மாசமா இருக்கறவங்களுக்கு பொரியல் செஞ்சு குடுத்தா ஒடம்புக்கு ரொம்ப நல்லது'ன்னு ஒரு ரெகமெண்டேஷனும், இலவசமா ஒரு பேறுகால சமையல் குறிப்பும் குடுத்தாங்க. "ஆஹா கெளம்பிட்டாங்கைய்யா கெளம்பிட்டாங்கய்யா! இப்ப மாசமா இருக்குறவங்களுக்கு நான் எங்கே போறது... முருங்கைக்கா பொரியல் வச்சிக் குடுக்க. இருந்தாலும் பரவால்லை பிற்காலத்துல என்னிக்காச்சும் யூஸ் ஆகும்"ன்னு மனசுக்குள்ள நெனச்சிக்கிட்டேன். அதோட எனக்கு வந்த பயங்கரமான சிரிப்பைக் கஷ்டப் பட்டு அடக்கிக்கிட்டு "இல்லீங்க முருங்கைக்கா எறா போட்டு கொழம்பு வக்கலாம்னு ..."உண்மையையே அப்படியே இழுத்து சொன்னேன். "ஓ அப்படியா?...அதுக்கு கூட இந்த காய் நல்லாத் தான் இருக்கும்"அப்படின்னாங்க. முந்தானை முடிச்சு பாக்கியராஜுக்கு அப்புறம் முருங்கைக்காயோட பயன்களை எடுத்து சொல்லி என் ஞானக்கண்ணைத் திறந்த அந்த அம்மா சொன்னா சரியாத் தான் இருக்கும்னு நம்பி முருங்கைக்காய் ஒரு கூறு வாங்கிக்கிட்டேன். அவங்க சொன்ன மாதிரியே கொழம்பு நல்லாத் தான் இருந்துச்சு...என்னா ஒன்னு? ரெண்டு பேரு சாப்புட கால் கிலோ எறாவுக்கு அஞ்சு முருங்கைக்கா போட்டு கொழம்பு வச்சதுல எறாவே கண்ணுக்குத் தெரியல..."எங்கெங்கும் முருங்கை மய(ர)ம் தான்!"

49 comments:

  1. Kaippule neenga oruaalaa
    ille pala per sernthu kalaikireengala ..
    Romba nanna irukku

    ReplyDelete
  2. திசைதிருப்பறா மாதிரி தலைப்பு வச்சு என்னைய மாதிரி யூத்த ஏமாத்தினதுக்கு என்ன செய்யலாம் சொல்லுங்க?

    //"நல்ல பிஞ்சு முருங்கைக்காங்க! மாசமா இருக்கறவங்களுக்கு பொரியல் செஞ்சு குடுத்தா ஒடம்புக்கு ரொம்ப நல்லது'ன்னு ஒரு ரெகமெண்டேஷனும், இலவசமா ஒரு பேறுகால சமையல் குறிப்பும் குடுத்தாங்க. //

    இது மட்டும் தான் பதிவு. மிச்சதெல்லாம் கொசுறு.


    //..."எங்கெங்கும் முருங்கை மய(ர)ம் தான்!"
    //

    மரம் மட்டுமே தெரியற அளவுக்கு ஆயிடுச்சா? பாத்துப்போவ்.. மரத்த யாராச்சும் வெட்டி சாய்ச்சுடப்போறாங்க.

    ReplyDelete
  3. அண்ணாச்சி.. இன்னும் கொஞ்சம் பெரிசா போடுறது பதிவ?

    ReplyDelete
  4. //ஆனா நாம நாயா இருக்கும் போது, கல்லு எப்பவும் சுலபமாக் கெடச்சிடும் போல.
    நாம வாங்கி வந்த வரம் அப்படி //

    ஹாஹாஹாஹா


    ஓஓஓஓஒ 'முனிர்க்கா'வுலெதான் 'முருங்கக்கா' கிடைக்குமா? பேஷ் பேஷ்

    கைப்புள்ளெ குலுங்ககுலுங்க சிரிக்க வச்சிட்டீர் போங்க. ரொம்ப தேங்க்ஸ்

    ஆமா......... பதிவை செவ்வாக்கிழமைக்குப் போட்டுருக்கலாமுல்லே?

    பண்டிகை சீஸன் நடக்குது தெரியாதாக்கும்........... உக்கும்.


    பின்ண்டி சீட் ஆண்ட்டி பகலெல்லாம் கஸ்டமர்ங்ககூட மராட்டி.
    சாயந்திரம் வூட்டு மனுஷாளுங்க கூட இந்தி. அவ்ளோதான்.
    இந்திக்கார ஆண்ட்டியா இருப்பாங்க போல.

    ReplyDelete
  5. மாப்பூ BAACK TO FORM...

    போட்டுத் தாக்கு

    ReplyDelete
  6. மோஹன், இப்பதானே ஊருக்கு வந்துட்டு போனீங்க.. அதுக்குள்ள திருப்பியும் சாப்பாடு பிரச்சனையா?.. ம்ம்.. பதிவு ரொம்ப பெரிசா இருக்கு.. நல்லா இருக்கு, சிரிக்க வைக்க உங்கள விட்டா தமிழ்மணத்துல வேற யாரு?!!

    ReplyDelete
  7. Super post kaipu. Ana nallathan sapdrukeenga entha oor meen kadaiyayum vidrathuilla pola iruku.

    ReplyDelete
  8. //Kaippule neenga oruaalaa
    ille pala per sernthu kalaikireengala ..
    Romba nanna irukku//

    வாங்க அனானிமஸ்,
    கைப்புள்ளங்கிற இந்த ப்ளாக் என் ஒருத்தனோடது தான். ஆனா இத விட கலர்ஃபுல்லா கலாய்க்கிற ஜித்தனுங்களைப் பாக்கனும்னா இங்கே போங்க.

    வருத்தப்படாத வாலிபர் சங்கம்

    தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    ReplyDelete
  9. //திசைதிருப்பறா மாதிரி தலைப்பு வச்சு என்னைய மாதிரி யூத்த ஏமாத்தினதுக்கு என்ன செய்யலாம் சொல்லுங்க?//
    வாங்க மருந்து! என்னங்க பண்ணறது? உங்களை மாதிரி பெரிய தலைங்களை உள்ள வர வைக்க எனக்கு வேற வழி தெரியலை.
    :)

    //இது மட்டும் தான் பதிவு. மிச்சதெல்லாம் கொசுறு//
    தலைவா...சின்னப்பையன் பொழப்புல இப்படி முருங்கைக்கா அள்ளி...சே மண்ணள்ளி போடறீங்களே? என்னைய பாத்தா பாவமாத் தெரியலியா ஒங்களுக்கு?

    //மரம் மட்டுமே தெரியற அளவுக்கு ஆயிடுச்சா? பாத்துப்போவ்.. மரத்த யாராச்சும் வெட்டி சாய்ச்சுடப்போறாங்க//
    வேணாம்...நான் அளுதுருவேன்
    :)

    ReplyDelete
  10. //அண்ணாச்சி.. இன்னும் கொஞ்சம் பெரிசா போடுறது பதிவ?//

    வாங்க மாவீரரே!
    இத மாதிரி கேப்பீங்கன்னு தெரிஞ்சு தான் எவ்வளவோ முயற்சி பண்ணேன்...ஆனா இதுக்கு மேல இழுக்க என்னாலயே முடியலீங்க.
    :)

    ReplyDelete
  11. //ஆனா நாம நாயா இருக்கும் போது, கல்லு எப்பவும் சுலபமாக் கெடச்சிடும் போல.
    நாம வாங்கி வந்த வரம் அப்படி //

    ஹாஹாஹாஹா


    ஓஓஓஓஒ 'முனிர்க்கா'வுலெதான் 'முருங்கக்கா' கிடைக்குமா? பேஷ் பேஷ்//

    வாங்க துளசியக்கா,
    தெற்கு தில்லியில முனிர்கா மாதிரி கிழக்கு தில்லி, வடக்கு எல்லா எடத்துலயும் சில சவுத் இண்டியன் வசிக்கும் பாக்கெட்கள் இருக்கு. அங்கெல்லாம் சகல சமாசாரங்களும் கெடக்கும்.

    //கைப்புள்ளெ குலுங்ககுலுங்க சிரிக்க வச்சிட்டீர் போங்க. ரொம்ப தேங்க்ஸ்

    ஆமா......... பதிவை செவ்வாக்கிழமைக்குப் போட்டுருக்கலாமுல்லே?

    பண்டிகை சீஸன் நடக்குது தெரியாதாக்கும்........... உக்கும்.
    //
    நான் கூட டேங்ஸ். ஆமா இல்ல...இங்க கூட நவராத்ரா நடக்குது(நம்ம நவராத்தீரினு சொல்றது இங்க நவராத்ரா), தெனமும் ராத்திரி டாண்டியா, கர்பா இதெல்லாம் கூட நடத்துறாங்க. செவ்வாக்கிழமை பஜ்ரங்பலிக்கு உகந்த தினமாச்சே...அதனால தான்.
    :)

    //பின்ண்டி சீட் ஆண்ட்டி பகலெல்லாம் கஸ்டமர்ங்ககூட மராட்டி.
    சாயந்திரம் வூட்டு மனுஷாளுங்க கூட இந்தி. அவ்ளோதான்.
    இந்திக்கார ஆண்ட்டியா இருப்பாங்க//

    ஹ்ம்ம்...அப்படியா தான் இருக்கும் போலிருக்கு. ஆனா என்னையும் ஒரு வா எறா கொழம்பு சாப்புட கூப்பிட்டிருந்தா என்னவாம்? கொறஞ்சா போயிருப்பாங்க?
    :)

    ReplyDelete
  12. //மாப்பூ BAACK TO FORM...

    போட்டுத் தாக்கு //

    வா மச்சி,
    ரொம்ப டேங்ஸ்பா.
    :)

    ReplyDelete
  13. //மோஹன், இப்பதானே ஊருக்கு வந்துட்டு போனீங்க.. அதுக்குள்ள திருப்பியும் சாப்பாடு பிரச்சனையா?.. ம்ம்.. பதிவு ரொம்ப பெரிசா இருக்கு.. நல்லா இருக்கு, சிரிக்க வைக்க உங்கள விட்டா தமிழ்மணத்துல வேற யாரு?!! //

    வாங்கம்மா,
    இந்த மாதிரி ஊருக்கு வந்துட்டுப் போன கொஞ்ச நாளைக்குத் தான் ஒரே ஃபீலிங்ஸா இருக்கும். அதுனால தான் இப்படி. பதிவு நீளத்தைக் கொஞ்சம் கொறச்சிருக்கலாம் போல...அடுத்த வாட்டி ஞாபகம் வச்சிக்கிறேன். நீங்க என் மேல வச்சிருக்குற மதிப்புக்கு ரொம்ப நன்றிங்க. அடியேன் தன்யனானேன்.
    :)

    ReplyDelete
  14. //Super post kaipu. Ana nallathan sapdrukeenga entha oor meen kadaiyayum vidrathuilla pola iruku//

    வாங்க அனுசுயா,
    என்னைய மாதிரியே நீங்களும் பஞ்சத்துல அடிபட்டுப் பாருங்க தெரியும். அப்புறம் இப்படியெல்லாம் பேச மாட்டீங்க.
    :)

    ReplyDelete
  15. "இது ஒரு "அசைவ" பதிவு"

    இன்னொரு மொற ஏமாற நாங்க என்ன கைப்புள்ளயா! தலைப்ப படிக்கும்போதே தெரிஞ்சி போச்சு இதில ஏதோ தில்லாலங்கடி இருக்கும்னு.

    கலக்கல் கைப்ஸ்

    ReplyDelete
  16. //இன்னொரு மொற ஏமாற நாங்க என்ன கைப்புள்ளயா! தலைப்ப படிக்கும்போதே தெரிஞ்சி போச்சு இதில ஏதோ தில்லாலங்கடி இருக்கும்னு. //

    வாங்க தம்பி,
    இத துபாய்ல வேற சொல்லிட்டாங்களா?

    //கலக்கல் கைப்ஸ்//
    வாழ்த்துகளுக்கு நன்றி தம்பி.
    :)

    ReplyDelete
  17. எறாவும் முருங்கைக்காயுமா! எங்க பக்கத்துல எறாவத் தனியா கொழம்பு வெப்பாங்க...அத விட புளியூத்தி ஊறுகா மாதிரி செஞ்சிருவாங்க. கெட்டியா பிரமாதமா இருக்கும். எறாவுல என்ன சிறப்புன்னா...கூட்டணி எதுகூடயும் வெக்கும். புளியூத்துறதோ, தக்காளி வெங்காயம் போடுறதோ, மிளகு போடுறதோ..இல்ல வெறும் மெளகாத்தூளப் போட்டு எண்ணெயில பெரட்டி வெக்கிறதோ....கமகமன்னு இருக்கும். ஆனா ஒன்னு...அதக் கழுவுறது ரொம்ப முக்கியம். நல்லாக் கழுவித்தான் செய்யனும். இந்த மாதிரி பாக்கெட்ல விக்குறத வாங்காம புதுசா வாங்குங்க. எறால் கிட்ட கொஞ்சம் எச்சரிக்கையா இருக்கனும்.

    நமக்கெல்லாம் கைப்பக்குந்தான். சைவம் அசைவம்...எல்லா ஊர் வகையும் ஒத்துக்கிரும். தமிழ் நாட்டுக் கொழம்புதான் பெருசுன்னு இல்லை....கீரை, கொத்துமல்லி, கருவேப்பிலை அரைச்சு விட்ட கோழியும் நல்லாயிருக்கும். பெங்காலி ஸ்டைலில் தொய்சிக்கன் (தயிர்க்கோழி) இருந்தாலும் சரி. இம்ரானா பஞ்சான்னு கபாபா இருந்தாலும் சரி. எல்லாம் ஓகேதான்.

    ஆனாலும் படாதபாடு பட்டிருக்கீங்க. மிச்ச முருங்கைக்காய அடுத்த நாளு புளிக்கொழம்பா வெச்சிருக்கலாமுல்ல.

    ReplyDelete
  18. Seekiram Kannalatha kattikonga Kaipuu. Appuram saapadu kavalaye illa, yen na athuuku time irukkathuu :)

    Ungalaukku kallum kraiyura vayasu ippo. So when you are outside TN, try enjoy all the local foods.

    ReplyDelete
  19. வயசு பையன். அவ்வளவு முருங்கைக்காய் சாப்பிட்டு உடம்புக்கு ஒண்ணும் ஆகலையே. அப்புறம் உங்க மாஸ்லோ தேவைகள் மா ஃபாஸ்ட் தேவைகளா மாறி எதனா வம்பு சொஞ்சு இருக்கப் போறீங்க! ;)

    ReplyDelete
  20. //மிச்ச முருங்கைக்காய அடுத்த நாளு புளிக்கொழம்பா வெச்சிருக்கலாமுல்ல.
    //
    இதே தான் என் பரிந்துரையும் ;)

    நல்லா போடறாங்கப்பா அசைவப் பதிவு! சற்றே பெரிய பதிவுன்னு இனிமே குறிச்சொல் கொடுக்கணும் ;)

    ReplyDelete
  21. கைப்ஸ் உண்மையை சொல்லுங்க...உங்களுக்கு சமைக்கத் தெரியுமா???


    //அண்ணாச்சி.. இன்னும் கொஞ்சம் பெரிசா போடுறது பதிவ? //

    இம்புட்டு பெரிய பதிவுக்கு எடுத்த நேரத்துல நாலு அன்லிமிட்டட் மீல்ஸ் சாப்பிட்டு இருக்கலாம் :))

    ReplyDelete
  22. //எறாவும் முருங்கைக்காயுமா! எங்க பக்கத்துல எறாவத் தனியா கொழம்பு வெப்பாங்க...அத விட புளியூத்தி ஊறுகா மாதிரி செஞ்சிருவாங்க. கெட்டியா பிரமாதமா இருக்கும். எறாவுல என்ன சிறப்புன்னா...கூட்டணி எதுகூடயும் வெக்கும். புளியூத்துறதோ, தக்காளி வெங்காயம் போடுறதோ, மிளகு போடுறதோ..இல்ல வெறும் மெளகாத்தூளப் போட்டு எண்ணெயில பெரட்டி வெக்கிறதோ....கமகமன்னு இருக்கும்.//
    எறாவுல இம்புட்டு இருக்கா? இதப் படிக்கும் போதே நாக்கெல்லாம் ஊறுதே?

    //ஆனா ஒன்னு...அதக் கழுவுறது ரொம்ப முக்கியம். நல்லாக் கழுவித்தான் செய்யனும். இந்த மாதிரி பாக்கெட்ல விக்குறத வாங்காம புதுசா வாங்குங்க. எறால் கிட்ட கொஞ்சம் எச்சரிக்கையா இருக்கனும்.//
    அது என்னமோ வாஸ்தவம் தான். ஐஸ்ல வச்ச எறா வாங்கி சாப்பிட்டேன்னு சொன்னதும் வீட்டுல ஏகப்பட்ட அட்வைஸ். நமக்கு இந்த சுத்தம் பண்ணி கவிச்சி இல்லாம குடுத்தாத் தான் சமைக்க வரும்...அதுக்கு முன்னாடி மார்கெட்டுக்குப் போயி ஆய்ஞ்சு சுத்தம் பண்ணி வாங்கிட்டு வர்றது எல்லாம் புடிக்காத சமாச்சாரம். அது என்னமோ அப்படியே பழகிடுச்சு.

    //நமக்கெல்லாம் கைப்பக்குந்தான். சைவம் அசைவம்...எல்லா ஊர் வகையும் ஒத்துக்கிரும். தமிழ் நாட்டுக் கொழம்புதான் பெருசுன்னு இல்லை....கீரை, கொத்துமல்லி, கருவேப்பிலை அரைச்சு விட்ட கோழியும் நல்லாயிருக்கும். பெங்காலி ஸ்டைலில் தொய்சிக்கன் (தயிர்க்கோழி) இருந்தாலும் சரி. இம்ரானா பஞ்சான்னு கபாபா இருந்தாலும் சரி. எல்லாம் ஓகேதான்.//

    நமக்கும் தான் ஒத்துக்கும். ஆனா இது ஒரு ஏக்கப் பதிவுங்க.
    :)

    ////ஆனாலும் படாதபாடு பட்டிருக்கீங்க. மிச்ச முருங்கைக்காய அடுத்த நாளு புளிக்கொழம்பா வெச்சிருக்கலாமுல்ல.//
    அதை ஏன் கேக்கறீங்க? மீதமிருந்த அஞ்சு முருங்கைக்காயையும் பிரிஜ்ல வச்சி அப்படியே மறந்து போய் அது காஞ்சு போய் கடைசியா மாட்டுக்குப் போட்டது வேற கதை.
    :)

    ReplyDelete
  23. //Seekiram Kannalatha kattikonga Kaipuu. Appuram saapadu kavalaye illa, yen na athuuku time irukkathuu :)//
    வாங்க அனானிமஸ்,
    எதுக்குங்க டைம் இருக்காது. புரியலீங்களே?
    :)

    //Ungalaukku kallum kraiyura vayasu ippo. So when you are outside TN, try enjoy all the local foods//
    இப்போ மட்டும் லோக்கல் சாப்பாடை என்ஸாய் மாடாமலயா இருக்குறோம்? நம்ம தமிழ்நாட்டு சாப்பாடு கெடக்கலையேன்னு ஒரு ஏக்கம் தாங்கோ.
    :)

    ReplyDelete
  24. //வயசு பையன். அவ்வளவு முருங்கைக்காய் சாப்பிட்டு உடம்புக்கு ஒண்ணும் ஆகலையே. அப்புறம் உங்க மாஸ்லோ தேவைகள் மா ஃபாஸ்ட் தேவைகளா மாறி எதனா வம்பு சொஞ்சு இருக்கப் போறீங்க! ;)//

    கொத்ஸ்,
    இந்தப் பதிவுல எம்புட்டு மேட்டர் இருக்கு...சிக்கன், மட்டன், டெல்லி, பாம்பேன்னு ...அதெல்லாம் உங்க கன்ணுக்குத் தெரியலை...முருங்கைக்கா மட்டும் தான் தெரியுதா ஓய்?
    :)

    ReplyDelete
  25. //இதே தான் என் பரிந்துரையும் ;)//
    வாங்க பொன்ஸ்,
    அப்ப பரிந்துரை பண்ண யாருமில்லாம போயிட்டாங்க. அதுனால மாடு சந்தோஷமா சாப்புட்டுட்டு போச்சு
    :)

    //நல்லா போடறாங்கப்பா அசைவப் பதிவு! சற்றே பெரிய பதிவுன்னு இனிமே குறிச்சொல் கொடுக்கணும் ;) //
    அப்படீங்கறீங்க? அதையும் பண்ணிடுவோம்.
    :)

    ReplyDelete
  26. //கைப்ஸ் உண்மையை சொல்லுங்க...உங்களுக்கு சமைக்கத் தெரியுமா???//

    அட உண்மையா சொன்னா நம்புங்கப்பா.


    //அண்ணாச்சி.. இன்னும் கொஞ்சம் பெரிசா போடுறது பதிவ? //

    இம்புட்டு பெரிய பதிவுக்கு எடுத்த நேரத்துல நாலு அன்லிமிட்டட் மீல்ஸ் சாப்பிட்டு இருக்கலாம் :))//

    அதுக்கு வழி இருந்தா நாங்க ஏன் இப்படி பொலம்பிக்கிட்டு இருக்கோம்? வெந்ததும் வேகாததும் தின்னப் போய் தானே இப்படி ஃபீலிங்ஸ் ஆஃப் ராஜஸ்தான்ல ஏழு மொழம் நீளத்துக்குப் பதிவெல்லாம் போட்டிருக்கறது?
    :)

    ReplyDelete
  27. தல,

    இப்பிடி வகை வகையா ஐட்டங்களா சொல்லி நாக்கு ஊற வெச்சிட்டியே...

    நீ பெங்களூருலே காச்சுப்போன ரொட்டி ரெண்டும், இனிக்கிற வெல்லக்கட்டி சாம்பாரும்,ரசமும் சாப்பிட்டு கடவே

    ReplyDelete
  28. //தல,

    இப்பிடி வகை வகையா ஐட்டங்களா சொல்லி நாக்கு ஊற வெச்சிட்டியே...//
    வெற்றி! வெற்றி! கைப்புள்ளயின் சரித்திரத்தில் ஒரு மகத்தான நாள் இன்று. முதல் முறையாக ராயல் ராம்சாமி என்பவருக்கு மெனு சொல்லி வெறுப்பேத்தியாச்சு. இனி நம்ம கட்டை நிம்மதியா வேகும்.
    :)

    //நீ பெங்களூருலே காச்சுப்போன ரொட்டி ரெண்டும், இனிக்கிற வெல்லக்கட்டி சாம்பாரும்,ரசமும் சாப்பிட்டு கடவே//
    ராயலு...உனக்கும் கீழே உள்ளவர் கோடி நினைத்து பார்த்து நிம்மதி நாடு. இப்படி சோறு சோறுன்னு அலையாதப்பா...சோறு மட்டும் வாழ்க்கையில்ல. இத்தனை வருஷம் தின்னு சமுதாயத்துக்கு என்ன நல்லது பண்ணிருக்க சொல்லு?
    :)

    ReplyDelete
  29. //ராயலு...உனக்கும் கீழே உள்ளவர் கோடி நினைத்து பார்த்து நிம்மதி நாடு. இப்படி சோறு சோறுன்னு அலையாதப்பா...சோறு மட்டும் வாழ்க்கையில்ல.//

    தல

    இப்போ கேட்டியே ஒரு கேள்வி நச்சுனு நாலு கொட்டு நடுமண்டைலே வச்சமாதிரி..... பூட்டிக்கிடந்த என்னோட அறிவு கண்ணை திறந்திட்டே போ........ இனிமே சாப்பாத்தியே சாப்பிடுறேன், ஒரு கப் சாதம் வேணாமின்னா ரெண்டு சாப்பாத்தி கிடைக்கும். ஹீம் அவ்வளவுதான்

    // இத்தனை வருஷம் தின்னு சமுதாயத்துக்கு என்ன நல்லது பண்ணிருக்க சொல்லு?:)//

    ஒனக்கு ரெண்டு பின்னூட்டம் போட்டு இருக்கேன்.

    ReplyDelete
  30. உங்க பிரச்சைனை நல்லா புரியுது. இட்லி கறிகுழம்புக்கு
    ஈடா எந்த பட்டர் சிக்கன் மசாலாவும் வராது.

    ReplyDelete
  31. //மிளகு போட்டு ஒரு சிக்கன் குழம்பை வச்சு அதை நெல்லு சோத்துல பெசஞ்சு கூட ஒரு வஞ்சிர மீன் வறுவலோடவோ இல்ல ஒரு எறா வறுவலோடவோ நல்லா சாப்புட்டுட்டு ஞாயித்துக் கெழமை மதியானம் கும்முன்னு ஒரு தூக்கம் போட்டு எந்திரிச்சா.//

    ஆஹா தல வாயிலே ஜலம் ஊற வச்சுட்டியளே ! எப்படிங்க இதெல்லாம்??

    யாரங்கே? மூளை வறுத்து , கீமா குருமா வச்சு சில்லி சிக்கனோட ரெண்டு பரோட்டாவைஒ உள்ளே தள்ள வச்சுட்டீயளே !! வாழுக வாழுக !! :))

    ReplyDelete
  32. தல உனக்காவது ஏதோ அப்போ அப்போ நல்ல சோறு சாப்பிடும் பாக்கியம் கிடைக்கும்...எங்கள நினைச்சுப்பாரு....அப்புறம் உனக்கு சிரிப்பு தான் வரும் "பின்னாடி ஒருத்தன் பலாப்பழத்தோட நிக்கறான்" இந்த ஜோக் ஞாபகம் இருக்கா...அந்த நிலமை எங்களுது....

    ReplyDelete
  33. படிச்சு முடிக்கறதுக்குள்ள வந்த ஜொல்லு பக்கத்து கியூப் வரைக்கும் போயிருச்சு...நல்லா இரு சாமி :-)

    ReplyDelete
  34. //இனி நம்ம கட்டை நிம்மதியா வேகும்//

    அவருக்கு மட்டும் இல்ல இன்னும் நிறைய பேரு என்னியும் சேர்த்து.... :-)

    ReplyDelete
  35. எறாவும் முருங்கைகாயும் போட்ட குழம்பு என்னோட favourite கூட! Chancey இல்ல சூடா சாதமும்,இந்த குழம்பும் போதும், எதுவும் வேண்டாம்! எப்போ சமைச்சு அனுப்புறீங்க??
    -Deeksh

    ReplyDelete
  36. //இல்ல சூடா சாதமும்,இந்த குழம்பும் போதும//

    இங்க பாருங்க எரியர தீயில ஸ்பீடு பெட்ரோல் ஊத்திட்டு போறாங்க :-)

    ReplyDelete
  37. //// இத்தனை வருஷம் தின்னு சமுதாயத்துக்கு என்ன நல்லது பண்ணிருக்க சொல்லு?:)//

    ஒனக்கு ரெண்டு பின்னூட்டம் போட்டு இருக்கேன்.//

    சே! நீ ஒரு பெரிய சமூக சேவகன் தாம்பா. ஒன்னைய போய் நான் கேள்வி கேட்டுட்டேனேன்னு ஒரே ஃபீலிங்ஸா இருக்கு.

    ReplyDelete
  38. //உங்க பிரச்சைனை நல்லா புரியுது. இட்லி கறிகுழம்புக்கு
    ஈடா எந்த பட்டர் சிக்கன் மசாலாவும் வராது. //

    வாங்க ஆதிரை,
    நான் சொல்ல வந்ததைச் சரியாப் புரிஞ்சுக்கிட்டீங்க. வடநாட்டுல எவ்வளவு சாப்புட்டாலும் நம்ம ஊரு சமையலுக்குப் பழக்கப்பட்ட நாக்கு அந்த சுவையைத் தான் தேடும். நீங்க வேற இப்ப நாக்கு ஊற வச்சிட்டீங்க. நன்றி.
    :)

    ReplyDelete
  39. //ஆஹா தல வாயிலே ஜலம் ஊற வச்சுட்டியளே ! எப்படிங்க இதெல்லாம்??//

    வாய்யா பாண்டி,
    எல்லாம் ஏக்கம்யா ஏக்கம்!

    //யாரங்கே? மூளை வறுத்து , கீமா குருமா வச்சு சில்லி சிக்கனோட ரெண்டு பரோட்டாவைஒ உள்ளே தள்ள வச்சுட்டீயளே !! வாழுக வாழுக !! :))//

    நீ வேற மெனு சொல்லி வெறுப்பேத்தறியா?

    ReplyDelete
  40. //தல உனக்காவது ஏதோ அப்போ அப்போ நல்ல சோறு சாப்பிடும் பாக்கியம் கிடைக்கும்...எங்கள நினைச்சுப்பாரு....அப்புறம் உனக்கு சிரிப்பு தான் வரும் "பின்னாடி ஒருத்தன் பலாப்பழத்தோட நிக்கறான்" இந்த ஜோக் ஞாபகம் இருக்கா...அந்த நிலமை எங்களுது....//

    12பி, ஆனாலும் ஒனக்கு தில்லு தான்யா. உங்க வூட்டு அம்மா ப்ளாக் எல்லாம் படிக்கிறதில்லன்னு தில்லா இப்படியெல்லாம் கமெண்டா? அவங்களுக்கு நீ இப்படி பலாப்பழ உவமை எல்லாம் குடுத்தேனு தெரிஞ்சா அடுத்த வேளை புவ்வாக்கு லாட்டரி தாண்டி.
    :)

    ReplyDelete
  41. //படிச்சு முடிக்கறதுக்குள்ள வந்த ஜொல்லு பக்கத்து கியூப் வரைக்கும் போயிருச்சு...நல்லா இரு சாமி :-)//

    ஹ்ம்ம்ம்...டேங்ஸ்பா
    :)

    ReplyDelete
  42. //எறாவும் முருங்கைகாயும் போட்ட குழம்பு என்னோட favourite கூட! Chancey இல்ல சூடா சாதமும்,இந்த குழம்பும் போதும், எதுவும் வேண்டாம்! எப்போ சமைச்சு அனுப்புறீங்க??
    -Deeksh //

    வாங்க தீக்ஷ்,
    இதெல்லாம் உங்களுக்கே கொஞ்சம் ஓவராப் படலை? அந்த மாதிரி எதுவும் கெடக்காமத் தானே இப்படி பொலம்பல்ஸ் பதிவெல்லாம் போடறோம்? அதையும் படிச்சிட்டு எனக்கு சமைச்சு அனுப்புன்னு சொன்னா நியாயமா? தர்மமா? நீதியா? இல்ல இது அடுக்குமா?
    :)

    ReplyDelete
  43. //இங்க பாருங்க எரியர தீயில ஸ்பீடு பெட்ரோல் ஊத்திட்டு போறாங்க :-)//

    ஆமாம் 12பி! வாய்யா வந்து நல்லா என்னான்னு கேளு.
    :)

    ReplyDelete
  44. hi kaipulla....naanum ungala pola 'pure non-veg' partithaan. romba naal kalichu nallaa sirichen. good. :-)

    ReplyDelete
  45. //hi kaipulla....naanum ungala pola 'pure non-veg' partithaan. romba naal kalichu nallaa sirichen. good. :-)//

    வாங்க அனானி,
    வருகைக்கும் கருத்துக்கும் ரொம்ப நன்றிங்க.
    :)

    ReplyDelete
  46. சேம் ப்ளேட் :-(

    வீட்ல இருந்தா கரி, மீன்னு செஞ்சி வெச்சா ஏன் கீரை செய்ய வேண்டியது தானேனு ரவுஸ் விடுவேன்... இப்ப தான் அருமை தெரியுது :-(

    ReplyDelete
  47. //சேம் ப்ளேட் :-(

    வீட்ல இருந்தா கரி, மீன்னு செஞ்சி வெச்சா ஏன் கீரை செய்ய வேண்டியது தானேனு ரவுஸ் விடுவேன்... இப்ப தான் அருமை தெரியுது :-( //

    வாங்க வெட்டி,
    சும்மாவா சொன்னாங்க...அரசன் அன்று கொல்வான் தெய்வம் நின்று கொல்லும்னு...எல்லாம் காலத்தின் கோலம் தான்.
    :(

    ReplyDelete
  48. A tasty long post,' Ponnusamy Restnt' is my fav too, seems u can open a new Blog to post all your recipes.

    ReplyDelete
  49. //A tasty long post,' Ponnusamy Restnt' is my fav too, seems u can open a new Blog to post all your recipes.//

    வாங்க திவ்யா,
    மிக்க மகிழ்ச்சி. ஆனா ரெசிப்பி போடற அளவுக்கெல்லாம் நம்ம கிட்ட சரக்கு லேதுங்க. எதோ அப்படி இப்படி பொழப்பு ஓடிட்டுருக்கு.
    :)

    ReplyDelete