இந்திய விமானப் படை அகாடெமியிலிருந்து...1ஐ படிங்க முதல்ல.
ஆங்...எங்கே விட்டேன்...எனக்கே நெனப்பு இல்லியே...ஆங்...போர் விமானப் பைலட்கள் துண்டிகலிலும், ஹெலிகாப்டர்/சரக்கு விமானப் பைலட்கள் பெங்களூரை அடுத்து உள்ள யெலஹங்காவிலும் மேலும் ஒரு ஆண்டுக்கு தங்கள் பயிற்சியைத் தொடர்கிறார்கள். துண்டிகலில் உள்ள அகாடெமியில் விமானப் படையைத் தவிர கடற்படை(Navy) விமான ஓட்டிகள், கரையோரக் காவல் படையின்(Coast Guard) விமான ஓட்டிகள் மற்றும் நம் நாட்டின் நேச நாடுகளைச் சேர்ந்த விமானப் படையினருக்கும் பயிற்சி அளிக்கிறார்கள்.
சரி! விமான ஓட்டி(Pilot) பயிற்சியைத் தவிர இங்கு அளிக்கப்படும் மற்ற பயிற்சிகளில் சில:
1. தரைக் கட்டுப்பாட்டு அதிகாரிகள் பயிற்சி(Ground duty officers)
2. விமானக் கட்டுப்பாட்டு அதிகாரிகள் பயிற்சி(Air Traffic control)
3. விமானப்படை மருத்துவப் பயிற்சி(Aviation medicine)
4. பராமரிப்பு(Maintenance)
எனக்கு HPT-32 பயிற்சி விமானத்தைப் பற்றிக் கூறிய அதிகாரியிடம்(பார்க்க முதல் பாகம்) நான் கேட்டறிந்த மற்ற விஷயங்கள் - ஒவ்வொரு விமானத்திலும் விமானத்தின் உயரத்தை அறிய ஒரு கருவி பொருத்தப்பட்டிருக்கும்(பார்ப்பதற்கு கார் ஸ்பீடோமீட்டர் போல இருந்தது), இதன் சிறப்பு அம்சம் என்னவென்றால் விமானம் நிற்கும் இடத்தின் கடல் மட்டத்துக்கு மேலான உயரம்(Height above mean sea level) ஏற்கனவே கணிக்கப்பட்டு(calibrated) இருக்கும். உதாரணமாக விமானம் ஐதராபாத் விமானத் தளத்தில் நிற்கிறது என்றால், இக்கருவி ஐதராபாத்தின் கடல்மட்டத்திற்கு மேலான உயரமான 300மீட்டர் என்பதனைக் காட்டும். அத்துடன் மாடல் பைலட்(Model Pilot) என்ற கருவி விமானத்தின் நடுவுநிலமையினை(equilibrium) அறிய உதவுகிறது. உதாரணமாக விமானம் பறக்கும் போது வலப் புறமாகச் சாய்ந்தபடி பறக்கிறது என்றால் மாடல் பைலட்டின் முள்ளும் வலப்புறமாகச் சாய்ந்திருக்கும். விமானத்துக்குள் இருந்தபடியே விமானம் எந்நிலையில் இருக்கிறது என்று அறிந்து கொள்ளலாம். எனினும் இது புதிதாகப் பயிற்சி பெறும் வீரர்களுக்கே உதவுவதாகவும் அனுபவம் மிகும் போது தானாகவே விமானத்தின் போக்கையும் நிலையையும் யூகித்து விடலாம் எனத் தெரிவித்தார். அதைத் தவிர காற்றழுத்தத்தை அறிய ஒரு உபகரணமும் உண்டு.இது விமானத்தின் காற்றழுத்தத்தை Bars(பார்ஸ்)அளவைகளில் காட்டுகிறது.
விமானங்களின் இருக்கைகள் மெத்தென இல்லாமல் எப்போதும் சற்று கடினமாகவே இருக்கும். ஏனெனில் விமானம் பறந்து கொண்டிருக்கும் போது பழுது ஏற்பட்டு விபத்துக்குள்ளாகும் பட்சத்தில் அவ்விருக்கையே பாதுகாப்பு இருக்கையாகவும்(Ejection seat)ஆகவும் பயன்படும். அதாவது விபத்துக்குள்ளாகும் போது விமானத்திலிருந்து இவ்விருக்கை(விமானியுடன்) தனியாகப் பெயர்த்து ஆகாயத்தில் வீசப்படும். பின்னர் பாராசூட் உதவி கொண்டு பாதுகாப்பாகக் கீழிறங்க முடியும். இருக்கை பெயர்த்து வீசப்படும் போது விமானியின் உடல் பூமியைக் காட்டிலும் கிட்டத்தட்ட 19 மடங்கு அதிக புவியீர்ப்பு விசைக்கு (Acceleration due to gravity)ஆட்படுத்தப் படுகிறது. இத்தகைய விசையினைத் தாங்கா மாட்டாமல் விமானியின் முதுகெலும்பு நொறுங்கும் ஆபத்து உள்ளதால், அதைக் காக்கும் பொருட்டு இருக்கைகள் கடினமானதாக வடிவமைக்கப் படுகின்றன.
நான் ஐதராபாத் சென்ற நாள்(13.01.2006) வார நாள் என்பதால், என்னுடைய தம்பி(சித்தி பையன்), பள்ளிக்கூடத்திற்குச் சென்றிருந்தான். காலையில் விமானப் படை அதிகாரியின் உதவியுடன் நிஜ விமானத்தைப் பற்றி கொஞ்சமே கொஞ்சம் தெரிந்து கொண்டேன். இந்திய விமானப் படை விமானத்திற்குள் நான் உட்கார்ந்து பார்த்தது(அது குட்டியூண்டு பயிற்சி விமானமே ஆயினும்), ஒரு மறக்க முடியாத மகிழ்ச்சியான விஷயம். இவ்வாய்ப்பு இன்னொரு முறை கிடைக்காது தானே. மாலையில் தம்பி பள்ளிக்கூடத்தில் இருந்து வந்ததும், சித்தியின் ஸ்கூட்டியை எடுத்துக் கொண்டு அகாடெமியைச் சுற்றி பார்க்கக் கிளம்பினோம். பரந்து விரிந்து கிடக்கும் வளாகத்தைப் பற்றி என்ன சொல்ல - அகலமான சாலைகள், சாலைகளின் இரு மருங்கிலும் மரங்கள், ஆங்காங்கே விமானங்களின் மாதிரிகள், அவ்வப்போது காணக்கிடைக்கும் மிடுக்கான அதிகாரிகள்...அத்தனையும் அழகு.
ஒரு விமான மாதிரியை தூரத்திலிருந்து பார்த்து தம்பி கேட்டான்"அண்ணா! இது என்ன Plane?". நான் சொன்னேன் "இது மிக்(Mig-21) என்று. "மிக்கா?" என்றான். "ஆமாம், மிக் தான்" என்றேன். கிட்ட போய் பார்த்தும் தான் தெரிந்தது "அது ஸுகாய்-7(Sukhoi-7) என்ற விமானம் என்று. "மிக்னு சொன்னீங்களே?" என்றான். "ஓ! அதுவா? பின்னாடிலேருந்து பார்க்கறதுக்கு மிக் மாதிரி இருந்துச்சு" என்று விமானங்களின் சாமுத்திரிகா லட்சணம் அறிந்தவன் போல அளந்து விட்டேன். அவனும் போனா போகுது என்று என்னை விட்டு விட்டான். அப்படியே பார்த்துக் கொண்டே வந்து கொண்டிருக்கும் போது மாலை உடற்பயிற்சிக்காக வளாகத்தில் ஓடிக் கொண்டிருந்த கேடட்ஸ்களைக் கண்டோம். அவர்களை மஞ்சள், பச்சை, சிவப்பு என வெவ்வேறு இல்லங்களாகப்(ஹவுஸ்களாக) பிரித்து இருந்தார்கள். ஒவ்வொரு இல்லத்துக்கும் Brar,Aquino என்று வெவ்வேறு பெயர். அவர்களையும் புகைப்படம் எடுக்கலாம் என்று தோன்றியது, ஆனால் பெண் பயிற்சி அதிகாரிகளும் இருந்ததால் எங்கே வம்பாகிவிடுமோ என்று அவ்வெண்ணத்தைக் கைவிட்டேன். ஓடிக் கொண்டிருந்தவர்களில் சிலர் ஓட மாட்டாமல் மெதுவாகக் குழுவிலிருந்து விலகி நடந்து வந்து கொண்டிருந்தனர். அவர்களைப் பார்த்து தம்பி சொன்னான்"இவனுங்க தீந்தானுங்க!". "ஏன்? என்னாச்சு" என்று நான் கேட்டேன். "இப்ப ஓடறாங்களே அவங்க எல்லாம் நேரா ஸ்விம்மிங் பூலுக்குத் தான் போறாங்க, லேட்டா வர்றவனுங்களை 18 அடி உயரத்திலிருந்து தண்ணியில குதிக்கச் சொல்லுவாங்க. நான் ஸ்விம்மிங் பண்ணும் போது பார்த்திருக்கேன்" என்றான்.
விமானப் படை பயிற்சி என்பது உண்மையிலேயே மிகக் கடினமான ஒன்று தான். நாட் ஜியோவில் பார்த்ததில் தெரிந்தது. விமானிகளின் கால்கள் விமானத்தின் ரட்டர்(Rudder) கால் பகுதியில் இருப்பது...அதனை எட்டும் அளவிற்கு நீளமாக இருக்க வேண்டும். மற்றும் கண நேரத்தில் யோசித்துச் செயல் படும் துரிதச் செயல்பாடு அவசியம். விமானப் படை பயிற்சி பெற விரும்புபவர்கள் பன்னிரண்டாம் வகுப்பிற்கு பிறகு UPSC நடத்தும் NDA(National Defence Academy) பரிட்சை எழுதி தேர்வு பெற வேண்டும். மேலும் விமானிகளுக்கான PABT(Pilot Aptitude Battery Test) என்ற சிறப்பு தேர்விலும் தேர்வு பெற வேண்டும். PABT தேர்வு கண்டிப்பாக ஒருவர் ஒரு முறைக்கு மேல் வழங்க முடியாது. எனவே விமானியாவது என்பது உண்மையிலேயே கடினமான ஒரு விஷயம் தான். PABTயில் ஒரு முறை தோற்றாலும் பைலட் ஆகும் கனவைத் துறக்க வேண்டியது தான்.
இந்திய விமானப் படை அகாடெமி,வழங்கப்படும் பயிற்சி மற்றும் தேர்வு முறை குறித்து அறிய இங்கு சுட்டவும்.
விமானப்படை பதிவு லேட்டா போட்டாலும் (ஆங்...எங்கே விட்டேன்...எனக்கே நெனப்பு இல்லியே) லாட்டா (lots) விவரங்கள் கொடுத்ததற்கு நன்றி.
ReplyDeleteரொம்ப நல்ல விவரங்கள். பலது எனக்கு தெரிந்திருக்கவில்லை..தேர்வுகள் குறித்து.. பயிற்சி குறித்து எழுதினதெல்லாம் அருமை.
//அத்துடன் மாடல் பைலட்(Model Pilot) என்ற கருவி விமானத்தின் நடுவுநிலமையினை(equilibrium) அறிய உதவுகிறது. உதாரணமாக விமானம் பறக்கும் போது வலப் புறமாகச் சாய்ந்தபடி பறக்கிறது என்றால் மாடல் பைலட்டின் முள்ளும் வலப்புறமாகச் சாய்ந்திருக்கும்//
அப்ப தலைகீழா பறந்துச்சின்னா?? :P :)
அன்புடன்
கீதா
வாங்க மேடம்,
ReplyDeleteஉங்க ஆதரவுக்கும் கருத்துக்கும் ரொம்ப நன்றி. கூடிய சீக்கிரம் உங்க கேள்விக்கும் பதில் தர முயற்சிக்கிறேன்.