கடந்த சில நாட்களாக முன்னைப் போல ஆக்டிவாகப் பதிவெழுத வேண்டும் என்ற எண்ணம் இருந்து கொண்டே இருக்கிறது. இரண்டு வாரங்களுக்கு முன் பல வருடங்களுக்கு முன்னர் வந்த தொலைக்காட்சி விளம்பரங்களை நினைவு படுத்திப் பார்க்கலாமே என்ற ஒரு எண்ணம் உதித்தது. விளம்பரங்களின் பட்டியல் பெரியதாக இருந்ததால் அவற்றை எதாவது ஒரு வகையில்(criterion) கொண்டு பகுக்கலாமே என்று தோன்றியது.
ரோஜா படம் மூலமாகத் தான் முதன்முதலாக இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமானின் பாடல்களைக் கேட்டது என்றாலும், டிவி விளம்பரங்களின் மூலமாக மக்களிடம் நெருக்கமாகத் தான் இருந்துள்ளார் எனத் தெரிந்தது. திரைப்படங்களுக்கு இசை அமைப்பதற்கு முன்னர் அவர் விளம்பரப் படங்களுக்குத்(ad jingles) தான் இசையமைத்துக் கொண்டிருந்தார் என பலரும் கேள்வி பட்டிருப்போம். ஆனால் பழைய விளம்பரங்களைத் தேடிக் கொண்டிருந்த போது, அக்காலத்தில் நாம் ரசித்த பல விளம்பரப் படங்களுக்கும் அவர் இசையமைத்திருப்பது தெரிய வந்தது. "அட! இந்த விளம்பரத்துக்கும் இவர் தான் இசையமைத்தாரா?" என ஆச்சரியமாய் இருந்தது. அதை எல்லாம் பதிந்து வைக்கலாமே எனத் தோன்றியதன் விளைவு தான் இந்தப் பதிவு. சில விளம்பரங்கள் தூர்தர்ஷன் மட்டும் அல்லாமல் வேறு தொலைக்காட்சி சேனல்களிலும் வந்திருக்கலாம்.
Leo Coffee
ஏ.ஆர்.ரகுமானின் வாழ்க்கையைப் புரட்டிப் போட்ட விளம்பரம் "லியோ காஃபி" விளம்பரம் என்று சொல்கிறார்கள். இவ்விளம்பரத்தைப் பார்த்து தான் இயக்குனர் மணிரத்னம் ரோஜா படத்தில் இசையமைக்க வாய்ப்பளித்தார் என்று இணணயத்தில் படித்தேன். மணிரத்னத்திடம் அவரை அறிமுகப்படுத்தியது அப்போது விளம்பரப் படங்களில் இயக்குநராகப் பணியாற்றிக் கொண்டிருந்த ராஜீவ் மேனன். இந்த விளம்பரம் வெளிவந்த காலத்தில் நான் பள்ளி செல்லும் சிறுவன். எப்போது வந்தாலும் நின்று பார்த்து விட்டுச் செல்லும் விளம்பரங்களில் இதுவும் ஒன்று. அவ்விளம்பரத்தில் வரும் அர்விந்த் சுவாமிக்கும் இப்போது இருக்கும் அர்விந்த் சுவாமிக்கும் எத்தனை மாற்றங்கள்? லியோ காஃபியின் தற்காலத்து விளம்பரத்தில் நடிகை ஆண்ட்ரியா வருகிறார். ஆனால் பழைய விளம்பரம் ஏற்படுத்தும் பாதிப்பும் கிளறும் நினைவுகளும் இப்புதிய விளம்பரத்தில் இல்லை. ஆண்ட்ரியா வரும் விளம்பரத்தைப் பார்க்க வேண்டும் என்றால் இங்கு சுட்டுங்கள்.
Old Cinthol
கிட்டத்தட்ட ஐம்பது ஆண்டு காலமாக இருக்கும் சோப் "பழைய சிந்தால் சோப்". அட, இதுலயும் அர்விந்த் சுவாமி தான் வருகிறார். இந்த சோப்பின் விளம்பரத்தைப் பார்த்தால் எப்போதும் மிகைப்படுத்தப் படாமல் சிம்பிளாக இருக்கும். பல சமயங்களில் விளம்பரங்களே கூட இருக்காது. சிகப்பு நிற அட்டையில் வெளிவரும் சோப் இது, புதிய சிந்தால் சோப்புக்குச் சற்று கவர்ச்சியான விளம்பரங்களை வெளியிடும் கோத்ரெஜ் நிறுவனம். பல வருடமாக உபயோகத்தில் இருக்கும் சோப் என்பதால் அந்த நற்பெயரிலேயே இன்னும் இந்த சோப் விற்றுக் கொண்டிருக்கிறது. தோல்நோய் மருத்துவர்களும் பரிந்துரைக்கும் உண்மையிலேயே நல்ல சோப் இது. அத்தகையதொரு சோப்புக்கு, மிகையில்லாத மெல்லிய இசை சேர்த்திருப்பது இவ்விளம்பரத்தின் சிறப்பு, இன்றளவும் நினைவில் நிலைக்கச் செய்திருப்பது இசையமைப்பாளரின் திறமை.
Asian Paints - Pongal
சில நிறுவனங்கள், தனித்து நிற்கும் விளம்பரங்கள் வெளியிடுவதற்கு பெயர் போனவை. அத்தகைய ஒரு நிறுவனம் தான் ஏசியன் பெயிண்ட்ஸ். கையில் பெயிண்ட் ப்ரஷுடன் நிற்கும் பையனின் மேஸ்காட்டைக் கிட்டத்தட்ட நாற்பத்தைந்தாண்டு காலம் உபயோகித்து வந்தது ஏசியன் பெயிண்ட்ஸ் நிறுவனம். அந்த சிறுவனின் பெயர் "கட்டூ(Gattu)". அவனை உருவாக்கியவர் பிரபல் கார்ட்டூன் ஓவியர் ஆர்.கே.லக்ஷ்மண் அவர்கள். இணையத்தில் தேடினால் ஏசியன் பெயிண்ட்ஸின் மார்க்கெட்டிங்கைப் பற்றி பல கேஸ் ஸ்ட்டிகள் கிடைக்கும், அந்த அளவுக்கு தங்களுடைய ப்ராண்ட்களின் மீது கவனமும் அக்கறையும் செலுத்தும் நிறுவனம் இது. பொங்கலுக்கு வெள்ளை அடிக்கும் நம்ம ஊர் பழக்கத்தைக் குறி வைத்து, தமிழ்நாட்டில் மட்டும் வெளியிடுவதற்காக எடுக்கப்பட்ட ஒரு விளம்பரமிது. இவ்விளம்பரத்தின் துவக்கத்தில் வரும் அதே "ஏலேலோ" இசையை ரோஜா படத்தில் சின்ன சின்ன ஆசை பாடலில் ஹோகேனக்கல்லில் பரிசல்கள் செல்லும் காட்சியிலும் பார்க்கலாம்.
Titan
முந்தைய மூன்று விளம்பரங்களும் தமிழ்நாட்டு ஆடியென்சை மட்டும் தொடுவன என்றால், இவ்விளம்பரமும் இனி வரும் விளம்பரங்களும் இந்தியா முழுவதும் பிரபலமானவை. "சாந்தி" என்னும் இந்தி சீரியலில் ராஜ்.ஜி.ஜே.சிங் எனும் கதாபாத்திரத்தில் நடித்த அமர் தல்வார் தான் இவ்விளம்பரத்தில் வரும் தந்தை. மால்குடி சுபா பாடி வெளிவந்த "வால்பாறை வட்டப்பாறை" ஆல்பமில் நடித்த சம்யுக்தா தான் இதில் மகளாக வருபவர். இவர் முன்னாள் தூர்தர்ஷன் ஆங்கில செய்தி வாசிப்பாளர் பி.சி.ராமகிருஷ்ணா அவர்களின் மகள். இது ஏ.ஆர்.ரகுமானின் இசையில் வெளிவந்தது என்பதனை youtube பார்த்து தான் தெரிந்துகொண்டேன்.
MRF
சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு உலகம் முழுவதும் பிரபலமான நிறுவனம் MRF. Madras Rubber Factory என்று ஒருகாலத்தில் இருந்த பெயர் தான் MRF ஆனது. ஆயினும் இப்போது பழைய பெயரை எங்கும் அவர்கள் பிரபல படுத்துவதில்லை. ஏசியன் பெயிண்ட்ஸைப் போலவே விளம்பரங்களில் வெகுவாக கவனம் செலுத்தும் நிறுவனம் இது. இவ்விளம்பரம் வந்து கொண்டிருந்த காலங்களில், அதில் கடைசியில் வருவது போலவே கீபோர்டில் சர்ரென்று விரல்களைத் தேய்க்க வேண்டும் என்று எண்ணியதுண்டு. அது இப்போது நிறைவேறி விட்டாலும், வெகுகாலம் கழித்து இந்த விளம்பரத்தைப் பார்த்த போது அந்த ஆசை எங்கிருந்து வந்தது என நினைவில் வந்தது :)
Garden Vareli
லிசா ரே(Lisa Ray) தோன்றும் இவ்விளம்பரத்தின் இசை வெகு பிரபலம். சிறுவயதில் கார்டன் புடவைகளை எல்லாரும் அணிவது போல அணிய முடியாது, இதில் காட்டுவது போல காற்றில் பறக்க விடுவது போல தான் அணிய முடியும் எனப் பல காலம் நினைத்துக் கொண்டிருந்தேன். லிசா ரே ஒரு அரிய வகை புற்றுநோயால் பாதிக்கப் பட்டு சமீபத்தில் அதில் இருந்து மீண்டு வந்து விட்டதாக அறிவித்துள்ளார்.
Premier Pressure Cooker
"பாசமான அன்னை பரிசாய் தந்த ப்ரீமியர் ஆசை ஆசையாய் கணவர் வாங்கித் தந்த ப்ரீமியர்" என ஆரம்பிக்கும் விளம்பரம், டிவியில் அதிகமாக இவ்விளம்பரத்தைப் பார்த்த ஞாபகம் இல்லை. இருப்பினும் இப்போது பார்த்த போது நன்றாக இருப்பதாகத் தோன்றியது.
Spirit of Unity Concerts
முன்னொரு காலத்தில் ஞாயிறு காலை 10.30 மணிக்கு தூர்தர்ஷனில் தேசிய தொலைக்காட்சியில் "Spirit of Unit Concerts" என்ற நிகழ்ச்சி ஒன்று வெளிவரும். இதில் துவக்கத்தில் வரும் title music கேட்பதற்காகவே காத்து கிடப்பேன். அந்நிகழ்ச்சியில் வரும் மற்ற கச்சேரிகள் எதையும் கூர்ந்து கவனித்ததில்லை. இந்த டைட்டில் இசை எனக்கு மிகவும் பிடித்த ஒன்று.
கடைசியாக ரோஜா திரைப்படத்துக்காக தேசிய விருது பெற்றதற்குப் பின் சுரபி என்னும் நிகழ்ச்சியில் ஏ.ஆர்.ரகுமான் அவர்களின் பேட்டியைக் காணலாம். இதில் அவருடைய பெயரை அப்துல் ரகுமான் என்று தவறாகக் குறிப்பிட்டிருக்கிறார்கள். தன்னுடைய இசையில் மேற்கத்திய இசையின் தாக்கம் காலம் செல்ல செல்ல குறையும் என்று குறிப்பிட்டிருக்கிறார். வெகுவாகப் பிரபலம் ஆவதற்கு முன் வந்த முதல் சில விளம்பரங்களில் ஒன்று இது.
ஆகா...சில விளம்பரங்கள் நானும் உங்களை போல ரசித்திருக்கிறேன் - ஆனால் இப்போது தான் தெரியும் அந்த இசை ரகுமான் அவர்களுடையது என்று.
ReplyDeleteநல்ல பகிர்வு தல ;)
கடந்த சில நாட்களாக முன்னைப் போல ஆக்டிவாகப் பதிவெழுத வேண்டும் என்ற எண்ணம் இருந்து கொண்டே இருக்கிறது.
ReplyDelete:))))
லியோ காபி அரவிந்த் சுவாமியை பார்த்து என்னோட பெரியம்மா பொண்ணுங்க எல்லாம் விட்ட பெருமூச்சு.. ஹிஹிஹி
//முன்னொரு காலத்தில் ஞாயிறு காலை 10.30 மணிக்கு தூர்தர்ஷனில் தேசிய தொலைக்காட்சியில் "Spirit of Unit Concerts" என்ற நிகழ்ச்சி ஒன்று வெளிவரும்.//
ReplyDeleteஅந்த காலத்து பாட்டியா இருந்தா "என்ன பெத்த ராசா"ன்னு கூவிருப்பேன்.. மாடர்ன் பொண்ணுனால - கைப்பூ கைகுடுப்பூ!
//ஆகா...சில விளம்பரங்கள் நானும் உங்களை போல ரசித்திருக்கிறேன் - ஆனால் இப்போது தான் தெரியும் அந்த இசை ரகுமான் அவர்களுடையது என்று.//
ReplyDeleteஎனக்கும் அப்படி தான் இருந்துச்சு. அதனாலே தான் இந்தப் பதிவே.
//நல்ல பகிர்வு தல ;)//
நன்றி ஜி.
//:))))
ReplyDeleteலியோ காபி அரவிந்த் சுவாமியை பார்த்து என்னோட பெரியம்மா பொண்ணுங்க எல்லாம் விட்ட பெருமூச்சு.. ஹிஹிஹி
//
அர்விந்த சுவாமி, அப்பாஸ், மாதவன்...ஹ்ம்ம்ம்...காலத்துக்கேத்த மாதிரி பெருமூச்சும் மாறிக்கிட்டே தான் இருந்துருக்கு :)
//அந்த காலத்து பாட்டியா இருந்தா "என்ன பெத்த ராசா"ன்னு கூவிருப்பேன்.. மாடர்ன் பொண்ணுனால - கைப்பூ கைகுடுப்பூ!
ReplyDeleteஅந்த காலத்து பாட்டியா இருந்தா "என்ன பெத்த ராசா"ன்னு கூவிருப்பேன்.. மாடர்ன் பொண்ணுனால - கைப்பூ கைகுடுப்பூ!
//
வளர டேங்கீஸ் அவிவா மேடம்
:)
அருமையான பகிர்வு கைப்ஸ். அத்தனை வீடியோக்களையும் தொகுத்து குடுத்தற்கு மன்மார்ந்த நன்றி. பின்னிரவில் கேட்பதற்கு அற்புதமாய் இருக்கிறது
ReplyDeleteஏசியன் பெயிண்ட்ஸ் இசையும் விளம்பரமும் எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. எனக்கு கிழக்குச் சீமையிலே பாட்டை இந்த இசை நியாபகப் படுத்தும்.
இதெல்லாம் பார்த்து எம்புட்டு நாளாச்சு..மஸ்கிடோ காயில் மோட் ஆன் :))
ReplyDeleteடாங்கிஸ் தலி :-)
எல்லாமே ரசித்தவை, தொகுப்புக்கு நன்றி. என்னமோ ஃபார்முக்கு வந்துட்டீங்கனு நினைச்சால்??? இன்னமுமா தூக்கம்?? :P
ReplyDelete//அருமையான பகிர்வு கைப்ஸ். அத்தனை வீடியோக்களையும் தொகுத்து குடுத்தற்கு மன்மார்ந்த நன்றி. பின்னிரவில் கேட்பதற்கு அற்புதமாய் இருக்கிறது
ReplyDeleteஏசியன் பெயிண்ட்ஸ் இசையும் விளம்பரமும் எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. எனக்கு கிழக்குச் சீமையிலே பாட்டை இந்த இசை நியாபகப் படுத்தும்.
//
வளர நன்னி அண்ணாச்சி :)
//இதெல்லாம் பார்த்து எம்புட்டு நாளாச்சு..மஸ்கிடோ காயில் மோட் ஆன் :))
ReplyDeleteடாங்கிஸ் தலி :-)
//
கப்பிமொழி,
உண்மையிலே நீ சொன்ன மாதிரி தான்ப்பா கமெண்டு இருக்கு...நான் தான் சரியா படிக்கலை போலிருக்கு...
:(
//எல்லாமே ரசித்தவை, தொகுப்புக்கு நன்றி. என்னமோ ஃபார்முக்கு வந்துட்டீங்கனு நினைச்சால்??? இன்னமுமா தூக்கம்?? :P
ReplyDelete//
ஃபார்ம் எல்லாம் ஒன்னும் இல்லை...தூக்கத்து நடுவுல முழிச்சு தண்ணி குடிக்கிற மாதிரின்னு வச்சிக்கங்களேன்.
:)
ANNAATHA UJALA AD'A VITUTEENGALEY???
ReplyDeleteIDHU KUDAVE REGAL SOTTU NEELAM AD'AIYUM SETHUKONGA...
ReplyDeleteTHAMBI VARTTAAA