Tuesday, December 07, 2010

பாடி ஸ்டெடியா இருக்கு, மைண்ட் ஆஃப் ஆயிடுச்சு

வீட்டிற்கும் திருப்பெரும்புதூருக்கும் இடையேயான 65 கி.மீ (ஒரு வழி தூரம்) பயணத்தைக் காரில் கடக்கும் போது கேட்பதற்காக, என்னிடமிருந்த பாடல்கள் தொகுப்பிலிருந்து சிலவற்றைத் தேர்ந்தெடுத்து நானே சில இசை குறுந்தகடுகளைத் தயாரித்தேன். நாங்கள் சப்போர்ட் அளித்துக் கொண்டிருந்த வெளிநாட்டு நிறுவனத்தின் இந்திய பிரிவிற்கு ஒரு ப்ராஜெக்ட் செய்வது நிமித்தமாகவே தினசரி திருப்பெரும்புதூர் பயணம். ஆனால் ஆறு மாதமாகப் பதிவு எதையும் எழுதாமல் இருப்பதற்கு கழுத்தை நெரிக்கும் வேலை, நேரமின்மை என்று காரணம் சொல்வதில் உண்மை இல்லையென்று எனக்கே தெரிகிறது. இதை காட்டிலும் பிசியாக இருந்த போதும் பதிவெழுதிக் கொண்டிருந்த காலம் ஒன்று உண்டு. ஆனால் இப்போதோ..."எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்" கதை தான்.

சரி அதை விடுவோம். குறுந்தகடு பத்தி சொன்னேன் இல்லையா...பயணத்தின் போது கேட்ட ஒரு பாடல் என்னை வெகுவாகக் கவர்ந்தது. 'கதர்'(Gadar) என்ற இந்தி திரைப்படத்தில் வரும் "உட் ஜா காலே காவான்" என்று பஞ்சாபி மொழியில் தொடங்கும் பாடல் தான் அது. இப்பாடலை இதற்கு முன்னர் பல முறை டிவியில் பார்த்திருந்த போது அறிந்திராத ஒரு இனிமை அன்று கார் ஸ்டீரியோவில் கேட்கும் போது உணர முடிந்தது. இது போல சில பாடல்களின் அருமையைக் கார் ஸ்டீரியோவில் கேட்டு தான் உணர்ந்திருக்கிறேன். தமிழ் விடு தூது, தத்தை விடு தூது, நாரை விடு தூது என்றெல்லாம் கேள்வி பட்டிருப்போம். ஆனால் இப்பாடலில் கதாநாயகன் தன் உள்ளக்கிடக்கையை காகத்தினை தூதனுப்பி வெளிப்படுத்துகிறார். பாடலின் இசையமைப்பாளர் உத்தம் சிங், பாடியவர்கள் அல்கா யாக்னிக், உதித் நாராயண். தமிழ் பாடல்களைக் குதறி துப்பும் உதித், இந்தியில் சிறப்பாகவே பாடுகிறார்.



இப்பாடல் வரிகளின் பொருளைத் தெரிந்து கொள்ள விரும்பினால், கீழே உள்ள சுட்டியைக் க்ளிக்குங்கள்.
http://www.ukindia.com/zip2/zgadar.htm

****************************************************
இந்தியாவில் கிரிக்கெட் விளையாட்டை நெறிபடுத்தும் BCCI என்ற அமைப்பு பணத்தை மட்டுமே குறிக்கோளாகக் கொண்ட ஒரு வணிக அமைப்பு என்பது சமீபத்தில் சீனாவில் நடந்து முடிந்த ஆசிய விளையாட்டுகளைப் பார்த்த போது உறுதியானது. ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் கிரிக்கெட் முதன்முறையாக 2010 ஆம் ஆண்டில் அறிமுகப் படுத்தப்பட்டது. இப்போட்டிகளில் தங்கப் பதக்கத்தை வென்றது பங்களாதேஷ் நாட்டு அணி. இந்திய அணி அச்சமயத்தில் நியூசிலாந்து நாட்டுடன் டெஸ்ட் போட்டிகளில் விளையாடிக் கொண்டிருந்தது. அதனால் அப்போட்டிகளில் இந்திய சர்வதேச அணியால் பங்குகொள்ள இயலாமையைப் புரிந்து கொள்ளலாம். ஆனால் இந்தியாவின் தரப்பிலிருந்து ஒரு இரண்டாம் தர அணியைக் கூட இப்போட்டிகளுக்கு அனுப்ப முடியாத நிலை பிசிசிஐக்கு ஏற்பட்டது எப்படி என்பது புரிந்து கொள்வது கடினமாக இருக்கிறது. கோடிகளில் பணம் புரண்டால் மட்டுமே பிசிசிஐ கண்டு கொள்ளும் போலிருக்கிறது, ஒரு சர்வதேச விளையாட்டுப் போட்டியில் நம் தேசத்தின் சார்பாகப் பதக்கம் வாங்குவதில் பெருமை வேண்டுமானால் கிடைக்கும், அதை வைத்துக் கொண்டு என்ன செய்ய என்ற எண்ணம் தான் காரணமோ?

****************************************************
சமீபத்தில் ஒரு நாள் சாலையில் 25 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் "Hero Honda Pleasure" என்ற இருசக்கர வாகனத்தை ஓட்டிச் சென்று கொண்டிருந்தார். அதை பார்த்ததுமே அந்த வாகனத்துக்கான விளம்பரம் நினைவுக்கு வந்தது. நடிகை பிரியங்கா சோப்ரா "Why should boys have all the fun?" என்று சொல்லி அது பெண்களுக்கான வாகனம் என்பது போல விளம்பரப் படுத்தியது நினைவுக்கு வந்தது. அவ்வளவு நல்ல வாகனமாக Hero Honda Pleasure இருக்கும் பட்சத்தில் "Why should girls have all the fun?" என்று அந்த இளைஞரும் நினைத்திருப்பாரோ? :)


****************************************************
சமீப காலங்களில் மனதை மிகவும் பாதித்த சம்பவம் ஒன்று உண்டென்றால், அக்டோபர் இறுதியில் கோவையில் இரு பள்ளிக் குழந்தைகள் கடத்திக் கொல்லப் பட்ட நிகழ்வு தான். அதை நினைத்து நினைத்து எத்தனை முறை அழுதேன் என்று நினைவில் இல்லை. கடத்திக் கொண்டு போன பாவிகள் பணம் வாங்கிக் கொண்டு விட்டிருந்திருக்கலாம் இல்லையா?, போலிஸ் பிடித்து விடுவார்கள் என்ற பயம் வந்ததும் பொள்ளாச்சி அருகிலேயே குழந்தைகளை இறக்கி விட்டுவிட்டு தலைமறைவாகி இருக்கலாம் இல்லையா? இவ்வாறாக பல "ifs and buts" நினைப்புகள். அதற்கு பின்னர் அந்த மிருகங்கள் செய்ததை கேள்வி பட்ட போதே நெஞ்சம் பதறியது. இதையெல்லாம் செஞ்சா மாட்டிக்குவோம்னு அந்த கயவர்களுக்குத் தோன்றியிருக்காதா? அப்படி தோன்றியிருந்தால் அவ்வாறு செய்திருப்பார்களா என மறுபடியும் ஒரு நினைப்பு. அக்குழந்தைகளின் பெற்றோர்களின் நிலையை நினைத்துப் பார்க்கவே கடினமாகவே இருக்கிறது. ஜீ தமிழ் தொலைக்காட்சியில் அந்த சிறுவனின் சடலத்தை வாய்க்காலிலிருந்து மீட்டதைப் பார்த்த போது, அக்குழந்தைகளைப் பொறுத்தவரை அவர்களுக்கான எல்லா கதவுகளும் ஒரே நேரத்தில் மூடிக் கொண்டன, ஆனால் இந்த பாவிகளுக்கோ கோர்ட் கேஸ் அப்படின்னு பல கதவுகள் பல வருஷம் திறந்து இருக்கும் என்று நினைத்தேன். ஆனால் ஒரு சில நாட்களிலேயே இக்குற்றத்தில் தொடர்புடையவர்களில் ஒருவன் போலீஸ் என்கவுண்டரில் பலியான செய்தி கேட்டு ஒரு வித ஆறுதல் கிடைத்தது. என்கவுண்டர் நடைபெற்றதற்கான காரணங்களாகப் போலீஸ் தரப்பு சொல்லியதை கூட்டிக் கழித்து பார்த்தால் "இது என்கவுண்டர் அல்ல திட்டமிட்டு செய்யப் பட்டக் கொலை என்று "மனித உரிமை பேசுபவர்களது"(க்ரிமினல்களுக்கு மட்டும்) கூற்று உண்மையாக இருக்கக் கூடிய வாய்ப்பு தென்படுகிறது. அது உண்மையாகவே இருந்தாலும் கூட "so what" என்று மட்டுமே நினைக்கத் தோன்றுகிறது. எஞ்சியிருக்கும் இன்னொரு கயவனுக்கு இப்போது கிடைத்திருக்கும் தண்டனை நீதிமன்றம் வழங்கப் போகும் தண்டனையை விட பெரிய தண்டனையே.

என்னை "கைப்புள்ள"யாக மட்டுமில்லாமல் அறிந்திருப்பவர்களுக்கு, இக்கொலை சம்பவம் பற்றிக் கேள்வி பட்டதும் என் நினைவு வந்திருக்க வாய்ப்புண்டு. ஏனெனில் குழந்தைகளைக் கடத்திக் கொன்றவனதும் பெயரும் எனது இயற்பெயரும் ஒன்று தான். மோகன்ராஜ் என்கிற டாக்சி டிரைவர் தான் பிரதானக் குற்றவாளி என்று அறிந்ததும் "அட படுபாவி! நம்ம பேரை இப்படி கெடுத்து வச்சிருக்கானே" என்று தான் தோன்றியது. "Mohanraj" என்ற தேடுசொல் கொடுத்து கூகிளில் தேடினால் முதல் பக்கத்தில் இந்த பாதகனின் பெயர் இன்றும் வருகிறது, இன்னும் சில காலத்துக்கு வந்து கொண்டிருக்கும் என்று நினைக்கிறேன். எட்டு-பத்து வருடத்துக்கு முன்னர் எனது பெயர் "IIT Delhi" வலைதளத்தில் "மாணவர்" என்ற வகையில் கூகிளின் முதல் பக்கத்தில் வந்து கொண்டிருந்தது. ஆனால் அப்போதெல்லாம் பிரபலம் ஆகாத என் பெயர் கடந்த இரு மாதங்களில் அனைவருக்கும் பரிச்சயமான பெயராகிப் போயிருந்தது. இந்த பெயரின் காரணமாக நான் எது நடக்கக் கூடாதுன்னு நினைத்தேனோ அது எனக்கு நடந்தது. குழந்தைகளின் கொலை செய்தி வந்த மறுநாள் காரில் அலுவலகத்தில் கூட வேலை செய்யும் நண்பரோடு திருப்பெரும்புதூர் சென்று கொண்டிருந்தேன். "கோயம்புத்தூர் குழந்தைகள் கொலை கேசில் கொலை செஞ்சவனோட பேரும் மோகன்ராஜ்"தானாம் என்றார் நண்பர். ஏற்கனவே இக்கொலை செய்தியைக் கேட்டு மனம் மிகவும் கனத்துப் போயிருந்தது, என் பெயரை இப்பாதகனோடு தொடர்பு படுத்தி யாரும் எதுவும் பேச மாட்டார்கள் என்றே நினைத்திருந்தேன். நண்பர் அவ்வாறு சொல்லியதும் என்ன சொல்வது என்றே ஒரு கணம் புரியவில்லை, நான் என்ன சொல்வேன் என்று அவர் எதிர்பார்த்தாரோ தெரியவில்லை, வெறுமனே "ஹ்ம்ம்" என்றேன். அவரும் மேற்கொண்டு எதுவும் சொல்லவில்லை.

கடந்த ஆண்டில் "கான்" என்ற தன்னுடைய இரண்டாம் பெயரின்(Surname) காரணமாக இந்தி திரைப்பட நடிகர் ஷாருக் கான், நியு ஆர்க் எனும் அமெரிக்க விமான நிலையத்தில் சந்தேகத்தின் காரணமாக விசாரிக்கப் பட்டார். இதற்கு தன்னுடைய மறைமுக எதிர்ப்பைத் தெரிவிப்பதற்காக, கான் என்ற பெயர் உள்ளவர்கள் எல்லாம் தீவிரவாதிகள் அல்ல என்று பொருள்படும் வண்ணம் "My Name is Khan" என்ற ஒரு திரைப்படத்தை தன் மனைவியைத் தயாரிக்க வைத்து அதில் நடித்தார். அவருக்கு இருக்கும் வசதிக்கு அவர் எதை வேண்டுமானாலும் செய்யலாம். நாமும் "My name is Mohanraj" என்று நம்மால முடிஞ்சது ஒரு பதிவை எழுதி வைப்போமான்னு தோனுச்சு. ஆனால் கடந்த சில மாதங்களாக நடப்பது போலவே பதிவுக்கு தலைப்பு மட்டும் தான் தோனுச்சு, அதுல என்ன மேட்டர் எழுதறதுன்னு தெரியலை. கடந்த சில மாதங்களாகவே...வேணாம் விடுங்க...பதிவோட தலைப்பை படிச்சுக்கங்க :)

****************************************************
நந்தலாலா படம் பாத்தேன். நல்லாருந்துச்சு. படத்தில் சில இடங்களில் எனக்கு ஒப்புதல் இல்லை, இருந்தாலும் இது ஒரு நல்ல படம் என்பதில் சந்தேகமில்லை. படம் முழுதும் பல குறியீடுகள் இருப்பதாக நான் உணர்ந்தேன். உதாரணமாக பாஸ்கர் மணிக்கும், அகிக்கும் வழிகாட்டும் கால் ஊனம் கொண்ட அந்த நபர். ஒற்றைக் காலுடன் கரடு முரடான காடு மலை எல்லாம் கடந்து செல்லக் கூடிய அந்நபரால், பாஸ்கர் மணி உதிர்த்த கடுஞ்சொல் ஒன்றினால் மன தைரியம் உடைந்து எழ முடியாமல் மறுபடியும் மறுபடியும் கீழே விழும் காட்சி அருமை.

படத்தில் இளையராஜாவின் இசையும் ஒரு கதாபாத்திரம் போலவே செயல்படுகிறது. இருப்பினும் இசை சில இடங்களில் பின்னணியில் இல்லாமல் முன்னணியில் இருப்பது போல எனக்கு தோன்றியது. சில இடங்களில் அது நெருடலாகத் தோன்றியது. ஒரு வேளை திரையரங்கத்தில் நான் உட்கார்ந்திருந்த சீட்டுக்கு வெகு அருகாமையில் ஸ்பீக்கர் இருந்ததும் ஒரு காரணமோ என்னவோ?

கலைஞர் தொலைக்காட்சியில் நந்தலாலா படத்துக்காக இளையராஜாவுடன் மிஷ்கின் நடத்திய நேர்காணலைக் கண்ட போது பல வருடங்களாக மனதில் இருந்த ஒரு சந்தேகத்துக்குப் பதில் கிடைத்தது. கீழே உள்ள காணொளியில் 3:24லிருந்து 4:30 வரை ராஜா சொல்வதை கேளுங்கள்.



"என்னை விட்டுப் போகாதே" திரைப்படத்தில் ராமராஜன் பாடுவதாக வரும் "பொன்னைப் போல ஆத்தா" பாடல் நான் அடிக்கடி விரும்பிக் கேட்கும் பாடல்களில் ஒன்று. கர்நாடக சங்கீத கச்சேரிகளில் மட்டுமே பயன்படுத்தப் படும் 'முகர்சிங்' இசை கருவியின் இசையுடன் தொடங்குவது இப்பாடலின் சிறப்பு.


இப்பாடலின் வரிகள் மறைந்த தன் தாயினை நினைத்து பற்றி ஒரு மகன் பாடுவது போல அமைந்திருக்கும். கீழே உள்ள வரிகளில் பாடல் ஆசிரியர் என்ன சொல்ல வருகிறார் என பல முறை யோசித்ததுண்டு. அப்பாடல் வரிகளின் பொருள் தெரிந்து கொள்வதற்கான என் தேடலும் தொடர்ந்து கொண்டேயிருந்தது, கலைஞர் டிவியில் நந்தலாலா படத்துக்கான இளையராஜாவின் நேர்காணலைக் காணும் வரை.

"வெட்டியில ஊரைச் சுத்தும் வேலையத்த மகனும் உண்டு
வெட்டிப் பய என்னை போல எத்தனையோ பேரும் உண்டு
கெட்டுப் போன மகளும் உண்டு
தட்டுக் கெட்ட தங்கையும் உண்டு
கேடு கெட்ட தந்தையும் உண்டு
கூறு கெட்ட தாரமும் உண்டு
கெட்டுப் போன தாயி இல்லையடி ஆத்தா
கெட்டுப் போன தாயி எங்கும் இல்லவே இல்லை"

இப்பாடலையும் இளையராஜா தான் எழுதியிருப்பார் என நினைக்கிறேன், ஆனால் அதை இணையத்தில் இருந்து உறுதி செய்து கொள்ள முடியவில்லை. ஆதிசங்கரரின் ஸ்லோகம் ஒன்றினால் இன்ஸ்பையர் ஆகி இப்பாடல் வரிகளை எழுதியிருப்பார் போலும்.

Vidhera gnanena dravina virahena alasathaya,
Vidheyasakya thaw thava charanayor yachyathirabhooth,
Hadethath kshanthavyam anani sa kalodharini shive,
Kuputhro jayetha kwachidapi, kumatha na bhavathi.

I forgot to salute your feet due to ignorance of rules,
In search of money, being lazy and inefficient.
Oh, mother of all the world and giver of all that is good,
It is easy for you to excuse me,
For a bad son may be born but there can be no bad mother.

என் அறியாமையின் காரணமாகவும், பொருள் தேடுவதில் முனைப்பாக இருந்ததினாலும், என்னுடைய சோம்பலின் காரணமாகவும் உலகத்தை எல்லாம் காக்கும் அன்னை உன்னை வழிபட தவறிவிட்டேன், என்னை மன்னிப்பது உனக்கு எளிதானது, ஏனெனில் கெட்ட மகன் ஒருவன் இருக்கலாம் ஆயினும் கெட்ட தாய் என்றொருவள் இருக்க முடியாது.

"இளையராஜா என் குரு" என்ற தலைப்பில் பதிவெழுத தலைப்பும் எழுத மேட்டரும் இருக்கிறது. ஆனால் அதற்கான நேரம் தான் இன்னும் அமையவில்லை என எண்ணுகிறேன். தலைவர் ஒவ்வொரு முறையும் பேசும் போது அவரிடமிருந்து கற்றுக் கொள்ள எப்போதும் ஏதாவது ஒன்று இருந்து கொண்டு தான் இருக்கிறது. ஒரு நல்லாசானைப் போல இம்முறை என்னுடைய ஐயத்தையும் தீர்த்து வேறு வைத்திருக்கிறார்.
"பொன்னைப் போல ஆத்தா" பாடல் வரிகளுக்கான பொருள் புரிந்தது. ஆனால் தான் பெற்ற குழந்தையையே குப்பைத் தொட்டியில் தூக்கி எறிந்து விட்டு அனாதையாக்கிச் செல்லும் தாய்களும் இருக்கத் தான் செய்கிறார்கள். அவ்வாறானவர்களை ஏன் மோசமான அல்லது கெட்ட தாய் என்று கூற முடியாது என்று விளங்கிக் கொள்ள முடியவில்லை...தேடல் மீண்டும் தொடர்கிறது.

20 comments:

  1. யப்பா...ரொம்ப நாள் கழிச்சி தூள் கிளம்பிட்டிங்க பதிவுல...;)

    தல என்னோட பெயருக்கு எல்லாம் நான் எம்புட்டு பீல் பண்ண வேண்டியிருக்கும் ;))

    \\"இளையராஜா என் குரு" என்ற தலைப்பில் பதிவெழுத தலைப்பும் எழுத மேட்டரும் இருக்கிறது\\

    ;)) விரைவில் எழுதுங்கள் ;)

    \\தலைவர் ஒவ்வொரு முறையும் பேசும் போது அவரிடமிருந்து கற்றுக் கொள்ள எப்போதும் ஏதாவது ஒன்று இருந்து கொண்டு தான் இருக்கிறது. ஒரு நல்லாசானைப் போல இம்முறை என்னுடைய ஐயத்தையும் தீர்த்து வேறு வைத்திருக்கிறார்.\\

    "எனக்கு குரு
    என் தவறுகள்
    உனக்கு" - ன்னு எழுதியவராச்சே இசை தெய்வம் சும்மா ;))

    ReplyDelete
  2. ஹிஹி ரொம்ப நாள் கழிச்சு பதிவு போட்டதுக்கு ஒரு பூச்செண்டு.

    இதுவரைக்கும் எனக்கு அந்த கொலைகாரன் பேர் வரும் போது உங்க ஞாபகம் வரல.. ஆனா இனி வரும் போலிருக்கே! :))

    சீக்கிரம் மை நேம் இஸ் மோகன்ராஜ் படம் திரைக்கதையை போடுங்க :)

    ReplyDelete
  3. சில சமயம் இப்படி தான் மனசுல சட்டுனு தோணிடுதுன்னாலும் யோசிக்காம அதை வெளிலயும் சொல்லிடுறோம்.. சொன்னது நாமள இருந்தா வர்ற சங்கடமும் கேட்டவரா இருந்தா பப்பரப்பான்னு முழிக்கறதும் ஸப்ப்பா.. அந்த பாட்டு வரில் என்ன புரியாம உங்களுக்கு இவ்வளவு நாளா குழப்பம், புரியலியே?

    ReplyDelete
  4. டைட்டில் + போஸ்ட் ரெண்டும் நல்லா இருக்கு. நீளமா ஒரே பதிவு எழுதறதை விட, இந்த மாதிரி சின்ன சின்னதா எழுதலாமே. படிக்கவும் ஈசி.

    ReplyDelete
  5. நல்ல சுவாரசியமான பகிர்வு கைப்ஸ்....//பாடி ஸ்டெடியா இருக்கு, மைண்ட் ஆஃப் ஆயிடுச்சு // - அதெல்லாம் ஒன்னும் இல்ல...சீக்கிரம் முழுமூச்சோடு இறங்குங்க :))

    ReplyDelete
  6. இதை காட்டிலும் பிசியாக இருந்த போதும் பதிவெழுதிக் கொண்டிருந்த காலம் ஒன்று உண்டு. ஆனால் இப்போதோ..."எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்" கதை தான். //

    சரி, சரி, அதான் அன்னிக்குத் தொலைபேசி மிரட்டலிலேயே பார்முக்கு வந்துட்டீங்கனு புரிஞ்சு போச்சு, அப்புறம் என்ன?? ஆரம்பிங்க, ஷ்டார்ட், ம்யூஜிக்!!!! :)))))))))))))))

    ReplyDelete
  7. படிக்க சுவாரசியாமாய் இருக்கு இந்த பதிவு.

    ReplyDelete
  8. //யப்பா...ரொம்ப நாள் கழிச்சி தூள் கிளம்பிட்டிங்க பதிவுல...;)
    //

    நன்றி கேப்டன் கோபிநாத்

    //தல என்னோட பெயருக்கு எல்லாம் நான் எம்புட்டு பீல் பண்ண வேண்டியிருக்கும் ;))
    //

    ஒரு சிரிப்பு போலீஸா அறியப்படறதுக்கும் ஒரு அயோக்கியனா அறியப்படறதுக்கும் நெறைய வித்தியாசம் இருக்கு ஜி :(


    //"எனக்கு குரு
    என் தவறுகள்
    உனக்கு" - ன்னு எழுதியவராச்சே இசை தெய்வம் சும்மா ;))
    //

    புதுசா ஒன்னு தெரிஞ்சுக்கிட்டேன் நன்றி.

    ReplyDelete
  9. //
    இதுவரைக்கும் எனக்கு அந்த கொலைகாரன் பேர் வரும் போது உங்க ஞாபகம் வரல.. ஆனா இனி வரும் போலிருக்கே! :))//

    அப்போ நானா தான் ஒளறிட்டேனா? :(

    //சீக்கிரம் மை நேம் இஸ் மோகன்ராஜ் படம் திரைக்கதையை போடுங்க :)//

    போஸ்ட் எழுதவே நாக்கு தள்ளுது...இதுல எங்கேருந்து திரைக்கதை எல்லாம்?
    :(

    ReplyDelete
  10. //அந்த பாட்டு வரில் என்ன புரியாம உங்களுக்கு இவ்வளவு நாளா குழப்பம், புரியலியே?
    //

    வாங்க அவிவா,
    "Iam saving for it" அப்படின்னு அப்பாவுக்கே பாடம் சொல்லி புரிய வச்சவங்க நீங்க. நான் உங்க லெவலுக்கு இல்லை :)

    "கெட்டுப் போன தாயி இல்லையடி ஆத்தா
    கெட்டுப் போன தாயி எங்கும் இல்லவே இல்லை"

    கெட்டுப் போன தாயி எங்கும் இல்லவே இல்லைன்னு ஏன் சொல்றாரு பாடலாசிரியர்னு தான் எனக்கு டவுட். அப்புறமா தான் ஆதிசங்கரர் ஸ்லோகத்தை மேற்கோள் காட்டுனப்ப புரியுது, ஒரு மனுஷனுக்கு இருக்கற எல்லா உறவுகளும் கெட்ட உறவுகளா இருக்க வாய்ப்பிருக்கு, ஆனா தாய்ங்கிறவ மட்டும் மோசமானவளா இருக்க முடியாதுன்னு புரியுது:)

    ReplyDelete
  11. //டைட்டில் + போஸ்ட் ரெண்டும் நல்லா இருக்கு. நீளமா ஒரே பதிவு எழுதறதை விட, இந்த மாதிரி சின்ன சின்னதா எழுதலாமே. படிக்கவும் ஈசி.

    //


    அப்படீங்கற? இனி முயற்சி பண்ணறேன். நன்றிப்பா :)

    ReplyDelete
  12. //நல்ல சுவாரசியமான பகிர்வு கைப்ஸ்....//பாடி ஸ்டெடியா இருக்கு, மைண்ட் ஆஃப் ஆயிடுச்சு // - அதெல்லாம் ஒன்னும் இல்ல...சீக்கிரம் முழுமூச்சோடு இறங்குங்க :))

    //

    பகவானே!

    ரொம்ப நன்றிங்க. எனக்கு ரொம்ப உற்சாகமூட்டுது உங்க வார்த்தைகள்.

    ReplyDelete
  13. //சரி, சரி, அதான் அன்னிக்குத் தொலைபேசி மிரட்டலிலேயே பார்முக்கு வந்துட்டீங்கனு புரிஞ்சு போச்சு, அப்புறம் என்ன?? ஆரம்பிங்க, ஷ்டார்ட், ம்யூஜிக்!!!! :)))))))))))))))
    //

    தலைவிஜி,
    மிரட்டலா? நானா? ஐயகோ?
    :(

    ReplyDelete
  14. //படிக்க சுவாரசியாமாய் இருக்கு இந்த பதிவு.

    //

    வருகைக்கும் ஊக்கத்துக்கும் மிக்க நன்றி மேடம் :)

    ReplyDelete
  15. Epppai irundha ivar appadaiye irukkarennu solra madiri irukku. romba nalla ezhuthi irukkeenga ..next post humorous posta podunga ... Paavai

    ReplyDelete
  16. தல

    நீண்ட இடைவெளிக்குப் பிறகு கலக்கலான பதிவு, ரசித்தேன்

    பொன்னப்போல ஆத்தா சாட்சாத் மொட்ட பாஸ் தான் எழுதியது

    ReplyDelete
  17. //next post humorous posta podunga ... Paavai
    //

    வாங்க பாவை மேடம்,

    எனக்கு கல்யாணம் ஆகி மூனு வருஷம் ஆயிடுச்சுங்களே...இருந்தாலும் நீங்க சொல்ற மாதிரி போஸ்ட் போட முயற்சிக்கிறேன் :)

    ReplyDelete
  18. //தல

    நீண்ட இடைவெளிக்குப் பிறகு கலக்கலான பதிவு, ரசித்தேன்

    பொன்னப்போல ஆத்தா சாட்சாத் மொட்ட பாஸ் தான் எழுதியது

    //

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி அண்ணாச்சி.

    ReplyDelete
  19. Dear Mr Mohanraj,

    Mine will be the last I am sure.
    Just heard about your site and added in my reader subscription.
    This particular posting has made me your follower with immediate effect.
    I am not well versed with tamil, but can appreciate good works.
    Keep up the good work.
    Congrats.

    ReplyDelete
  20. //Dear Mr Mohanraj,

    Mine will be the last I am sure.
    Just heard about your site and added in my reader subscription.
    This particular posting has made me your follower with immediate effect.
    I am not well versed with tamil, but can appreciate good works.
    Keep up the good work.
    Congrats.
    //

    Dear Sir,

    I was elated after reading your comment. Thanks a ton for your appreciation and your kind words.

    ReplyDelete