ஒரு ரெண்டு மாசம் முன்னாடி இருக்கும்னு நெனைக்கிறேன், ஞாயித்துக் கிழமை சாயந்திரம் விஜய் டிவி நீயா நானா நிகழ்ச்சி போய்க்கிட்டுருந்தது. அன்னைக்கு விவாதிக்கப்பட்ட தலைப்பு வாழ்க்கையில் முடிவுகள் எடுப்பதில் மனதை உபயோகிப்பவர்கள் Vs மூளையை உபயோகிப்பவர்கள் அப்படின்னுட்டு. மனதை உபயோகிப்பவர்கள் என்ற தரப்பில் பேசியவர்கள் உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பார்களாம். அந்த நேரத்தில் அவர்களுக்கு எது சரியென்று படுகிறதோ அதை செய்து விடுவார்களாம். நல்லது செய்ய போய் ஏமாந்து போன அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டார்கள்.
மூளையை உபயோகிப்பவர்கள் என்ற தரப்பில் பேசியவர்கள் எதையும் தீர்க்கமாக ஆய்ந்து முடிவெடுப்பார்களாம். உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க மாட்டார்களாம். ஒரு விஷயத்தில் இருக்கிற லாஜிக்கைத் தவறாமல் பார்த்து ஆராய்ந்து முடிவெடுப்பார்களாம். இரு தரப்பினருக்கும் இடையே விவாதம் நடைபெற்று சூடு பற்றிக் கொண்டிருந்தது. மனதை உபயோகிப்பவர்கள் Vs மூளையை உபயோகிப்பவர்கள் என்ற தலைப்பே தவறு என்று என் தந்தையார் கூறினார். அதை பற்றிய விவாதம் இப்போது நமக்கு வேண்டாம்.
மனதை உபயோகித்து முடிவெடுப்பதாகச் சொல்லிய அணியினர் மூளையை உபயோகித்து முடிவெடுப்பதாகச் சொல்லிய அணியினரைப் பார்த்து "நீங்கள் ஒரு நெடுஞ்சாலையில் உங்கள் காரில் அதிவேகமாகச் சென்று கொண்டிருக்கிறீர்கள், அப்போது உங்கள் பாதையின் குறுக்கே ஒரு மாடோ அல்லது ஒரு நாயோ குறுக்கிடுகிறது என்று வைத்துக் கொள்வோம். வண்டியை அபாயமில்லாமல் நிறுத்துமளவுக்கு உங்களிடம் நேரமில்லை. அப்போது நீங்கள் என்ன செய்வீர்கள்?" என்று கேட்டார்கள்.
அப்போது மூளை அணியினைச் சேர்ந்த ஒரு பெண்மணி "நெடுஞ்சாலையில் அதிவேகத்தில் சென்று கொண்டிருக்கும் போது என்னால் வண்டியை நிறுத்த முடியாத போது அந்த நாயின் மீது ஏற்றி விட்டுச் சென்று விடுவேன். அந்நேரத்தில் என்னுயிரையும் எந்நலனைப் பற்றி மட்டும் தான் சிந்திப்பேன்" என்றார். உடனே மனது அணியில் இருந்தவர்கள் நாங்களாக இருந்தால் எங்கள் உயிருக்கு ஆபத்து வந்தாலும் நாயைக் காப்பாற்றவே கடைசி வரை முயல்வோம் என்றனர்.
அதன் பின்னர் மனது அணியில் இருந்தவர்கள் "நாயோ மாடோ சாலையைக் கடப்பதாக நினைக்க வேண்டாம். நீங்கள் பெற்ற உங்களுடைய குழந்தை நெடுஞ்சாலையில் அவசரமாகக் குறுக்கே வந்து விடுகிறது, நீங்கள் வேகமாக வண்டியை ஓட்டிக் கொண்டு வந்து விடுகிறீர்கள், இப்போது என்ன செய்வீர்கள்" என்று கேட்டனர். அதற்கு மூளை அணியில் முன்னர் பதில் சொன்ன அதே பெண் சொன்னார் "நாயாக இருந்தாலும், மாடாக இருந்தாலும், நான் பெற்ற என் குழந்தையாக இருந்தாலும் எனக்கு ஆபத்து ஏற்படுகிறது என்ற சூழ்நிலை ஏற்படும் போது நான் நிற்காமல், குறுக்கே வருபவர்கள் மீது ஏற்றிக் கொண்டு சென்று கொண்டே இருப்பேன்" என்றார்.
அது வரை அவர் பேசியது ஒரு மாற்று கருத்து என்ற அளவில் ஓரளவு ஏற்றுக் கொள்ளும்படியானது என்று வைத்துக் கொண்டாலும் அதற்குப் பின் அவர் சொல்லியது தான் என்னை மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் கொள்ளச் செய்தது "குழந்தை வேண்டுமானால் இன்னொன்று பெற்றுக் கொள்ளலாம். நம்முயிருக்கே ஆபத்து எனும் போது இவ்வாறு செய்வதில் தவறொன்றுமில்லை" என்றார். இதை கேட்டதும் எனக்கு ரத்தம் கொதிக்கத் தொடங்கியது. அவர் கடைசியில் சொல்லிய கருத்து மிகவும் ஆபாசமானது என்பது என் எண்ணம். ஆணும் பெண்ணும் இணைந்து துய்க்கும் இன்பத்தின் உபரி (by-product) தான் குழந்தை என்ற ஒரு எண்ணம் கொண்டவரால் மட்டும் தான் இவ்வாறு பேச முடியும் என்பது என் கருத்து.
ஒரு வேளை உண்மையில் அத்தகைய சூழ்நிலையில் அப்பெண் அவ்வாறு செய்யக் கூடியவராக இல்லாமலும் இருக்கலாம். நாம் சொல்லிய கருத்தில் இருந்து எந்நிலையிலும் பின்வாங்கக் கூடாது என்ற ஒரு வைராக்கியத்திலும் அவ்வாறு பேசி இருக்கலாம். அப்பெண்ணே தான் பேசியதைப் பின்னாளில் பார்த்தால் கண்டிப்பாக வருந்தலாம். கேவலம் ஒரு விவாதத்தில் ஜெயிப்பதற்காக என்ன வேண்டுமானாலும் பேசலாமா? இவ்வாறு பேசி ஜெயித்து யாருக்கு எதை நிரூபிக்கப் போகிறோம் என ஒரு கணம் மனதை உபயோகித்து வேண்டாம், மூளையை உபயோகித்தாவது ஒரு முடிவுக்கு வந்திருக்கலாம் இல்லையா?
இதே போல் தான் நீயா நானா நிகழ்ச்சியில் நான் பார்த்த வேறு சில பாகங்களில் பங்கு பெற்ற கணவன்-மனைவியர் சிலர் பேசிய பேச்சுக்களும். எதிர் அணியில் இருந்த கணவனைப் பற்றி "என் கணவர் இந்த மாதிரி" என்று கணவரின் சில குறைகளைப் பற்றி மனைவியும், "என் மனைவி இந்த மாதிரி" என்று மனைவியின் சில குறைகளைப் பற்றி கணவரும் கூறுவதைப் பார்த்திருக்கிறேன். ரெண்டு பேர் தனியாக உட்கார்ந்து பேசிக் கொள்ள வேண்டிய ஒரு விஷயத்தை ஒரு அரங்கத்தில் எல்லோர் முன்னிலையிலும் கூறுவதை என்னால் ஏனோ sportiveஆக எடுத்துக் கொள்ள முடியவில்லை.
தன்னுடைய வாழ்க்கைத்துணை தன்னுடைய குறைகளைப் பற்றி ஒரு பொதுவிடத்தில் வேற்று மனிதர்களிடம் கூறுவதைப் பார்த்து "நீ என்னிடம் இதை முன்பே சொல்லியிருக்கலாமே" என்ற பார்வை பார்த்த ஒரு சிலரையும் அந்நிகழ்ச்சியில் கண்டிருக்கிறேன். தன்னுடைய வாழ்க்கைத் துணையின் குறைகளைப் பற்றி வேற்று மனிதர்களிடம் பகிர்ந்து கொண்டுவிட்டு நாளை தன் கணவரையோ மனைவியையோ எவ்வாறு கண்ணோடு கண் வைத்து நேருக்கு நேராகப் பார்த்து பேசுவார்கள் என்பதும் எனக்கு இன்னும் விளங்கவில்லை. விஜய் டிவிக்கு அது வியாபாரம், சம்பந்தப் பட்டவர்களுக்கு அது வாழ்க்கையில்லையா? ஏன் அதை உணர மறுக்கிறார்கள்?
நான்கு நாட்களுக்கு முன் அனிமல் ப்ளானெட் (Animal Planet) அலைவரிசையில் ஒரு நிகழ்ச்சியைக் கண்டேன். 'Heart of a Lioness' என்பது அந்நிகழ்ச்சியின் தலைப்பு. சபா டக்ளஸ் ஹாமில்டன்(Saba Douglas Hamilton) என்பவர் வனவிலங்குகளைப் பற்றி ஆய்வு மேற்கொள்பவரும், தொலைக்காட்சித் தொகுப்பாளரும் ஆவார். கிழக்காப்பிரிக்க நாட்டான கீனியாவில் பிறந்து வளர்ந்தவரான அவர் இங்கிலாந்தை மூலமாகக் கொண்டவர். சம்புரு வனவிலங்கு சரணாலயத்தில் (Samburu Wildlife Reserve) தாங்கள் கண்ட ஒரு விநோதமான காட்சியைப் பற்றி சபாவிற்குத் தெரியப் படுத்துகின்றனர் வனவிலங்கு பாதுகாவலர்கள்.
ஒரிக்ஸ் (Oryx) எனும் வகை மானின் குட்டி ஒன்றை ஒரு பெண் சிங்கம் வளர்ப்பதைப் பற்றிய செய்தி தான் அது. அதை நம்ப முடியாமல் தானே கண்டறிவதற்காக சபா காட்டுக்குள் பயணித்து ஒரு ஆவணப் படத்தை எடுத்திருக்கிறார். அப்படம் தான் "Heart of a Lioness". முதன் முதலில் மான் குட்டியின் பின்னே அப்பெண் சிங்கம் மெல்ல நடந்து செல்வதைப் பார்த்து நான் அடைந்த ஆச்சரியத்திற்கு அளவே இல்லை. ஆப்பிரிக்க காடுகளில் மிகுந்த அனுபவம் கொண்ட சபாவும் தான் இது போல ஒரு நிகழ்வை அது வரை கண்டதே இல்லை என்கிறார்.
அச்சிங்கத்திற்கு அங்கிருந்த மக்கள் 'Kamunyak' என்று பெயர் சூட்டியிருந்தனர். அப்பெயருக்கு அவர்களுடைய மொழியில் 'ஆசிர்வதிக்கப்பட்டவள் - Blessed One' என்று பொருளாம். தன்னுடைய உணவாகக் கூடிய ஒரு பிராணியைக் கமுன்யாக், பேணி வளர்ப்பதற்கான காரணத்தை அறிய முற்படுகிறார் சபா. சிங்கங்களைப் பற்றிய ஆய்வாளர் ஒருவரின் மூலம் கமுன்யாக்கின் இவ்விசித்திர குணத்திற்கான காரணம் ஒரளவுக்குத் தெரிய வருகிறது. அது சிங்கங்கள் எப்போதும் ஒரு சமூகமாக(Pride) வாழ்வன. மற்ற கொடிய விலங்குகளைப் போல் அல்லாமல் சிங்கங்கள் ஆண் சிங்கம், சில பெண் சிங்கங்கள், அதன் குட்டிகள் என்று எப்போதும் ஒரு கூட்டமாகவே வாழும் தன்மையுடையவை.
காடுகளில் மனிதர்களின் குறுக்கீட்டால், காடுகள் சுருங்கி அதன் காரணமாக சிங்கங்களின் வாழும் முறைமையில் பல மாற்றங்கள் ஏற்பட்டுவிடுகின்றன. கிழக்கு ஆப்பிரிக்க பழங்குடியினரான மசாய் இன மக்கள் சிங்கங்களைத் தங்களுடைய மிகப்பெரும் எதிரிகளாகக் கருதுகின்றனர். அத்தோடு சிங்கங்களை வேட்டையாடுதல் வீரத்தின் அடையாளமாகக் கருதப்படுகிறது. இவ்வாறு பல்வேறு காரணங்களினால், தன்னுடைய இயல்பான குடும்ப நிலை பாதிக்கப்பட்டு தன் சொந்தங்களை எல்லாம் இழந்து ஒரு சிங்கம் அனாதையாவதற்கு சாத்தியக்கூறுகள் உள்ளனவாம். அவ்வாறு கமுன்யாக் எனும் அச்சிங்கம் தனிமை படுத்தப் பட்டிருக்கலாம். அதனுடைய குட்டிகளை அது பறிகொடுத்திருக்கலாம்.
அதன் காரணமாக, தன் குட்டியை ஒத்த மான் குட்டியைத் தன்னுடைய குட்டியாகப் பாவித்து அன்பாய் நடத்துகிறது. மான் குட்டி சிங்கத்திடம் வந்து சேர்ந்த நாளிலிருந்து இமை பொழுதும் அக்குட்டியை விட்டுப் பிரியாமல் தன் கண்காணிப்பிலேயே வைத்துக் கொண்டதாம் கமுன்யாக். கிட்டத்தட்ட 15 நாட்கள் இரவும் பகலும் சிங்கத்தையும், மான் குட்டியையும் பின் தொடர்கிறார் சபா. அக்காலக் கட்டத்தில் கமுன்யாக் வேட்டையாடச் செல்லவில்லையாம். ஒன்றும் சாப்பிடவும் இல்லையாம். மான் குட்டியைக் கொன்று தின்று வரும் மற்ற விலங்குகளையும் கமுன்யாக் விரட்டி விடுமாம். தன் குட்டியைத் தன்னொடு கொண்டு செல்ல வந்த தாய் மானையும் கமுன்யாக் விரட்டி விட்டதாம்.
பதினைந்து நாட்கள் கண்ணும் கருத்துமாக மான் குட்டியைத் தன் கண்காணிப்பிலேயே வைத்துக் கொண்டது அச்சிங்கம். மான்குட்டியும் சரியாக உணவு உட்கொள்ளவில்லை என்ற போதிலும், அவ்வப்போது புல் மேயும். சிங்கங்களை எதிரிகளாகக் கருதும் மசாய் இன மக்களாலேயே, இச்சிங்கம் கடவுளால் அனுப்பி வைக்கப்பட்ட தூதர் என்ற ரீதியில் போற்றப் பெற்றது. சிங்கம் ஆகாரம் ஏதும் உட்கொள்ளாமல் வாடுவதைக் கண்ட வனவிலங்கு சரணாலயத்தின் வார்டனும் சிங்கத்துக்கு மாமிசம் தரச் செய்கிறார். கமுன்யாக் அதையும் சாப்பிட மறுக்கிறது.
பதினாறாம் நாள், கமுன்யாக்கும் அம்மான் குட்டியும் ஒரு குட்டையில் சிறிது நீரருந்துகின்றன. அதன் பின்னர் சிங்கம் அயர்ந்து கொஞ்சம் இளைப்பாறுகிறது. மான் குட்டி சிங்கத்தின் பார்வையிலிருந்து சற்றே விலகிச் செல்லுகிறது. கமுன்யாக்கும் அதை பின் தொடராமல் அமர்ந்திருக்கிறது. அப்போது எங்கிருந்தோ வந்த ஒரு பெரிய ஆண் சிங்கம் மான்குட்டியைத் தூக்கிக் கொண்டு சென்று விடுகிறது. இதை நேரடியாகப் படம் பிடித்துக் கொண்டிருந்த சபா நாதழுதழுக்கப் பேசியதை என்னால் இன்னும் மறக்க முடியவில்லை. அதன் பின்னர் நடந்தது எந்தக் கல்லையும் கரையச் செய்வது.
தான் பெற்ற தன் குட்டியைப் பறிகொடுத்தது போல கமுன்யாக் செய்வதறியாது திகைக்கிறது. ஆண் சிங்கம் மான் குட்டியைத் தூக்கிச் சென்ற இடத்திற்கு கமுன்யாக் பின் தொடர்ந்து செல்கிறது. ஆனால் வலிமை பொருந்திய பெரிய சிங்கத்தை எதிர்த்து போராடும் சக்தியில்லாமல் தான் பதினைந்து நாட்களாகப் பார்த்து பார்த்து வளர்த்த மான்குட்டி கொல்லப்படுவதை பார்க்கிறது. கமுன்யாக் என்ற அந்த சிங்கம் அந்நேரத்தில் எப்படி நடந்து கொண்டது என்பதை அந்நிகழ்ச்சியைப் பார்த்தால் மட்டுமே உணர முடியும்.
இது எல்லாம் நடந்தது 2001 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில். அதன் பின்னர் கமுன்யாக் மேலும் 5 மான் குட்டிகளை வளர்த்ததாம். ஆனால் முதல் மான்குட்டியைப் போல மற்ற குட்டிகளால் நீண்ட நாட்கள் தாக்குப் பிடிக்க முடியவில்லையாம். 2004ஆம் ஆண்டுக்குப் பின்னர் கமுன்யாக்கை யாரும் பார்க்கவில்லையாம். ஆனால் அச்சிங்கத்திற்கு ஒரு தேவதைக்குரிய மதிப்பினையும் மரியாதையையும் தந்திருக்கின்றனர் அங்குள்ள மக்கள்.
இந்நிகழ்ச்சிக்குத் தொடர்புடைய சுட்டிகள் சில:
அனிமல் ப்ளானெட் காணொளிகள்
http://www.lewa.org/oryx-lioness.php
http://www.douglas-hamilton.com/Site/HolFAQ.html
மான்குட்டியை வளர்க்கும் சிங்கத்தினைப் பற்றிய நிகழ்ச்சியினை அனிமல் ப்ளானெட்டில் கண்டதும் எனக்கு விஜய் டிவியில் நான் இரு மாதங்களுக்கு முன்னர் கண்டிருந்த நீயா நானா நிகழ்ச்சியில் அப்பெண் பேசிய பேச்சு நினைவுக்கு வந்தது. தன்னுடைய உணவாகக் கூடிய ஒரு உயிரிடம் அன்பு செலுத்தும் ஒரு கொடிய விலங்கையும், வறட்டு வாதத்துக்காகத் தான் பெற்ற பிள்ளையானாலும் பலி கொடுப்பதைப் பற்றி சிறிதும் கூச்சமின்றி பேசும் பெண்ணையும் பார்த்தது உண்மையிலேயே விந்தையிலும் விந்தை தான். அனிமல் ப்ளானெட்டில் கண்ட நிகழ்ச்சியைப் பற்றி கூகிளில் தேடிக் கொண்டிருந்த போது, அந்நிகழ்ச்சியை ஏற்கனவே பார்த்திருந்தவர்கள் சிலர், விவிலியத்தில்(Bible) இருந்து சில வரிகளை மேற்கோள் காட்டியிருந்தனர். அது -
"The wolf also shall dwell with the lamb, The leopard shall lie down with the young goat,
The calf and the young lion and the fatling together; And a little child shall lead them."
Isaiah 11:6
ஓநாயோடு செம்மறி ஆட்டுக்குட்டியும், சிறுத்தையோடு ஆடும், சிங்கத்தோடு கன்றுக்குட்டியும் அன்போடு தன் இயல்பை மாற்றிக் கொண்டு உறவாடும் காலத்தில், இவ்விலங்குகளை விட உயர்ந்த மதி கொண்ட மனிதன் தன்னுடைய இயல்பினை மறந்து விலங்கினின்றும் தாழ்ந்து கொண்டே செல்கிறான் என்பதறிந்து வேதனையே மிஞ்சுகிறது.
அதாவது அறிவில்லாம பேசுனவங்க எல்லாம் Animal Planet வரதுக்குதான் சரி்ங்கிறீங்க
ReplyDeleteகைப்புள்ள நல்லா எழுதி இருக்கீங்க..ஆனால் பத்தி பிரித்து எழுதாததால் படிப்பதற்கு சிரமமாக உள்ளது..
ReplyDeleteநாம் சிறப்பாக எழுதினாலும் சிலவற்றை சரியாக செய்ய வில்லை என்றால் நம் உழைப்பு திறமை வீணடிக்கப்படும்.
எனவே உங்கள் பதிவு சிறப்பாக இருந்தும், இதை போல மொத்தமாக எழுதுவதால் படிப்பவர்கள் ஆர்வம் குறைந்து முழுவதும் படிக்காமலே சென்று விட வாய்ப்புண்டு,
அன்புடன்
கிரி
மனுஷப்ப்பயளுவன்னாலே அப்படித்தான் விடுங்க
ReplyDeleteநானும் பார்த்தேன் அந்த விவாதம் கொடுமைதான் :(
ReplyDelete///"The wolf also shall dwell with the lamb, The leopard shall lie down with the young goat,
ReplyDeleteThe calf and the young lion and the fatling together; And a little child shall lead them."
Isaiah 11:6 ////
்ம்ம் அருமை அருமையான பதிவு கைப்ஸ்..
கடவுளின் இந்த தன்மை மற்ற உயிரங்களிடம் இருக்குது...ஆனா மனுசங்க கிட்ட இல்லை.. ஹ்ம்ம்ம்
என்னால தொலைக்காட்சில வர்ர எந்த விவாதத்தையும் 2 நிமிஷம் கூட பார்க்க முடியாது...
அனிமல் ப்ளேனட் விமர்சனம் அருமை....ரொம்ப நாளைக்கு அப்புறம் பொறுமையா ஒரு பதிவு .. படிச்சேன்..நன்றி
கைப்புள்ள,
ReplyDeleteநல்ல பதிவு! சில நேரங்களில் வீம்பிற்காக, எடுத்த தலைப்பில் நிற்க வேண்டுமென அபத்தமோ அபத்தமாக உளறி வைப்பதும் நடைமுறைதானே! ஆனா, நீங்க குறிப்பிட்ட விசயம் அதன் உச்சம், சகிக்கலை.
பதிவிற்கு நன்றி...
மனதை நெகிழச் செய்கிறது பதிவும் அதல் உள்ள நிகழ்வும் :(
ReplyDeleteநானும் இதைப்பார்த்திருக்கிறேன். இந்த சபா எனும் பெண் பிபிசி யின் Big Cat Diaries தொடரிலும் வருவார். மற்றபடி அந்தப்பெண்ணின் சொன்னது :(
ReplyDeleteமுதல் விசயத்தை படிக்க ஆரம்பித்து .. இந்தமாதிரி மைக் கிடைச்சா உளறுரவங்களைப்பத்தி தெரியாதான்னு ஓடிப்போயிடாம இருக்க நல்ல தலைப்பு வச்சீங்க.. முன்னத ஓட்டமா படிச்சிட்டு பின்னதை மகளூக்கும் வாசிச்சு காமிச்சேன் நன்றி.. கைப்ஸ். முதல் விசயத்தை எல்லாம் சீரியஸா எடுத்துக்கிட்டு கை வலிக்க எழுதாதீங்க.. என் கைவலி , விரதத்தை எல்லாம் விட்டுட்டு கமெண்ட் போடறேனாக்கும்..
ReplyDelete//அதாவது அறிவில்லாம பேசுனவங்க எல்லாம் Animal Planet வரதுக்குதான் சரி்ங்கிறீங்க//
ReplyDeleteஹி...ஹி...அப்படியில்லீங்க விவசாயி. இந்த மாதிரி ஏடாகூடமா பேசறவங்களுக்கு எல்லாம் நம்ம தமிழ் தொலைக்காட்சிகள்ல பிரகாசமான எதிர்காலம் இருக்குன்னு புரிஞ்சிக்கனும்.
:(
//எனவே உங்கள் பதிவு சிறப்பாக இருந்தும், இதை போல மொத்தமாக எழுதுவதால் படிப்பவர்கள் ஆர்வம் குறைந்து முழுவதும் படிக்காமலே சென்று விட வாய்ப்புண்டு,
ReplyDeleteஅன்புடன்
கிரி//
வாங்க கிரி,
உங்கள் கனிவான பின்னூட்டத்துக்கு மிக்க நன்றி. உங்களுடைய ஃபீட்பேக்கைப் பார்த்து நேற்று இரவே பத்திகளைச் சிறியதாகப் பிரித்து விட்டேன். இப்போது முன்பை விட படிப்பதற்கு சற்று சுலபமாக இருக்கும் என எண்ணுகிறேன். இனி வரும் பதிவுகளில் தாங்கள் கூறியதை எழுதும் போதே பின்பற்ற முயல்கிறேன். மிக்க நன்றி.
:)
//மனுஷப்ப்பயளுவன்னாலே அப்படித்தான் விடுங்க//
ReplyDeleteவாங்க ஜீவ்ஸ் அண்ணாச்சி,
மிருகங்கள் தன்னிலையில் இருந்து மாறுகின்றன...அதே போல மனிதர்களான நாமும் மாறுகின்றோம்...என்னத்தச் சொல்ல?
:(
//நானும் பார்த்தேன் அந்த விவாதம் கொடுமைதான் :(//
ReplyDeleteவாங்க மின்னலாரே,
உண்மையிலேயே அந்த விவாதத்தைப் பார்த்துவிட்டு கோபத்தில் கொப்பளித்துக் கொண்டிருந்தேன். ஏனோ இந்த காதில் வாங்கி அந்த காதின் வழியாக விட இயலவில்லை.
:(
//்ம்ம் அருமை அருமையான பதிவு கைப்ஸ்..
ReplyDeleteகடவுளின் இந்த தன்மை மற்ற உயிரங்களிடம் இருக்குது...ஆனா மனுசங்க கிட்ட இல்லை.. ஹ்ம்ம்ம்//
பாராட்டுக்கு மிக்க நன்றி மேடம்.
//என்னால தொலைக்காட்சில வர்ர எந்த விவாதத்தையும் 2 நிமிஷம் கூட பார்க்க முடியாது...//
எனக்கும் இப்பல்லாம் அப்படி தான் இருக்கு. எந்த சேன்ல்லயாச்சும் விவாதம் வந்துச்சுன்னாலும் உடனே காமெடி சேனலுக்கு மாத்திடறேன், இல்ல டிவி முன்னாடியிலேருந்து எழுந்து போயிடுறேன்.
//அனிமல் ப்ளேனட் விமர்சனம் அருமை....ரொம்ப நாளைக்கு அப்புறம் பொறுமையா ஒரு பதிவு .. படிச்சேன்..நன்றி//
ஹி...ஹி...பொறுமையா படிச்சதுக்கு மீ தான் நன்றி.
:)
மற்றுமொரு கலக்கல் போஸ்ட் கைப்ஸிடமிருந்து!!
ReplyDeleteஅந்த எபிசோட் நானும் பார்த்தேன்..அபத்தத்தின் உச்சம்!! கண்டிப்பா அது வாதத்துக்கு மட்டுமே சொல்லியிருப்பாங்கன்னு மனசுலே நினைச்சுக்கிட்டேன்! அப்புறம் இந்த அனிமல் பிளானர் விஷயம் புதுசு..கண்டிப்பா பாக்கிறேன்!!
அருமையா பதிவு கைப்புள்ள!
ReplyDelete:-(
//கைப்புள்ள,
ReplyDeleteநல்ல பதிவு! சில நேரங்களில் வீம்பிற்காக, எடுத்த தலைப்பில் நிற்க வேண்டுமென அபத்தமோ அபத்தமாக உளறி வைப்பதும் நடைமுறைதானே! ஆனா, நீங்க குறிப்பிட்ட விசயம் அதன் உச்சம், சகிக்கலை.
பதிவிற்கு நன்றி...//
வாங்க தெகா,
வருகைக்கும் உங்கள் கருத்துக்கும் மிக்க நன்றி.
//இவ்விலங்குகளை விட உயர்ந்த மதி கொண்ட மனிதன் தன்னுடைய இயல்பினை மறந்து விலங்கினின்றும் தாழ்ந்து கொண்டே செல்கிறான் என்பதறிந்து வேதனையே மிஞ்சுகிறது.//
ReplyDeleteஆமாம்..ஆமாம்...
ம்ம்ம்ம்....
ReplyDeleteஎல்லாம் ஒரு பேச்சுக்காக பேசுவது தான். சாதாரணமாக வண்டி ஒட்டும் போது குறுக்கே ஏதும் வந்தால் அதன் மேல் மோதாமல் தவிர்க்க பார்ப்பது தான் நம் நாட்டு மக்களின் வெளிப்பாடாக இருக்கும் என்பது என் எண்ணம்.
அனிமல் பத்தி சொல்ல வார்த்தை ஏதும் இல்லை.
மிருகங்கள் மனிதத்துடன் நடக்க ஆரம்பித்து விட்டது போலவும். மனிதர்கள் மிருகமாக நடமாட தொடங்கி விட்டார்கள் என்பதும் தான் புரிகிறது
கைப்புள்ள..
ReplyDeleteரொம்ப நாளாச்சு களத்துக்கு வந்து..
நல்லாயிருக்கு.. அந்த சிங்கம்-மான் பத்தி நானும் கேள்விப்பட்டேன். ஆனால் பெயர் தெரியாததால் தேடாமல் விட்டுவிட்டேன்.
இன்றைக்கு உமது புண்ணியத்தில் பார்த்துவிட்டேன்..
நன்றிகள்..!
//மனதை நெகிழச் செய்கிறது பதிவும் அதல் உள்ள நிகழ்வும் :(//
ReplyDeleteஅதே தாங்க ஆதவன். சிங்கம் இங்கே கொஞ்சம் சைக்கோ மாதிரி நடந்துக்கிட்டாலும் அது மான் மேல வச்சிருந்த அன்பு உண்மையானது. மான் செத்ததும் சிங்கம் காட்டுன ரியாக்ஷனே அதுக்கு சாட்சி. ஒரு வேளை மான் குட்டி தன் தாய் மானோட இருந்திருந்தா இன்னும் கொஞ்சம் நாள் உயிர் வாழ்ந்திருக்கலாம்...தாய் கிட்ட பால் குடிச்சிக்கிட்டு...கொடிய விலங்குகள் கிட்டேருந்து எப்படி தப்பிக்கிறதுன்னு தெரிஞ்சிக்கிட்டு.
சிங்கம் பாசத்தை வெளிக்காட்டுனாலும் அது ஒரு வகையில் ஒவ்வாத பாசமே...deviant behaviour தான் என்பதும் என் கருத்து.
ஆனாலும் கடைசியில் மான்குட்டி சாகும் போது தமிழ் படத்தில் நடக்குற மாதிரி கமுன்யாக் எப்படியாச்சும் ஆண் சிங்கத்தோட சண்டை போட்டுக் காப்பாத்திடாதான்னு ஒரு கணம் நெனச்சிப் பார்த்தேன். ஏன்னா அந்தளவு நெகிழ்ச்சியா இருந்துச்சு.
//நானும் இதைப்பார்த்திருக்கிறேன். இந்த சபா எனும் பெண் பிபிசி யின் Big Cat Diaries தொடரிலும் வருவார். மற்றபடி அந்தப்பெண்ணின் சொன்னது :(//
ReplyDeleteவாங்க சின்ன அம்மிணி,
சரியாச் சொன்னீங்க. Big Cat Diariesல வர்றவங்க தான் இந்த சபா. உங்க வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
//நெடுஞ்சாலையில் அதிவேகத்தில் சென்று கொண்டிருக்கும் போது
ReplyDeleteஇந்த வாதமே மடத்தனமானது. கார் ஓட்டுகிறவன் என்ற முறையில், சாலையில் குறுக்கே யார் வந்தாலும் (மனிதனோ, மிருகமோ) தன்னிச்சையாக, அதன் மேல் மோதாமல் தவிர்க்க, தானாகவே, நம் கை,கால்கள் செயல்பட்டுவிடும். இந்த அடிப்படி அறிவியல் அறிவு கூட இல்லாமல் அந்த பெண் பேசியது அர்த்தமற்றது. ஆந்திராவில், வேகமாக வந்த பஸ், ஒரு மாடு மேலே மோதக்கூடாது என அன்னிச்சையாக திருப்ப, அது ஆற்றுக்குள் விழுந்தது. இந்த ஒரு விபத்து போதும், இதனை நிரூபிப்பதற்கு.
அருமையான கட்டுரை. நன்றி.
விவாதங்கள் வரம்பு மீறினால் ரொம்ப அபத்தமாக போய்விடும். நல்லா இருக்கு இந்த பதிவு.நீளத்தை குறைத்து இருந்தா இன்னும் நல்லா இருந்திருக்கும்.
ReplyDeleteneeya naanavil pesubavarkal yaarum unmai pesuvathillai.ullondru vaiththu puramondru thaan pesukiraarkal.T.V.yil than mukam therivatharkku ethaiyum pesuvaarkal.anaivarum vedathaarikal thaan.
ReplyDeleteஇந்த விபரணச் சித்திரத்தை நான் பார்த்துள்ளேன். இது போல் ஒரு சிறுத்தை தான் கொன்ற தாய்க்குரங்கினுடன் ஒட்டியிருந்த குட்டியைப் பேணுவது; பூனை ஒன்று அனில் குட்டியை தன் குட்டியுடன்
ReplyDeleteவளர்ப்பது; யப்பானில் மீன் தடாகத்தில் வாத்து ஒன்று தனக்கிட்ட உணவை மீன்களுக்கு ஊட்டியது
எனப் பல யூரியூப்பில் பார்த்தேன். அப்போ "மிருகநேயம்" என ஒரு பதிவும் போட்டேன்.
சுமார் 45 வருடங்களுக்கு முன் என் வீட்டில் நான் வளர்த்த பூனை குட்டிபோட்டிருந்தபோது; பால் மறவா நாய்க்குட்டியையும் வளர்த்தேன். அந்த நாய்க்குட்டி பால் தாபத்தில் பூனைக்குட்டிகளுடன்
சேர்ந்து கலைத்துக் கலைத்து பூனையில் பால் குடிக்கும்; அதைத் தவிர்க்க அந்த தாய்ப்பூனை ஓடித்திரியும்; கடைசியில் அது அந்த நாய்க்குட்டிக்கும் நக்கி விட்டுக்கொண்டு பால் கொடுக்கும்.
அப்போது அதை பலர் அதிசயமாகப் பார்த்தார்கள். படம் எடுத்துவைக்க வசதி இருக்கவில்லை.
அப்பப்போ மிருகம்; அபிமானத்துடன் நடக்கிறது. ஆனால் மனிதன் தான்...
ரொம்ப லேட்டாக வந்துட்டேன் தல.
ReplyDeleteரொம்ப லேட்டாக வந்துட்டேன் தல.
ReplyDeleteஅருமையான பதிவு கைப்ஸ்.
ReplyDelete//உண்மையிலேயே அந்த விவாதத்தைப் பார்த்துவிட்டு கோபத்தில் கொப்பளித்துக் கொண்டிருந்தேன்.//
அந்த சமயத்துல உங்கள நீங்களே ஒரு போட்டோ எடுத்து இங்க்ன போட்டு இருக்க கூடாதா? LOL :))
http://www.youtube.com/watch?v=P_06oX8DqrU
ReplyDeleteஇந்த வீடியோவையும் பாருங்க தல
அந்த சிறுத்தையோட தப்பு செய்து விட்ட வேதனை புரியும் !!
ரொம்ப அருமை....
ReplyDelete