Sunday, March 08, 2009

நினைவு மீட்டல்:தூர்தர்ஷன் செய்தி வாசிப்பாளர்கள்

"ராமகிருஷ்ணன்"

"வரது குட்டி"

நான் சொல்றேன் "ராமகிருஷ்ணன் தான்".

நீ வேணா பாருடா "வரது குட்டி தான்"

7:59:56

7:59:57

7:59:58

7:59:59

8:00:00

ஒரு அஞ்சு நொடிக்கு இசை வருது...அடுத்ததா
"செய்திகள்"னு தலைப்பு. "வணக்கம் தலைப்புச் செய்திகள்"னு H.ராமகிருஷ்ணன் ஒரு மெல்லிய புன்னகையோடு செய்தி வாசிக்கத் தொடங்கறப்போ ராமகிருஷ்ணன் தான் இன்னிக்கு நியூஸ் வாசிக்க வருவாருன்னு பெட்டு கட்டுன தம்பி முகத்துல ஒரு சந்தோஷம். மெகா சீரியல்னும், 'இந்தியத் தொலைக்காட்சிகளில் முதன்முறையாக'ன்னும், 'லைவ் அண்ட் எக்ஸ்க்ளூசிவ்'னும் இந்தியாவில் தொலைக்காட்சி பார்த்தல் என்பது சிக்கலாய் இல்லாமல் இருந்த காலக்கட்டத்து நினைவுகள் தான் நான் மேலே சொன்னது. போட்டியில்லாத, உலகமயமாக்கல் இல்லாத, தனியார் தொலைக்காட்சி அலைவரிசைகள் ஏதுமில்லா அக்காலக் கட்டத்தில் இந்தியாவின் அரசுத் தொலைக்காட்சி நிறுவனமான 'தூர்தர்ஷன்' கோலோச்சிக் கொண்டிருந்தது. நம்முடைய வளர்கின்ற பருவத்தில் நாம் காணும், தெரிந்து கொள்ளும் விஷயங்கள் என்பது பல காலம் நம் நினைவில் இருக்கும். அதை பின்னொரு நாளில் நினைவு மீட்டும் பொழுது அது ஒரு சுகமான அனுபவமாக இருக்கும். இந்த அனுபவங்களை நம் வாழ்க்கையின் முக்கியமான மைல்கல்களுடன் தொடர்பு படுத்திப் பார்த்தால் இன்னும் சுகமாக இருக்கும்.

ஒரு நாள் திடீர்னு தூர்தர்ஷனின் ஆர்ப்பாட்டமில்லாத, சிம்பிளான செய்தி வாசிப்பாளர்களைப் பற்றிய நினைவு வந்தது. இப்போ தான் எதுவா இருந்தாலும் இணையத்துல தேடிப் பார்க்கலாமே...அதனால தூர்தர்ஷன்னு தட்டச்சு செய்து ஆங்கிலத்துலயும், தமிழ்லயும் தேடிப் பார்த்தேன். சொன்னா நம்ப மாட்டீங்க...வளர்ற வயசுல வெறுத்த தொலைக்காட்சியான தூர்தர்ஷனுக்கு அப்படியொரு ரசிகர் வட்டம் இருக்கறது தெரிஞ்சது. அந்த ரசிகர்களில் பெரும்பாலானவங்க தூர்தர்ஷனின் பொற்காலத்தின் போது பள்ளி செல்லும் சிறுவர், சிறுமிகளா இருந்தவங்க. அவங்க எழுதியிருக்கற பதிவுகளைப் படிச்சா அந்த நினைவுகள் இப்போது நினைவுகளாக மட்டும் இருக்கிறதே என்று கண்டிப்பாக ஏக்கப் பெருமூச்சும் தோன்றும். முதல் பத்தியில இருக்கற admiration, adulation எல்லாம் இப்போ தான். அப்போல்லாம் நான் கூட சே...என்னடா இது சொத்தை டிவி சேனல்னு வெறுத்திருக்கேன். இப்போ யோசிச்சுப் பாத்தா அந்த ஒத்தை சொத்தை டிவி சேனல் மூலமா நான் கத்துக்கிட்டதும் தெரிஞ்சிக்கிட்டதும் கொஞ்ச நஞ்சம் இல்லைன்னு புரியுது.

தூர்தர்ஷனின் தமிழ் செய்தி வாசிப்பாளர்களை நினைவு கூர்ந்தால் அவர்களில் முதலில் நம் நினைவுக்கு வருபவர் திரு.H.ராமகிருஷ்ணன். 1985ல எங்க வீட்டுல முதன் முதல்ல டிவி வாங்குன காலத்துலேருந்து '90களின் இறுதி வரை இவரை நான் செய்தி வாசிப்பாளராகப் பார்த்த நியாபகம். சில சமயம் வானொலியிலும்(ஆகாசவாணி) இவர் செய்தி வாசிப்பதை கேட்டிருக்கிறேன்.

1990களில் வெளிவந்த 'வானமே எல்லை' படம் வெளிவரும் வரை இவர் போலியோவினால் ஊனமுற்றவர் என்பது எனக்கு தெரியாது. ஏன்னு தெரியலை...என்னால அதை நம்பறது ரொம்ப கஷ்டமா இருந்தது. அந்த படத்துக்காக எதாச்சும் ட்ரிக் செய்து அந்த மாதிரி எடுத்துருப்பாங்களோன்னு ரொம்ப நாள் நெனச்சிட்டிருந்தேன். அவரைப் பத்தி இணையத்துல தேடும் போது அவரு தன்னோட சொந்த வலைதளத்தையும் வச்சிருக்காருன்னு தெரிஞ்சிக்கிட்டேன். அதோட கர்நாடக சங்கீதத்தில் புலமை பெற்றவருன்னும் பல இசை கச்சேரிகள்ல பாடியிருக்காருன்னும் தெரிஞ்சிக்கிட்டேன். கர்நாடக இசை வித்வான்களை எல்லாம் நோண்டி நொங்கெடுக்கிற இசை விமர்சகர் சுப்புடு அவருக்கு பக்க வாத்தியமா கீபோர்டு வாசிக்கற படத்தையும் அவரோட வலைதளத்தில் பார்க்கலாம்.

செய்தி வாசிப்பாளர்கள்ல ராமகிருஷ்ணன் என் தம்பிக்கு ஃபேவரிட்னா என்னோட ஃபேவரிட் திரு.வரதராஜன். அப்போல்லாம் அவரை 'வரதுகுட்டி'னு தான் சொல்லுவேன். ஏன்னு சரியா நியாபகம் இல்லை. 1980களில் சிவாஜி கணேசன் நடிச்சி வெளிவந்த "பரிட்சைக்கு நேரமாச்சு"ங்கிற படம். அதுல சிவாஜியோட பையனா ஒரு கதாபாத்திரம் வரும். அந்த கதாபாத்திரமா வரதராஜனே நடிச்சிருக்கிறாரா இல்லை ஒய்.ஜி.மகேந்திரன் நடிச்சிருக்கிறாரான்னு நியாபகம் இல்லை.
ஆனா அந்த கேரக்டரோட பேரு "வரதுகுட்டி"னு நியாபகம். அதுலேருந்து வரதராஜனை "வரதுகுட்டி"ன்னு கூப்பிடறது பழக்கமாயிடுச்சு. இரவு எட்டு மணி செய்திகள்ல "வரதுகுட்டி" வருவாருன்னு தான் நான் அதிகமா பெட் வச்சிருக்கேன் :) இவர் ஒரு நாலஞ்சு வருஷம் முன்னாடி வந்த சன் டிவி தொலைக்காட்சித் தொடர் ஒன்னில் அப்பா கேரக்டரிலும் நடித்தார். அவரோட படமும் இன்னிக்குக் கெடைச்சிடுச்சு :) அதையும் வலையேத்தியாச்சு. இப்போது இவர் ஒரு பிரபலமான நாடக நடிகராவும் இருக்கிறார். இவருக்கு http://tvvvaradharajen.com எனும் சொந்தமான வலைத்தளம் ஒன்று உள்ளது.

தமிழ் செய்தி வாசிப்பாளர்கள்ல ஒரு ஸ்டார் அந்தஸ்து இருக்குன்னா...அது கண்டிப்பா இவருக்குத் தான். அவர் ஷோபனா ரவி. இவர் செய்தி வாசிக்கும் போது ரொம்ப தன்னம்பிக்கையோட வாசிக்கிறா மாதிரி தெரியும். பொதுவாக இவர் உணர்ச்சிகளை வெளிக்காட்ட மாட்டார். செய்திகளை முடிச்சிட்டு வணக்கம் சொல்லும் போது கூட பெரும்பாலும் புன்னகைக்க மாட்டார். ஆனா பெண்களுக்கு இவர் கட்டும் புடவைகளின் மீது ஒரு தனி கண்ணு இருக்கும். "நேத்து ஷோபனா ரவி கட்டியிருந்த புடவையின் கலர்..." அப்படின்னு மேல் வீட்டு ஆண்ட்டி ஆரம்பிச்சாங்கன்னா அந்த பேச்சு ஒரு அரை மணி நேரம் ஓடும்.

இவர் ஒரு புடவையை ஒரு முறைக்கு மேல் கட்டுவதில்லை அப்படின்னும் இவர் வீட்டில் புடவைகளை அடுக்கி வைக்க ஒரு மிகப் பெரிய பீரோ இருக்கு அப்படின்னு அவங்க வீட்டு சுத்து வட்டாரத்துல பேசிக்குவாங்கன்னு ஒரு இணைய நண்பர் எழுதிருக்கறதை படிச்சேன். இவரும் ராமகிருஷ்ணனும் மட்டும் தான் தூர்தர்ஷனின் நிரந்தர ஊழியர்களாக இருந்தார்கள் என்றும், மற்றவர்கள் அனைவரும் ஒப்பந்த அடிப்படையில் செய்தி வாசித்ததாகத் தெரிந்து கொண்டேன். இவருடைய மகள் ராஜ் டிவியில் ஆங்கில செய்தி வாசிப்பாளராக இருக்கிறார்னு நெனைக்கிறேன்.

ஷோபனா ரவிக்கு அடுத்தபடியா பெண்கள்ல பிரபலமா இருந்தவங்க சந்தியா ராஜகோபாலும், ஃபாத்திமா பாபுவும். இவங்க ரெண்டு பேரும் இன்னைக்கும் தனியார் சேனல்களில் செய்தி வாசிச்சிக்கிட்டுத் தான் இருக்காங்க. மத்த செய்தி வாசிப்பாளர்கள்னு பாத்தா பாலசுப்பிரமணியன், செந்தமிழ் அரசு(நன்றி : நிலாக்காலம்/ஸ்ரீ), தமிழன்பன், இனியன் சம்பத், ஸ்ரீதர், ஹெலன் ப்ரமிளா, நிஜந்தன், நசீமா சிக்கந்தர், கண்ணாத்தாள், நிர்மலா சுரேஷ் இவங்க பேரெல்லாம் ஞாபகம் இருக்கு. இதுல தமிழன்பன் ரொம்ப திருத்தமாகவும் அழுத்தமாகவும் வாசிப்பார். எதோ ஒரு காரணத்துக்காக "இந்திய தேசிய கொடியை கோமணமாக அணிவேன்"ன்னு இவர் சொன்னதால இவரைத் தூக்கிட்டாங்கன்னு அப்பல்லாம் சொல்லுவாங்க.



நிஜந்தன் இன்னும் ராஜ் டிவியில செய்தி வாசிப்பாளராகவும் தொகுப்பாளராகவும் இருந்து கொண்டு இருக்கிறார். ஸ்ரீதரின் குரலை அவர் தொலைக்காட்சியிலிருந்து காணாத போன பின்பும் வானொலியில் கேட்டிருக்கிறேன். இணையத்தில் ஒருவர், ஸ்ரீதர் செய்தி வாசித்து முடித்து விட்ட பின் புன்னகைப்பதை பார்ப்பதற்காகவே அவருடைய அம்மா அடுப்படி வேலையில் ஈடுபட்டிருந்தாலும் வந்து தொலைக்காட்சியைப் பார்ப்பார் என்று எழுதியிருக்கிறார். இதை தவிர 'கல்யாண அகதிகள்' அப்படீங்கற கே.பாலச்சந்தர் திரைப்படத்தில் தூர்தர்ஷனில் செய்தி வாசித்துக் கொண்டிருந்த ஒருவர் கதாநாயகனாகவும் நடித்தார். அந்த படத்துலயும் அவர் தூர்தர்ஷன் செய்தி வாசிப்பாளராவே நடிச்சிருப்பாரு. அவர் பேரு சௌந்தர்னு நெனக்கிறேன். ஆனா அதுக்கப்புறம் அவரை தொலைக்காட்சியில் அதிகமாப் பாக்க முடியலை.

சென்னை தொலைக்காட்சியில் தமிழ் செய்தி வாசிப்பாளர்களுக்குன்னு ஒரு ரசிகர் வட்டம் இருக்கறா மாதிரி தில்லி தூர்தர்ஷன்ல ஆங்கில செய்தி வாசிப்பாளர்களுக்கும் பெரிய ரசிகர் வட்டம் இருக்கு. கீழே சில ஆங்கில செய்தி வாசிப்பாளர்கள் படங்களைத் தேடிப் பிடிச்சிப் போட்டிருக்கேன். யாராச்சும் உங்க நியாபகத்துக்கு வர்றாங்களான்னு பாருங்க.

தேஜேஷ்வர் சிங்(Tejeshwar Singh) - இவர் போன வருஷம் காலமாயிட்டார். ஒரு ஆழமான குரலுக்குச் சொந்தக்காரர். "Sage Publications" எடிட்டராகவும் இருந்திருக்கிறார்.

சுனித் டண்டன்(Sunit Tandon) - இவருக்கும் இணையத்தில் ஏகப்பட்ட விசிறிகள் இருக்காங்க.

ரினி கன்னா(Rini Khanna) - இவங்க Facebookலயும் இருக்காங்க பாருங்க.

உஷா அல்புகெர்க்(Usha Albuquerque) - ரொம்ப சாந்தமான முகம் இவருக்கு. மத்தவங்க அளவுக்கு இவர் அவ்வளவு பிரபலம் இல்லைன்னாலும், இவர் முகமும் பெயரும் எனக்கு இன்னும் நல்லா நினைவில் இருக்கு.

நிர்மல் ஆண்ட்ரூஸ்(Nirmal Andrews) - இவரும் அவ்வளவு பிரபலமானவரு கிடையாது. ஆனா இவரோட பேரை வச்சித் தேடும் போது இணையத்துல இவரோட படம் கெடைச்சது. இப்போ ஐ.நா. சம்பந்தப்பட்ட ஒரு பணியில் வெளிநாட்டில் இருக்கிறார்.

ஆங்கில செய்தி வாசிப்பாளர்கள்ல பிரபலமானவங்கன்னு பாத்தீங்கன்னா சுகன்யா பாலகிருஷ்ணன், கோமல் ஜி.பி.சிங், கீதாஞ்சலி ஐயர், மீனு, நீத்தி ரவீந்திரன் (நன்றி: திரு.மாலன்), ரினி கன்னா(திருமணத்துக்கு முன் ரினி சைமன்), சங்கீதா பேடி(திருமணத்துக்கு முன் சங்கீதா வர்மா). இதுல சுகன்யா பாலகிருஷ்ணன் டெல்லியில் செட்டில் ஆகிவிட்ட தமிழர். நான் தில்லியில் இருந்த போது "The Asian Age" என்னும் பத்திரிகையில் தில்லி தமிழர்களைப் பற்றிய ஒரு ரிப்போர்ட் வந்தது. அதில் சுகன்யாவின் குடும்பத்தினர் பல வருடங்களாக தில்லியில் வாழ்ந்து வருவதாகக் குறிப்பிடப் பட்டிருந்தது. கல்கட்டா தூர்தர்ஷனில் என்.விஸ்வநாதன் என்பவர் பிரபல ஆங்கில செய்தி வாசிப்பாளர் என்று இணையத்தில் ஒருவர் எழுதியிருந்தார். அநேகமாக இவர் "மூன்று முடிச்சு" படத்தில் ரஜினிக்கு அப்பாவாக நடித்த நடிகர் கல்கட்டா விஸ்வநாதனாகத் தான் இருப்பார் என்று நினைக்கிறேன். ஏனென்றால் இவரை தூர்தர்ஷனில் கல்லூரி மாணவர்களுக்காக ஒளிபரப்பாகும் யூ.ஜி.சி(UGC) நிகழ்ச்சியில் ஒரு முறை நான் பார்த்திருக்கிறேன். அத்துடன் திரைப்படங்களிலேயே இவர் அருமையாக ஆங்கிலம் பேசுவார்.

'மே மாதம்' திரைப்படம் பாத்திருக்கீங்களா? அதுல கதாநாயகி சோனாலி குல்கர்னியின் அப்பாவாக வரும் நடிகர் கூட முன்னாள் ஆங்கில செய்தி வாசிப்பாளராக இருந்தார் என்று என் அம்மா சொல்கிறார்கள். அவருடைய பெயர் P.C.ராமகிருஷ்ணா(நன்றி : திரு.மாலன்)
மால்குடி சுபா 'வால்பாறை வட்டப்பாறை' என்று ஒரு ஆல்பம் வெளியிட்டார் தெரியுமா? அந்த ஆல்பத்தின் வீடியோவில் நடித்த பெண் P.C.ராமகிருஷ்ணா அவர்களின் மகள். 'மே மாதம்' திரைப்படம் வெளிவந்த காலத்தில் இவரை அடிக்கடி சின்னத் திரையிலும் பெரிய திரையிலும் பார்த்த ஞாபகம். தமிழ் நியூஸ் பாத்தாச்சு, ஆங்கில நியூஸ் பாத்தாச்சு. காது கேளாதோருக்கான நியூஸ் பாத்துருக்கீங்களா? நானும் என் தம்பியும் ஞாயிறு மதியம் காது கேளாதோருக்கான செய்தி அறிக்கையை தவறாமல் பார்ப்போம். அந்த செய்தி அறிக்கையின் வாசிப்பாளர்கள்ல ஷஷி பால்(Shashi Pal), சங்கீதா இவங்க ரெண்டு பேரு பேரும் நியாபகம் இருக்கு. அப்போல்லாம் ஒரு சில சைகைகளக் கத்து வச்சிக்கிட்டு அம்மா கிட்ட வம்பு பண்ணதுண்டு. சில சைகைகள் இன்னும் நியாபகம் இருக்கு. நெத்தியில பொட்டைத் தொட்டைக் காட்டுனா "இந்தியா"ன்னு அர்த்தம். கையோட முன் பாதி, பின் பாதியை முறையே முற்பகல், பிற்பகல் இதை தெரிவிக்க உபயோகிப்பாங்க.

திரு.மாலன் அவர்களின் பின்னூட்டம் எல்லோருக்கும் பயன் தரும் விதமாக :

>>'மே மாதம்' திரைப்படம் பாத்திருக்கீங்களா? அதுல கதாநாயகி சோனாலி குல்கர்னியின் அப்பாவாக வரும் நடிகர் கூட முன்னாள் ஆங்கில செய்தி வாசிப்பாளராக இருந்தார் என்று என் அம்மா சொல்கிறார்கள். அவருடைய பெயர் இப்போது நினைவில் வர மாட்டேன் என்கிறது<<

அவரது பெயர் பி.சி.ராமகிருஷ்ணா. சென்னையில் பிரபலமான ஆங்கில நாடகக் குழுவான The Madras Playersஐச் சேர்ந்தவர். இப்போதும் நாடகங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். ஒரு காலகட்டம் வரை ஆங்கிலச் செய்தி என்பதும் அந்தந்த மாநிலச் செய்தியறிக்கைகள் போல அந்தந்த மாநிலத்திலேயே தயாரிக்கப்பட்டு வழங்கப்பட்டது. அப்போது சென்னைத் தொ.கா.வில் ராமகிருஷ்ணா, விசாலம் (தாமஸ் குக் நிறுவனத்தில் அதிகாரியாக இருந்தார்)சசிகுமார் (பின்னாளில் ஏசியாநெட்டை ஆரம்பித்தவர், இப்போது ஏசியன் காலேஜ் ஆஃப் ஜர்னலிசத்தின் தலைவர்) ஆகியோர் ஆங்கிலச் செய்திகளை வாசித்து வந்தார்கள். தில்லி ஆங்கிலச் செய்தியாளர்களில் நீதி ரவீந்திரன் பெயரை மறந்து விட்டீர்கள்.

நிர்மலா சென்னைத் தொ.க.வில் செய்திவாசித்தாரா என்பது எனக்கு உறுதியாகத் தெரியவில்லை. அவர் அங்கு நிகழ்ச்சித் தொகுப்பாளராக இருந்தார்.லோகேஸ்வரி செல்வக்குமார் என்று இன்னொரு பெண்மணி வாசித்து வந்தார். அவர் பின்னால் அங்கு தயாரிப்பாளராகவும் ஆனார்.

தூர்தர்ஷனில் செய்திவாசிப்பாளருக்கான தேர்வில் உச்சரிப்புக்கு முக்கியத்துவம் உண்டு.தேர்வுக்கு வருகிறவர்களை தொழிலாளி என்ற சொல்லை உச்சரிக்கச் சொல்வார்கள்.ஏனெனில் ழ,ள,ல மூன்றும் வருகிற ஒரு சொல் அது (நான் அந்தத் தேர்வுக் குழு உறுப்பினராக இருந்திருக்கிறேன்) ஆரம்ப நாள்களில் வானொலி அறிவிப்பாளர்களைப் பயன்படுத்தி வந்தார்கள். வானொலி அறிவிப்பாளர்கள் என்பதால் உச்சரிப்பில் அவர்கள் தெளிவாக இருப்பார்கள்.

அதுபோல சட்ட மன்ற நிகழ்ச்சிகள் பற்றிய தகவல்களுக்கும் வானொலி/தொலைக்காட்சிதான் நம்பத்தகுந்த ஆதாரம். அந்த செய்திகளை வழங்கும் போது தவறு நேர்ந்துவிட்டால் சட்டமன்றமே தண்டிக்க முடியும். அதனால் அச்சுப் பத்திரிகைக்கள் அந்த செய்தியாளர்களையும் consult செய்து கொள்வார்கள். அதில் ராமகிருஷ்ணன்தான் கிங்.

மாலன்


தூர்தர்ஷன் பத்தி எழுதுறதுன்னா கண்டிப்பா எக்கச்சக்கமா இருக்கு. செய்தி வாசிப்பாளர்களுக்காக மட்டுமே தனியா ஒரு கொசுவத்தி பதிவு போடுவேன்னு நானே நெனைக்கலை. எனக்கு எழுதும் போது ஒரு சுகமான நினைவு மீட்டலா இருந்தது. படிச்சவங்களுக்கு எப்படின்னு தான் தெரியலை :). வரும் நாட்களில் தூர்தர்ஷனைப் பத்திய இன்னும் சில நினைவுகளைப் பகிர்ந்துக்கறேன். நன்றி.

65 comments:

  1. // நம்முடைய வளர்கின்ற பருவத்தில் நாம் காணும், தெரிந்து கொள்ளும் விஷயங்கள் என்பது பல காலம் நம் நினைவில் இருக்கும். அதை பின்னொரு நாளில் நினைவு மீட்டும் பொழுது அது ஒரு சுகமான அனுபவமாக இருக்கும். இந்த அனுபவங்களை நம் வாழ்க்கையின் முக்கியமான மைல்கல்களுடன் தொடர்பு படுத்திப் பார்த்தால் இன்னும் சுகமாக இருக்கும்.//

    அதே அதே!

    சூப்பரா இருக்கும் :))

    ReplyDelete
  2. //வரும் நாட்களில் தூர்தர்ஷனைப் பத்திய இன்னும் சில நினைவுகளைப் பகிர்ந்துக்கறேன். நன்றி.//

    கண்டிப்பாக நாங்களெல்லாம் வெயிட்டீஸ்ல இருக்கோம்!

    வணக்கம் தமிழகத்துக்கு முன்னோடியா தூர்தர்ஷன்ல வந்த அந்த காலை நேரத்து நிகழ்ச்சி (பேரு தெரியல) அதுல எப்பவுமே சிரிச்ச முகத்தோட இருக்கும் ஆண் அறிவிப்பாளரும் ஒரு கார்ட்ட்டூன் பொம்மை கேரக்டரும் ஞாபகம் வருதா....?

    வந்தா நினைவு மீட்டுங்க :)

    ReplyDelete
  3. ஹெச்.ராமகிருஷ்ணன் பல காலங்கள் செய்தி ஆசிரியராவும் நேரடி செய்தி வழங்குவதிலும் ஈடுபட்டிருந்தவரும் கூட..!

    களத்திலிருந்து செய்திகளை சேகரித்து இறுதியில் பெயர் கூறிச்செல்லும் டிரெண்ட் (சட்டமன்ற வளாகத்திலிருந்து ஹெச்.ராமகிருஷ்ணன்)

    அனேகமாக இவர் மூலமாகத்தான் அறிமுகமாகியிருக்ககூடும் தமிழ்நாட்டிற்கு!

    ReplyDelete
  4. //
    அதே அதே!

    சூப்பரா இருக்கும் :))//

    எங்களுக்கெல்லாம் மீ த ஃபர்ஸ்ட் போட மாட்டீங்களா? சரி பரவால்லை. நானே சொல்லறேன். யூ தி ஃபர்ஸ்ட்.

    ReplyDelete
  5. ////வரும் நாட்களில் தூர்தர்ஷனைப் பத்திய இன்னும் சில நினைவுகளைப் பகிர்ந்துக்கறேன். நன்றி.//

    கண்டிப்பாக நாங்களெல்லாம் வெயிட்டீஸ்ல இருக்கோம்! //

    ஓஹோ! இது தான் மேட்டரா? முதல் பத்தியையும் கடைசி பத்தியையும் மட்டும் படிச்சிட்டு, கமெண்டு போடற அந்த டெக்னிக்கை எனக்கும் சொல்லிக் குடுங்கப்பா.
    :)

    //வணக்கம் தமிழகத்துக்கு முன்னோடியா தூர்தர்ஷன்ல வந்த அந்த காலை நேரத்து நிகழ்ச்சி (பேரு தெரியல) அதுல எப்பவுமே சிரிச்ச முகத்தோட இருக்கும் ஆண் அறிவிப்பாளரும் ஒரு கார்ட்ட்டூன் பொம்மை கேரக்டரும் ஞாபகம் வருதா....?

    வந்தா நினைவு மீட்டுங்க :)
    //

    ஆஹா சூப்பருங்க. தூர்தர்ஷனின் Breakfast show நியாபகம் இருக்கா உங்களுக்கு. அதுல வர்றவரு பேரு தீபக் வோரா(Deepak Vohra). கார்டூன் பொம்மை பேரு நினைவில் இல்லை. தேடிப் பாக்கறேன். கெடைச்சா சொல்லறேன்.

    ReplyDelete
  6. //கைப்புள்ள said...
    //
    அதே அதே!

    சூப்பரா இருக்கும் :))//

    எங்களுக்கெல்லாம் மீ த ஃபர்ஸ்ட் போட மாட்டீங்களா? சரி பரவால்லை. நானே சொல்லறேன். யூ தி ஃபர்ஸ்ட்//

    அட நாந்தான் மீ த பர்ஸ்ட்டா :)))

    ஃபீலிங்க் பாஸ் பீலிங்க்ஸ் அதான் டக்குன்னு தாவிட்டோம் :)))

    ReplyDelete
  7. // கைப்புள்ள said...
    ////வரும் நாட்களில் தூர்தர்ஷனைப் பத்திய இன்னும் சில நினைவுகளைப் பகிர்ந்துக்கறேன். நன்றி.//

    கண்டிப்பாக நாங்களெல்லாம் வெயிட்டீஸ்ல இருக்கோம்! //

    ஓஹோ! இது தான் மேட்டரா? முதல் பத்தியையும் கடைசி பத்தியையும் மட்டும் படிச்சிட்டு, கமெண்டு போடற அந்த டெக்னிக்கை எனக்கும் சொல்லிக் குடுங்கப்பா///

    ஆஹா டோட்டல் டேமேஜ் :(

    அப்படியெல்லாம் இல்லீங்க பாஸ் :)))

    ReplyDelete
  8. //ஓஹோ! இது தான் மேட்டரா? முதல் பத்தியையும் கடைசி பத்தியையும் மட்டும் படிச்சிட்டு, கமெண்டு போடற அந்த டெக்னிக்கை எனக்கும் சொல்லிக் குடுங்கப்பா///

    ஆஹா டோட்டல் டேமேஜ் :(

    அப்படியெல்லாம் இல்லீங்க பாஸ் :)))
    //

    ஆஹா...ஒரு நல்லவர் மனசைப் புண்படுத்துன பாவம் எனக்கு வேணாம். உங்களோட அடுத்த கமெண்ட்களை இது எழுதும் போது நான் பாக்கலை. உங்க மனசையும் நான் புண்படுத்திட்டேனா?
    :)

    ReplyDelete
  9. இங்கிலிஸ் புரியாவிட்டாலும் சுகன்யா பாலகிருஷ்ணனின் செய்தி ஓடினால் பார்ப்பேன்.. ஒல்லியான உடல்வாகில் அழகாக இருப்பார்.

    ReplyDelete
  10. அருமை அருமை - மறந்து போன தொலைக்காட்சிச் செய்தி வாசிப்பாளர்களை நினைவு படுத்திய அருமையான பதிவு. ராமகிருஷ்ணன் - செய்தி வாசிப்பாளராக - நேர்காண்பவராக - கலக்கிய காலம் மனதில் நிழலாடுகிறது. வரதராஜன் - ஈரோடு தமிழன்பன் - ஷோபனா ரவி - ஆகா ஆகா - தமிழ்ச் சொல்லை உச்சரிக்கும் விதம் - முக பாவங்கள் - உணர்ச்சிகள் - அடடா அடடா - மனம் மகிழ்கிறது

    அக்கால ஆல் இந்தியா ரேடியோவின்
    சரோஜ் நாராயண் சாமி மறக்க முடியுமா

    ReplyDelete
  11. எனக்குப் பிடிச்ச நிறைய செய்தி வாசிப்பாளர்களைப் பத்தி கொசுவத்தி சுத்த வச்சிட்டீங்களே....! ராமகிருஷ்ணன் (போலியோ பத்தி அப்பவே கேள்விப்பட்டிருந்தேன்), ஷோபனா ரவி (உச்சரிப்பு ரொம்பவே பிடிக்கும், இவங்களைப் பத்தின ஹைப் பிடிக்காது), இவங்கள விட ரொம்பப் பிடிச்சது உஷா அல்புகெர்க்; தேஜேஷ்வர் சிங் (என்னா வாய்ஸ்!), ரினி கன்னா.

    இணையத்தில இருக்காங்களா, ம் பாக்கணும். கொ.வ.க்கு நன்றி:-)

    ReplyDelete
  12. இதை படிப்பதே ஒரு சுகானுபவம்...

    ஒரு காலத்தில் வெறுத்த பொருட்கள் பின்னால் நினைத்து பார்க்கும் போது சுகமாக இருக்கின்றன. ஒரு காலத்தில் டிடியை திட்டி கொண்டிருந்தேன். முக்கியான காரணம் தடங்களுக்கு வருந்துகிறோம்.

    இப்ப அதை மிஸ் செய்கிறோமே என ஏங்குகிறேன் :(

    ReplyDelete
  13. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்......

    தல... நீங்க சாப்பிடுற மெமரி பிளஸ் எனக்கு கொஞ்சம் கொடுங்களேன்... :)

    ReplyDelete
  14. வாவ்!! சூப்பர் கொசுவத்தி! நிஜமாவே ரொம்ப மெனக்கெட்டு நல்ல தகவல்களைக் கொடுத்து இருக்கீங்க..:-)

    //மால்குடி சுபா 'வால்பாறை வட்டப்பாறை' என்று ஒரு ஆல்பம் வெளியிட்டார் தெரியுமா? அந்த ஆல்பத்தின் வீடியோவில் நடித்த பெண் இந்த மே மாதம் அப்பா நடிகரின் மகள்.//

    என்னா ஒரு நுட்பமான பதிவு! அசத்தல் கைப்ஸ் அண்ணா!

    ReplyDelete
  15. //தமிழன்பன், ஸ்ரீதர்,நிஜந்தன், நசீமா சிக்கந்தர்,வரதராஜன்,ஷஷி பால்(Shashi Pal), சங்கீதா//

    நல்லா ஞாபகம் இருக்கு! :-)


    ஆங்கில வாசிப்பாளர்களை மறக்க முடியுமா... forced-aa பாத்துத்தான் ஆகனும்..எங்க வீட்டுல..ஆனா அப்புறம் பிடிச்சுப் போச்சு! நான் கூட தூர்தர்ஷன் டேஸ் பத்தி ஒரு போஸ்ட் போட்டேன்! http://sandanamullai.blogspot.com/2008/07/blog-post_22.html

    இயன்ற போது எட்டிப் பார்க்கவும்! :-)

    ReplyDelete
  16. உங்க டெம்ளேட் நல்லா இருக்கு!

    ReplyDelete
  17. தல

    கலக்கல் பதிவு...நம்ம சகா பதிவர்களும் தூர்தர்ஷனை பத்தி சில பதிவுகள் போட்டுயிருக்காங்க ;)


    அப்புறம்...கைப்புள்ள அப்படின்னனு சொல்றதைவிட லூசப்பா நீ ரொம்ப நல்லாயிருக்கு தல ;)

    ReplyDelete
  18. என்ன எழுதி இருக்கீங்கனு படிக்கலை, டெம்ப்ளேட்டின் கவிதை அசத்திடுச்சு, இன்னிக்கு ஏர்டெல் விளம்பரம் ஒண்ணு பார்த்தேன். அப்போவும் அசத்தலா இருந்தது, அருமையான டெம்ப்ளேட், நல்ல ரசனை!

    ReplyDelete
  19. ஹாய்,

    வாவ்... எத்தனையோ பழசானுலும் அத திரும்பி படிக்கறப்போ நிஜமாவே சுகமாத் தான் இருக்கு. ஆமாம், நானும் உங்களை மாதிரி சில சமயம் நினைப்பதுண்டு. அதுலயும் அந்த ஆங்கில செய்தி தான் எங்க வீட்டுல பாக்க சொல்வாங்க. அதுலயும் நாங்க ரொம்ப ரசிக்கறதும் விரும்பறதும் அந்த தாடிக்காரர் சிங் தான்(தெஜேஷ்வர் சிங்)
    அப்பா என்ன உச்சரிப்பு, என்ன ஸ்டையில், என்ன ஒரு நளினம். அபபபபா... ரொம்ப அழகு. இப்பவும் அது நினிஅக்கறதுண்டு. அப்பற்ம் அந்த ரினி கண்ணா,வாவ்... மீனு கீதாஞ்சலி இப்படி சிலர்.அடடா என்ன நீங்க இப்ப போயி இப்படிலாம் பழைய நினைவுகலை கிளப்பிட்டீங்க... அதுஒரு அழகிய கனாக் காலம்.

    நல்லாயிருக்கு மோகன். Itz really very nice to go back.

    ReplyDelete
  20. //அப்புறம்...கைப்புள்ள அப்படின்னனு சொல்றதைவிட லூசப்பா நீ ரொம்ப நல்லாயிருக்கு தல ;)///


    kaipullai calling லூசாப்பா நீ...?
    அட நல்லாத்தான் இருக்கு :))))

    ReplyDelete
  21. சனிக்கிழமைகளில் ஒரு மப்பெட் ஷோ வருமே நினைவிருக்கா. அதை கறுப்பு வெள்ளைலயும் ரசித்துப் பார்ப்போம்.
    அதே போல '' கர்சர்" அப்படீன்னு கூப்பிட்டதும் வர ஹோலோக்ராம் சம்பந்தப்பட்ட ப்ரொக்ராம்,டிஃப்ரண்ட்
    ஸ்ட்ரோக்ஸ்.....
    அருமையான ஞாயிற்றுக்கிழமைகள்.,
    நன்றி.

    ReplyDelete
  22. நல்ல நினைவு மீட்டல்.இத்தனை பேரையும் எப்படிங்க நினைவு வெச்சிருக்கீங்க.தூரதர்சன் நினைக்கும் போது ஒலியும் ஒளியும்,தடங்கலுக்கு வருந்துகிறோம்,எட்டுமணி செய்திகள்,10மணி ஆங்கில செய்திகள் மட்டுமே பிரபலம்.

    (இன்னுமொன்னு வயலும் வாழ்வும்)

    ReplyDelete
  23. கொக்கரக்கோ லவுட்ஸ்பீக்கரையும் வெச்சுகிட்டா எப்படியிருக்கும்ன்னு கொஞ்சம் கற்பனை செய்தேன்:)

    ReplyDelete
  24. >>'மே மாதம்' திரைப்படம் பாத்திருக்கீங்களா? அதுல கதாநாயகி சோனாலி குல்கர்னியின் அப்பாவாக வரும் நடிகர் கூட முன்னாள் ஆங்கில செய்தி வாசிப்பாளராக இருந்தார் என்று என் அம்மா சொல்கிறார்கள். அவருடைய பெயர் இப்போது நினைவில் வர மாட்டேன் என்கிறது<<

    அவரது பெயர் பி.சி.ராமகிருஷ்ணா. சென்னையில் பிரபலமான ஆங்கில நாடகக் குழுவான The Madras Playersஐச் சேர்ந்தவர். இப்போதும் நாடகங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். ஒரு காலகட்டம் வரை ஆங்கிலச் செய்தி என்பதும் அந்தந்த மாநிலச் செய்தியறிக்கைகள் போல அந்தந்த மாநிலத்திலேயே தயாரிக்கப்பட்டு வழங்கப்பட்டது. அப்போது சென்னைத் தொ.கா.வில் ராமகிருஷ்ணா, விசாலம் (தாமஸ் குக் நிறுவனத்தில் அதிகாரியாக இருந்தார்)சசிகுமார் (பின்னாளில் ஏசியாநெட்டை ஆரம்பித்தவர், இப்போது ஏசியன் காலேஜ் ஆஃப் ஜர்னலிசத்தின் தலைவர்) ஆகியோர் ஆங்கிலச் செய்திகளை வாசித்து வந்தார்கள். தில்லி ஆங்கிலச் செய்தியாளர்களில் நீதி ரவீந்திரன் பெயரை மறந்து விட்டீர்கள்.

    நிர்மலா சென்னைத் தொ.க.வில் செய்திவாசித்தாரா என்பது எனக்கு உறுதியாகத் தெரியவில்லை. அவர் அங்கு நிகழ்ச்சித் தொகுப்பாளராக இருந்தார்.லோகேஸ்வரி செல்வக்குமார் என்று இன்னொரு பெண்மணி வாசித்து வந்தார். அவர் பின்னால் அங்கு தயாரிப்பாளராகவும் ஆனார்.

    தூர்தர்ஷனில் செய்திவாசிப்பாளருக்கான தேர்வில் உச்சரிப்புக்கு முக்கியத்துவம் உண்டு.தேர்வுக்கு வருகிறவர்களை தொழிலாளி என்ற சொல்லை உச்சரிக்கச் சொல்வார்கள்.ஏனெனில் ழ,ள,ல மூன்றும் வருகிற ஒரு சொல் அது (நான் அந்தத் தேர்வுக் குழு உறுப்பினராக இருந்திருக்கிறேன்) ஆரம்ப நாள்களில் வானொலி அறிவிப்பாளர்களைப் பயன்படுத்தி வந்தார்கள். வானொலி அறிவிப்பாளர்கள் என்பதால் உச்சரிப்பில் அவர்கள் தெளிவாக இருப்பார்கள்.

    அதுபோல சட்ட மன்ற நிகழ்ச்சிகள் பற்றிய தகவல்களுக்கும் வானொலி/தொலைக்காட்சிதான் நம்பத்தகுந்த ஆதாரம். அந்த செய்திகளை வழங்கும் போது தவறு நேர்ந்துவிட்டால் சட்டமன்றமே தண்டிக்க முடியும். அதனால் அச்சுப் பத்திரிகைக்கள் அந்த செய்தியாளர்களையும் consult செய்து கொள்வார்கள். அதில் ராமகிருஷ்ணன்தான் கிங்.

    மாலன்

    ReplyDelete
  25. //நிர்மலா சென்னைத் தொ.க.வில் செய்திவாசித்தாரா என்பது எனக்கு உறுதியாகத் தெரியவில்லை. அவர் அங்கு நிகழ்ச்சித் தொகுப்பாளராக இருந்தார்.//

    மாலன் சொல்வது உண்மைதான் அவர் செய்தி வாசிப்பாளராக இல்லை மாறாக தூர்தர்ஷன் துவங்கும்போது இன்றைய நிகழ்ச்சிகள் வழங்குபவராகவும் சில சமய்ங்களில் வேறு சில முக்கிய நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கவும் செய்திருக்கிறார்

    முதன்முறையாக சென்னை மெட்ரோ அலைவரிசையில் 'தேன்துளி' நிகழ்ச்சிக்காக சிறுகதை வாசிக்கச் சென்றிருந்த்போது அன்று ஒப்பனையாளர்கள் வேலை நிறுத்தம்.
    இவரது ஒப்பனை பொருட்களை தந்து உதவினார். அதன் பின் அவரை ஓரிரு முறை சந்தித்திருக்கிறேன்

    என்னையும் கொசுவர்த்தி போட வ்ச்சுட்டியளே? :-)

    ரினா கன்னாதான் என் அபிமான செய்தி வாசிப்பாளர் என்பது கொசுறு செய்தி

    ReplyDelete
  26. தூர்தர்ஷனில் செய்தி வாசிப்பவர்கள் பலரை நினைவூட்டினீர்கள்..!
    ஆகாசவாணியின் "செய்திகள் சுவாசிப்பது சரோஜ் நாராயண சுவாமி" என்ற பெண் குரல் இன்னுமும் ஞாபகம் இருக்கிறது. கொஞ்சம் கட்டையான, கம்பீரமான குரல் அது.

    ReplyDelete
  27. சூப்பர் பதிவு!!
    //பாலசுப்பிரமணியன், தமிழன்பன், ஸ்ரீதர், ஹெலன் ப்ரமிளா, நிஜந்தன், நசீமா சிக்கந்தர், கண்ணாத்தாள்//

    'செந்தமிழரசு'ன்னு ஒருத்தர் இருந்தாரே..

    //'மே மாதம்' திரைப்படம் பாத்திருக்கீங்களா? அதுல கதாநாயகி சோனாலி குல்கர்னியின் அப்பாவாக வரும் நடிகர் கூட முன்னாள் ஆங்கில செய்தி வாசிப்பாளராக இருந்தார் என்று என் அம்மா சொல்கிறார்கள். அவருடைய பெயர் P.C.ராமகிருஷ்ணா//

    Prince Jewellery விளம்பரத்தில் இறுதியில் வந்த "Prince Jewellery, Panagal Park, Madras" என்ற குரல் இவருடையதுதான். செம ஸ்டைலாக இருக்கும். :-)

    ReplyDelete
  28. Nice!!
    Took me down the lane!
    Thanks a lot for sharing :)

    ReplyDelete
  29. நீங்க ஆயிரம் சொல்லுங்க 'எதிரொலி' நிகழ்ச்சி உண்மையிலேயே டாப். கடிதம் எல்லாம் படிச்சிட்டு கடைசில என்ன படம் ஞாயிற்றுக் கிழமை சாயங்காலம் போடப்போறாங்கன்னு 'பொறுமையா' ஒக்காந்துகிட்டு பார்ப்போமே.. அதுக்கு பெயர் தான் பொறுமை .. இப்பெல்லாம் ரிமோட் வந்துடுச்சு மாற்றுவதற்கு சேனல் அதிகமாயிடுச்சு..
    அன்புடன், கி.பாலு

    ReplyDelete
  30. //இங்கிலிஸ் புரியாவிட்டாலும் சுகன்யா பாலகிருஷ்ணனின் செய்தி ஓடினால் பார்ப்பேன்.. ஒல்லியான உடல்வாகில் அழகாக இருப்பார்.//

    வாங்க தமிழ்பிரியன்,
    ஆமாங்க:) ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு நினைவு...மற்ற ஆங்கில செய்தி வாசிப்பாளர்களோடு ஒப்பிட்டால் தமிழ் பெயர்களை இவர் சற்று சரியாகவே உச்சரிப்பார்.

    ReplyDelete
  31. //அருமை அருமை - மறந்து போன தொலைக்காட்சிச் செய்தி வாசிப்பாளர்களை நினைவு படுத்திய அருமையான பதிவு. ராமகிருஷ்ணன் - செய்தி வாசிப்பாளராக - நேர்காண்பவராக - கலக்கிய காலம் மனதில் நிழலாடுகிறது. வரதராஜன் - ஈரோடு தமிழன்பன் - ஷோபனா ரவி - ஆகா ஆகா - தமிழ்ச் சொல்லை உச்சரிக்கும் விதம் - முக பாவங்கள் - உணர்ச்சிகள் - அடடா அடடா - மனம் மகிழ்கிறது//

    வாங்க சீனா சார்,
    உங்கள் மனம் மகிழ இப்பதிவு காரணமாக இருந்தது கண்டு எனக்கும் மகிழ்ச்சி.

    //அக்கால ஆல் இந்தியா ரேடியோவின்
    சரோஜ் நாராயண் சாமி மறக்க முடியுமா//
    ஆமாம் சார்...கணீர் குரல் அவருக்கு. கண்டிப்பா மறக்க முடியாது.

    ReplyDelete
  32. //எனக்குப் பிடிச்ச நிறைய செய்தி வாசிப்பாளர்களைப் பத்தி கொசுவத்தி சுத்த வச்சிட்டீங்களே....! ராமகிருஷ்ணன் (போலியோ பத்தி அப்பவே கேள்விப்பட்டிருந்தேன்), ஷோபனா ரவி (உச்சரிப்பு ரொம்பவே பிடிக்கும், இவங்களைப் பத்தின ஹைப் பிடிக்காது), இவங்கள விட ரொம்பப் பிடிச்சது உஷா அல்புகெர்க்; தேஜேஷ்வர் சிங் (என்னா வாய்ஸ்!), ரினி கன்னா.

    இணையத்தில இருக்காங்களா, ம் பாக்கணும். கொ.வ.க்கு நன்றி:-)

    //

    வாங்க கெ.பி,
    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

    ReplyDelete
  33. ஊதுவத்தி சுத்த வச்ச பதிவு.
    நிர்மல் ஆன்ட்ரூசு ஆங்கிலச்செய்தியும் வானொலியில் வசத்ததாக நினைவு.
    இன்றும் செய்திகள் கேட்க எங்கள் வீட்டில் நம்புவது டி.டிஐத்தான். பரபரப்பான செய்திகள் இருக்காது.கொலை பண்ணிய உடம்பு, சிதலம்மடைந்த, தாக்கப்பட்ட மனிதர்கள் என்று காட்டமாட்டர்கள்( இதுக்கெல்லாம் கட்டுப்பாடுகள் தேவை). செய்தி வாசிப்பாளர்களுக்கு உச்சரிப்பு நன்றாக வரும். இன்றும் வானொலியிலும், டி,டியிலும் வரும் சங்கதிகள் அளவுக்கு உங்களுக்கு அறிவை ஊட்டக்கூடிய நிகழ்ச்சிகள் தனியார் தொலைக்காட்சிகளில் வருவதில்லை.
    காலையில் சென்னை வானொலி நிலையத்தை ஆறுலிருந்து ஒன்பது மணிவரை கேட்டுவிட்டு சொல்லுங்கள்.

    ReplyDelete
  34. senthamizh arasu -a marandhutengalae.
    i still remember fatima babu's first day. she was doing the news reading and half the way shobana ravi took over the seat. both switched seat with a smile. i still dont know what happened there!
    english - nitu, rini, sunit tandon are my fav.
    varadhu will always have a big smile if india was rocking in cricket that day, esp. any news about shrika.
    yeah, i also took a long time to digest about H.R.

    ReplyDelete
  35. //ஒரு காலத்தில் வெறுத்த பொருட்கள் பின்னால் நினைத்து பார்க்கும் போது சுகமாக இருக்கின்றன. ஒரு காலத்தில் டிடியை திட்டி கொண்டிருந்தேன். முக்கியான காரணம் தடங்களுக்கு வருந்துகிறோம்.

    இப்ப அதை மிஸ் செய்கிறோமே என ஏங்குகிறேன் :(//

    ஆமாம்ப்பா பாலாஜி...தடங்கலுக்கு வருந்துகிறோம், Sorry for the interruption எவ்ளோ பாத்துருக்கோம்?
    :)

    ReplyDelete
  36. //அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்......

    தல... நீங்க சாப்பிடுற மெமரி பிளஸ் எனக்கு கொஞ்சம் கொடுங்களேன்... :)//

    ஹி...ஹி...டேங்கீஸ்பா ராயல். ரொம்ப புடிச்ச விஷயமெல்லாம் அவ்வளோ சீக்கிரமா மறக்காதுப்பா.
    :)

    ReplyDelete
  37. //உங்க டெம்ளேட் நல்லா இருக்கு!//

    ரொம்பா நன்றிங்க முல்லை

    ReplyDelete
  38. //தல

    கலக்கல் பதிவு...நம்ம சகா பதிவர்களும் தூர்தர்ஷனை பத்தி சில பதிவுகள் போட்டுயிருக்காங்க ;)//

    வாங்க நீயா? நானா?
    ரொம்ப நன்றிங்க.


    //அப்புறம்...கைப்புள்ள அப்படின்னனு சொல்றதைவிட லூசப்பா நீ ரொம்ப நல்லாயிருக்கு தல ;)//

    இருக்கும்...இருக்கும்...
    :))

    ReplyDelete
  39. //என்ன எழுதி இருக்கீங்கனு படிக்கலை, டெம்ப்ளேட்டின் கவிதை அசத்திடுச்சு, இன்னிக்கு ஏர்டெல் விளம்பரம் ஒண்ணு பார்த்தேன். அப்போவும் அசத்தலா இருந்தது, அருமையான டெம்ப்ளேட், நல்ல ரசனை!//

    நன்றி தலைவிஜி.

    ReplyDelete
  40. //ரசிக்கறதும் விரும்பறதும் அந்த தாடிக்காரர் சிங் தான்(தெஜேஷ்வர் சிங்)
    அப்பா என்ன உச்சரிப்பு, என்ன ஸ்டையில், என்ன ஒரு நளினம். அபபபபா... ரொம்ப அழகு. இப்பவும் அது நினிஅக்கறதுண்டு. அப்பற்ம் அந்த ரினி கண்ணா,வாவ்... மீனு கீதாஞ்சலி இப்படி சிலர்.அடடா என்ன நீங்க இப்ப போயி இப்படிலாம் பழைய நினைவுகலை கிளப்பிட்டீங்க... அதுஒரு அழகிய கனாக் காலம்.
    //

    ஆமாங்க மேடம்...அந்த கனாக் காலத்தை நினைவு படுத்திக்கத் தான் இந்த பதிவு.

    ReplyDelete
  41. //kaipullai calling லூசாப்பா நீ...?
    அட நல்லாத்தான் இருக்கு :))))//

    ஹி...ஹி...

    நான் என்னைச் சொன்னேன் னு கீழே ஒரு லைன் சேத்துக்கலாமான்னு கூட நெனைச்சேன்.
    :)

    ReplyDelete
  42. //சனிக்கிழமைகளில் ஒரு மப்பெட் ஷோ வருமே நினைவிருக்கா. அதை கறுப்பு வெள்ளைலயும் ரசித்துப் பார்ப்போம்.
    அதே போல '' கர்சர்" அப்படீன்னு கூப்பிட்டதும் வர ஹோலோக்ராம் சம்பந்தப்பட்ட ப்ரொக்ராம்,டிஃப்ரண்ட்
    ஸ்ட்ரோக்ஸ்.....
    அருமையான ஞாயிற்றுக்கிழமைகள்.,
    நன்றி.//

    வாங்க வல்லி மேடம்,
    நீங்க சொல்ற நிகழ்ச்சி எதுவும் நினைவிலில்லை...தேடிப் பாக்கறேன். நன்றி மேடம்.

    ReplyDelete
  43. //நல்ல நினைவு மீட்டல்.இத்தனை பேரையும் எப்படிங்க நினைவு வெச்சிருக்கீங்க.தூரதர்சன் நினைக்கும் போது ஒலியும் ஒளியும்,தடங்கலுக்கு வருந்துகிறோம்,எட்டுமணி செய்திகள்,10மணி ஆங்கில செய்திகள் மட்டுமே பிரபலம்.

    (இன்னுமொன்னு வயலும் வாழ்வும்)

    //

    வாங்க ராஜ நடராஜன்,
    உங்க வருகைக்கும் கருத்துக்கும் ரொம்ப நன்றி.

    ReplyDelete
  44. //கொக்கரக்கோ லவுட்ஸ்பீக்கரையும் வெச்சுகிட்டா எப்படியிருக்கும்ன்னு கொஞ்சம் கற்பனை செய்தேன்:)//

    நல்ல கற்பனைங்க.
    :)

    ReplyDelete
  45. //நிர்மலா சென்னைத் தொ.க.வில் செய்திவாசித்தாரா என்பது எனக்கு உறுதியாகத் தெரியவில்லை. அவர் அங்கு நிகழ்ச்சித் தொகுப்பாளராக இருந்தார்.லோகேஸ்வரி செல்வக்குமார் என்று இன்னொரு பெண்மணி வாசித்து வந்தார். அவர் பின்னால் அங்கு தயாரிப்பாளராகவும் ஆனார்.//

    நன்றி மாலன் சார். பலவிதமான பயனுள்ள தகவல்களைத் தந்து வளப்படுத்தியமைக்கு. இப்போ தான் யோசிச்சுப் பாத்தேன். நீங்க சொன்ன மாதிரி தூர்தர்ஷன்ல செய்தி வாசிச்சது நிர்மலா பெரியசாமி இல்லை...அவங்க நிர்மலா சுரேஷ். அதே போல முன்னாள் காங்கிரஸ் இளைஞர் அணி தலைவருமான இனியன் சம்பத்தும் நினைவுக்கு வந்தார்.

    ReplyDelete
  46. //முதன்முறையாக சென்னை மெட்ரோ அலைவரிசையில் 'தேன்துளி' நிகழ்ச்சிக்காக சிறுகதை வாசிக்கச் சென்றிருந்த்போது அன்று ஒப்பனையாளர்கள் வேலை நிறுத்தம்.
    இவரது ஒப்பனை பொருட்களை தந்து உதவினார். அதன் பின் அவரை ஓரிரு முறை சந்தித்திருக்கிறேன்//

    வாங்க அண்ணாச்சி
    அப்போ நிர்மலா பெரியசாமி கிட்ட வாங்குன அந்த செஞ்சே(சோ)ற்று கடனை இந்த கமெண்ட் போட்டு தீர்த்துட்டீங்கன்னு சொல்லுங்க.
    :))

    //என்னையும் கொசுவர்த்தி போட வ்ச்சுட்டியளே? :-) //

    ஐயோ! இந்த பாவிக்கு மன்னிப்பே கிடையாதா?
    :)

    ReplyDelete
  47. //தூர்தர்ஷனில் செய்தி வாசிப்பவர்கள் பலரை நினைவூட்டினீர்கள்..!
    ஆகாசவாணியின் "செய்திகள் சுவாசிப்பது சரோஜ் நாராயண சுவாமி" என்ற பெண் குரல் இன்னுமும் ஞாபகம் இருக்கிறது. கொஞ்சம் கட்டையான, கம்பீரமான குரல் அது//

    வாங்க நவநீதன்,
    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிங்க.

    ReplyDelete
  48. //'செந்தமிழரசு'ன்னு ஒருத்தர் இருந்தாரே..//

    வாங்க நிலாக்காலம்,
    இவரு பேரை தான் ரொம்ப நேரமா யோசிச்சிட்டு இருந்தேன். ரொம்ப நன்றிங்க.

    //
    Prince Jewellery விளம்பரத்தில் இறுதியில் வந்த "Prince Jewellery, Panagal Park, Madras" என்ற குரல் இவருடையதுதான். செம ஸ்டைலாக இருக்கும். :-)//

    தகவலுக்கு ரொம்ப நன்றிங்க. நீங்க சொல்ற மாதிரி ரொம்ப ஸ்டைலிஷா இருக்கும் அவர் பேசறது.

    ReplyDelete
  49. //ஊதுவத்தி சுத்த வச்ச பதிவு.
    நிர்மல் ஆன்ட்ரூசு ஆங்கிலச்செய்தியும் வானொலியில் வசத்ததாக நினைவு.
    இன்றும் செய்திகள் கேட்க எங்கள் வீட்டில் நம்புவது டி.டிஐத்தான். பரபரப்பான செய்திகள் இருக்காது.கொலை பண்ணிய உடம்பு, சிதலம்மடைந்த, தாக்கப்பட்ட மனிதர்கள் என்று காட்டமாட்டர்கள்( இதுக்கெல்லாம் கட்டுப்பாடுகள் தேவை). செய்தி வாசிப்பாளர்களுக்கு உச்சரிப்பு நன்றாக வரும். //

    வாங்க சத்தியா,
    நீங்க சொல்றது எல்லாமே சரி தாங்க. இப்பெல்லாம் யாரு அதையெல்லாம் பாக்கறாங்க?
    :(

    ReplyDelete
  50. //Nice!!
    Took me down the lane!
    Thanks a lot for sharing :)//

    வருகைக்கு நன்றி CVR.

    ReplyDelete
  51. //நீங்க ஆயிரம் சொல்லுங்க 'எதிரொலி' நிகழ்ச்சி உண்மையிலேயே டாப். கடிதம் எல்லாம் படிச்சிட்டு கடைசில என்ன படம் ஞாயிற்றுக் கிழமை சாயங்காலம் போடப்போறாங்கன்னு 'பொறுமையா' ஒக்காந்துகிட்டு பார்ப்போமே.. அதுக்கு பெயர் தான் பொறுமை .. இப்பெல்லாம் ரிமோட் வந்துடுச்சு மாற்றுவதற்கு சேனல் அதிகமாயிடுச்சு..
    அன்புடன், கி.பாலு

    //

    வாங்க பாலு,
    செம அப்சர்வேஷன். நீங்க சொல்றது ரொம்ப சரி. ஞாயித்துக் கிழமை சாயந்திரம் என்ன படம் போடப் போறாங்கன்னு சொல்லுவாங்கன்னு ஆர்வமா உக்காந்துருப்போம். யு.எம்.கண்ணன்னு ஒருத்தரு தான் பெரும்பாலும் வருவாரு...ஒரு புது படம் போடறோம்னு சப்புன்னு முடிச்சிடுவாரு. என்ன படம்னு சனிக்கிழமை இரவு வரைக்கும் கூட சில சமயம் சொல்லமாட்டாங்க. கடைசில பாத்தா எதாச்சும் போட்ட படத்தையே போடுவாங்க.
    :)

    ReplyDelete
  52. சூப்பர் .போங்க...ஹிந்தி ரீடர்ஸெல்லாம் சேக்கலையே நீங்க சல்மா சுல்தான் மறக்க முடியுமா??
    அப்புறம் ஒருத்தர்..பெரிய ஆக்ஸிடெண்ட்ல முகமெல்லம் கண்ணாடி கிழிச்சு மறுபடியும் செய்தி வாசிக்க வந்தாங்க பேர் மறந்து போயுடுச்சு. இன்னொண்ணு டி டி ப்ரசார கார்டூன்.....அப்படியே மனச அள்ளும்.."தீதீ ஏக் க்யா ஹே அனேக் க்யா ஹே"?? ஏக் திதலி அனேக திதலியான்.....நியாபகம் இருக்கா??.......:):):)

    ReplyDelete
  53. கைப்ஸ்... ஒங்கள பதிவுக்குக் கூப்டிருக்கோம். பட்டாம்பூச்சி விருதும் குடுத்திருக்கோம். வந்து வாங்கிக்கோங்க.

    http://gragavan.blogspot.com/2009/03/blog-post.html

    ReplyDelete
  54. நல்ல கொசுவத்தியாச் சுத்தீருக்கீங்க. அப்ப தேவின்னு ஒருத்தங்களும் செய்தி வாசிச்சாங்க. அவங்கள ஒரு வாட்டியோ ரெண்டு வாட்டியோதான் பாத்திருக்கேன். ஆனா அவங்களதான் எனக்கு ரொம்பப் பிடிக்கும். அவங்க படம் கெடைச்சாலும் போடுங்க.

    ஆங்கிலச் செய்தி வாசிக்கிறவங்கள்ள... அந்த தாடிக்காரர் பிடிக்கும். ஒல்லியா இருக்காரே. அவரு.

    ReplyDelete
  55. நிர்மலா பெரியசாமி செய்திகள் வாசிச்சு பாத்ருக்கேனே நான். ஒரு வேளை அவசரத்துக்கு திடீர் சாம்பார் மாதிரி வந்ருப்பாங்களோ? :))

    ஸ்ரீதர் ஒவ்வொரு லைனையும் வாசிச்சு முடிச்ச பிறகு ஆழ்ந்து ஒரு செகண்ட் பார்ப்பாரு. செம காமடியா இருக்கும்.

    டிடில சுகன்யா அம்மையார் தான் நம்ம பேவரிட்.

    ReplyDelete
  56. kaips anne after very long gap full fledged agmark kaipu post !!! :D

    ReplyDelete
  57. லோகேஸ்வரி செல்வகுமாரை அறிவிப்பாளராக பார்த்ததாக ஞாபகம்.

    ReplyDelete
  58. நல்ல பகிர்விற்கு நன்றி...

    ReplyDelete
  59. Kalakeeteenga 'Kosuvarithi pugal'kaipulla :)

    Suka

    ReplyDelete
  60. நான் வெளித்தளத்தில் போடும் முதல் பதிவு. காரணம் எனக்கு மிகவும் பிடித்த 5வது அலைவரிசை.எல்லாம் ஒகே மிஸ்டர் கைப்புள்ள உங்க பதிவின் ஆரம்பத்திலேயே தவறு இருக்கே.அதை கமேன்டு போடுபவர்கள் யாராவது சுட்டுவார்கள் என காத்திருந்து விட்டு கடைசியாக நானே களத்தில் இறங்கிவிட்டேன். என்ன தவறு தெரியுதா? தினசரி செய்திகள் 8.00 மணிக்கு அல்ல, 8.30 க்கு.சன்டிவியின் வருகைக்குப்பிறகு சன்செய்திகள் 8.00 மணிக்கு வந்தது. நல்ல நினைவுப் பதிவு.எங்கேயிருந்து இந்த போட்டோக்களையெல்லாம் எடுத்தீர்கள். இதே போல தினசரி நாடகங்களான மண்வாசனை,ரயில் ஸ்னேகம்,ஒரு மணி நேர செவ்வாய்க்கிழமை நாடகம்,ஞாயிற்றுக்கிழமை எஸ்.வி சேகரின் வண்ணக்கோலங்கள்,மஹாபாரதம், அரிய சுவை உதயம் புதிய சன்ரைஸ்,டார்டாய்ஸ் கொழுத்துங்க கொசுவ வெரட்டுங்க சந்தோசமாய் இருங்க என வரும் சின்னி,ஐ ஆம் எ காம்ப்ளான் பாய்,தாயி நிலம் தந்தவரம் தாவரம் அது தழைக்கத் தழைக்க மகிழ்வார்கள் யாவரும் என்பவையெல்லாம் இன்னமும் என் காதுகளுக்குள் ரீங்காரமிடுகிறது.தொடருங்கள் நினைவுகளை நன்றி.

    ReplyDelete
  61. Super Block,

    U Missed out the great Pranoy roy frm NDTV, He will appear in India this week, & His Stylish Speeking his good

    ReplyDelete
  62. நினைவுகள் மட்டுமே மிச்சம்.

    எல்லாவற்றையும் சேகரித்து அழகான நடையில் கொடுத்ததற்கு நன்றி.!

    ReplyDelete
  63. பி.சி. ராமகிருஷ்ணா நான் ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு செய்த சுனாமி பற்றிய வர்ணனையை தூர்தர்ஷன் நேஷனல் சேனலில் வருவதற்காக படித்தவர்.

    பார்க்க: http://dondu.blogspot.com/2008/02/blog-post_06.html

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  64. you took me to those goldden memorable days.. :-))

    ReplyDelete