Friday, September 26, 2008

செம்மறி ஆடும் மறந்துபோனவைகள் சிலவும்

ரெண்டு வாரங்களுக்கு முன்னாடி மகளைப் பார்க்கறதுக்குச் சென்னைக்குப் போயிருந்தப்போ, எங்க வீட்டு கிட்ட ஒரு கூட்டமா செம்மறி ஆடுங்க மேஞ்சிக்கிட்டு இருந்ததை பாத்தேன். செவப்பு ரோமம் கொண்ட அந்த செம்மறி ஆட்டுக் கூட்டத்தோடவே கூடவே ரெண்டு கறுப்பு ஆடுங்களும் மேஞ்ச்சிக்கிட்டு இருந்துச்சு. சின்ன வயசுல வெள்ளையா இருக்கற ஆடுங்களை மட்டும் தான் வெள்ளாடுன்னு சொல்லுவாங்கன்னு நெனச்சிக்கிட்டு இருந்தேன். ஆனா பெரும்பாலான வெள்ளாடுங்க கறுப்பாத் தான் இருக்கும்னு அப்புறமாத் தான் தெரிஞ்சிச்சு. வெள்ளையா இருக்கற ஆடுங்க தான் வெள்ளாடுன்னு நெனச்சிட்டு இருந்தத் தப்பான அந்த எண்ணத்தைப் போலவே, சின்ன வயசுல (கிட்டத்தட்ட ஒரு இருபது வருஷத்துக்கு முந்தி) கேட்ட சில பாடல்களைப்(சினிமா பாடல்கள் தான்) பத்தியும் தப்பான எண்ணம் இருந்துச்சு. சுத்தமாக வெறுத்தப் பாடல்களா இல்லாது போனாலும், இந்த சில பாடல்களை விரும்பி ரசிச்சு எல்லாம் கேட்டதில்லை. கண்டிப்பா விருப்பப் பாடல்களா இருந்தது கெடையாது.

சரி, இப்ப நேரா விஷயத்துக்கு வரேன். வீட்டு கிட்ட அந்த செம்மறி ஆட்டுக் கூட்டத்தைப் பாத்ததும் ஒரு பாட்டு நியாபகத்துக்கு வந்துச்சு. சரின்னுட்டு இணையத்துல அந்த பாட்டைத் தேடிக் கண்டுபிடிச்சி கேட்டேன். சின்ன வயசுல கேட்டப்போ பெருசா மனசைக் கவராத அந்தப் பாட்டு இப்போ ஏனோ கேக்கறதுக்கு நல்லாருக்கற மாதிரி இருந்துச்சு. இது மாதிரி வேற என்னென்ன பாட்டுங்க மனசுக்கு வருதுன்னு யோசிச்சப்போ, ஒரு சில பாட்டுங்க தேறுச்சு. அந்த பாட்டுங்களை நீங்களும் கேட்கறதுக்காகத் தேடிப் பிடிச்சு கொண்டாந்திருக்கேன். இதெல்லாம் ரொம்ப இனிமையான பாடல்கள்னோ, படம் ரிலீஸான காலக்கட்டத்துல ரொம்ப ஹிட்டான பாடல்கள்னோ சொல்லமாட்டேன். எங்கேயோ எப்பவோ கேட்ட மாதிரி இருக்கலாம். பிடிச்சாலும் பிடிக்கலாம், பிடிக்காமலும் போகலாம்.

முதல் பாட்டு, செம்மறி ஆட்டுக் கூட்டத்தைப் பாத்ததும் ஞாபகம் வந்த அந்த பாட்டு. உழவன் மகன் படத்துல விஜயகாந்தும், ராதிகாவும் பாடற மாதிரி வர்ற ஒரு பாட்டு. ஆட்டைக் கருப்பொருளா வச்சி தலைவனும், தலைவியும் தங்கள் காதலைப் பகிர்ந்துக்கற ஒரு பாட்டு. "ஆடு விடு தூது"ன்னு கூட சொல்லலாம்:) பாடலுக்கு இடையில சின்னப் பையன் குரல்ல ரெண்டு வரி வரும் "இய்யா இய்யா இய்யாவோ எல்லாம் தெரிஞ்ச ஐயாவோ" அப்படின்னு. அந்த போர்ஷன் ரொம்ப வித்தியாசமா இருக்கும். பாடலில் வரும் பெண்குரலைக் கேட்டுட்டு அது B.S.சசிரேகாவோன்னு நெனச்சேன். அப்புறம் தான் தெரிஞ்சது பாடுனவங்க பேரு விஜயான்னு. இவங்க வேற எதாச்சும் பாட்டு பாடிருக்காங்களான்னு தெரியலை. "செவத்த பொண்ணு இவத்த நின்னு தவிக்கலாமோ சொல்" அப்படின்னு ஒரு வரி வரும். "இவத்த" அப்படீங்கற வார்த்தை பிரயோகத்தை அப்பல்லாம் நான் எங்கேயும் கேட்டதேயில்லை. மதுரை பக்கம் உபயோகிப்பாங்க போலிருக்கு. ரொம்ப நாளைக்கப்புறம் விருமாண்டி படத்துல இளையராஜா எழுதுன "சண்டியரே சண்டியரே" பாட்டுல "அங்கிட்டு போனீன்னா ஒன் றெக்கையா பிப்பாங்கிய, இவத்த ஓடியா இவத்த ஓடியா" அப்படின்னு வரும். இதே உழவன் மகன் படத்துல டி.எம்.எஸ் குரலில் வர்ற "பூந்தோட்டம் தாங்காதம்மா பூப்பறிக்க நாளாகுமா?"ங்கிற பாட்டும் நல்லாருக்கும். அந்த பாட்டுல முதல் பகுதியில டி.எம்.எஸ் பாடற முதல் சில வரிகள் ரொம்ப நல்லாருக்கும். "தோல்வி என்ன கால்களுக்கு" அப்படின்னு முடியும். மத்த வரிகள் சரியா நினைவில்லை. மனோஜ் பட்நாகர் - கியான் வர்மா அப்படீங்கற ரெண்டு வடக்கத்தி இசையமைப்பாளர்கள் இசையமைச்சிருந்தாலும் சர்ப்ரைசிங்கா நம்மூரு நேட்டிவிட்டியைப் பாடல்கள்ல மெயிண்டேன் செய்து இருக்கற மாதிரி இருக்கும். "பொன்நெல் ஏரிக்கரையோரம் பொழுது சாயுது நதியோரம்" அப்படீங்கற பாட்டும் ஜல்ஜல்னு மாட்டு வண்டி ஓடற சந்தத்துக்குக் கேக்க நல்லாவே இருக்கும்.

படம் : உழவன் மகன் (1987)
இசை : மனோஜ்-கியான்
பாடியது : S.P.பாலசுப்பிரமணியம், விஜயா

Get Your Own Hindi Songs Player at Music Plugin

அடுத்த பாட்டும் மனோஜ்-கியான் இசையமைப்புல வெளியான ஒரு படத்தோட பாட்டு தான். படத்தோட பேரு தாய்நாடு. சத்தியராஜோட கரியர்ல ரொம்ப முக்கியமானதொரு படம்னு நெனக்கிறேன். ஏன்னா இந்தப் படத்துக்கப்புறம் தான் அவரு கதாநாயகனா நடிக்க ஆரம்பிச்சாருன்னு நெனக்கிறேன். மனோஜ்-கியானுக்கு டி.எம்.எஸ் ரொம்ப ஃபேவரிட் போல. இந்தப் பாட்டையும் இந்தப் படத்துல வர்ற இன்னொரு பாட்டையும் டி.எம்.எஸ் தான் பாடியிருப்பாரு. அதே மாதிரி அவங்க இசையில வெளியான செந்தூரப்பூவே படத்துலயும் சில பாடல்களை டி.எம்.எஸ் தான் பாடிருப்பாரு. "ஒரு முல்லை பூவனம்"அப்படின்னு தொடங்கும் இந்த பாட்டும் துள்ளல் இசையோட அந்த காலத்து இந்தி இசையமைப்பாளரான ஓ.பி.நய்யர் அவர்களின் இசையில் வந்த பாடல்களை நினைவு படுத்தற மாதிரி இருக்கும். இதே படத்துல இருக்கற இன்னொரு பாட்டான "தாய்மாமன் கைகள் பட்டு"ங்கிற பாட்டைத் திருவல்லிக்கேணில எங்க பக்கத்து வீட்டுல குடியிருந்த சிலோன் கார ஆண்ட்டியோட தம்பிகள் ரெண்டு பேரும் அடிக்கடி கேசட்ல போடுவாங்க. அதனால அதை கேட்ட நியாபகம் நல்லா நெனைவிருக்கு,

படம் : தாய்நாடு (1987)
இசை : மனோஜ்-கியான்
பாடியது : T.M.சௌந்தர்ராஜன், P.சுசீலா


Get Your Own Hindi Songs Player at Music Plugin


Get Your Own Hindi Songs Player at Music Plugin

மனோஜ் கியான் இசையில செந்தூரப்பூவே படத்துல ஒரு பாட்டு ஒன்னு இருக்கு. "கானக்கரிசலிலே களை எடுக்கும் பூங்குயிலே, நீலக் கருங்குயிலே நிக்கட்டுமா போகட்டுமா" அப்படின்னு வரும். இந்தப் பாட்டை இணையத்துல எங்கே தேடியும் கெடைக்கலை. ஆனா பாடல் வரிகள் திண்ணை இணையதளத்துல எதோ ஒரு கட்டுரையில கையாளப் பட்டிருக்கறதை பாத்தேன். அநேகமா இந்தப் பாடலின் வரிகள், எதோ ஒரு உண்மையான நாட்டுப்புறப் பாட்டுலேருந்து எடுத்துருப்பாங்க போலிருக்கு. இந்தப் பாட்டு நடுவுல ஒரு ஃபீமேல் கோரஸ் ஒன்னு வரும். "வாராங்க வாராங்க பன்னாடி வாராங்க! பச்சை குடை பிடிச்சு பயிர் பாக்க வாராங்க"அப்படின்னு வரும். "பன்னாடி" அப்படீங்கற வார்த்தைக்கு அர்த்தம் என்னான்னு அப்போ எங்க நைனாவைக் கேட்டதும் நியாபகத்துக்கு வருது. கோயம்புத்தூர் பக்கம் பண்ணையாரைத் தான் அப்படி சொல்லுவாங்கன்னு சொன்னாரு. யாராச்சும் இந்தப் பாட்டைக் கேட்டிருக்கீங்களா? இந்தப் பாடலைக் கேக்கறதுக்கான சுட்டி எங்கேயாச்சும் இணையத்துல கெடைச்சதுன்னா தெரியப்படுத்துங்க. இந்தப் பாட்டைக் கண்டுபிடிக்க தேன்கிண்ணம் வலைப்பூ அமைப்பாளர்களுக்கும், கானா பிரபா அண்ணாச்சிக்கும் ஒரு ஸ்பெசல் ரிக்வெஸ்ட்.

அடுத்து வர்ற பாட்டு, அது வெளியான காலத்துலே உண்மையாவே நான் வெறுத்த ஒரு பாட்டு. இந்தப் பாட்டின் முதல் வரிகளைக் கேட்டாலே, பாட்டை நிறுத்திடுவேன் இல்ல அப்படி நிறுத்த முடியலைன்னா வேற எங்கேயாச்சும் போயிடுவேன். உண்மையிலேயே எரிச்சலைக் கெளப்புற பாட்டா இருந்துச்சு அப்போ எனக்கு. ஈரமான ரோஜாவே படத்துல ஹீரோவா நடிச்ச சிவா பெரிய மீசை, கையில தடி எல்லாம் வச்சிக்கிட்டு பாடற ஒரு சோகப்பாட்டு இது. இந்தப் பாட்டு புடிக்காமப் போனதுக்குக் காரணம்னு சொல்லனும்னா இதன் முதல் வரிகள் - "எட்டு மடிப்பு சேலை இடுப்பில் சுத்தப்பட்ட ஒரு சோலை" இது தான். எங்கேயாச்சும் இடுப்புல சோலையைச் சுத்த முடியுமா, சுத்தக் கிறுக்குத் தனமா பாட்டு எழுதிருக்கான்னு அப்போ நெனச்சேன். உண்மையிலேயே அந்த வித்தியாசமான கற்பனை தான் அந்தப் பாட்டை இன்னும் நியாபகத்துல நிறுத்தி இருக்கு. எனக்கு தான் இந்தப் பாட்டு அப்போ புடிக்காதே ஒழிய, தென்னாற்காடு மாவட்டத்துல இருக்கற எங்க கிராமத்துல இருக்கற சின்னப்பசங்களுக்கு எல்லாம் அப்பவே ரொம்ப புடிச்ச பாட்டா இது இருந்துச்சு. எவனைப் பாத்தாலும் "எட்டு மடிப்பு சேலை எட்டு மடிப்பு சேலை"ன்னு பாடிக்கிட்டு சுத்திட்டு இருப்பானுங்க. சௌந்தர்யன் இசையில ஒரு சிம்பிளான நல்ல பாட்டு இது. இப்போ புரியுது நல்ல பாட்டுன்னு. எஸ்.பி.பி. இந்தப் பாட்டுக்குத் தன் குரலால உயிர் கொடுத்துருப்பாரு கேட்டுப் பாருங்க. இதே மாதிரி கரகாட்டக்காரன் படத்துல வர்ற "பாட்டாலே புத்தி சொன்னார்" பாட்டும் அப்போ எனக்கு புடிக்கவே புடிக்காது. "பாட்டாலே புத்தி சொன்னார் பாட்டாலே பக்தி சொன்னார்" அப்படின்னு பாட்டு வரும் போதே "பாட்டாலே பருப்பு கடைஞ்சாரு"அப்படின்னு பக்கத்து வீட்டு அண்ணன்(அதே ஆண்ட்டியோட தம்பி தான்) தானாவே ஒரு லைனை சொருகினதைக் கேட்டதால வந்த வெறுப்பு தான் அது. ஆனா உண்மையிலேயே சூப்பர் பாட்டு அது. "எனக்கு தான் தலைவர்கள் என் ரசிகர்கள் அவர் விரும்பும் வரையில் விருந்து படைப்பேன்" அப்படீங்கற வரிகளில் இவங்க இத பாடச் சொன்னாங்க, அவங்க அதை பாடச் சொன்னாங்கன்னு எல்லாம் சொல்லிட்டு கடைசியில முத்தாய்ப்பா முடிக்கிறது ரொம்ப நல்லாருக்கும். அந்த கடைசி வரிகளைக் கேக்கும் போது எனக்கு என்னமோ வானத்தில் பல இடங்களில் ஒரு விமானம் வானளாவ பறந்து விட்டு அருமையா லேண்ட் ஆன மாதிரி இருக்கும்.


படம் : முதல் சீதனம் (1992)
இசை : சௌந்தர்யன்
பாடியது : S.P.பாலசுப்பிரமணியம்


Get Your Own Hindi Songs Player at Music Plugin

மேலே இருக்கற பாட்டுங்க எல்லாம் அவ்வளவு பிரபலம் ஆகாத பாடல்கள். ஹிட்டுன்னு சொல்ல முடியாது. ஆனா வி.எஸ்.நரசிம்மன் அவர்கள் இசையில் வெளிவந்த பாட்டு ஒன்னு இருக்குதுங்க. இந்தப் பாடலை அதிகமா வானொலிகள்லயோ, டி.விக்கள்லயோ கேட்டுருக்க முடியாது. ஆனா இது ஒரு டாப் க்வாலிட்டி மெலடி பாட்டு அப்படிங்கறதை யாராலயும் மறக்க முடியாது. ஒரு தடவை கேட்டீங்கன்னா மனசுல் நின்னுடும். திரும்பத் திரும்ப கேக்கத் தூண்டும். கே.பாலச்சந்தர் இயக்கத்துல வெளிவந்த கல்யாண அகதிகள் அப்படீங்கற படத்துல வர்ற "மனசுக்குள் உட்கார்ந்து மணி அடித்தாய் என் மவுனத்தை இசையாக மொழிப்பெயர்த்தாய்"ங்கிற பாட்டு தான். திடீர்னு இந்தப் பாட்டு நியாபகத்துக்கு வந்து பாடாப் படுத்துது. பாடாப் படுத்துதுன்னு ஏன் சொல்றேன்னா இந்தப் பாட்டோட டியூனும், இண்டர்லியூட்ஸ் நியாபகத்துக்கு வந்து கேக்கனும்னு ஒரு வெறியை ஏற்படுத்திடுச்சு. ஆனா இணையத்துல எங்கேயும் கெடைக்கலை. கானா பிரபா அண்ணாச்சி தன்னோட ரேடியோஸ்பதி வலைப்பூவுல இந்தப் பாட்டைப் போட்டிருக்காரு. ஆனாலும் எனக்கு அந்த பாட்டு கேக்கலை. உங்களுக்குக் கேக்குதான்னு பாருங்க.

கானா அண்ணாச்சியின் ரேடியோஸ்பதியில் மனசுக்குள் உட்கார்ந்து மணியடித்தாய் கேட்க...

இந்தப் படம் வெளிவந்த காலத்துல என் கூட படிச்ச பசங்கல்லாம் பாடும் வானம்பாடி, தங்கமகன், காக்கிச் சட்டை, அடுத்த வாரிசு அப்படின்னு மசாலா படங்களை எல்லாம் பாத்துட்டு கிளாசுல வந்து கதை சொல்லும் போது, நான் மட்டும் "கல்யாண அகதிகள்", "அவள் ஒரு தமிழச்சி" அப்படின்னு பாலச்சந்தர் இயக்குன சரிதா நடிச்ச பாடாவதி(அப்போ எனக்கு அப்படித் தான் இருக்கும்) படங்களைப் பாக்கப் போய் பாதியிலேயே தியேட்டர்ல தூங்கிருக்கேன். கூட வேலை செய்யறவங்க "நல்ல படம் பிரஃபஸர் இது"ன்னு சர்டிபிகேட் குடுத்தா தான் எங்க நைனா எங்களைப் படத்துக்கே கூட்டிட்டுப் போவாரு. "அடியே அம்முலு"அப்படின்னு ஆரம்பிக்கும் கவிஞர் வைரமுத்து எழுதுன இந்தப் பாட்டு. எண்பதுகளில் தூர்தர்ஷனில் செய்திகள் வாசித்த ஒருவரே அந்தப் படத்துல ஹீரோவா நடிச்சிருப்பாருன்னு நெனக்கிறேன். அதோட இது நாசரோட முதல் படம். தூர்தர்ஷனில் ஒளிபரப்பான நிகழ்ச்சிகளான கண்மணி பூங்கா, காண்போம் கற்போம், வயலும் வாழ்வோம், முன்னோட்டம், எதிரொலி இதெல்லாம் இந்தப் பாடலோட வரிகளிலேயே வர்றது சிறப்பு. மத்த எந்த பாட்டு புடிக்கலைன்னாலும் இந்தப் பாட்டு உங்களுக்குப் புடிக்கும்.

ரொம்ப நாளா போட்டோ படத்தைத் தவிர வேற எதுவும் நம்ம ப்ளாக்ல போடறதுல்லைங்கற களங்கத்தைத் துடைக்கும் விதமா இந்தப் பதிவு அமையும்னு நம்பறேன்.

21 comments:

  1. //இய்யா இய்யா இய்யாவோ எல்லாம் தெரிஞ்ச ஐயாவோ///


    தலைப்பினை பார்த்ததுமே டக்கென்று ஞாபகத்துக்கு வந்தது இந்த படப்பாடலும் அதில் குறிப்பாக இந்த வரிகளும்தான் :))))

    எம்புட்டு தடவை பாடியிருக்கோம்!: )))

    ReplyDelete
  2. என்ன கொடுமைங்க இது?

    பக்கத்தை தொறந்ததும், எல்லா பாட்டும் ஒரே நேரத்துல அலறுது?

    அது சரி, விஜய்காந்த் ராதிகா படம் சின்ன வயசுல பாத்ததா?

    சபைல, உங்களுக்கு 55 வயசுன்னு சொன்னாங்களே? :)

    ReplyDelete
  3. //தலைப்பினை பார்த்ததுமே டக்கென்று ஞாபகத்துக்கு வந்தது இந்த படப்பாடலும் அதில் குறிப்பாக இந்த வரிகளும்தான் :))))

    எம்புட்டு தடவை பாடியிருக்கோம்!: )))//

    அடடா! ரொம்ப சந்தோஷம். சரியா கேட்ச் தி பாயிண்ட் தான் போலிருக்கு :)

    ReplyDelete
  4. //என்ன கொடுமைங்க இது?

    பக்கத்தை தொறந்ததும், எல்லா பாட்டும் ஒரே நேரத்துல அலறுது?//

    வாங்க சர்வேசு,
    பாட்டோட லிங்க்ல autoplay=trueனு இருந்துச்சு. இப்ப falseனு மாத்திட்டேன். இப்போ சரியா இருக்கான்னு கேட்டுச் சொல்லுங்க.

    //அது சரி, விஜய்காந்த் ராதிகா படம் சின்ன வயசுல பாத்ததா?

    சபைல, உங்களுக்கு 55 வயசுன்னு சொன்னாங்களே? :)//

    ஆமாங்க...சின்ன வயசுல பாத்தது தான். இதெல்லாம் ரொம்ப ஓவரு...அந்த படத்துல நடிச்ச விஜயகாந்துக்கே 55 வயசு ஆகியிருக்காதுன்னு நெனக்கிறேன்.
    :)

    ReplyDelete
  5. ஒரிஜினல் மலேசியா மாரியாத்தா மை ஃபிரெண்ட் சித்தார்த்தி எங்கிருந்தாலும் மேடைக்கு வரவும். பாட்டெல்லாம் கரெக்டா கேக்குதானு லந்து பண்ணாம சொல்லவும்.
    ::)

    ReplyDelete
  6. சேலை சோலை பாட்டு மட்டும் கேட்ட ஞாபகம் வரலை.. மத்ததெல்லாம் நானும் ரசிக்கும் பாடல்.. சின்னவயசுல ரசிச்சேனா ..வெறுத்தேனாங்கறது ஞாபகம் இல்லை..

    ஆனா அதுல சோலையை கட்டினதா சொல்லலையே.. சேலை கட்டிய சோலைன்னு சொன்னமாதிரி இல்ல இருக்கு..

    நல்ல விவரமா விரிவா அலசி சொல்லிட்டீங்க.. சுவாரசியமா இருந்தது.

    ReplyDelete
  7. //இதே உழவன் மகன் படத்துல டி.எம்.எஸ் குரலில் வர்ற "பூந்தோட்டம் தாங்காதம்மா பூப்பறிக்க நாளாகுமா?"ங்கிற பாட்டும் நல்லாருக்கும். அந்த பாட்டுல முதல் பகுதியில டி.எம்.எஸ் பாடற முதல் சில வரிகள் ரொம்ப நல்லாருக்கும். "தோல்வி என்ன கால்களுக்கு" அப்படின்னு முடியும். மத்த வரிகள் சரியா நினைவில்லை.//

    Andha paattu inga irukku:
    http://www.imeem.com/people/bLkHsnX/music/f2J5KFm2/manojgyantmsoundararajanbssasirekha_unnai_dhinam_thae/

    ReplyDelete
  8. நம்ம ஊரில் இப்போ குழந்தைகளுக்கு எல்லாம் பிடித்தமான"வாரான் வாரான் பூச்சாண்டி" பாட்டு ஆபாவாணன் பாடியது என்பது தெரியுமா!
    அதற்கு இசை அமைத்தது கூட மனோஜ்-க்யான் இரட்டையரில் ஒருவரான க்யான் வர்மாவின் புதல்வர் சுனில் வர்மா தான்

    ReplyDelete
  9. //சேலை சோலை பாட்டு மட்டும் கேட்ட ஞாபகம் வரலை.. மத்ததெல்லாம் நானும் ரசிக்கும் பாடல்.. சின்னவயசுல ரசிச்சேனா ..வெறுத்தேனாங்கறது ஞாபகம் இல்லை..//

    வாங்க மேடம்,
    ஒவ்வொருத்தருக்கும் இந்தப் பாடல்களைக் கேட்டா எதோ ஒரு நினைவு வருது போலிருக்கு :)

    //ஆனா அதுல சோலையை கட்டினதா சொல்லலையே.. சேலை கட்டிய சோலைன்னு சொன்னமாதிரி இல்ல இருக்கு...//

    சரியாத் தான் சொல்லறீங்க. ஆனா அப்போ நம்ம அறிவு கம்மி தானே...அதனால தான் புடிக்கலை போலிருக்கு...இப்பவும் பெருசா ஒன்னும் வளந்துடலை...அது வேற விஷயம் :)

    //நல்ல விவரமா விரிவா அலசி சொல்லிட்டீங்க.. சுவாரசியமா இருந்தது.//

    மிக்க நன்றி.

    ReplyDelete
  10. //Andha paattu inga irukku:
    http://www.imeem.com/people/bLkHsnX/music/f2J5KFm2//

    அந்தப் பாட்டைப் பகிர்ந்துக்கிட்டதுக்கு ரொம்ப நன்றிங்க நிலாக்காலம்.
    :)

    ReplyDelete
  11. //நம்ம ஊரில் இப்போ குழந்தைகளுக்கு எல்லாம் பிடித்தமான"வாரான் வாரான் பூச்சாண்டி" பாட்டு ஆபாவாணன் பாடியது என்பது தெரியுமா!
    அதற்கு இசை அமைத்தது கூட மனோஜ்-க்யான் இரட்டையரில் ஒருவரான க்யான் வர்மாவின் புதல்வர் சுனில் வர்மா தான்//

    வாங்க பாபு சார்,
    முதலில் மன்னிக்கனும். போன பதிவுலேயே குழந்தை எப்படியிருக்கான்னு நலம் விசாரிச்சிருந்தீங்க. பதில் சொல்லாம போனதுக்கும் மன்னிக்கனும். சூப்பரா இருக்கா. ஒவ்வொரு நாளும் வித்தியாசம் தெரியுது.

    நீங்க சொல்லற இந்தப் பாட்டை அசத்தபோவது யாரு நிகழ்ச்சியில ஓரிரு முறை கேட்டிருக்கேன். ஆனா அது சினிமா பாட்டா ஆல்பமான்னு எல்லாம் கூட ஆராய்ச்சி பண்ணலை. நீங்க சொன்ன தகவல் எனக்கு முழுசுமே புதுசாத் தான் இருக்கு. பகிர்ந்துக்கிட்டதுக்கு ரொம்ப நன்றிங்க.

    ReplyDelete
  12. //வானத்தில் பல இடங்களில் ஒரு விமானம் வானளாவ பறந்து விட்டு அருமையா லேண்ட் ஆன மாதிரி இருக்கும்//


    சூப்பர் தல. நானும் இத மாதிரி ஒரு பீலிங்கை அனுபவிச்சு இருக்கேன்.

    ஏதோ ஒரு மயக்கம் .....வண்ணகிளியே!னு ஒரு பாடு இருக்கே கேட்டு இருக்கீங்களா?

    இப்போ ஷ்ரேயா நகைகடை விளம்பரத்துக்கு பேக்ரவுண்டு மியூசிக்கா போடறாங்க. தங்க்ஸுக்கும் அந்த மியூசிக் புடிக்கும். அதனால சென்சார் இல்லாம அந்த விளம்பரம் வீட்ல ஓடிட்டு இருக்கு.

    நானும் ஆஹா! பாட்டு சூப்பரோ சூப்பர்!னு சொல்லிட்டு இருக்கேன். :))

    ReplyDelete
  13. மிக சமீபத்தில்தான் எழுத்தாளர் பா.ராகவன் தன்னுடைய பதிவில் இதை பற்றி விசாரிக்க ,அப்போது சிலர் தந்த பதில்தான் நான் இங்கு தெரிய படுத்தியிருக்கிறேன்

    ReplyDelete
  14. எனக்கும் இந்தப் பாட்டெல்லாம் பிடிக்கும். உழவன் மகன், தாய்நாடு படத்துல எல்லாப் பாட்டுமே நல்லாருக்கும். மனோஜ்-கியான் இசையில வெளிவந்த எல்லாப் படத்துலயும் பாட்டுகள் நல்லாயிருக்கும். இணைந்த கைகள்ள கூட. ஒரு மாதிரி வித்யாசமான கலக்கலா இருக்கும்.

    செம்மறி ஆடே பாட்டு சூப்பரோ சூப்பர். உன்னை தினம் தேடும் தலைவன் பாட்டும் கலக்கல். வரகுச் சம்பா மொளைக்கலை ஹான்னு ஒரு பாட்டு சசிரேகா பாடியிருப்பாங்க. கலக்கல் பாட்டு அது. அதே மாதிரி ராதா நீச்சல் கொளத்துல இருக்குறப்ப ஒரு பாட்டு உண்டு. அதுவும் ஜில்லுன்னு இருக்கும்.

    தாய்நாடு...ஒரு முல்லைப் பூவிடம் கொஞ்சும் பூமணம் தஞ்சம் ஆனது கண்ணா...சிறு பிள்ளைப் பூமுகம் கொஞ்சம் வாடினால் நெஞ்சம் தாங்குமோ கண்ணா....பாட்டு ஒரு மாதிரி வடக்கத்திச் சாயல்ல இருக்கும். ஆனா பாக்குறதுக்கும் நல்லாயிருக்கும். சத்யராஜ், ஸ்ரீவித்யா, நம்பியார், ரெண்டு கொழந்தைங்கன்னு. கலக்கல்.

    இதே படத்துல இன்னொரு டி.எம்.எஸ்-பி.சுசீலா பாட்டு இருக்கு. எங்கயோ வில்லனோட கோட்டைக்குள்ள போய் சத்யராஜும் ராதிகாவும் ஆடுவாங்க. பாட்டு சட்டுன்னு நினைவுக்கு வரலை. ஆனா கலக்கலோ கலக்கல். கெடைச்சா அந்தப் பாட்டையும் குடுங்கா.

    தாய்மாமன் கைகள் பட்டு பாட்டும் நல்ல பாட்டுதான்.

    ReplyDelete
  15. //சூப்பர் தல. நானும் இத மாதிரி ஒரு பீலிங்கை அனுபவிச்சு இருக்கேன்.

    ஏதோ ஒரு மயக்கம் .....வண்ணகிளியே!னு ஒரு பாடு இருக்கே கேட்டு இருக்கீங்களா? //

    வாங்க அம்பி,
    ஆஹா...உங்களுக்கும் சேம் ஃபீலிங்கா...சூப்பர். நீங்க சொல்ற பாட்டு ஒரு க்ளாசிக் பாட்டு. இளையராஜா இசையமைப்புல வந்த ஒன் ஆஃப் தி ஆல் டைம் கிரேட் ஹிட்ஸ். படம் : கோழி கூவுது. பாட்டோட ஆரம்பத்துல வர்றா வயலின் இசையே ஒரு பிரவாகம் மாதிரி இருக்கும் கேட்டிருக்கீங்களா?

    "ஏதோ மோகம் ஏதோ தாகம்
    நேத்து வரை நெனக்கலியே
    ஆசை விதை மொளைக்கலியே
    சேதி என்ன வனக்கிளியே"

    இப்படின்னு இந்தப் பாட்டு வரும். லாலாக்கு டோல்டப்பிமா பாட்டுல ஆடுன மறைந்த விஜியும், சுரேஷும் இந்தப் பாட்டுல நடிச்சிருப்பாங்கன்னு நெனக்கிறேன். "அண்ணே அண்ணே சிப்பாய் அண்ணே நம்ம ஊரு நல்ல ஊரு இப்ப ரொம்ப கெட்டுப் போச்சுண்ணே"ங்கிற பாட்டும் இதே படம் தான். கேக்க ஜாலியா இருக்கும்.

    //இப்போ ஷ்ரேயா நகைகடை விளம்பரத்துக்கு பேக்ரவுண்டு மியூசிக்கா போடறாங்க. தங்க்ஸுக்கும் அந்த மியூசிக் புடிக்கும். அதனால சென்சார் இல்லாம அந்த விளம்பரம் வீட்ல ஓடிட்டு இருக்கு. //

    ஒரிஜினல் பாட்டோட பத்தில் ஒரு பங்கு கூட சரவணா ஸ்டோர்ஸ் விளம்பரத்துல கிக் இல்லைங்கிறது என்னோட தாழ்மையான கருத்து. தப்பா எடுத்துக்காதீங்க.
    :)

    //நானும் ஆஹா! பாட்டு சூப்பரோ சூப்பர்!னு சொல்லிட்டு இருக்கேன். :))//

    பாட்டுக்காகன்னு தான் நெனச்சிக்கிட்டு இருக்காங்க போல. அதுனால இன்னும் தப்பிச்சிக்கிட்டு இருக்கீங்க.
    :)

    ReplyDelete
  16. என்ன கொடுமை தல இது!!!

    ஆணி பிடுங்கிட்டு இருக்கும்போது எங்கிருந்தோ சித்தார்த் சித்தார்த்துன்னு குரல் கேட்டது.. ஓடியாந்தேன்.. பதிவு கூட இன்னும் போகல.. பின்னூட்டதுலதான் கூப்பிட்டிருக்காரு நம்ம தல.

    பாட்டா? லந்து பண்ணாம சொல்லணுமா?

    எல்லா பாடல்களும் சரியா ப்லே ஆகுதுண்ணே.. யாமிருக்க பயம் ஏன்! :-P

    பிறகு சாவகாசமா வந்து பதிவு படிச்சுட்டு கமேண்டுறேன். ;-)

    ReplyDelete
  17. //மிக சமீபத்தில்தான் எழுத்தாளர் பா.ராகவன் தன்னுடைய பதிவில் இதை பற்றி விசாரிக்க ,அப்போது சிலர் தந்த பதில்தான் நான் இங்கு தெரிய படுத்தியிருக்கிறேன்//

    மறு வருகைக்கும் தகவலுக்கும் நன்றி பாபு சார்.

    ReplyDelete
  18. //எனக்கும் இந்தப் பாட்டெல்லாம் பிடிக்கும். உழவன் மகன், தாய்நாடு படத்துல எல்லாப் பாட்டுமே நல்லாருக்கும். மனோஜ்-கியான் இசையில வெளிவந்த எல்லாப் படத்துலயும் பாட்டுகள் நல்லாயிருக்கும். இணைந்த கைகள்ள கூட. ஒரு மாதிரி வித்யாசமான கலக்கலா இருக்கும்.//

    ஆஹா...இதுக்குத் தான் ஊருக்குள்ள ஒரு ஆல்-இன்-ஆல் அழகுராஜா வேணும்னு சொல்லற மாதிரி பாட்டுகளைப் பத்தி மேலதிகத் தகவல்களுக்கு ஒரு ஆல்-இன்-ஆல் ஜிரா வேணும்னு இனிமே சொல்லனும் போலிருக்கு:) இணைந்த கைகள் படத்துல வர்ற "அந்தி நேர தென்றல் காற்று அள்ளித் தந்த தாலாட்டு" பாட்டு எனக்கு ரொம்ப பிடிச்ச ஒரு பாடல்.

    //செம்மறி ஆடே பாட்டு சூப்பரோ சூப்பர். உன்னை தினம் தேடும் தலைவன் பாட்டும் கலக்கல். வரகுச் சம்பா மொளைக்கலை ஹான்னு ஒரு பாட்டு சசிரேகா பாடியிருப்பாங்க. கலக்கல் பாட்டு அது. அதே மாதிரி ராதா நீச்சல் கொளத்துல இருக்குறப்ப ஒரு பாட்டு உண்டு. அதுவும் ஜில்லுன்னு இருக்கும்.//

    எல்லாமே...நச்...நச்...வரகுச் சம்பா மொளைக்கலை பாட்டு நல்லா நியாபகமிருக்கு.

    //இதே படத்துல இன்னொரு டி.எம்.எஸ்-பி.சுசீலா பாட்டு இருக்கு. எங்கயோ வில்லனோட கோட்டைக்குள்ள போய் சத்யராஜும் ராதிகாவும் ஆடுவாங்க. பாட்டு சட்டுன்னு நினைவுக்கு வரலை. ஆனா கலக்கலோ கலக்கல். கெடைச்சா அந்தப் பாட்டையும் குடுங்கா.
    //

    சூப்பரோ சூப்பர். இந்தப் படத்துல கிட்டத்தட்ட பஞ்சாபி பாட்டு மாதிரி வேகமான ஒரு பாட்டு இருக்குமே அப்படின்னு நெனச்சிட்டே இருந்தேன். ஒரு வேளை ஒரு முல்லை பூவனம் தான் அந்தப் பாட்டோ அப்படின்னு நெனச்சி தேடறத
    விட்டுட்டேன். நீங்க சொன்னதுக்கப்புறம் தான் நான் தேடிட்ட்டு இருக்கற அந்த மூனாவது பாட்டு இருக்குங்கிறது ஊர்ஜிதமாச்சு. எங்கேயாச்சும் கெடைக்குதான்னு பாக்கறேன். வருகைக்கும் பகிர்தலுக்கும் ரொம்ப நன்றி.
    :)

    ReplyDelete
  19. //சபைல, உங்களுக்கு 55 வயசுன்னு சொன்னாங்களே? :)//

    ஹிஹிஹி, சர்வேசன் ஆச்சே, சும்மாவா சொல்லுவாரு?? நான் என்னமோ பதிவைப் படிச்சதும் 75 னு இல்லை நினைச்சேன்! :))))

    பாட்டெல்லாம் கேட்கலை, கேட்டுட்டுச் சொல்றேன், அப்புறமா! அதுக்குள்ளே இணையம் சதி பண்ணாம இருந்தால்!

    ReplyDelete
  20. கலக்கல் பாட்டுத் தொகுப்பு

    செம்மறி ஆடே எல்லாம் நான் சென்னை வானொலியில் தான் கேட்டது, இந்தக் காலத்தில் வந்த பாடல்கள் ஏறக்குறைய எல்லாம் இருக்கு. ஆனா நீங்க குறிப்பிட்ட பாட்டு மட்டும் இல்லை. அதையும் தேடித் தருகின்றேன்.

    ReplyDelete
  21. செந்தூரப்பூவே படத்துல வர்ர...சசிரேகா பாடும்..செந்தூரப் பூவே பாட்ட மறந்துட்டீங்களே.

    அதே படத்துல "சோதனை தீரவில்ல சொல்லியழ யாருமில்ல" பாட்டு.. ஜெயச்சந்திரன் பாடுனது.

    அதோட முடிஞ்சதா... கிளியே இளங்கிளியே இந்தச் சபையில் வந்தாலென்ன...மலேசியா கலக்கீருப்பாரே...

    இதுவும் மனோஜ் கியான் இசைதான். அடுத்து ஊமை விழிகள்.

    சசிரேகா பாடுன ராத்திரி நேரத்துப் பூஜையில்...

    பி.பி.ஸ்ரீநிவாஸ் பாடுன...தோல்வி நிலையென நினைத்தால்...

    மாமரத்துப் பூ எடுத்து மஞ்சம் ஒன்று போடவா...

    இதெல்லாம் மனோஜ் கியான்.

    அப்புறம் வெளிச்சம் படத்துல வருமே....துள்ளித் துள்ளிப் போகும் பெண்ணே.. சொல்லிக் கொண்டு போனால் என்ன...ஆகா..ஆகா

    ReplyDelete