Sunday, March 09, 2008

531 பங்காரப்பேட் பாசெஞ்சர்

கடைசியா இதுக்கு முன்னாடி பயணிகள் தொடர்வண்டியில எப்போ பயணம் செய்தேன்னு ஞாபகம் இல்லை. அநேகமா பயணிச்சதே இல்லைன்னு தான்னு நெனக்கிறேன். ஆனா நேற்று எந்த வித முன்னேற்பாடோ, அவசியமோ இல்லாமல் பயணிகள் தொடர்வண்டியில் ஒரு பயணத்தை அமைத்துக் கொடுத்தான் 'அவன்'. மகனையும் மருமகளையும் பார்க்க வந்திருந்த அம்மாவை வழியனுப்பி வைப்பதற்காகப் பெங்களூர் கிருஷ்ணராஜபுரம் ரயில்நிலையத்திற்கு நேற்றுச் சென்றிருந்தேன். பிருந்தாவன் எக்ஸ்பிரஸில் முன்பதிவு செய்யப்பட்ட பெட்டியாக இருந்த போதிலும் சனிக்கிழமை ஆதலால் கூட்டம் முண்டியடித்துக் கொண்டிருந்தது. இப்போதெல்லாம் ஒரு பெட்டியில எத்தனை பேர் முன்பதிவு செய்திருக்காங்களோ அதை விட இரண்டு மடங்கு பேர் முன்பதிவு பெட்டியில முன்பதிவு செய்யாமல் ஏறுகிறார்கள். பகலில் சென்று இரவில் திரும்பி விடும் பிருந்தாவன், லால்பாக் ஆகிய தொடர்வண்டிகளில் வர வர நிலைமை மோசம் ஆகிக் கொண்டே செல்கிறது. முன்பதிவு செய்யப்பட்டப் பெட்டிகளில் அத்துமீறி ஏறுபவர்களைத் தடுக்க யாருமே இல்லை என்றே தோன்றுகிறது. தமிழ்நாட்டுக்குள்ளேயே செல்லும் பல்லவன், வைகை எக்ஸ்பிரஸ்களில் நிலைமை எப்படி என்று தெரியவில்லை. முண்டியடிக்கும் கூட்டத்தில் அம்மா இரண்டு பைகளை எடுத்துக் கொண்டுத் தனியாக ஏறி அமர்வது கடினம் என்று எண்ணி நானும் ஏறினேன். ஆனால் ரயிலுக்குள் ஏறுவதற்கே போதும் போதும் என்றாகி விட்டது. அதற்கு பின் அம்மாவுக்காகப் பதிவு செய்யப்பட்டிருந்த இருக்கையில் அமர்ந்திருந்தவரை எழுப்பி அம்மாவை அமர வைப்பதற்குள் ரயில் புறப்பட்டு விட்டது. நான் இறங்க முற்படும் போது யாருமே வழிவிடவில்லை. எடம் இல்லை, ஆவறதில்லை என்று சொல்லி என்னையும் ரயிலிலேயே பயணப் படுத்தினார்கள். சரி அடுத்த ஸ்டேஷனான வைட்ஃபீல்ட்டில் இறங்கிவிடலாம் என்று நினைக்க, அதிலும் விழுந்தது மண். பிருந்தாவன் எக்ஸ்பிரஸ் வைட்ஃபீல்டில் நிற்காது அடுத்தபடியாக பங்காரப்பேட்டில் தான் நிற்கும் என்று சொன்னார்கள். விதியை நொந்து கொண்டு பங்காரப்பேட் வரை டிக்கெட் இல்லாமல் நின்று கொண்டே பயணம் செய்தேன். ஏற்றிவிட வந்தவன் ரயிலில் பயணமான அனுபவமும் நமக்கு வாய்த்திருக்கிறதே என எண்ணி பின்னால் பெருமை பட்டுக் கொண்டேன். ஆக மொத்தம் இன்னும் நான் அனுபவிக்க நிறையவே இருக்கிறது :)

முக்கால் மணி நேரத்தில் அதிவேக விரைவு வண்டியில் கடந்தத் தூரத்தை பயணிகள் வண்டியில் கடப்பதற்கு எப்படியும் இரண்டு மணி நேரமாவது ஆகும் என்று தெரிந்திருந்த போதிலும் ரயில் நிலையத்திற்கு வெளியே சென்று பேருந்தைப் பிடிக்க ஏனோ தோன்றாததால் அங்கு நின்று கொண்டிருந்த 531 பங்காரப்பேட் பெங்களூர் பாசெஞ்சர் ரயிலில் ஏறிக் கொண்டேன். பாசெஞ்சர் ரயில் என்றதும் மரத்தினால் ஆன இருக்கைகளே இருக்கும் என்று நினைத்துக் கொண்டிருந்த எனக்கு ஆச்சரியம். எல்லாப் பெட்டிகளிலும் குஷன் இருக்கைகளே பொருத்தப்பட்டிருந்தன. உட்கார இடம் தேடிக் கொண்டிருக்கும் போது உண்ட களைப்பில் இருக்கைகளில் காலை நீட்டி சில பேரிளம்பெண்களும் மற்றும் சில பேரிளஆண்களும் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்ததைக் கண்டேன். அவர்களுடைய சயனத்திற்கு எவ்வித இடையூறும் ஏற்படாமல் எப்படியோ ஒரு இடத்தைப் பிடித்து உட்கார்ந்து கொண்டேன். உட்கார்ந்த நிலையிலேயே வண்டி புறப்பாட்டிற்காக 45 நிமிடங்கள் காத்திருந்தேன், எழுந்து நடமாடினால் உள்ள இடமும் பறிபோய் விடுமோ என்ற எண்ணம் தான். இது வரையிலான என்னை வளர்த்து ஆளாக்கிய, என்னுள் இருக்கும் இண்ட்ரோவெர்ட் அமர இடம் கிடைத்ததும் உயிர்த்தெழுந்தான். அது முதல் வண்டியிலிருந்து இறங்கும் வரை பல விதமான எண்ணங்களுக்கும் மன ஓட்டங்களுக்கும் காரணம் ஆனான். கோர்வையற்ற அம்மனவோட்டங்களின் பிரதிபலிப்பே இப்பதிவு.

"இந்த அம்மா மட்டும் நான் சொன்ன பேச்சைக் கேட்டிருந்தா இப்படி காரணம் இல்லாம பாசெஞ்சர் டிரெயினில் பயணிக்கிற நெலமை நமக்கு வந்திருக்குமா" என்று நினைத்தது என் மனம். ஏசி சேர் காரில் முன்பதிவு செய்கிறேன் என்ற கூறியதற்கு "வேணாம் வேணாம் ஏசியில எல்லாம் பண்ணாதே...எனக்கு ஏசி ஒத்துக்காது. குளுருல நடுங்கிக்கிட்டே போவனும்"னு சொன்னாங்க. "குளுருல நடுங்கற மாதிரி எல்லாம் இருக்காது...24 டிகிரி தான் மெயிண்டெயின் பண்ணுவாங்க"ன்னும் சொல்லிப் பார்த்தேன். "வேணாம்ப்பா, செகண்ட் க்ளாஸ்லேயே பண்ணு அப்படியே ஜன்னலோரம் உக்காந்து வேடிக்கை பாத்துக்கிட்டே போய்டுவேன், ஏசி எல்லாம் எனக்கு பழக்கமில்ல"ன்னு வந்தது பதில். "பழக்கமில்லன்னா என்ன? எப்பவுமே செகண்ட் க்ளாஸ்லே தானே போறீங்க? ஏசியில போனா தானே பழக்கம் ஆகும்" அப்படின்னேன். அதுக்கு வந்த பதிலான "நீ என்னப்பா பெரிய கம்பெனியில பெரிய வேலையில இருக்கே? எங்க வீட்டுக்காரரு ரிட்டையர்டு வாத்தியார் தானே?" என்னை யோசிக்க வைத்தது. நான் கூட வாத்தியார் பிள்ளையாக மட்டும் இருந்த நேரத்தில், தில்லியிலிருந்து சென்னைக்கு அனல் கக்கும் மே மாத வெயிலில் அச்சம் மடம் நாணம் இதை எல்லாம் மறந்து சட்டையைக் கழட்டி வைத்து விட்டு வெறும் பனியனோடு கிராண்ட் டிரங்க் எக்ஸ்பிரஸில் பயணம் செய்தவன் தானே நானும். இப்போது சென்னையிலிருந்து பெங்களூர் செல்வதற்குக் கூட யோசிக்காமல் ஐராவதத்தில் டிக்கெட் எடுக்கிறேன். கையில் பொருள் சேரும் போது மனிதனின் தேவைகளும் அவன் நாடும் வசதிகளும் அதிகரிக்கிறது.

தமிழ் துணைப்பாட நூலில் படித்த ஒரு கதை "கலையின் விலை". ஞானபீட விருது பெற்ற எழுத்தாளர் அகிலன் அவர்கள் எழுதியது. கதையில் ஒரு எழுத்தாளர். திறம்பட எழுதக் கூடியவர். ஆனால் அதற்கேற்ற அங்கீகாரம் கிடைக்காமல் வறுமையில் உழல்பவர். அவர் மனைவியும் மக்களும் அவருடைய இவ்வறுமையின் காரணமாக பல இன்னல்களை அனுபவிப்பர். யாரோ ஒருவர் வேலை தருகிறேன் நேர்காணலுக்கு வாருங்கள் என்று ரயில் டிக்கெட்டும் அனுப்பி அழைப்பார். தான் மிகவும் காதலிக்கும் எழுத்தைத் தியாகம் செய்கிறோமே என்ற வருத்தம் இருந்தாலும் தன் குடும்பத்தின் நிலையைக் கண்டு வெளியூர் செல்லத் தயாராகி ரயிலில் பயணப்படுவார். ரயில் எங்கோ ஒரு ஸ்டேஷனில் நிற்கும் போது யாரோ ஒருவர் - இவருடைய நெடுநாளைய வாசகராம், இவரை அடையாளம் கண்டு கொண்டு இவர் கையைப் பிடித்துக் கொண்டு கண்ணில் ஒற்றிக் கொள்வார் "ஐயா! நான் உங்களுடைய பரம விசிறி..."இத்யாதி இத்யாதி என்று. வாசகர் சென்றதும் தன் கையைப் பார்ப்பார் எழுத்தாளர். அதில் அவர் காண்பது ஒரு துளி கண்ணீர். "ஆஹா! இதுவல்லவோ கலையின் விலை. இதற்கு எத்தனை ஆயிரங்கள் கொடுத்தாலும் ஈடாகுமா? பால்காரன் பாக்கியையும் மளிகைக் கடைகாரன் பாக்கியையும் பின்னால் பார்த்துக் கொள்ளலாம். மனைவியை எதாவது சொல்லி சமாதானப் படுத்திக் கொள்ளலாம். கலையை விடலாகாது"என்றெண்ணி அந்த ஸ்டேஷனில் இறங்கித் திரும்பிச் சென்று விடுவார். எட்டாம் வகுப்பில் படிக்கும் போதே இந்த கதை எனக்கு சுத்தமாகப் பிடிக்காது. கலையின் மீது அவ்வளவு பற்றிருக்கும் போது எதற்காக ஐயா கல்யாணம் செஞ்சிக்கிட்டீங்க? உங்களை நம்பி இருக்கும் உங்க மனைவியும் மக்களும் வறுமையில் வாடுவது எந்த விதத்தில் நியாயம்? நீ நேசிக்கும் தொழிலின் மூலமாக மனைவி மக்களைப் பார்த்துக் கொள்ள முடியவில்லை எனும் போது வேறு வேலை தேடிக் குடும்பத்தைக் காப்பாற்றுவது தானே அழகு? அதையெல்லாம் வுட்டுட்டு கடனையெல்லாம் பாத்துக்கலாம் மனைவியை ஏமாத்திடலாம்னு இவரும் இறங்கிப் போய்டுவாராம். சுத்த ஹம்பக்கா இருந்தது படிக்கிறப்போ. ஒரு வேளை யாராச்சும் என்னை எங்கேயாச்சும் அடையாளம் கண்டுக்கிட்டு "ஐயா கைப்புள்ள! உங்க எழுத்துக்கு நான் அடிமை. நீங்க நல்லவரு...வல்லவரு"ன்னு சொல்லி என் கையில ஒரு சொட்டுக் கண்ணீர் சிந்தினா ஒரு வேளை நான் பொட்டித் தட்டறதை எல்லாம் வுட்டுப் போட்டு முழு நேர ப்ளாக்கர் ஆயிடுவேனோ என்னவோ? ஏனோ நேத்து இந்த கதை ஞாபகத்துக்கு வந்துடுச்சு.

ரயிலில் உட்கார்ந்து கொண்டு ஜன்னல் வழியே வெளியே மட்டும் வேடிக்கை பார்க்காமல் உள்ளே உட்கார்திருக்கும் மனிதர்களைக் கவனிப்பதும் ஒரு பொழுதுபோக்கு தான். ரயிலில் ஏறியதும் பசிக்கத் தொடங்கும் பலரைப் பார்த்திருக்கிறேன். எட்டு பழங்கள் பத்து ரூபாய்க்கு விற்கப் படும் சப்போட்டா பழங்களை அங்கேயே தின்று அதன் விதைகளை சீட்டுக்குக் கீழே போடுபவர்களையும், இரண்டு ரூபாய்க்கு வாங்கித் தின்ற அவித்த வேர்கடலை செவிக்கும் வயிற்றுக்கும் பற்றாமல் போகவே இன்னும் இரண்டு ரூபாய்க்கு வாங்கி அதன் குப்பைகளையும் பெட்டிக்குள்ளேயே போடுகிறவர்களையும் பார்த்துக் கொண்டே சென்றேன். எனக்கு எதிர் சீட்டில் ஒரு அப்பா, அம்மா, மகள் அடங்கிய மூவர் குழு வந்தமர்ந்தது. ரயில் பயணத்தில் வழி நெடுகத் தின்றுக் கொண்டே செல்பவர்கள் ஒரு ரகம் என்றால், ஏறி அமர்ந்ததும் தூங்கத் தொடங்குபவர்கள் இன்னொரு ரகம். நடுவில் உட்கார்ந்து நாளிதழ் படித்துக் கொண்டிருந்த தந்தையின் மடியில் தலை வைத்து மகள் படுக்க, கணவரின் தோளில் சாய்ந்து மனைவி கண்ணயர்ந்தார். அம்மனிதர் இதை ஒரு பெருமையான நிகழ்வாகக் கருதியிருக்க வேண்டும். ஏனெனில் இவ்வளவு அசவுகரியமான நிலையிலும் தன்னுடைய மூக்குக் கண்ணாடியை உயர்த்தி உயர்த்தி பேப்பர் படித்துக் கொண்டிருந்தாரே ஒழிய, மகளிடமும் மனைவியிடமும் தன் அசவுகரியத்தைக் குறித்து எதுவும் சொன்னதாகத் தெரியவில்லை. இன்னொன்னு கவனிச்சேன். மகளும் மனைவியும் சிறு சிறு இடைவெளிகளில் தூங்கிக் கொண்டு வந்தாலும் மனிதர் சிறிது நேரம் கூட கண் அயரவில்லை. பொறுப்புகளைச் சுமக்கும் போது தூக்கம் எல்லாம் வராது என்பது உண்மை தானோ?

எக்ஸ்பிரஸ் ரயில்களில் கண்ணிமைக்கும் நேரத்தில் மறைந்து போகும் சிறு ஸ்டேஷன்களிலும் நேற்று ரயில் நின்று நின்று சென்றது. அத்தகைய சிறு ஸ்டேஷன்களை நம்பியும் கிராமங்கள் இருக்கின்றன என்பதும் அதை நம்பி மனிதர்களும் அவர்களுடைய வாழ்க்கைகளும் இருக்கின்றன என்பதும் புலனானது. ஒரு சனிக்கிழமை மதியம் பங்காரப்பேட்டை என்னும் ஊருக்கும் மாலூர் என்னும் ஊருக்கும் இடையே பாசெஞ்சர் ரயிலில் பயணிக்கும் ஒரு மனிதனின் வாழ்க்கை எப்படிப் பட்டதாக இருக்கும் என்றும் அவனுடைய சிந்தனைகள் எத்தகையதாக இருக்கும் என்று ஒரு கணம் எண்ணிப் பார்த்தேன். வாரத்தில் சில நாட்கள் ஒரு ஏசி ஆஃபீசில் உட்கார்ந்து பெட்டி தட்டிப் பிழைப்பை நடத்தும் என்னைப் போன்றவனுக்கு அது மட்டும் தானே செய்ய முடியும்?

பயணம் தொடரும்...

Saturday, March 01, 2008

கமலம்...பாத கமலம்...

படம் : மோகமுள்
பாடல் : வாலி்
இசை : இளையராஜா
பாடியது : K.J.யேசுதாஸ்


கமலம் பாத கமலம்...
கமலம் பாத கமலம்...
கமலம் பாத கமலம்...

உயர் மறையெலாம் புகழும்
கமலம் பாத கமலம்...
இசையான வடிவான
இறைவன் நீதான் என்று
நான் தொழும்
தலைவன் நீ தான்
என்று போற்றிடும்
கமலம் பாத கமலம்...
உயர் மறையெலாம் புகழும்
கமலம்...

ஆகாயம் வெளுக்கும்
அதிகாலை அழகில்
காகங்கள் விழித்து
கரைகின்ற பொழுதில்
நெல்மூட்டை நிரப்பி
நெடுஞ்சாலை கடக்கும்
வில்வண்டி இழுக்கும்
மாட்டின் மணியோசை
மயக்கும் இதமான இளங்காற்று
எனைத் தீண்டித் திரும்பும்
மெதுவாக இசைஞானம்
மனதோடு அரும்பும்
ஸ்வரங்கள் எனக்குள் பிறக்க
அருள் எனும் பேரமுதினைப் பொழிந்திடும்
கமலம் பாத கமலம்


உயர் மறையெலாம் புகழும்
கமலம் பாத கமலம்...
இசையான வடிவான
இறைவன் நீதான் என்று
நான் தொழும்
தலைவன் நீ தான்
என்று போற்றிடும்
கமலம் பாத கமலம்...
உயர் மறையெலாம் புகழும்
கமலம்...

நாவாறப் பெரியோர்
நிதமிங்கு இசைக்கும்
தேவாரப் பதிகம்
திசைதோறும் ஒலிக்கும்
மும்மூர்த்தி பிறந்து
சாகித்யம் புனைந்து
செம்மூர்த்தி நினைவில்
தெய்வ சங்கீதம் வளர்த்து
திருவீதி வலம் வந்த
தலம் இந்த தலம் தான்
இசைமாரி நிதம் பெய்த
இடமிந்த இடம் தான்
நினைத்தால் மனத்தால்
துதித்தால் நலமுறும்
இசைநயங்களை வழங்கிடும்
கமலம் பாத கமலம்...


உயர் மறையெலாம் புகழும்
கமலம் பாத கமலம்...
இசையான வடிவான
இறைவன் நீதான் என்று
நான் தொழும்
தலைவன் நீ தான்
என்று போற்றிடும்
கமலம் பாத கமலம்...
உயர் மறையெலாம் புகழும்
கமலம் பாத கமலம்




பாடலைக் கேட்க :
Get this widget Track details eSnips Social DNA



கடந்த கால நினைவுகளில் இன்னும் பிரகாசமாக இருக்கக் கூடிய விஷயம் ஒன்று உள்ளது. அவ்விஷயம் இப்போது கிடைக்காமல் இருப்பது அந்த பழைய நினைவுகளை இன்னும் சிறப்பானதாக மாற்றுகிறது. அது - ஒத்த விருப்பம் உள்ள நண்பர்களுடன் இளையராஜாவின் பாடல்களைப் பற்றிப் பேசிக் கொண்டிருப்பது. ராகம், தாளம் பற்றியெல்லாம் பேசியதில்லை...இருப்பினும் தலைவருடைய பாடல்கள் தரும் மகிழ்ச்சியை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதும் ஒரு சுகம் தான். கல்லூரி படிக்கும் நாட்களில் நண்பன் தியானேசுவரன் தான் இளையராஜாவின் பழைய பாடல்களை எனக்கு அறிமுகப் படுத்தியவன். அதன் பின்னர் தில்லி சென்ற பிறகு இளையராஜாவின் பாடல்களைத் தேடித் தேடிக் கேட்பது வழக்கம். இந்தூரில் இருக்கும் போது, எங்கள் நிறுவனத்தின் ஃபைனான்ஸ் ஹெட் ஒரு தீவிர இளையராஜா ரசிகர் என்று தெரிந்து கொண்டேன். சனிக்கிழமை மாலைகளில் சும்மாவே என்னை தன் அறைக்குக் கூப்பிட்டு இளையராஜாவின் பாடல்களைப் பற்றிச் சொல்லிக் கொண்டிருப்பார். தேசிய விருது வாங்கிய திரைப்படம் என்று மோகமுள் திரைப்படத்தைப் பற்றிக் கேள்வி பட்டிருந்திருக்கிறேன். ஆனால் அப்படத்தில் மேற்கண்ட பாடலையும் அதன் அழகினையும் எனக்கு அறிமுகப் படுத்தியவர் அவர் தான்.

"எனக்கு சொந்த ஊர் தஞ்சாவூர்ப்பா. எங்க ஊருல ஒரு அதிகாலை நேரத்து காட்சியைப் பார்த்த மாதிரியே இருக்கும் - நெல்மூட்டை நிரப்பி நெடுஞ்சாலை கடக்கும் வில்வண்டி இழுக்கும் மாட்டின் மணியோசை - வரிகள். லிரிக்ஸும் ராஜாவோட மியூசிக்கும் ஜஸ்ட் அமேசிங்" அப்படின்னார். அதுக்கப்புறம் அந்தப் பாடலைக் கேட்ட பிறகு தான் அதன் அழகு புரிந்தது. மாட்டின் மணியோசை தரும் மகிழ்ச்சியை இதுவரை உணர்ந்ததில்லை. ஆனால் அதை எப்போதாவது கேட்கும் வாய்ப்பு கிடைத்தால் அம்மகிழ்ச்சியை அனுபவித்துப் பார்க்க வேண்டும் என்ற ஆசையை தன் வரிகளின் மூலம் ஏற்படுத்தியிருப்பார் கவிஞர் வாலி. செந்தமிழ்ப் பண்ணும் உயரிய இசையும் மனதுக்கு எவ்வாறு குதூகலத்தைக் கொடுக்கும் என்பதற்கு இப்பாடல் நல்லதோர் உதாரணம். இப்பாடலில் நானாகக் கவனித்த ஒரு விஷயம் ஒன்று உள்ளது. அது பாடலின் 1:50வது நிமிடத்திலிருந்து 2:13ஆம் நிமிடத்துக்கு இடையில் வரும் முதல் சரணத்தில் "இதமான இளங்காற்று" எனும் தொடங்கும் வரிக்குச் சற்று முன்னர் வரும் ஒரு தபலா/மிருதங்கம் நோட். உன்னிப்பாகக் கேட்டுப் பாருங்கள்...பாடல் வரிகளுக்கு நடுவில் தபலா/மிருதங்கத்தில் மெல்லமாகத் தட்டி இடைவெளி கொடுத்தது போல இருக்கும் அந்த நயம் உண்மையிலேயே மனதைத் துள்ளச் செய்யும். பாடலுக்கும் அழகு சேர்க்கும். அதே போல பாடலின் 3:39வது நிமிடத்திலிருந்து 4:02ஆம் நிமிடத்துக்கு இடையில் வரும் இரண்டாம் சரணத்தில் "திருவீதி வலம் வந்த" எனும் தொடங்கும் வரிக்கு முன்னரும் இதை ரசிக்கலாம். நீங்களும் இப்பாடலின் வரிகளையும் இசையையும் ரசிப்பீர்கள் என நம்புகிறேன்.

படங்களைப் பற்றிய குறிப்புகள் :
1. குஜராத் மாநிலத்தில் அகமதாபாத்தில் சார்கேஜ் காந்திநகர் நெடுஞ்சாலையில் செல்லும் ஒட்டக வண்டி. அகமதாபாத்தில் இருந்த போது நிறைய ஒட்டகங்களைப் பார்த்திருக்கிறேன். காய்கறிகள் விற்கும் வண்டியைக் கூட அங்கு ஒட்டகம் இழுத்துச் செல்வதைக் கண்டிருக்கிறேன்.

2&3 சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள "தக்ஷின சித்ரா" எனும் பாரம்பரியப் பொருட்கள் மற்றும் கைவினைப் பொருட்கள் கண்காட்சியில் எடுத்த படங்கள்.