Monday, February 11, 2008

உண்மையைச் சொல்ல வேண்டிய நேரம் வந்தாச்சு

அந்த இரவு - நம்ம ஜாவா பாவலர் கவிஞர் கப்பி எழுதுன ஒரு கதை. "நீங்கள் என்றாவது ஒரு இரவு காவல் நிலையத்தில் கழித்திருக்கிறீர்களா?? காவல் நிலையத்தில் நான் கழித்த அந்த இரவு இத்தனை வருடங்களுக்குப் பிறகும் சில தூக்கமில்லா நாட்களில் என்னை அலைகழித்துக் கொண்டிருக்கிறது"ன்னு ஆரம்பிக்கிற முதல் வரி தொடங்கி கதையின் நடுவில் நடுவில் இருக்கிற பல வரிகளுக்கும் 'ஆமாம்','ஆமாம்'னு சொல்லற மாதிரியான ஒரு கதை. அந்த கதைக்கு பாஸ்டன் பாலா போட்டிருக்குற ஒரு கமெண்ட் "Too close to be true" - அதுக்கும் நம்ம தரப்புலேருந்து ஒரு ரிப்பீட்டேய் தான். கற்பனையில் கதை எழுதுன ஒருத்தர் இவ்வளவு எதார்த்தமா அந்த சம்பவத்தை விவரிச்சிருக்காருன்னு நினைக்கும் போது மலைப்பாவும் ஆச்சரியமாவும் இருக்கு.

ஆகஸ்ட் 12, 2001 - என் வாழ்வில் என்றும் மறக்க முடியாத ஒரு நாள். முதன் முதலாக என் வாழ்வில் காவல் நிலையத்தைக் கண்ட ஒரு நாள். போலீஸ்காரர்கள் துருவித் துருவி விசாரிப்பது எப்படி இருக்கும் என முதன் முதலாக என் வாழ்க்கையில் நான் கண்டறிந்து கொண்ட நாள். நிற்க. இது கற்பனை கதை இல்லை. கைப்புள்ள என்ற பெயரில் எழுதும் மோகன் ராஜ் ஆகிய என்னுடைய வாழ்வில் நடைபெற்ற ஓர் உண்மை சம்பவம். அப்போது நான் புது தில்லியில் வேலைக்குச் சேர்ந்த புதிது(ஜூன் 1, 2001 அன்று வேலைக்குச் சேர்ந்தேன்). உற்பத்தி சார்ந்த ஒரு நிறுவனத்தில், வரைபடங்கள்(GIS Mapping) துறையில் துணை மேலாளர்(Asst.Manager) ஆகச் சேர்ந்திருந்தேன். Manufacturingக்கும் GIS Mappingக்கும் என்ன தொடர்பு என்று நீங்கள் கேட்பது புரிகிறது. எங்களுடைய இப்பிரிவு அப்பெரிய நிறுவனத்துக்குள்ளேயே ஒரு startup company போல செயல் பட்டுக் கொண்டிருந்தது. கல்லூரியில் இருந்து தேர்வு செய்து வேலைக்கு அமர்த்தும் போதே ஒரு 'startup atmosphere'இல் வேலை செய்ய வேண்டியிருக்கும் எனக் கூறியே வேலைக்குச் சேர்த்தார்கள். Startup என்னும் சொல் கேட்பதற்கும் புத்தகத்தில் படிப்பதற்கும் வேண்டுமானால் ஃபேன்சியாக இருக்கலாம். ஆனால் ஒரு startup companyக்குக் கூடவே வருபவையாவன - குறைவான வசதிகள், தொட்டுக்கோ-தொடைச்சிக்கோ எனும் அளவில் நிதி, வெளியில் இருந்து வருமானத்தை ஈட்டினால் நீங்கள் சொல்வது மேலதிகாரிகளால் செவி மடுத்து கேட்கப்படும்.

ஆகஸ்ட் 2001 துவக்கத்தில் மலேசிய நிறுவனம் ஒன்றினால் நாங்கள் அணுகப் பட்டோம். புது தில்லி முனிசிபல் கார்ப்பரேஷன்(NDMC) அவர்களுடைய கழிவுநீர் கால்வாய்கள் சம்பந்தப்பட்ட டெண்டர் ஒன்று வெளியே வரவிருக்கிறது. நாங்கள் சமர்ப்பிக்கப் போகும் டெண்டர் ஆவணத்தில் எவ்வாறு எங்கள் பணியை மேற்கொள்வோம் என்ற அணுகுமுறை ஆவணம்(Approach Paper) ஒன்றையும் தரவுள்ளோம். அதற்கு இன்ன இன்ன பகுதிகளின் சாலையின் இருமடங்கிலும் என்னென்ன இருக்கின்றது எனும் விரிவான ஒரு வரைபடம் தேவை என்று ஒரு ஆர்டர் கொடுத்தார்கள். எங்கள் துறையின் முதல் ஆர்டர் என்பதால் எங்களுடைய பாஸும் அந்த ஆர்டரை எடுத்துக் கொண்டார். அவருக்கும் GIS Mapping, Survey பற்றி எல்லாம் ஒன்று தெரியாது. உற்பத்தி சார்ந்த தொழிற்சாலையில் 'Production Line' மேற்பார்வை செய்துக் கொண்டிருந்தவர் அவர். பெரும்பாலான Old Economy தொழில்களில் வழிமுறைகள்(Process) இல்லாமலேயே தான் பல பணிகளையும் மேற்கொண்டிருக்கின்றனர். இது நான் என் அனுபவத்தில் பலவிடங்களிலும் கண்ட ஒரு உண்மை. ஒரு வேலை செய்து கொண்டிருக்கும் ஒருவர் அவ்வேலையை விட்டு நிற்கும் போது அவர் செய்து கொண்டிருந்த வேலைக்குண்டான Documentation முதலியவை எதுவும் இருக்காது. அவ்விடத்திற்கு புதிதாக வரும் ஒருவருக்குக் கண்ணைக் கட்டி காட்டில் விட்டது போல் தான் இருக்கும். நீஙகள் ஆரம்பம் முதலே ஒரு IT Companyஇல் வேலை செய்துக் கொண்டிருப்பவர் என்றால் இதை புரிந்துக் கொள்வது சற்று கடினமாகத் தான் இருக்கும். Programmer, Analyst, Project Lead, Project Manager என்று ஒரு ப்ராஜெக்டைச் செய்து முடிக்க ஒரு டீம் எல்லாம் இருக்காது. உற்பத்தி சார்ந்த நிறுவனத்தில் IT துறையில் வேலை பார்க்கிறீர்கள் என்றால் அ முதல் ஃ வரை எல்லாம் நீங்கள் தான். பாஸினுடைய சிந்தனை எல்லாம் ஆர்டர் பெறுவது, வருமானம் ஈட்டுவது என்பதிலேயே இருக்கும். அவருக்குக் கீழே எனக்கு ஒருபடி மேலே இன்னொருவர் இருந்தார். அவர் GIS துறையில் வேலை செய்து அனுபவம் பெற்றிருந்தவர். அவருக்கு இதன் கஷ்ட-நஷ்டங்கள் புரிந்திருக்க வேண்டும். அதனாலேயே அவர் இந்தப் ப்ராஜெக்டில் ஆர்வம் காட்டவில்லை.

ஆகஸ்ட் 11, 2001 - இதுவும் என் வாழ்நாளில் மறக்க முடியாத ஒரு நாள். முதன் முதலாக(கடைசி முறையாகவும் கூட என நினைக்கிறேன்!) என் வாழ்வில் நான் பட்டமளிப்பு விழாவைக் கண்ட நாள். இன்ஃபோசிஸ் தலைவர் திரு.நாராயண மூர்த்தி சிறப்பு விருந்தினராக வந்திருந்தார். IIT-Dயின் முன்னாள் மாணவரும் ஹிந்துஸ்தான் லீவரின் அப்போதைய தலைவருமான விண்டி பங்கா, மெக்கின்சி கன்சல்டிங்கின் அப்போதைய தலைவர் ரஜத் குப்தா ஆகியோரும் வந்திருந்தனர். சனிக்கிழமை காலை நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் அப்போதைய IIT Delhi இயக்குநர் திரு.ஆர்.எஸ்.சிரோஹி அவர்கள் கையால் பட்டம் வாங்குவதை படம் பிடித்திருந்த போட்டோகிராஃபரைத் தேடிக் கண்டுபிடித்து ஆர்டர் கொடுத்துவிட்டு ரொம்ப நல்ல பையனா சனிக்கிழமை மதியத்தைக் கூட லூஸ்ல விடாம ஆஃபீஸ் போய்ச் சேர்ந்தேன். அங்கே போனால் பாஸ் சத்தம் போட்டுக் கொண்டிருந்தார் - மலேசியா மன்னார் அண்ட் கம்பெனியின் ஆர்டர் என்னாச்சுன்னு? புதுசா வேலைக்குச் சேர்ந்த கம்பெனியில initiative, passion, leadership இதெல்லாம் காட்டனும்னு எங்கேயோ படிச்சது ஞாபகத்துக்கு வரவே நான் நாளைக்குப் போய் அந்த ஏரியாவோட ஸ்கெச் போட்டுக் கொண்டாறேன் சார்னு சொன்னேன்.

நாம படிச்சது என்ன, செய்யப் போற வேலை என்ன, இந்த வேலையை நம்மால செய்ய முடியுமா? செய்யறதுக்குத் தேவையான திறமை, உபகரணங்கள், உதவிகள் இதெல்லாம் நம்ம கிட்ட இருக்குதா எதை பத்தியும் யோசிக்கலை. அந்த வேலையை நல்ல படியா முடிச்சித் தரனும். நாங்க ஒத்துக்கிட்ட வேலையை முடிச்சித் தரனும் அப்படிங்கிற "உடோப்பிய" எண்ணங்கள் மட்டுமே என் மனதில் மேலோங்கி நின்றது. சரி ஆஃபிஸ் பாய்ஸ் ரெண்டு பேரைக் கூப்பிட்டுட்டுப் போன்னு சொன்னாங்க. மறுநாள் ஞாயிற்றுக்கிழமை நான் என் வீட்டுலேருந்தும் அந்த ஆஃபிஸ் பாய்ஸ் அவங்க அவங்க வீட்டுலேருந்தும் நேரா 'சைட்டுக்கு' வந்துட்டாங்க. சர்வே லெவல், தியோடோலைட், ப்ளேன் டேபிள், ஜிபிஎஸ் இதை எல்லாம் வச்சி பண்ண வேண்டிய வேலையைச் செய்யறதுக்கு ஒரு முப்பது மீட்டர் டேப்பும், ஒரு பேட்டும், சில பேப்பர்களும், பென்சிலும் மட்டும் எடுத்துக்கிட்டுப் போயிருந்தோம். பெரிய முட்டாள்தனம்னு இப்ப புரியுது...அப்போ புரியலை. சாதிக்கனும் நல்ல பேரு வாங்கனும் என்கிற ஒரு முரட்டுத்தனமானக் குருட்டு தைரியம் மட்டும் தான் இருந்துச்சு. நாங்க எங்க வேலையைச்(Survey) செஞ்சிட்டு இருந்த ஏரியா குடியரசுத் தலைவர் மாளிகையிலேருந்து ஒரு 2-3 கி.மீ தொலைவு தான். அரசாங்க அதிகாரிகளும், எம்.பிக்களும், மந்திரிகளும் குடியிருக்கும் பங்களாக்கள் அமைந்துள்ள ஒரு இடம். காலேஜ் படிக்கும் போது எப்பவும் தியோடலைட்டை வச்சோமா ஒரு மணி நேரம் வெயில்ல நின்னோமா...அசிமத்ல(Azimuth) சூரியனைப் பாத்தோமா ஒரு நாலு ரீடிங் எடுத்தோமா, கேல்குலேஷன் எடுத்தோமா...ரிசல்ட் சரியா வரலைன்னா அப்படி இப்படி மாத்தி போட்டோமா...முடிச்சோமான்னு இருக்கும். ஆனா நிஜ வாழ்க்கையில் ஒரு நூறு மீட்டர் தூரத்தை சர்வே எடுத்து முடிக்கிறதுக்குள்ள நாக்கு தள்ளிடுச்சு.

அப்படியே சர்வே பண்ணிட்டு, பாதுகாப்பு அமைச்சகத்தின் தலைமையகம் இருக்கும் 'ரக்ஷா பவன்' இருக்கும் டாக்டர்.ராஜேந்திர ப்ரசாத் சாலை(அதான்னு நினைக்கிறேன்) அருகே நின்னுக்கிட்டு இருந்தோம். அப்போ சைக்கிள்ல வந்த ஆர்மி காரர் ஒருத்தர் "என்ன பண்ணிக்கிட்டிருக்கீங்க?" அப்படின்னு கேட்டார். "சர்வே பண்ணிக்கிட்டிருக்கோம்" அப்படின்னோம். சரின்னுட்டு போயிட்டார். ஒரு ரெண்டு நிமிஷம் கழிச்சி எங்களை நோக்கி ஒரு ஜீப் வந்தது. அதுல இருந்து ரெண்டு போலீஸ்காரங்க எறங்கினாங்க. "என்ன பண்ணிக்கிட்டிருக்கீங்க"ன்னாங்க? சர்வே பண்ணிக்கிட்டிருக்கோம் அப்படின்னு சொன்னோம். "இது ஹை-செக்யூரிட்டி ஏரியா, இங்கே சர்வே எல்லாம் பண்ண பர்மிஷன் வாங்கனும். பர்மிஷன் இருக்கா?" அப்படின்னாரு. "இல்லீங்க" அப்படின்னேன். "உன் ஐ-கார்டை காட்டு" அப்படின்னாங்க. அப்போ என் கையில ஐ-கார்ட் இல்லை, ஏன்னா ஐ-கார்டே யாருக்கும் எங்க கம்பெனியோட கார்பரேட் ஆஃபிஸ்ல கொடுக்கலை. எங்களால தான் எல்லாருக்கும் அப்புறமா ஐ-கார்ட் கெடச்சுது.என் விசிட்டிங் கார்டை எடுத்துக் காட்டுனேன். "இந்த மாதிரி விசிட்டிங் கார்ட் என்னால ஆயிரம் அடிக்க முடியும்"ன்னார் கொஞ்சம் கறாரா. "சரி ஜீப்ல ஏறுங்க, உங்களை விசாரிக்கனும் ஒரு 10-20 நிமிஷம் வேலை" அப்படின்னாரு. முதன் முறையா போலீஸ் ஜீப்ல பின்பக்கம் ஏறுனேன். பத்து இருபது நிமிஷம்னு சொல்லி எங்களைக் கூப்பிட்டுட்டுப் போன இடம் சவுத் அவென்யூ போலீஸ் ஸ்டேஷன். ராஷ்டிரபதி பவன் காவல் நிலையத்தின் கட்டுப்பாட்டுக்கு கீழே இருந்த ஒரு அவுட் போஸ்ட் அது.

ரக்ஷா பவன் கிட்ட எங்க கிட்டே பேசுன போலிஸ்காரர் பேசுனது முதல்ல கறாரா பட்டது. ஆனா சவுத் அவென்யூ போலிஸ் ஸ்டேஷன்ல இருந்தவங்க விசாரிக்கும் போது தான் தெரிஞ்சிச்சி...அவர் போலீஸ்காரர்கள்ல அன்பானவரு அப்படின்னு. அங்கே இருந்த போலீஸ்காரங்க விசாரிக்கிறதும் பேசற தொனியும் வித்தியாசமா இருந்துச்சு..,அதாவது மெரட்டற மாதிரி. என் கையில ஒரு பேஸ் மேப் இருந்தது அதுல சர்வே பண்ண வேண்டிய இடங்களைக் குறிச்சி வச்சிருந்தேன். "இந்த எடங்கள்ல எல்லாம் பாம் வக்க போறீங்களா. ஆகஸ்ட் 15 ஆம் தேதி வேற வருது" அப்படின்னு கேட்டதுமே பயந்துட்டேன். என்னமோ நெனச்சி வந்தோம் இப்படி தேசத் துரோக கேஸ், தடா, பொடான்னு எதாச்சுலயும் போட்டு உள்ளே தள்ளிடுவாங்களோன்னு அப்போ தான் நிலைமையின் தீவிரம் புரிஞ்சுச்சு. "அதெல்லாம் இல்லீங்க, நான் நல்ல கம்பெனியில கவுரவமான ஒரு பதவியில இருக்கேன். உண்மையிலே சர்வே பண்ணறதுக்குத் தான் வந்தோம், இங்கெல்லாம் வரக் கூடாதுன்னு எங்களுக்குத் தெரியாதுங்க"அப்படின்னு சொல்லி பாத்தேன். அங்க இருந்தவங்கள்லேயே குறிப்பா ஒரு சப்-இன்ஸ்பெக்டர் கொஞ்சம் பயங்கரமா இருந்தாரு. சினிமால காட்டுவாங்களே அந்த மாதிரி...உதட்டுக்குக் கீழே குட்காவை அடக்கி நாக்கைச் சுழட்டற டைப். "அதெல்லாம் விசாரணையில் தெரிய வரும்" அப்படின்னு பீதியைக் கெளப்புற மாதிரியே பேசினாரு.

அப்போ அங்கே இருந்த நவபாரத் டைம்ஸ் ஹிந்தி பேப்பர்ல வெளிவந்திருந்த ஐஐடி தில்லியின் பட்டமளிப்பு விழா போடோவைக் காட்டி..."சார்! நேத்து ஹவுஸ் காஸ்ல நடந்த இந்த ஃபங்சன்ல தான் சார் நான் டிகிரி வாங்கினேன்". "எல்லாம் சரி...உன் கிட்ட என்ன ஆதாரம் இருக்கு? ஐ-கார்டும் இல்லை, பெர்மிஷனும் இல்லை...எப்படி நாங்க நம்பறது? இன்னிக்கு ஜென்மாஷ்டமி ஒரு நாள் ராத்திரி இங்கே தங்கிட்டுப் போங்க" அப்படின்னு நக்கலாச் சொன்னாரு. அதுக்கப்புறம் எங்க ஆஃபீசுக்கும் என் பாஸுக்கும், என் பாஸோட பாஸுக்கும் போன் பண்ணி விஷயத்தைச் சொன்னேன். "சரி, கவலைபடாதே சீக்கிரமே வந்து உங்களைக் கூட்டிட்டுப் போறோம்"னு சொன்னாங்க. அதுக்கப்புறம் அந்நேரத்துல என் மனசுல ஓடுனதை வார்த்தைகளா வடிக்கிறது ரொம்ப கஷ்டம்னு நெனக்கிறேன். வலிய போய் விவகாரத்துல மாட்டிக்கிட்டோமோன்னு ஒரு பயம், இந்த விஷயம் வெளியில தெரிஞ்சா நம்மளைப் பத்தி என்ன நினைப்பாங்கன்னு ஒரு கவலை, பையன் படிச்சி பெரிய கம்பெனியில வேலை செய்யறான்னு நினைச்சிட்டிருக்க பெத்தவங்க, தேசத்துரோக கேஸ்ல மாட்டிருக்கான்னு தெரிஞ்சா என்ன நெனப்பாங்க, அதுக்கப்புறம் வழக்கமா எல்லாரும் நெனக்கிற "நமக்கு மட்டும் ஏன் இப்படி எல்லாம் நடக்குது?". ஒரு படி மேலே போய் கரகாட்டக்காரன் படத்துல காந்திமதி கிட்ட சண்முகசுந்தரம் சொல்லுவாரே "பூட்ஸ் காலால போலீஸ் காரங்க என் வயித்துல எட்டி எட்டி உதைச்சாங்கக்கா" அப்படின்னு சொல்ற மாதிரி விட்டுருவாங்களோன்னு ஒரு பயம் வேற.

இதுக்கு நடுவுல யார் யாரோ வந்தாங்க, என்னென்னமோ கேட்டாங்க...எல்லாத்தையும் எழுதிக்கிட்டாங்க. என்ன நடக்குதுன்னு ஒன்னும் புரியலை. சினிமால பாத்தீங்கன்னா "யாரு பெத்த புள்ளயோ? இப்படி வந்து கஷ்டப்படுதே"ன்னு வசனம் பேச யாராச்சும் ஒருத்தங்க இருப்பாங்க...அதே மாதிரி அங்கேயும் ஒரு கான்ஸ்டபிள் இருந்தாரு. தேன்கூடு சிறுகதை போட்டியில பரிசு வாங்குனாருல்ல வாத்தியார் இளவஞ்சி? அதுல கதை நாயகனுக்கு அட்வைஸ் பண்ணற ஒரு ஹெட் கான்ஸ்டபிள் வருவாரே நியாபகம் இருக்கா? கிட்டத்தட்ட அவரை மாதிரி. "பாத்தா படிச்ச புள்ள மாதிரி இருக்குறே? ஏம்ப்பா இப்படி வந்து மாட்டிக்கிட்டீங்க? ஒன்னும் கவலை படாதீங்க...விசாரணை முடிஞ்சிட்டு விட்டுருவாங்க" அப்படின்னாரு. அவரு பேச்சைக் கேட்டதும் கொஞ்ச ஆறுதலா இருந்தது. அதுக்குள்ள அந்த சப் இன்ஸ்பெக்டர் வந்தாரு - "போட்டோவும் கைரேகையும் எடுத்திட்டியாய்யா"ன்னாரு? "அவசியமா எடுக்கனுமா"ன்னாரு நம்ம ஏட்டு. "ஆமா கட்டாயமா" அப்படின்னாரு சப் இன்ஸ்பெக்டர். அப்போ தான் அது நடந்தது. ஒரு ஸ்லேட்டுல இந்தியில என் பெயரை எழுதி கையில கொடுத்திட்டாங்க. அந்த பக்கமும் இந்த பக்கமும் திரும்பச் சொன்னாங்க...போட்டோ எடுத்தாங்க. உண்மையிலேயே அழற நெலைமைக்கு வந்துட்டேன். மகாநதி படத்துல கமல் அந்த மாதிரி எடுத்த ஸ்டில்லை எல்லாம் பாக்கும் போது என்னமோ ஸ்டைலிஷா இருக்குற மாதிரி இருந்துச்சு...ஆனா உண்மையிலேயே அது ரொம்பவே கலங்கச் செய்கிற அனுபவம்.

இதை எழுதும் போது பல எடங்கள்லயும் திரைப்படங்களை மேற்கோள் காட்டியிருக்கிறேன். ஏனென்றால் அது வரை சினிமாவில் மட்டுமே கண்டதை என் வாழ்வில் நேரடியாக அனுபவித்தேன். அதுக்கப்புறம் எல்லா விசாரணையும் முடிஞ்சி மாலை ஆறு மணியளவில் அனுப்பி வச்சிட்டாங்க. சிபிசிஐடி, சிபிஐ, ரா இப்படின்னு பல ஆளுங்க வந்து விசாரிச்சதா வெளியில வந்ததும் எங்க பாஸ் சொன்னாரு. அதுக்கப்புறம் ஆஃபீஸ் வந்ததுக்கப்புறம் பல விதமான விசாரிப்புகள். சிலர் உண்மையிலேயே வருத்தப்பட்டு விசாரிச்சாங்க. சிலர் நெஞ்சுக்கு நேரா ஸ்லேட்டைப் பிடிச்சிட்டு நின்னதைப் பத்தி நக்கலா விசாரிச்சாங்க...கூட வந்த பசங்க இதைப் பத்தி எல்லார் கிட்டேயும் உளறிட்டானுங்க போலிருக்கு. இதை கேள்வி பட்ட சிலர் உண்மையிலேயே நீ MBA படிச்சி பாஸ் பண்ணியா? இல்லை பிட் அடிச்சி பாஸ் பண்ணியான்னு கூட கேட்டிருக்காங்க..."ஏன்னா இந்த விஷயத்துல சாமர்த்தியமா நடந்துக்கத் தெரியாம வலிய போய் வம்புல மாட்டிருக்கியே" அப்படீங்கற அர்த்தத்துல. சில வருடங்களுக்கு அப்புறம் இதைப் பத்தி நெனச்சிப் பாக்கும் போது எனக்கே கூட சிரிப்பா இருந்திருக்கு...ஆனா அந்த அனுபவம் நடைபெற்ற ஒரு சில மாதங்கள் மனதை அழுத்துவதாகவும் வேதனையாகவும் இருந்தது என்பதை ஒத்துக் கொள்ளத் தான் வேண்டும்.

என் முட்டாள் தனத்தின் பிரதிபலிப்பான இச்சம்பவத்தை எழுதி வைக்க வேண்டுமா? எல்லாருக்கும் காட்ட வேண்டுமா என்று கூட பலமுறை நினைத்தேன். ஆனால் இது மாதிரியான நிகழ்வுகளும் வாழ்க்கையின் ஒரு பகுதின்னு பல வருடங்களுக்குப் பிறகு புரிஞ்சது. இதெல்லாம் நமக்கு மட்டும் ஏன் நடக்கதுன்னு நாம நெனக்கிறது கூட நாம மட்டும் நெனைக்கலை, நம்மள மாதிரியே பல பேரும் நெனைக்கிறாங்கன்னும் புரிஞ்சுது. இதுக்கும் மேலயும் எவ்வளவோ பாத்துட்டோம் இதெல்லாம் எழுதி வச்சிக்கிட்டா நம்ம அருமை பெருமை எல்லாம் வருங்கால சந்ததியினர் படிச்சித் தெரிஞ்சிக்குவாங்கல்ல

48 comments:

  1. நண்பரே, அப்படியே உண்மை.முன்பு இரவில் (வேலை முடிந்து) போகும்போது ஓவ்வொரு முறையும் இப்படித்தான் நினைப்பேன்,"என்னைக்குத் திவிரவாதின்னு மாட்டப்போரேணோ? ஹிந்தியும் தெரியாது".

    ReplyDelete
  2. அடப்பாவமே.. ம்.. எல்லாம் அனுபவம் தான்.. சிரிக்கறவங்களுக்கு அந்த அனுபவம் நேர்ந்தா தான் அவங்க திறமை எப்படின்னு தெரியும்..
    சில சமயம் இந்த் மாதிரி அதிகாரிகளிடம் ஒன்னும் தெரியாம நிக்கரதே நல்லது.. தெரிஞ்சமாத்ரீ பேசினா டே ய் தெரியவைக்கிரண்டான்னு மேல ஏறினாலும் ஏறி இருப்பான்..

    ReplyDelete
  3. இந்த மாதிரி மக்கள் தங்கள் அனுபவங்களை சொன்னா தான... எங்களை மாதிரி மக்கள் (போலீஸ் ஸ்டேசன் வாசல் மிதிக்காதவர்கள்) உஷாரா இருக்க முடியும்... உள்ளூர் போலீஸ்கிட்ட தண்ணி காட்டலாமுனு சில கம்ப்யூட்டர் கேம் ஆடிட்டு வண்டி ஓட்டும் போது தோணும், இருந்தாலும் உடல் நலம் கருதி அதை எல்லாம் செயல்படுத்திப் பாக்கலை :-(

    ReplyDelete
  4. கைப்ஸ், ரொம்ப வருத்தமா இருக்குமா.

    வெகு திறமையாக ஒருவர் மாறுவதற்கும் இது போல நிகழ்வுகள் உரமிடுகின்றன.
    மிக நல்ல பதிவு. படிக்கும் அனைவருக்கும் இது போல ஏதாவது ஒரு நிகழ்ச்சி இருக்கும். அதிலிருந்து மீண்டுவிட்டீர்கள் அதுதான் இங்கே கவனிக்க வேண்டியது.

    ReplyDelete
  5. அடடா! எனக்கும் கிட்ட தட்ட ஒரு அனுபவம் ஏற்ப்பட்டுச்சு! அதை பின்ன சொல்றேன்! பார்த்து சாக்கிரதையா இருங்கப்பூ!!!

    ReplyDelete
  6. \\வல்லிசிம்ஹன் said...
    கைப்ஸ், ரொம்ப வருத்தமா இருக்குமா.

    வெகு திறமையாக ஒருவர் மாறுவதற்கும் இது போல நிகழ்வுகள் உரமிடுகின்றன.
    மிக நல்ல பதிவு. படிக்கும் அனைவருக்கும் இது போல ஏதாவது ஒரு நிகழ்ச்சி இருக்கும். அதிலிருந்து மீண்டுவிட்டீர்கள் அதுதான் இங்கே கவனிக்க வேண்டியது.\\\

    அதே...அதே :)

    ReplyDelete
  7. இளங்கன்று பயமறியாது என்பது போல் நாம் எதில் காலை விடுகிறோம் எனத் தெரியாமலே விடும் வயது. விட்டுத் தள்ளுங்க.

    ரொம்பவே மனசு கஷ்டமாத்தான் இருந்திருக்கும். இல்லையா?

    அப்புறம் இதெல்லாம் தங்கமணிக்குச் சொல்லியாச்சா? இப்படி பப்ளிக்கா சொல்லறீரே. லாக்கப்பில் கூட யாரெல்லாம் இருந்தாங்க? :))

    ReplyDelete
  8. * வாழ்த்துக்கள் தல !!

    ReplyDelete
  9. ////என் முட்டாள் தனத்தின் பிரதிபலிப்பான இச்சம்பவத்தை எழுதி வைக்க வேண்டுமா? எல்லாருக்கும் காட்ட வேண்டுமா என்று கூட பலமுறை நினைத்தேன். ஆனால் இது மாதிரியான நிகழ்வுகளும் வாழ்க்கையின் ஒரு பகுதின்னு பல வருடங்களுக்குப் பிறகு புரிஞ்சது//// உங்களுக்கு அனுபவம், பகிர்ந்ததால் எங்களுக்கு பாடம். துணிவுடன் பகிர்ந்தமைக்கு நன்றி.

    ReplyDelete
  10. ஆகா....உண்மையிலேயே வருத்தமாப் போயிருச்சுங்க. அதுலயும் சிலேட்டு பிடிக்க வெச்சாங்கன்னு சொன்னீங்களே...அதப் படிக்கைல கண்ணுல தண்ணி வந்துருச்சு. :((((

    இதெல்லாம் வீரர்களின் வாழ்க்கையில் ஜகஜம் என்று எடுத்துக்கொள்ள வேண்டியதுதான்.

    ReplyDelete
  11. Hats off thala!
    அருமையாச் சொல்லி இருக்கீங்க! அப்படியே நேர்ல பாத்த எஃபெக்டு! அந்த காந்திமதி சொன்னதைத் தக்க நேரத்தில சொன்னீங்க பாருங்க! எனக்கும் அப்ப்டித் தான் இருந்துச்சு...டெல்லியில் இல்ல! சென்னையில்! நண்பனைக் கூட்டியாறப் போன போது!

    ReplyDelete
  12. //என் முட்டாள் தனத்தின் பிரதிபலிப்பான இச்சம்பவத்தை எழுதி வைக்க வேண்டுமா? எல்லாருக்கும் காட்ட வேண்டுமா என்று கூட பலமுறை நினைத்தேன்//

    Euler தமது முட்டாள்தனத்தை எழுதாமல் விட்டிருந்தால், கணித மேதை இராமானுஜன் இன்னும் பல காலம் எடுத்துக் கொண்டிருக்க வேண்டி இருந்திருக்கும்! அதற்குள் அவரும்....

    ஸோ, நீங்க பதிவுலகக் கல்வெட்டுல எழுதி வச்சது, பல இராமனுஜன்களுக்கு உதவியாத் தான் இருக்கும் தல!
    ஃபீல் பண்ணாம என்சாய் மாடி! :-)

    தம்மில் தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து
    மன்னுயிர்க்கு எல்லாம் இனிது!

    ReplyDelete
  13. அடக்கடவுளே...........நல்லகாலம் தப்பிச்சு வந்தீகளே.

    பயங்கர அனுபவம்தான். த்சு.....த்சு...

    ReplyDelete
  14. நல்லா இருக்கு அங்கிள்.... நச்சத்திரம் ஆனதற்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  15. அடையாள அட்டை கூட இல்லாமல் நீங்கள் இருந்தது சந்தேகத்தை கொடுத்திருக்கும்.

    மாநகரங்களில் எங்கு வெளியே சென்றாலும் ஒரு அடையாள அட்டையாவது வைத்திருக்க வேண்டும். குறைந்த பட்சம் ட்ரைவிங் லைசென்ஸ் அல்லது வோட்டர் ஐடன்டிடி கார்ட் போல.

    டெல்லியில் இப்போது இதை கட்டாயமாக்கிவிட முடிவெடுத்திருக்கிறார்கள்.


    The Indian government mandating all citizens in Delhi carry ID cards after January 15th 2008.



    http://www.rediff.com/news/2008/jan/04delhi.htm

    ReplyDelete
  16. //நண்பரே, அப்படியே உண்மை.முன்பு இரவில் (வேலை முடிந்து) போகும்போது ஓவ்வொரு முறையும் இப்படித்தான் நினைப்பேன்,"என்னைக்குத் திவிரவாதின்னு மாட்டப்போரேணோ? ஹிந்தியும் தெரியாது"//

    சிவா நீங்களும் டெல்லியிலயா இருக்கீங்க? டெல்லில எந்த இடத்துல? ஐ-கார்ட் கண்டிப்பா வச்சிக்கங்க. கொஞ்சம் ஹிந்தி கத்துக்கங்க...அங்கே இருக்கறதுக்கு ரொம்ப உபயோகமா இருக்கும்.

    ReplyDelete
  17. //அடப்பாவமே.. ம்.. எல்லாம் அனுபவம் தான்.. சிரிக்கறவங்களுக்கு அந்த அனுபவம் நேர்ந்தா தான் அவங்க திறமை எப்படின்னு தெரியும்..
    சில சமயம் இந்த் மாதிரி அதிகாரிகளிடம் ஒன்னும் தெரியாம நிக்கரதே நல்லது.. தெரிஞ்சமாத்ரீ பேசினா டே ய் தெரியவைக்கிரண்டான்னு மேல ஏறினாலும் ஏறி இருப்பான்..//

    வாங்க மேடம்!
    பேரை மாத்திட்டீங்க போலிருக்கு? கெசட்லயும் மாத்திட்டீங்களா? ஒன்னும் தெரியாத மாதிரி அமைதியா சொன்னதை கேட்டதுனால தான் 6 மணிக்கு வெளியே விட்டாங்கன்னு நெனக்கிறேன். இல்லன்னா ராத்திரி எல்லாம் வவ்வால் மாதிரி தொங்கப் போட்டுத் தோலை உரிச்சிருப்பாங்க
    :)

    ReplyDelete
  18. //இந்த மாதிரி மக்கள் தங்கள் அனுபவங்களை சொன்னா தான... எங்களை மாதிரி மக்கள் (போலீஸ் ஸ்டேசன் வாசல் மிதிக்காதவர்கள்) உஷாரா இருக்க முடியும்... உள்ளூர் போலீஸ்கிட்ட தண்ணி காட்டலாமுனு சில கம்ப்யூட்டர் கேம் ஆடிட்டு வண்டி ஓட்டும் போது தோணும், இருந்தாலும் உடல் நலம் கருதி அதை எல்லாம் செயல்படுத்திப் பாக்கலை :-(//

    கருப்பன்,
    Eindhoven, Netherlandsலேயா இருக்கீங்க? என் ஃபிரெண்டு ஒருத்தன் அங்கன தான் ஃபிலிப்ஸ்ல வேலை செஞ்சிட்டு இருந்தான். இப்ப எங்க இருக்கான்னு தெரியலை. நம்மால நாலு பேருக்கு நல்லது நடக்குதுன்னா நாரு நாரா கிழிஞ்சி தொங்குனதைக் கூட எழுதுனா தப்பில்லைன்னு சொல்ல வர்றீங்க...ரைட் விடுங்க
    :)

    ReplyDelete
  19. //கைப்ஸ், ரொம்ப வருத்தமா இருக்குமா

    வெகு திறமையாக ஒருவர் மாறுவதற்கும் இது போல நிகழ்வுகள் உரமிடுகின்றன.
    மிக நல்ல பதிவு. படிக்கும் அனைவருக்கும் இது போல ஏதாவது ஒரு நிகழ்ச்சி இருக்கும். அதிலிருந்து மீண்டுவிட்டீர்கள் அதுதான் இங்கே கவனிக்க வேண்டியது//

    வாங்க வல்லியம்மா,
    உங்களை மாதிரி சில பேரு ஆதரவாப் பேசுனாங்க. சில பேரு நக்கலா பேசுனது கொஞ்சம் அவமானமா இருந்துச்சு. கவிஞர் பா.விஜய் சொன்னது ஞாபகத்துக்கு வருது "அவமானங்களைச் சேகரி"...நீங்க சொன்ன மாதிரி அது தான் அதுலேருந்து மீளறதுக்கும் நம்மளை நாமே திடப்படுத்திக்கிறதுக்கும் வழிவகையா இருக்கு போல. மிக்க நன்றி.

    ReplyDelete
  20. //அடடா! எனக்கும் கிட்ட தட்ட ஒரு அனுபவம் ஏற்ப்பட்டுச்சு! அதை பின்ன சொல்றேன்! பார்த்து சாக்கிரதையா இருங்கப்பூ!!!//

    அப்ப நீங்களும் துபாய் போலீஸ் கிட்ட மாட்டிருக்கீங்களா? சொல்லவே இல்ல?
    :)

    ReplyDelete
  21. //அனைவருக்கும் இது போல ஏதாவது ஒரு நிகழ்ச்சி இருக்கும். அதிலிருந்து மீண்டுவிட்டீர்கள் அதுதான் இங்கே கவனிக்க வேண்டியது.\\\

    அதே...அதே :)//

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி கோபிநாத்.

    ReplyDelete
  22. //இளங்கன்று பயமறியாது என்பது போல் நாம் எதில் காலை விடுகிறோம் எனத் தெரியாமலே விடும் வயது. விட்டுத் தள்ளுங்க.//

    இளங்கன்று உதை வாங்காம வெளியே வந்துருச்சுங்கிறதே பெரிய ஆறுதல் தான்.

    //ரொம்பவே மனசு கஷ்டமாத்தான் இருந்திருக்கும். இல்லையா? //

    ஆமாங்க...

    //அப்புறம் இதெல்லாம் தங்கமணிக்குச் சொல்லியாச்சா? இப்படி பப்ளிக்கா சொல்லறீரே. லாக்கப்பில் கூட யாரெல்லாம் இருந்தாங்க? :))//

    சொல்லியாச்சு...சொல்லியாச்சு. அப்போ தான் பெர்மிஷன் வாங்காம் ஹை-செக்யூரிட்டி ஏரியாக்குள்ள போய் மாட்டிக்கிட்டோம். இதுக்கு எல்லாம் ப்ராப்பர் பெர்மிஷன் வாங்கிட்டுத் தான் போட்டிருக்கோம்.
    :)

    ReplyDelete
  23. //* வாழ்த்துக்கள் தல !!//

    நன்றி மின்னல்.
    :)

    ReplyDelete
  24. //உங்களுக்கு அனுபவம், பகிர்ந்ததால் எங்களுக்கு பாடம். துணிவுடன் பகிர்ந்தமைக்கு நன்றி//

    வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி தோழி.

    ReplyDelete
  25. //ஆகா....உண்மையிலேயே வருத்தமாப் போயிருச்சுங்க. அதுலயும் சிலேட்டு பிடிக்க வெச்சாங்கன்னு சொன்னீங்களே...அதப் படிக்கைல கண்ணுல தண்ணி வந்துருச்சு. :((((//

    ஆமாங்க அத நெனக்கையிலே பல நாள் கஷ்டமா இருந்திருக்கு. எனக்கு மட்டும் ஏன் இப்படியெல்லாம் நடக்குதுன்னு நெனச்சிருக்கேன்.

    //இதெல்லாம் வீரர்களின் வாழ்க்கையில் ஜகஜம் என்று எடுத்துக்கொள்ள வேண்டியதுதான்//

    அதே அதே சபாபதே!
    :)

    ReplyDelete
  26. //அருமையாச் சொல்லி இருக்கீங்க! அப்படியே நேர்ல பாத்த எஃபெக்டு! அந்த காந்திமதி சொன்னதைத் தக்க நேரத்தில சொன்னீங்க பாருங்க! எனக்கும் அப்ப்டித் தான் இருந்துச்சு...டெல்லியில் இல்ல! சென்னையில்! நண்பனைக் கூட்டியாறப் போன போது!//

    நன்றி KRS. நீங்களும் மாட்டிருக்கீங்களா? என்ன கதை அது?
    :)

    ReplyDelete
  27. //Euler தமது முட்டாள்தனத்தை எழுதாமல் விட்டிருந்தால், கணித மேதை இராமானுஜன் இன்னும் பல காலம் எடுத்துக் கொண்டிருக்க வேண்டி இருந்திருக்கும்! அதற்குள் அவரும்....

    ஸோ, நீங்க பதிவுலகக் கல்வெட்டுல எழுதி வச்சது, பல இராமனுஜன்களுக்கு உதவியாத் தான் இருக்கும் தல!
    ஃபீல் பண்ணாம என்சாய் மாடி! :-)

    தம்மில் தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து
    மன்னுயிர்க்கு எல்லாம் இனிது!//

    அடடா! அருமையாச் சொல்லிருக்கீங்க. மிக்க நன்றி.
    :)

    ReplyDelete
  28. //அடக்கடவுளே...........நல்லகாலம் தப்பிச்சு வந்தீகளே.

    பயங்கர அனுபவம்தான். த்சு.....த்சு...//

    ஹ்ம்ம்ம்...ஆனா இப்ப அவ்வளவு பயங்கரமா தோனலை. நன்றி அக்கா.
    :)

    ReplyDelete
  29. //நல்லா இருக்கு அங்கிள்.... நச்சத்திரம் ஆனதற்கு வாழ்த்துக்கள்//

    நன்றிப்பா பவன்.
    :)

    ReplyDelete
  30. //அடையாள அட்டை கூட இல்லாமல் நீங்கள் இருந்தது சந்தேகத்தை கொடுத்திருக்கும்.

    மாநகரங்களில் எங்கு வெளியே சென்றாலும் ஒரு அடையாள அட்டையாவது வைத்திருக்க வேண்டும். குறைந்த பட்சம் ட்ரைவிங் லைசென்ஸ் அல்லது வோட்டர் ஐடன்டிடி கார்ட் போல.

    டெல்லியில் இப்போது இதை கட்டாயமாக்கிவிட முடிவெடுத்திருக்கிறார்கள்.


    The Indian government mandating all citizens in Delhi carry ID cards after January 15th 2008.//

    வாங்க அரைபிளேடு,
    ஆமாங்க. டெல்லின்னு இல்லை...இப்பல்லாம் எங்கே போனாலும் ஒரு அடையாள அட்டை வச்சிக்கிறது. நல்ல தகவலைப் பகிர்ந்துள்ளீர்கள். நன்றி.

    ReplyDelete
  31. இப்படி தேஜஸ்ஸான முகத்த பாத்துமா
    உங்கள அங்க நம்பமாட்டேனுட்டங்க??!:)எனிவே ஜோக்ஸ் அபார்ட் பயங்கரமான எக்ஸ்பீரியன்ஸ்தான் போங்க...எனக்கு ரேவதியும் ஓம் பூரியும் நடிச்ச ஒரு சினிமா நியாபகம் வந்துச்சு....என்ன பேருன்னு மறந்துட்டேன்.....அதுல இப்படித்தான் ஓம் பூரிய..........எதுக்கு அதெல்லாஅம் வேண்டாம் விடுங்க......!! இதெல்லாம் நமக்கு நடக்காதுன்னு எதுவுமே கிடையாதுன்னு புரிச்சுது.

    ReplyDelete
  32. //
    Eindhoven, Netherlandsலேயா இருக்கீங்க? என் ஃபிரெண்டு ஒருத்தன் அங்கன தான் ஃபிலிப்ஸ்ல வேலை செஞ்சிட்டு இருந்தான். இப்ப எங்க இருக்கான்னு தெரியலை.
    //

    EHV/NL-ல தான் இருந்தேன். இப்போ பெங்களூர்ல இருக்கேன், அடுத்தமாசம் "பேக் டூ பெவிலியன்". நான் கூட Philips Semiconductors-ல் தான் குப்பை கொட்டுகிறேன் (தற்போது NXP Semiconductors என பெயர் மாற்றப்பட்டுள்ளது). தங்கள் நண்பர் பெயரைச்சொன்னால் நிச்சயம் சந்திப்பேன் (ஏற்கனவே தெரிந்திருக்க மிக அதிகமான வாய்புகள் உள்ளது)!!

    //
    நம்மால நாலு பேருக்கு நல்லது நடக்குதுன்னா நாரு நாரா கிழிஞ்சி தொங்குனதைக் கூட எழுதுனா தப்பில்லைன்னு சொல்ல வர்றீங்க...ரைட் விடுங்க
    //
    நாரு நாரா கிழிந்சு தொங்குனப்ப கூட கவலைப்படல, அதை சொல்லுறதுக்கு கவலைப்படலாமா...??? இவய்ங்க இப்படிதான் பாஸ் எப்பப்பாத்தாலும் அடிச்சுக்கிட்டே இருப்பாய்ங்க... அடிவாங்குறது நமக்கு ஸஹஸந்தான பாஸ் ;-)

    ReplyDelete
  33. //இப்படி தேஜஸ்ஸான முகத்த பாத்துமா
    உங்கள அங்க நம்பமாட்டேனுட்டங்க??!:)//

    வாங்க ராதா மேடம், நம்ம முகம் தேஜஸ்ங்கறீங்க? அவ்வளவு களையாவா இருக்கு? என்னமோ நீங்க சொன்னா சரி தான் :)

    //எனிவே ஜோக்ஸ் அபார்ட் பயங்கரமான எக்ஸ்பீரியன்ஸ்தான் போங்க...எனக்கு ரேவதியும் ஓம் பூரியும் நடிச்ச ஒரு சினிமா நியாபகம் வந்துச்சு....என்ன பேருன்னு மறந்துட்டேன்.....அதுல இப்படித்தான் ஓம் பூரிய..........எதுக்கு அதெல்லாஅம் வேண்டாம் விடுங்க......!! இதெல்லாம் நமக்கு நடக்காதுன்னு எதுவுமே கிடையாதுன்னு புரிச்சுது//

    எதோ பயங்கரமான படத்தைப் பத்தி சொல்றீங்கன்னு மட்டும் புரியுது...சரி எதுக்கு அது இப்ப? விடுங்க. கரெக்ட் தான் நீங்க சொல்றது.

    ReplyDelete
  34. //EHV/NL-ல தான் இருந்தேன். இப்போ பெங்களூர்ல இருக்கேன், அடுத்தமாசம் "பேக் டூ பெவிலியன்". நான் கூட Philips Semiconductors-ல் தான் குப்பை கொட்டுகிறேன் (தற்போது NXP Semiconductors என பெயர் மாற்றப்பட்டுள்ளது). தங்கள் நண்பர் பெயரைச்சொன்னால் நிச்சயம் சந்திப்பேன் (ஏற்கனவே தெரிந்திருக்க மிக அதிகமான வாய்புகள் உள்ளது)!!//

    அடடா! நீங்களும் ஃபிலிப்ஸா? என் நண்பன் பேரு ஹரிஷ்...IIT Madras B.Tech, IIT Delhi M.Tech(VLSI)...நாங்க ரெண்டு பேரும் டெல்லியில ஒரே ஹாஸ்டல்ல தான் இருந்தோம்.
    :)

    //நாரு நாரா கிழிந்சு தொங்குனப்ப கூட கவலைப்படல, அதை சொல்லுறதுக்கு கவலைப்படலாமா...??? இவய்ங்க இப்படிதான் பாஸ் எப்பப்பாத்தாலும் அடிச்சுக்கிட்டே இருப்பாய்ங்க... அடிவாங்குறது நமக்கு ஸஹஸந்தான பாஸ் ;-)//

    அட ஆமா இல்ல? நான் இதை புரிஞ்சிக்காம அந்த சமயம் அப்படியே ஷாக்காயிட்டேன்.
    :)

    ReplyDelete
  35. // ஆமாங்க அத நெனக்கையிலே பல நாள் கஷ்டமா இருந்திருக்கு. எனக்கு மட்டும் ஏன் இப்படியெல்லாம் நடக்குதுன்னு நெனச்சிருக்கேன்.//

    நீங்க தைரியமா வெளியே சொல்றீங்க. மத்தவங்க மறந்திடனும்னு மனசிலேயே எப்பவுமே வச்சிருப்பாங்க. அவ்வளவுதான்.

    ReplyDelete
  36. இதெல்லாம் எப்ப நடந்துச்சு? MBA வேற படிச்சியா? எனக்கு அப்துல் கலாமத் தெரியும்னு சொல்லி இருக்கலாமோ?

    ReplyDelete
  37. ம்ம்ம், பயங்கரமான அனுபவம் தான், இத்தனை நாள் சொல்லவே இல்லையே? போகட்டும், இனியாவது ஜாக்கிரதையா இருங்க, ஆனால் இதிலே உங்க முட்டாள் தனம் என்று ஒன்றும் இல்லை. உங்க அலுவலகத்திலே சரியான முன்னேற்பாடுகள் பற்றி அறிவுறுத்தி இருக்கவேண்டும் இல்லையா? தப்பு அவங்க பேரிலேயும் இருக்கே?

    அப்புறம் ராதா ஸ்ரீராம் சொல்ற படம் நானும் பார்த்திருக்கேன், நடுத்தரக் குடும்பம், ரேவதி மகளா, தங்கையா தெரியலை! ரேவதிக்காகப் போராடுவார் ஓம்புரினு நினைக்கிறேன், பல வருஷங்கள் ஆகிடுச்சா, படம் பேர் நினைவில்லை. ஆனால் மனதில் தைக்கும்படியாக எடுக்கப் பட்டிருக்கும்.

    ReplyDelete
  38. உண்மைதான் கைப்புள்ள.. சில சம்பவங்கள் டபுக்குன்னு முடிஞ்சுரும்.. ஆனா அதன் வலியை வாழ்நாளுக்கும் மறக்க முடியாது.. கூத்து என்னன்னா, மத்தவங்களுக்கு அதன் அழுத்தமும் தாக்கமும் புரியவே புரியாது!

    ReplyDelete
  39. நல்ல அனுபவத்தைத் தான் சொல்லியிருக்கீங்க மோகன். படிக்கிறப்ப கொஞ்சம் பயமாவும் பரிதாபமாவும் தான் இருந்தது. இதை வெளியே சொல்ற தைரியத்தைப் பாராட்டணும்.

    ReplyDelete
  40. //நீங்க தைரியமா வெளியே சொல்றீங்க. மத்தவங்க மறந்திடனும்னு மனசிலேயே எப்பவுமே வச்சிருப்பாங்க. அவ்வளவுதான்//

    ஆமாங்க...நான் கூட வெளியில சொல்லலாமா வேணாமான்னு ஒரு பெரிய மனப் போராட்டம் நடத்தி தான் இதை எழுதினேன்.
    :)

    ReplyDelete
  41. //இதெல்லாம் எப்ப நடந்துச்சு? MBA வேற படிச்சியா? எனக்கு அப்துல் கலாமத் தெரியும்னு சொல்லி இருக்கலாமோ?//

    2001ல. ஏம்ப்பா நான் MBA படிச்சது உனக்குத் தெரியாதா? சொல்லிருந்தா டின்னு கட்டாம விட்டுருக்க மாட்டாங்க.
    :)

    ReplyDelete
  42. //ம்ம்ம், பயங்கரமான அனுபவம் தான், இத்தனை நாள் சொல்லவே இல்லையே? போகட்டும், இனியாவது ஜாக்கிரதையா இருங்க, ஆனால் இதிலே உங்க முட்டாள் தனம் என்று ஒன்றும் இல்லை. உங்க அலுவலகத்திலே சரியான முன்னேற்பாடுகள் பற்றி அறிவுறுத்தி இருக்கவேண்டும் இல்லையா? தப்பு அவங்க பேரிலேயும் இருக்கே?//

    பெருமையா வெளியே சொல்லிக்கிறதுக்கு என்னை என்ன நாட்டு சுதந்திரப் போராட்டத்துலயா புடிச்சாங்க? என்னுடைய அச்சம், மடம், நாணம் எல்லாத்தையும் ஏறக் கட்டி வச்சிட்டுத் தான் இதை கூட எழுதிருக்கேன். ஆமாமா...அலுவலகத்து மேலயும் தப்பு இருக்கு. அதுக்குப் பிராயச்சித்தமா தான் கம்பெனியோட எம்.டி வரைக்கும் வந்து என்னை மீட்டுக் கூட்டிக்கிட்டுப் போனாங்க போலிருக்கு :)


    //அப்புறம் ராதா ஸ்ரீராம் சொல்ற படம் நானும் பார்த்திருக்கேன், நடுத்தரக் குடும்பம், ரேவதி மகளா, தங்கையா தெரியலை! ரேவதிக்காகப் போராடுவார் ஓம்புரினு நினைக்கிறேன், பல வருஷங்கள் ஆகிடுச்சா, படம் பேர் நினைவில்லை. ஆனால் மனதில் தைக்கும்படியாக எடுக்கப் பட்டிருக்கும்///

    ஆஹா...என்ன படம்னு தெரிஞ்சிக்கற ஆவலைத் தூண்டிட்டீங்க.
    :)

    ReplyDelete
  43. //உண்மைதான் கைப்புள்ள.. சில சம்பவங்கள் டபுக்குன்னு முடிஞ்சுரும்.. ஆனா அதன் வலியை வாழ்நாளுக்கும் மறக்க முடியாது.. கூத்து என்னன்னா, மத்தவங்களுக்கு அதன் அழுத்தமும் தாக்கமும் புரியவே புரியாது!//

    வாங்க சுரேஷ் சார்,
    கலக்கலாச் சொல்லிருக்கீங்க. இன்னும் சொல்லப் போனா நான் அனுபவிச்ச அந்த சம்பவத்தோட கனத்தை இப்போ பதிவா எழுதும் போது என்னால கூட முழுமையாக் கொண்டு வர முடியலை. நான் அனுபவிச்சது இப்ப எழுதியிருக்கிறதை விடக் கடினமா இருந்துச்சு. நன்றி.

    ReplyDelete
  44. //நல்ல அனுபவத்தைத் தான் சொல்லியிருக்கீங்க மோகன். படிக்கிறப்ப கொஞ்சம் பயமாவும் பரிதாபமாவும் தான் இருந்தது. இதை வெளியே சொல்ற தைரியத்தைப் பாராட்டணும்//

    வாங்க குமரன் சார்,
    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

    ReplyDelete
  45. இதெல்லாம் வாழ்க்கையில் ஒரு அனுபவம்ன்னு எடுத்துக்கோங்க..நடந்து முடிஞ்ச அப்புறம் நானும் அப்பிடி தான் எடுத்துக்கிறேன் சில சமயம்.நீங்க சொல்ற மாதிரி அது நடக்கும் போது பயங்கரமா இருக்கும் ஆனா ஒன்னு We learn everyday and the price we pay for some are heavy hmmm

    ReplyDelete
  46. சாரி என்னோட முந்தின கமெண்ட் அட்வைஸ் பண்ற தொனியில இருக்கிற மாதிரி இருக்கு...அந்த தொனியில் சொல்லவில்லை...ஒரு நண்பனாக என்னுடைய (சொல்லாத) அனுபங்களையும் அசை போட்டுக்கொண்டு சொன்னேன் :)

    ReplyDelete
  47. :(( இதை ஏற்கெனவே படிச்சிருக்கேன்.ஆனா, கமெண்ட் போடமுடியாம மனசுல பாரத்தோட போய்ட்டேன்! இப்போ படிக்கும்போதும் ஒரு வித சோகம்/பாரம் பரவுவதை உணர முடிகிறது!

    ReplyDelete