Sunday, May 21, 2006

மஹாகாலேஷ்வர்

இந்தூரில் இருந்த போது இவ்வருடம் ஜனவரி மாதம் 26ஆம் தேதி, உஜ்ஜைன் நகரில் உள்ள மஹாகாலேஷ்வர் என்னும் சிவத் தலத்தைத் தரிசிக்கும் வாய்ப்பு கிட்டியது. அதனைப் பற்றிய விவரத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் எண்ணத்தில் இப்பதிவினை இடுகின்றேன்.

மஹாகாலேஷ்வர் என்பது இந்தியாவில் உள்ள பன்னிரெண்டு ஜோதிர்லிங்கங்களில் ஒன்று. ஒளிவடிவாக வழிபடப்படும் சிவலிங்கங்களை ஜோதிர்லிங்கம் என்கின்றனர். இப்பன்னிரெண்டு சிவலிங்கங்களின் மாதிரியையும் பெங்களூரில் ஏர்போர்ட் ரோடில் உள்ள கெம்ப் ஃபோர்ட் எனும் இடத்தில் சில வருடங்களுக்கு முன்னர் கண்டிருக்கிறேன். ஆனால் பன்னிரெண்டில் இரண்டினை நேரில் காணும் வாய்ப்பு, பணி நிமித்தம் இந்தூர் நகரத்தில் இரண்டாண்டு காலம் வசிக்க நேரிட்டதால் கிடைத்தது. பன்னிரெண்டு ஜோதிர்லிங்கங்களைப் பற்றியும் தெரிந்து கொள்ள இங்குச் சுட்டுக. ஜோதிர்லிங்கமும் தானாக அவதரிப்பதாகச் சொல்லப்படும் சுயம்பு லிங்கங்களுக்கும் வேறுபாடு உள்ளதா? அல்லது இரண்டுமே ஒன்று தானா? யாரேனும் தெளிவு படுத்தினால் நன்றாக இருக்கும்.

உஜ்ஜைன் எனப்படும் இடம் இந்தூரிலிருந்து 70 கி.மீ. தொலைவில் உள்ளது. சாலை வழியாகச் சென்றால் கிட்டத்தட்ட இரண்டு மணி நேரத்தில் இவ்விடத்தை அடையலாம். சென்னையிலிருந்து ஜெய்பூர் செல்லும் சென்னை ஜெய்பூர் எக்ஸ்பிரஸ் உஜ்ஜைன் வழியாகச் செல்லுகிறது. இவ்வூர் பல விதங்களிலும் வரலாற்றுச் சிறப்பு பெற்ற ஒரு ஊர். தேவர்களும் அசுரர்களும் பார்க்கடலைக் கடைந்து கிடைக்கப் பெற்ற அமுதத்தைத் தாங்கிய கலசத்தில் இருந்து ஒரு சில துளிகள் பூவுலகில், பிரயாக்(அலகாபாத்),ஹரித்வார்,நாசிக் மற்றும் உஜ்ஜைன் ஆகிய இவ்விடங்களில் விழுந்ததாக ஒரு நம்பிக்கை உள்ளது. இவ்வமுதத் துளிகள் விழுந்த இடங்களில் "கும்ப மேளா" என்னும் திருவிழாக்கள் ஒவ்வொரு 12 ஆண்டும் நடக்கின்றது. உஜ்ஜைனில் நடைபெறும் கும்ப மேளாவினை "சிம்ஹஸ்த" என்று அழைக்கின்றனர். குரு பகவான் சிம்ம ராசியில் வந்து அமரும் போது உஜ்ஜைனில் கும்ப மேளா நடை பெறுவதால் இதனை "சிம்ஹஸ்த" என்கின்றனர். 2002ஆம் ஆண்டு நடைபெற்ற "சிம்ஹஸ்த" திருவிழாவிற்கான ஏற்பாட்டின் போது அரசுப் பேருந்துகளின் மீது "சிம்ஹஸ்த பர்வ" என எழுதி வைத்திருந்தனர். நான் இதை அங்கு இருக்கும் போது கண்டிருந்தாலும், அதற்கு என்ன பொருள் என்று இப்பதிவினை எழுதுவதற்காக இங்குச் சுட்டிய போது அறிந்து கொண்டேன். ஒரு பூகோளச் சிறப்பும் உஜ்ஜைன் நகருக்கு உள்ளது. பூமியின் மீது செல்லும் ரேகையான டிராபிக் ஆப் கேன்சர்(Tropic of Cancer), இந்நகரின் வழியாகச் செல்லுகின்றது. விக்ரமாதித்தன் என்ற அரசன் ஆண்ட பழம்பெரும் நாடு இந்த உஜ்ஜைன். விக்ரமாதித்தனும் வேதாளமும் என்னும் கதையின் கதை களமும் இஃதே.

நண்பர் ஒருவர் குஜராத் மாநிலத்தில் உள்ள வெராவல் என்னும் ஊருக்குச் செல்ல ரயிலைப் பிடிப்பதற்காக உஜ்ஜைன் செல்ல வேண்டியிருந்ததால் இத்தலத்தைத் தரிசித்து விட்டு அவரையும் வழியனுப்பி விட்டு மறுபடியும் இரவு இந்தூர் திரும்புவதைத் திட்டமாகக் கொண்டு நாங்கள் ஆறு பேர் குவாலிசில் சென்றோம். நாங்கள் சென்ற நேரத்தில் மஹாகாலேஷ்வர் கோயிலில் புணரமைப்புப் பணிகள் நடந்து கொண்டிருந்தது. கிட்டத்தட்ட ஒரு மணி நேரக் காத்திருப்பிற்குப் பின் கோயிலின் உள்ளே நுழைந்தோம். இச்சிவலிங்கத்தைத் தரிசிக்க கோயிலுக்குள் நுழைந்து கீழிறங்கிச் செல்ல வேண்டும். அவ்வாறு செல்லும் போது இத்தலத்தின் புனிதத் தீர்த்தத்தையும் இன்னும் சில கடவுளரையும் தரிசித்தோம்.

மஹாகாலேஷ்வர் ஆலயத்தின் புனித தீர்த்தம்.

கடைசியில் மஹாகாலேஷ்வர் என்னும் இச்சிவலிங்கத்தைத் தரிசித்தோம். கற்பகிருகத்திற்கு அருகாமையில் கேமராக்களை உபயோகிப்பது பல ஆலயங்களிலும் தடை செய்யப் பட்டிருந்தாலும், இங்கு பலரும் புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தனர். கோயிலில் இருந்தவர்களும் அதை தடுக்கவில்லை. மஹாகாலேஷ்வர் ஜோதிர்லிங்கத்தின் புகைப்படம் கீழே.


அங்கிருந்து ஷிப்ரா எனும் புனித நதிக்கரையின் அருகாமையில் அமைந்துள்ள சாந்தீபணி ஆசிரமத்திற்குச் சென்றோம். பகவான் கிருஷ்ணர் இவ்வாசிரமத்தில் தங்கி சாந்தீபணி என்னும் முனிவரிடத்தில் கல்வி கற்றதாக அறிந்து கொண்டேன். இதெல்லாம் முன்னரே கேள்வி படாத செய்திகள் ஆக இருந்ததால் அதை காணும் போதும் அதை பற்றி அறியும் போதும் மகிழ்ச்சியாக இருந்தது. உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் சாந்தீபணி முனிவர் கிருஷ்ணருக்குக் குருவாக இருந்ததை அன்று தான் அறிந்து கொண்டேன். சாந்தீபணி ஆசிரமத்தில் எடுத்த புகைபடங்கள் கீழே.



அங்கிருந்து உஜ்ஜைன் ரெயில் நிலையம் செல்லும் வழியில் "காலபைரவ்" என்னும் ஆலயத்திற்குச் சென்றோம். உஜ்ஜைனைச் சுற்றிலும் பல கோயில்கள் இருந்தாலும் நேரத்தினைக் கருதி சிலவற்றை மட்டுமே காண முடிந்தது. காலபைரவ் கோயிலின் சிறப்பு, தேங்காய பழம் வைத்து படைப்பது போல ஒரு சிறிய பாட்டிலில் சாராயத்தைப் படைக்கின்றனர்(ஆனால் படைத்தே ஆக வேண்டும் எனக் கட்டாயமில்லை). குடியரசு தினத்தன்று ஒரு புத்துணர்ச்சி ஊட்டிய சுற்றுலாவாகவும், பழைய நண்பர்கள்(புது இடத்திற்கு வந்ததும், அவர்கள் பழைய நண்பர்கள் தானே :))- ) பற்றிய நினைவு வர ஏதுவான ஒரு பயணமாகவும், இறைவனைத் தொழுத போது கிடைத்த மன அமைதிக்காகவும் அப்பயணம் மனதில் நிற்கும். நண்பர் அவரை உஜ்ஜைன் ரெயில் நிலையத்தில் விட்டு விட்டு இரவு இந்தூர் திரும்பினோம்.

உஜ்ஜைன் ரெயில் நிலையத்திற்கு வெளியே

(மத்தியப் பிரதேசம் மற்றும் மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள பிரசித்தி பெற்ற வழிபாட்டுத் தலங்களைத் தரிசிக்க விரும்பினால் இந்தூரில் தங்கிக் கொண்டு உஜ்ஜைன் மஹாகாலேஷ்வர் கோயிலையும், இந்தூரிலிருந்து கண்ட்வா என்னும் ஊருக்குச் செல்லும் வழியில் 75 கி.மீ தொலைவில் உள்ள ஓங்காரேஷ்வர் என்னும் தலத்தையும் தரிசிக்கலாம். ஓங்காரேஷ்வருக்குச் சென்ற வருடமே செல்லும் வாய்ப்பு கிடைத்தது. இத்தலம் நர்மதை நதியினால் சூழப்பட்ட ஒரு தீவில் அமைந்துள்ளது. இக்கோயிலுக்குச் செல்லும் போது, நர்மதை நதிக்கரை வரை சாலை வழியாகச் சென்று, நதியினைப் படகு மூலமாகக் கடக்க வேண்டும். நர்மதை நதி, இத்திருத்தலத்தை "ஓம்" என்னும் வடமொழி எழுத்தின் வடிவில் சூழ்ந்திருப்பதால் இத்தலத்திற்கு ஓங்காரேஷ்வர் என்று பெயர். உத்தராஞ்சல் மாநிலத்தில் உள்ள ஹரித்வாருக்குச் சென்றுள்ளீர்கள் ஆனால் பல விதங்களில் இவ்விரண்டு தலங்களுக்கும் ஒற்றுமை இருப்பதாகத் தோன்றும். இந்தூரிலிருந்து 14 மணி நேரப் பயணம் செய்தீர்கள் ஆனால் மகாராஷ்டிர மாநிலம் நாசிக் நகருக்கு அருகில் த்ரியம்பகேஷ்வரர் என்னும் மற்றுமொரு ஜோதிர்லிங்கத்தையும், அங்கிருந்து சற்றுத் தொலைவில் ஷீரடியில் சாய்பாபாவின் கோயிலையும் கண்டு வரலாம்.

20 comments:

  1. கைப்புள்ள, இந்த மாதிரிப் பதிவு எல்லாம் கூட நிறைய எழுதுங்க. நான் இன்னும் நீங்க சொன்ன இந்தக் கோவிலுக்கெல்லாம் போகலை. இனிமேல் போகணும். ஆனால் விக்கிரமாதித்தன் வழிபட்ட அந்த உஜ்ஜைனி மஹாகாளி அம்மன் விக்ரஹம், முழுத் தங்கத்தால் ஆனது திருச்சி சமயபுரத்தில் இருந்து கிழக்கே ஒருகிலோமீட்டர் தூரத்தில் இருக்கிறது. விக்கிரமாத்தித்தன் காடாறு மாதம் வந்தபோது தான் வழிபட்ட காளியையும் எடுத்து வந்ததாகவும் அந்தக்காளிதான் இது என்றும் சொல்கிறார்கள். ஒரு மூன்று, நான்கு வருடங்களுக்கு முன் திருச்சி போனபோது எதிர்பாராமல் அங்கே போனோம். அப்போது தரிசனம் கிடைத்தது. உஜ்ஜயினி சக்தி பீடங்களில் ஒன்று.

    ReplyDelete
  2. //பன்னிரெண்டில் இரண்டினை நேரில் காணும் வாய்ப்பு, பணி நிமித்தம் இந்தூர் நகரத்தில் இரண்டாண்டு காலம் வசிக்க நேரிட்டதால் கிடைத்தது.//

    நீண்டகாலத் தவத்தின் பயன்!

    ReplyDelete
  3. ஆமாம் மிக அருமையான சிவத்தலம். அங்கு சிவலிங்கத்தைத் தொட்டுத் தரிசனம் செய்யமுடியும். மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தரிசனம் செய்தென். அப்போது என்னைப் புகைப்படம் எடுக்க அனுமதிக்க வில்லை. போபாலில் இருந்து மூன்று மணிநேரம் ரயில் பயணம். அருமையான தரிசனத்தை நினைவு படுத்திவிட்டீர்கள்.

    ReplyDelete
  4. ஆன்மீகப்பயணம் தொடர வாழ்த்துக்கள்.

    அன்புடன்,
    துபாய் ராஜா.

    ReplyDelete
  5. இந்த உஜ்ஜயினி நான் பார்க்க வில்லை.. இன்னும் இரண்டு ஜோதிர்லிங்கங்கள் குஜராத்தில் தான் உள்ளன.. நேரம் கிடைத்தால் பார்த்து விட்டு வாருங்கள். :)
    சுயம்பு லிங்கங்கள் எல்லாம் ஜோதி லிங்கங்களா என்று எனக்குத் தெரியாது, ஆனால், ஜோதி லிங்கங்கள் எல்லாம் சுயம்பு தான் என்று கேள்வி..

    ReplyDelete
  6. கைப்புள்ளன்னே,

    சூப்பரா வந்துருக்கு இந்த பதிவு.

    //நீண்டகாலத் தவத்தின் பயன்!//

    ஆஹா தல தவம் எல்லாம் பன்னுவீங்களா? :)

    ReplyDelete
  7. நம்ம தமிழ்நாட்டில் இராமேஸ்வரத்துக்கு ஒரு விஜயம் செய்தால் இரண்டு மூன்றாகிவிடும். நான் இன்னும் ஒன்னுல தான் இருக்கேன். 12 யையும் காண வேண்டும் என்பது என் வேண்டுதல்.
    நல்ல பதிவு.

    ReplyDelete
  8. //கைப்புள்ள, இந்த மாதிரிப் பதிவு எல்லாம் கூட நிறைய எழுதுங்க.//

    வாய்ப்பு கெடக்கும் போது கண்டிப்பா எழுதறேன். நீங்க சொன்ன தகவலும் எனக்குப் புதுசு. மிக்க நன்றி.

    ReplyDelete
  9. //நீண்டகாலத் தவத்தின் பயன்!//

    நன்றி சிபி. உண்மையிலேயே அது ஒரு பாக்கியம் தான்.

    ReplyDelete
  10. //அருமையான தரிசனத்தை நினைவு படுத்திவிட்டீர்கள்.//

    நன்றி மகேஸ்! வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி.

    ReplyDelete
  11. //ஆன்மீகப்பயணம் தொடர வாழ்த்துக்கள்.//

    வாழ்த்துகளுக்கு நன்றி ராஜா.

    ReplyDelete
  12. //இரண்டு ஜோதிர்லிங்கங்கள் குஜராத்தில் தான் உள்ளன.. நேரம் கிடைத்தால் பார்த்து விட்டு வாருங்கள். :)//

    செல்வது சற்று கடினம் தான். முயற்சி செய்கிறேன்.

    ReplyDelete
  13. //கைப்புள்ளன்னே,

    சூப்பரா வந்துருக்கு இந்த பதிவு.//

    நன்றி சமுத்ரா.

    //நீண்டகாலத் தவத்தின் பயன்!//

    ஆஹா தல தவம் எல்லாம் பன்னுவீங்களா? :)//

    இல்லீங்க. அது எதோ நம்ம அதிர்ஷ்டம்னு தான் சொல்லனும். அது யாருங்க உங்க ப்ரொஃபைல்ல? சாம் மேனக்ஷாவா?

    ReplyDelete
  14. //நம்ம தமிழ்நாட்டில் இராமேஸ்வரத்துக்கு ஒரு விஜயம் செய்தால் இரண்டு மூன்றாகிவிடும்.//
    பார்ப்போம் சிவா. இது இரண்டும் பார்க்கும் வாய்ப்பு கூட எதிர்பாராதது தான்.

    // நான் இன்னும் ஒன்னுல தான் இருக்கேன். 12 யையும் காண வேண்டும் என்பது என் வேண்டுதல்.//
    தங்களுக்கு அவ்வாய்ப்பு கிடைக்க நானும் வேண்டுகிறேன்.

    ReplyDelete
  15. Mr.Kaipullai,

    Oor orra sutthhi pattiaya kelapuringa......unga vela superlla...keep writing


    Ghilli

    ReplyDelete
  16. பன்னெண்டு இருக்கா மொத்தம்? அதுல தமிழ்நாட்டுல எத்தன இருக்குன்னு சொல்லுங்க...நான் எத்தன பாத்தேன்னு தெரிஞ்சிக்கிறேன்.

    கோயில்கள் ரொம்பவும் துப்பரவாகவும் நல்லாவும் இருக்கு. ஊரும் ரொம்ப அழகா இருக்கு. போகனும்னு ஆசையாத்தான் இருக்கு. எப்பக் குடுத்து வெச்சிருக்கோ.

    உஜ்ஜைனி காளி மிகவும் பிரபலம். விக்கிரமாதித்தன் கதைகள்ள நெறைய வரும்.

    ReplyDelete
  17. Kaipullai, naduvulla irrukurathu neengainnu theriyum.....anguttu sidela irrukurathu yaru....

    Ghilli

    ReplyDelete
  18. கில்லி! மொதல்ல உங்க கிட்ட மன்னிப்பு கேட்டுக்கறேன். உங்களோட சில முந்தைய பின்னூட்டங்களுக்கு என்னால பதில் சொல்ல முடியலை. அப்போ என் நெலமை அப்படி.

    ////Oor orra sutthhi pattiaya kelapuringa......unga vela superlla...keep writing//
    எல்லாம் இக்கரைக்கு அக்கரை பச்சை தாங்க.
    :))

    ReplyDelete
  19. //பன்னெண்டு இருக்கா மொத்தம்? அதுல தமிழ்நாட்டுல எத்தன இருக்குன்னு சொல்லுங்க...நான் எத்தன பாத்தேன்னு தெரிஞ்சிக்கிறேன்.//

    தமிழ்நாட்டில இராமேசுவரம் மட்டும் தாங்க. நீங்க பெங்களூர்ல தானே இருக்கீங்க...கெம்ப்ஃபோர்ட் சிவன் கோயிலுக்குக் கீழே 12 ஜோதிர்லிங்கங்களோட மாதிரியும் இருக்குது(பனி லிங்கம் உட்பட).

    //எப்பக் குடுத்து வெச்சிருக்கோ.//
    உங்களோட ஆசை சீக்கிரமே நிறைவேற என் வாழ்த்துகள்.

    ReplyDelete
  20. //Kaipullai, naduvulla irrukurathu neengainnu theriyum.....anguttu sidela irrukurathu yaru....//

    உங்க கேள்விக்குப் பதில் சொல்லறதுக்கு முன்னாடி ஒரு சின்ன குறுக்கு விசாரணை. நடுவுல இருக்கறது நான் தான்னு சரியா கண்டுபிடிச்சதுக்குக் காரணம் நம்ம மேனி எழில் தானே?
    :)

    ReplyDelete