Friday, July 26, 2013

கொம்பன் சுறா வேட்டையாடும்...

கடந்த சனியன்று மரியான் படம் பார்த்தேன். முதல் பாதியில் நாயகனுக்கும் நாயகிக்கும் உள்ள காதலையும் இரண்டாம் பாதியில் நாயகனை ஆபத்தான/இக்கட்டான ஒரு சூழ்நிலையில் இருந்து மீட்டுக் கொண்டு வருவது அவனுடைய அந்த காதல் தான் என மிக அழுத்தமாகச் சொல்லியிருக்கிறார் இயக்குனர். டிஸ்கவரி அலைவரிசையில் 'I shouldn't be alive' என்ற பெயர் கொண்ட உண்மை கதைகள் அடங்கிய நிகழ்ச்சி ஒன்று வரும். எனக்கு இது போன்று இக்கட்டுகளில் இருந்து மீண்டு வரும் கதைகளைப் பார்ப்பது மிகவும் பிடிக்கும். ஏனெனில் அதில் நமக்கும் ஏதாவது ஒரு பாடம் இருக்கும்.
உதாரணமாக அந்நிகழ்ச்சியில் ஒரு எபிசோட்டில் கண்ட கதை ஒன்றில், அமெரிக்காவில் ஒரு மாகாணத்தில் உறவினர்களைப் பார்த்து விட்டு ஒரு கணவனும் மனைவியும் தங்கள் கைக்குழந்தையுடன் வேறொரு மாகாணத்தில் உள்ளத் தங்கள் வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருப்பர். அப்போது வழி மாறிச் சென்று பனிப்புயல் வீசிக் கொண்டிருக்கும் இடத்தில் சிக்கிக் கொள்வர். அதோடு கடும் குளிரின் காரணமாகக் காரில் பழுது ஏற்பட்டு அது நின்று விடும். அச்சமயத்தில் அக்கணவர் ஒரு முக்கியமான முடிவொன்று எடுப்பார்.

தன் மனைவியையும் குழந்தையையும் அந்த அத்துவானப் பிரதேசத்தில் சற்று பாதுகானப்பதாக உள்ள ஒரு குகையொன்றில் தங்க வைத்துவிட்டு உதவி தேடி கடும் குளிரில் பல மைல்கள் நடந்துச் செல்வார். அச்சமயத்தில் அவர் எடுத்த அந்த முடிவு தான் அவர்கள் மூவர் உயிரையும் காப்பாற்றும். மனைவியையும் கைக்குழந்தையையும் யாருமில்லா இடத்தில் தனியாக விட்டுச் செல்கிறோமே என்ற தயக்கமும் வருத்தமும் அவருக்கு இருந்தாலும் அம்முடிவை அவர் எடுக்கவில்லை என்றால் மூவரும் மடிவது உறுதி என்பதை அவர் உணர்வார்.

அதோடு பசியோடும் நீர்வேட்கையோடும் கடுங்குளிரில் நெடுந்தூரம் நடந்துச் செல்கையில் உடல் அயர்ச்சியினால் அவ்வப்போது சோர்ந்து விழுவார். அந்நிலையில் அவரை மீண்டும் எழுந்து நடக்கச் சொல்லித் தூண்டுவது தன் மனைவி மகனுடைய உயிரைக் காக்க வேண்டும் என்ற அக்கறையும் அன்பும் மட்டுமே. ஆக இக்கட்டானச் சூழ்நிலையில் இருந்து தப்பிக்க வேண்டும் எனில் அதில் இருந்து எப்படியாவது மீள வேண்டும் என்ற பலமான உந்துதலும் வழக்கத்திற்கு மாறாகச் சிந்தித்து செயல் படுத்தத் துணியும் முயற்சிகளுமே என்பது நான் அந்த டிஸ்கவரி நிகழ்ச்சியில் இருந்தும் மரியான் படத்திலும் அறிந்து கொள்ளும் பாடம். அவ்வகையில் மரியான் படம் எனக்குப் பிடித்திருந்தது சொல்ல வந்த கதையை இயக்குனர் சிறப்பாகச் சொல்லியிருக்கிறார் என்று நினைக்கிறேன். டிஸ்கவரி அலைவரிசையில் நான் கண்ட அந்த நிகழ்ச்சியைப் பற்றி மேலும் தகவல்கள் அறிந்து கொள்ள‌ இந்தச் சுட்டியைப் பார்க்கவும்.
http://en.wikipedia.org/wiki/Snowbound:_The_Jim_and_Jennifer_Stolpa_Story

நிற்க. மரியான் படம் பார்த்து நான் கற்றுக் கொண்டதை மேலே எழுதியிருக்கிறேன். ஆனால் அப்படத்தைப் பார்ப்பதற்கு ஒரு வாரத்திற்கு முன்னரே அப்படத்தோடு தொடர்புடைய ஒரு தகவலைத் தெரிந்து கொண்டேன். அறிந்து கொண்ட இடம் சென்னை கலங்கரை விளக்கத்திற்குப் பின்புறம் உள்ள ஒரு மீன் கடையில் :) வஞ்சிரம் மீன் வாங்கிக் கொண்டிருந்த அக்கடையில் சுறா மீனும் இருந்தது. அக்கடையில் இருந்த சுறா மீன் ஒன்றின் தலைப் பகுதி மற்ற சுறாக்களைப் போன்று அல்லாமல் தட்டையாக இருந்தது. அவ்வகை சுறாக்களை நான் NatGeo, Animal Planet நிகழ்ச்சியில் கண்டிருக்கிறேன். அதன் ஆங்கிலப் பெயர் Hammerhead Shark. அதன் தமிழ்ப் பெயரைத் தெரிந்து கொள்வதற்காக மீன் விற்கும் அப்பெண்ணிடம் "இதுவும் சுறா தானா?" என்றேன். அதற்கு அவ‌ர் சொன்னார் "ஆமா இதுவும் சுறா தான்...கொம்ப‌ன் சுறா" 
undefined

http://en.wikipedia.org/wiki/Hammerhead_shark

அத‌ன் பிற‌கு வீட்டுக்கு வ‌ந்த‌ பின் இந்த‌ கொம்ப‌ன் சுறா என்ற‌ பெய‌ரை எங்கோ கேள்வி ப‌ட்டிருக்கிறோமே என‌ நினைத்த‌ போது ம‌ரியான் ப‌ட‌த்தில் யுவ‌ன்ச‌ங்க‌ர் ராஜா பாடிய‌ "கொம்ப‌ன் சுறா வேட்டையாடும் க‌ட‌ல் ராசா நான்" என்ற‌ பாட‌ல் நினைவுக்கு வ‌ந்த‌து. இந்த‌க் கொம்ப‌ன் சுறாவைப் ப‌ற்றிப் ப‌டித்த‌ போது தெரிந்து கொண்ட‌ இன்னொரு த‌க‌வ‌ல் சுத்திய‌ல் போன்ற‌ த‌ட்டையான‌ அத‌ன் த‌லையின் இரு புற‌மும் உள்ள‌ அத‌ன் க‌ண்க‌ளைப் ப‌ற்றிய‌து. அதாவ‌து கொம்ப‌ன் சுறாவின் க‌ண்க‌ள் ம‌ற்ற‌ சுறாக்க‌ளைப் போல‌ இல்லாம‌ல் வித்தியாச‌மான‌ அமைப்பு கொண்டுள்ள‌ கார‌ண‌த்தால் விழிக‌ளைச் சுழ‌ற்றி இச்சுறாவினால் 360 டிகிரியில் பார்க்க‌ முடியும் என்ப‌து. ஆனால் இந்த‌ச் சிற‌ப்பை மீறி இம்மீனிட‌ம் மிக‌ப்பெரிய‌ ஒரு குறைபாடு ஒன்று உள்ள‌து. வித்தியாச‌மான‌ அமைப்பு கொண்ட‌ அத‌ன் க‌ண்க‌ளே அத‌ன் குறைபாடு...இச்சுறாவினால் த‌னக்கு நேர் எதிரில் இருப்ப‌வ‌ற்றைப் பார்க்க‌ முடியாது என்ப‌தே அது.

சுறா மீன் கிட்டப் போனா க‌டிச்சி வ‌ச்சிரும்னு எல்லாருக்கும் தெரிஞ்ச‌து தான் ஆனா இந்த‌ கொம்ப‌ன் சுறா மீனின் முக‌த்துக்கு நேராப் போயி நின்னு "நீ என்ன‌ பெரிய‌ புலியா?"ன்னு கேட்டாக் கூட‌ அது ஒன்னும் ப‌ண்ணாது :)

7 comments:

  1. அட புள்ள பதிவெல்லாம் எழுதுது!!

    கொம்பன் சுறா முன்னாடி பார்க்கவே முடியாது என்றில்லாமல், நமக்கும் மற்ற சுறா மீன்களுக்கும் இருக்கும் Blind Spot அதற்குப் பெரிது என்பது சொல்வதே சரி.

    http://news.nationalgeographic.com/news/2009/11/091127-hammerhead-vision.html

    ReplyDelete
  2. super eanukkum petikkum

    ReplyDelete
  3. ஒரு திரைப்படம் பார்த்தால் அறிய வேண்டிய நீதிகளைக் குறித்து இன்றே அறிந்தேன். பல வருடங்கள் கழிச்சு வந்ததுக்கு நல்வரவு. அர்ச்சனா எப்படி இருக்கா? நல்லாப் படிக்கிறாளா? எத்தனை பல்பு கொடுத்தா உங்களுக்கு? அதில் தான் சந்தோஷமே இருக்கு! :))) உங்க தம்பி குழந்தை நல்லா இருக்கா? ஒரு வயசுக்கு மேல் ஆகி இருக்குமே!:))))

    ReplyDelete
  4. என்னடா, எல்லாத்தையும் இங்கேயே கேட்கிறாளேனு நினைக்காதீங்க. மெயில் கொடுத்தால் பார்ப்பீங்களோ இல்லையோனு தான்! :P :P :P :P

    ReplyDelete
  5. தல, மரியான் பட விமர்சனத்துக்கு தனுஷ் கிட்ட எவ்வளோ வாங்கினே ? ஒருவேளை ...மவனே போதைல பாத்தியோ?

    கொண்டேபுடுவேன்...

    ReplyDelete
  6. வணக்கம்...

    உங்கள் தளம் வலைச்சரத்தில் அறிமுகம் ஆகி உள்ளது...

    வாழ்த்துக்கள்...

    Visit : http://blogintamil.blogspot.in/2014/01/blog-post_12.html

    ReplyDelete