Saturday, November 22, 2008

Well...

"கிச்சன்ல கொஞ்சம் வேலையிருக்கு, பாப்பாவைப் பாத்துக்கங்க" என்று தங்கமணி சொல்லிவிட்டுப் போன ஐந்து நிமிடங்களுக்கு உள்ளாக, நேற்று தொட்டிலில் தூங்கிக் கொண்டிருந்த மகள் அழுகையை அலாரம் வைத்துத் தொடக்கினாள். வயிறு பசிக்கும் போதோ, அல்லது உச்சா போய் நேப்பி ஈரமாகி தூக்கம் கலையும் போதோ தான் அமைதியாக இருக்கும் குழந்தைகள் அழத் தொடங்கும் என்பது, தந்தை ஆன கடந்த மூன்று மாதங்களில் நான் கற்றுக் கொண்ட பாலபாடம். இது போக இன்னொரு கதையும் கேள்வி பட்டேன். தூங்கிக் கொண்டிருக்கும் குழந்தைகளின் கனவில் பிள்ளையார் வருவாராம். "உனக்கு அம்மா வேணுமா, அப்பா வேணுமா"ன்னு கேப்பாராம். அம்மாவிடம் பால் குடிப்பதனால் குழந்தைகள் "அம்மா வேணும்" என்று சொல்லுங்களாம். அதனால பிள்ளையார் நறுக்கென்று குழந்தையின் தொப்புளில் கிள்ளி விட்டுப் போய்விடுவாராம். அதனாலும் குழந்தைகள் தூக்கத்தில் இருந்து விழித்து கொண்டு, பயந்து போய் அழத் தொடங்குமாம். இது கேக்கும் போதே சிரிப்பை வரவழைத்த கதை. ஏனென்றால் பிள்ளையார் தான் இருப்பதிலேயே ஃப்ரெண்ட்லியான கடவுள். அவர் பிறந்த குழந்தைகளின் தொப்புளில் நறுக்கென்று கிள்ளிவிட்டு ஓடிவிடுவார் என்று சொல்வதை சீரணிப்பது சற்று கடினமாகத் தான் இருக்கு:) அது போக என்னை வியக்க வைக்கும் இன்னொரு விஷயம் குழந்தைகளுக்கு, அது எப்படித் தான் அம்மா தன்னருகில் இல்லை என்பது அவ்வளவு துல்லியமாகத் தெரியவருகிறதோ? என்பது தான். அதுவும் பல சமயங்களில், தங்கமணி சாப்பிடப் போகும் நேரத்தில் தான் அழுகை பலமாகும். விபரம் தெரிந்த சிலர்(பெரியவங்க தான்...) "அம்மாவை இந்த மாதிரி குழந்தைங்க சோதிக்கும். என்னை விட உனக்கு சாப்பாடு தான் முக்கியமான்னு சரியா அம்மா சாப்பிடப் போகும் போது தான் அழ ஆரம்பிக்கும்" என்று சொல்லவும் கேட்டிருக்கிறேன்.

மேல் சொல்லிய இந்த காரணங்களுள் ஒன்றினால் தான் மகள் அழுகிறாள் போலிருக்கிறது என்று எனக்கு பதில் தெரிந்த FAQக்களைப் பரிசோதித்து விட்டு troubleshooting நடவடிக்கைகளில் இறங்கினேன். "குழந்தை அழுவுது. சீக்கிரம் வந்து கொஞ்சம் என்னான்னு பாரு" என்று சத்தமாகக் கத்துவது தான் என்னிடம் இருந்த FAQக்களுக்குச் சொல்லப்பட்டிருந்த முதல் விடை. சே! சே! நாமெல்லாம் "road not taken"இல் பயணப்படும் ஆட்கள் இல்லையா? என்ற எண்ணம் சுலபமான முதல் விடையைத் தெரிவு செய்வதிலிருந்து என்னை தடுத்தது. பசி இல்லை, நேப்பி ஈரம் ஆகவில்லை என்பதை எல்லாம் உறுதிப்படுத்திக் கொண்டு, இது பிள்ளையாருடைய வேலை தான் என்று முடிவுக்கு வந்தவனாய் குழந்தையைச் சமாதானம் படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபடத் தொடங்கினேன். நிற்க. ஏன் என்ற கேள்வி கேட்காமல் வாழ்க்கை இல்லை என்பதனை அடி முதல் நுனி வரை நம்புவதால் அழும் குழந்தையை ஏன் சமாதானப் படுத்த வேண்டும் என்று கேள்வி கேட்டு என் மகளின் பாட்டியிடம்(எங்க அம்மா தான்) வாங்கிக் கட்டிக் கொண்டு ஆமாமாம் அழும் குழந்தையைச் சமாதானப் படுத்தத் தான் வேண்டும் என்று உணர்ந்து கொண்ட கதையையும் இந்நேரத்தில் சொல்லிவிடுகிறேன். "குழந்தைங்கன்னா அப்படித் தான் இருக்கும். தூக்கம் கலைஞ்சிடுச்சுன்னா அழத் தான் செய்யும். கொஞ்சி கிஞ்சி பேசித் தான் சமாதானப் படுத்தனும்" என்று அம்மா சொல்லியதற்கு "நானும் உங்களுக்குக் குழந்தை தானே? நான் தூக்கத்துலேருந்து எழுந்தா அழவாச் செய்யறேன்"னு எகத்தாளம் பேசினேன். "...இப்ப நாலு கழுதை வயசானதால அழாம இருக்கே...அர்ச்சனா வயசுல நீ எல்லாம் என்ன பாடுபடுத்தியிருக்கே தெரியுமா? என்ன காரணம்னே தெரியாம ராத்திரி ரெண்டு மணி, மூனு மணிக்கெல்லாம் எழுந்து அழுவே"அப்படின்னாங்க. "நான் குழந்தையா இருந்த போதும் இப்படித் தான் கொஞ்சி கிஞ்சி சமாதானப் படுத்துவீங்களா?" என்று கேட்டதற்கு "உஹும்...ஒரு கரண்டி எடுத்து மண்டையிலேயே மடார்னு போடுவேன். வேணா மண்டையைக் கொஞ்சம் தடவிப் பாரு. ஒடுக்கு விழுந்துருக்கும் பாரு" என்று சொல்லப் பட்டதைக் கேட்டதும் கைப்புள்ள F/o.அர்ச்சனா கப்சிப்.

சரி, குழந்தையைச் சமாதானப் படுத்துவது என்று முடிவாகிவிட்டது. அதை செயல்படுத்தும் முறைகள் என்று பார்த்தோமேயானால் தொட்டிலை வேகமாக ஆட்டிவிட்டு குழந்தையைத் தூங்க வைக்க முயல்வது, அதற்கு குழந்தை சமாதானம் ஆகவில்லை எனில் கிலுகிலுப்பையை ஆட்டிக் காட்டுவது, அதற்கும் குழந்தை டிமிக்கி கொடுத்துவிடுகிறது என்றால் தமிழ் உயிர்மெய் எழுத்துக்களான 'ரி' 'ர' 'ரோ' போன்ற எழுத்துகளை பசு மாட்டினைக் குறிக்கும் உயிரெழுத்துடன் சேர்த்து ஒரு ஒலி எழுப்ப வேண்டும். அந்த ஒலியானது பசுமாட்டின் குரலை ஒத்ததாக இல்லாமை சாலச் சிறந்தது, அவ்வாறாக இருக்கும் பட்சத்தில் அதன் பலன் எதிர்மறையானதாக இருக்கும். இம்முறைகளைத் தனித் தனியாகவோ, அல்லது ஒன்றன் பின் ஒன்றனாகவோ அல்லது எல்லாவற்றையும் சேர்த்தோ கையாளுவதனால் குழந்தை அழுகையை நிறுத்தி சமாதானம் ஆகிவிடும் என்று கத்துக்குட்டி babysitterக்கும் தெரியுமென்கிறது அகநானூறு. ஆனால் என் மகளோ, இந்த முறைகளில் எதற்கும் சம்மதிக்காமல் அழுகையைத் தொடர்ந்தாள். அவளுடைய அழுகையை நிறுத்த சினிமா பாணியில் எதாவது ஒரு தாலாட்டு பாடல் பாடித் தூங்க வைக்கலாம் என்று முடிவு செய்தேன். அச்சமயத்தில் சட்டென்று நினைவுக்கு வந்த தாலாட்டுப் பாடல்கள் இவை.
1. "தண்ணீர் தண்ணீர்" படத்தில் பி.சுசீலா அவர்கள் குரலில் "கண்ணான பூமகனே கண்ணுறங்கு சூரியனே" என்று திரையில் சரிதா பாடுவதாக வந்த பாடல்.
2. "சித்தி" என்ற படத்தில் கண்ணதாசன் எழுதி பி.சுசீலா அவர்கள் பாடிய "காலமிது காலமிது கண்ணுறங்கு மகளே" என்று திரையில் பத்மினி அவர்கள் பாடுவதாக வரும் பாடல்.
3. "இணைந்த கைகள்" படத்தில் மனோஜ்-கியான் இசையில் திரையில் அருண் பாண்டியனும் ராம்கியும் பாடுவதாக வந்த "அந்தி நேரத் தென்றல் காற்று அள்ளித் தந்த தாலாட்டு" என்ற பாடல்.
4. "சின்னத்தம்பி" படத்தில் மனோ பாடிய "தூளியிலே ஆடுகின்ற வானத்து மின்விளக்கே" என்று திரையில் பிரபு பாடுவதாக வரும் பாடல்.
5. "முந்தானை முடிச்சு" படத்தில் பாக்யராஜ் பாடுவதாக வரும் "ஆரிராரிரோ ஆரிராரிரோ" என்ற பாடல்.
6. "என் தங்கை கல்யாணி" படத்தில் கரடி சார் தானே இசையமைத்து திரையிலும் பாடுவதாக வரும் "தோள் மீது தாலாட்ட என் தங்கமே நீ தூங்கு" என்ற பாடல்.

ஆனா பாருங்க. இதுல எந்த பாட்டுமே நம்ம சிச்சுவேசனுக்குச் சரியா வரலை. அதாவது ஒரு அப்பா தன் மூன்று மாத மகளைச் சமாதானப்படுத்தி தூங்க வைக்கிற மாதிரி ஒரு பாட்டு. எனக்குத் தெரிஞ்சு இந்த சிச்சுவேசனுக்கு தமிழ் படங்கள்ல ஒரு பாட்டு கூட இல்லைன்னே நெனக்கிறேன். நல்ல சிச்சுவேசன் தான். ஆனா எந்த இயக்குனரும் இதை இது வரைக்கும் பயன்படுத்திக்கிட்டதாத் தெரியலை. சரி இப்போ...மேலே இருக்கற பாட்டுகளையே ஒன்னொன்னா பாப்போம். "கண்ணான பூமகனே"ங்கிற தண்ணீர் தண்ணீர் படப்பாட்டு வறட்சியில வாடற ஒரு கிராமத்துல இருக்கற ஒரு ஏழைத் தாய் தன் கஷ்டங்களையும் தாலாட்டுப் பாட்டுலேயே தன் மகனுக்குச் சொல்லற மாதிரி வர்ற பாட்டு. "காலமிது காலமிது கண்ணுறங்கு மகளே" அப்படீங்கற சித்தி படத்துப் பாட்டு பெண்ணாய்ப் பொறக்கறதுனால அனுபவிக்கிற கஷ்டங்களை ஒரு தாய்(சித்தி) தன் மகளுக்குச் சொல்லற மாதிரி வர்ற பாட்டு. இரயிலில் போற ரெண்டு நண்பர்கள் இரயில் பெட்டியில் பாக்கற ஒரு குழந்தைக்காகப் பாடற பாட்டு தான் இணைந்த கைகள் படத்து "அந்திநேரத் தென்றல் காற்று" பாட்டு. குரல் நல்லாருக்கற ஒரு பேக்கு பாடற பாட்டு தான் சின்னத்தம்பி படத்து "தூளியிலே ஆட வந்த வானத்து மின்விளக்கே". ஒரு சோகமான சிச்சுவேசன்ல ஒரு அப்பா தன் மகனுக்காகப் பாடற பாட்டு முந்தானை முடிச்சு படத்துல வர்ற "ஆரிராரிரோ ஆரிராரிரோ" பாட்டு. தன் தங்கச்சி மகனைத் தோள்ல போட்டுக்கிட்டு கரடி மாமா பாடற பாட்டு "தோள் மீது தாலாட்ட"ன்ற என் தங்கை கல்யாணி படத்துப் பாட்டு.

இப்போ நீங்களே சொல்லுங்க...மேல இருக்கற பாட்டுகள்ல எதாச்சும் ஒரு அப்பா தன் மகளுக்குப் பாடற சிச்சுவேசன்ல இருக்கா? இருந்தாலும் பாட்டு பாடணும்ங்கிறது முடிவானதுனால மேலே இருக்கற பாட்டுகள்ல, கவிஞர் வைரமுத்து எழுதி எம்.எஸ்.வி இசையமைச்ச எனக்கு புடிச்ச பாட்டான "கண்ணான பூமகனே கண்ணுறங்கு சூரியனே" படத்து பாட்டைப் பாடுனேன். அது மகனுக்காக ஒரு அம்மா பாடுற பாட்டுங்கிறதால ஒரு மகளுக்காக ஒரு அப்பா பாடற மாதிரி இருக்கற நம்ம சிச்சுவேசனுக்குத் தகுந்த மாதிரி
"கண்ணான பூமகளே கண்ணுறங்கு சூரியனே
அப்பா அழுத கண்ணீர் ஆறாகப் பெருகிவந்து
தொட்டில் நனைக்கும்வரை உன் தூக்கம் கலைக்கும்வரை,
ஊத்துமலை தண்ணீரே என் உள்ளங்கரை சர்க்கரையே
நீ நான் பெத்த தங்கரதம் இடுப்பிலுள்ள நந்தவனம்"
அப்படின்னு லைட்டா மாத்தி பாடுனேன். பாடும் போது எனக்கே காமெடியாத் தான் இருந்துச்சு...ஆனா ஆச்சரியம் பாருங்க அது வரைக்கும் அழுதுட்டு இருந்த என் பொண்ணு அழுகையை நிறுத்திட்டு அமைதியாத் தூங்க ஆரம்பிச்சுட்டா. கண்டிப்பா மனசுக்குள்ள "லூசாப்பா நீ"ன்னு சொல்லிக்கிட்டே வேற வழியில்லாம தான் தூங்கிருப்பான்னு நெனக்கிறேன்.

ஒவ்வொரு வாரமும் பெங்களூரிலிருந்து சென்னைக்கு எப்போதும் வெள்ளிக்கிழமை இரவு புறப்பட்டு சனிக்கிழமை காலை வருவது வழக்கம். ஆனால் இவ்வாரம் வியாழக்கிழமை காலை பெங்களூரிலிருந்து கிளம்பி அன்று மாலையே சென்னை வந்து சேர்ந்து விட்டதால் மகளுக்காகத் தாலாட்டு பாடும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் வியாழன் அன்றே வந்ததற்கான காரணம் - ஆயாவின் பிரிவு. ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் ராணுவத்தில் பணியாற்றும் சித்தியுடன் தங்கியிருந்த ஆயா(அம்மாவின் அம்மா) 20ஆம் தேதி காலை எங்களை விட்டுப் பிரிந்தார். அம்மாவும், அப்பாவும் இறுதிச் சடங்குகளுக்காக விமானம் மூலம் ராஞ்சி புறப்பட்டுச் சென்றார்கள். இந்த கதையில் கூட அவங்களைப் பத்திச் சொல்லிருக்கேன். ஏனோ நமக்கு ரொம்ப நெருக்கமானவங்களோட பிரிவை அவ்வளவு சீக்கிரம் ஏத்துக்க முடியறதில்லை. ஆயா இறந்த செய்தியைக் கேட்டு பெங்களூரிலிருந்து கிளம்பிச் சென்னை வந்த போதும், ஏன் அதற்கு பிறகும் கூட ரொம்ப நேரத்திற்கும் என்னால் நம்ப முடியவில்லை. எனக்கு மட்டும் தான் இவ்வாறு தோன்றுகிறதா என்ற சந்தேகமும் பல சமயங்களில் தோன்றும். இறுதிச் சடங்குகள் முடிந்ததும் "எல்லா காரியங்களும் முடிந்து விட்டது" என்று அம்மா தொலைபேசிய போது தான், நான் பிறந்ததிலிருந்து அறிந்த ஒரு நெருங்கிய சொந்தத்தை இனிமேல் பார்க்க போவதில்லை என்ற உண்மை உரைத்தது. தள்ளாத வயதிலும், தன் கொள்ளுப்பேத்தியான என் மகளைப் பார்ப்பதற்காக அக்டோபரில் சென்னை வந்திருந்ததையும், அது தான் நான் அவர்களை கடைசியாகப் பார்த்த சந்தர்ப்பம் என்றும் நினைத்த போது மனம் கனத்தது, கண்கள் பனித்தன.

50 comments:

  1. லூசாப்பா நீன்னு தூங்கி இருப்பாளா..அப்ப எந்திருச்சு லைலா மாதிரி கத்துவாளா..?

    ReplyDelete
  2. உங்க பாப்பாவ இப்படி படுத்தியிருக்க வேண்டாம். உங்க பாட்ட நிறுத்தறதுக்கு தான் பாப்பா அழுகைய நிறுத்தியிருப்பா. don't continue this kind of torture

    ஆயா பிரிவு... கஷ்டமாத்தான் இருக்கும்

    ReplyDelete
  3. வேடிக்கையா ஆரம்பிச்சு வேதனையில் முடிச்சிட்டீங்க....ஸாரி..
    இருந்தாலும் இதைச்சொல்லவேண்டியிருக்கு...

    கற்பகம் படத்தில் கே.ஆர். விஜயாவிற்காக
    பி.சுசிலா பாடிய
    "அத்தைமடி மெத்தையடி.."பாட்டை
    உல்டா செஞ்சு
    "அப்பன்மடி மெத்தையடி..."னு பாடியிருக்கலாம்

    ReplyDelete
  4. //லூசாப்பா நீன்னு தூங்கி இருப்பாளா..அப்ப எந்திருச்சு லைலா மாதிரி கத்துவாளா..?//

    ஹி...ஹி...காலம் தான் அதுக்கு பதில் சொல்லனும். பொண்ணு கொஞ்சம் பெரியவளா ஆனதும் முத்துலெட்சுமி ஆண்ட்டி 2008ல இந்த மாதிரி கேட்டுருக்காங்க பாரு செல்லம்னு இந்த கமெண்டைக் காட்டலாம்னு தோணுது. அப்போ கண்டிப்பா இந்த கமெண்டுக்கு ஒரு நோஸ்ட்டால்ஜிக் வேல்யூ இருக்கும்னு தோனுது.
    :)

    ReplyDelete
  5. //don't continue this kind of torture

    ஆயா பிரிவு... கஷ்டமாத்தான் இருக்கும்//

    வாங்க கபீஷ்,
    என் குழந்தையின் நலனில் அக்கறை கொண்டு எச்சரிக்கைக் விடுத்ததற்கும் ஆயாவின் பிரிவிற்கு அனுதாபம் தெரிவித்தமைக்கும் நன்றி.

    ReplyDelete
  6. //வேடிக்கையா ஆரம்பிச்சு வேதனையில் முடிச்சிட்டீங்க....ஸாரி..
    இருந்தாலும் இதைச்சொல்லவேண்டியிருக்கு...

    கற்பகம் படத்தில் கே.ஆர். விஜயாவிற்காக
    பி.சுசிலா பாடிய
    "அத்தைமடி மெத்தையடி.."பாட்டை
    உல்டா செஞ்சு
    "அப்பன்மடி மெத்தையடி..."னு பாடியிருக்கலாம்//

    வாங்க சார்,
    ரொம்ப நாளைக்கப்புறம் வந்திருக்கீங்க. நீங்க குடுத்த யோசனை அருமையா இருக்கு. பாடும் போது தளையும் தட்டாதுன்னு நெனக்கிறேன்.
    :))

    ReplyDelete
  7. //இது பிள்ளையாருடைய வேலை தான் //
    பிள்ளையார் சார்பில் மிக மிக மிக வன்மையாய்க் கண்டிக்கிறேன். நறநறநறநறநறநறநற க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

    //கண்ணான பூமகளே கண்ணுறங்கு சூரியனே
    அப்பா அழுத கண்ணீர் ஆறாகப் பெருகிவந்து
    தொட்டில் நனைக்கும்வரை உன் தூக்கம் கலைக்கும்வரை,
    ஊத்துமலை தண்ணீரே என் உள்ளங்கரை சர்க்கரையே
    நீ நான் பெத்த தங்கரதம் இடுப்பிலுள்ள நந்தவனம்"
    அப்படின்னு லைட்டா மாத்தி பாடுனேன். பாடும் போது எனக்கே காமெடியாத் தான் இருந்துச்சு...ஆனா ஆச்சரியம் பாருங்க அது வரைக்கும் அழுதுட்டு இருந்த என் பொண்ணு அழுகையை நிறுத்திட்டு அமைதியாத் தூங்க ஆரம்பிச்சுட்டா. கண்டிப்பா மனசுக்குள்ள "லூசாப்பா நீ"ன்னு சொல்லிக்கிட்டே வேற வழியில்லாம தான் தூங்கிருப்பான்னு நெனக்கிறேன்.//


    உங்க பொண்ணுக்கு ஒரு ரிப்பீஈஈஈஈஈஈஈட்டேஏஏஏஏஏஏஏஏஏஏ போடறேன். புத்திசாலி அவங்க அம்மாவைக் கொண்டிருக்கா போல! :P:P:P

    ReplyDelete
  8. ரொம்பவே வேடிக்கையா எழுதிட்டுக் கடைசியிலே வேதனையும் கொடுத்திட்டீங்க. உங்க அம்மா, சித்தி ஆகியோருக்குப் பாட்டியின் பிரிவைத் தாங்கிக் கொள்ளும் மன வலிவை இறைவன் தருமாறு வேண்டிக் கொள்கின்றேன். உங்களுக்கும் குழந்தையின் சிரிப்பிலும், விளையாட்டிலும் பாட்டியைப் பிரிந்த சோகம் தாக்காமல் இருக்கும். வீட்டில் ஒரு குழந்தை இருந்தால் வெளிச்சம் போட்டாப்போல் மனசும் பளிச்சுனு ஆகும்.

    ReplyDelete
  9. அத்தை மடி மெத்தையடி பாட்டைத் தான் நானும் நினைச்சேன், அப்பன் மடி மெத்தையடினு மாத்திக்கலாமேனு சொல்லலாம்னு ஏற்கெனவே வந்து சொல்லிட்டாங்க. வாபஸ் வாங்கிக்கறேன். :(

    ReplyDelete
  10. அப்புறமா யோசிச்சப்போ நினைப்பு வந்தது, சிங்காரக் கண்ணே உன் தேனூறும் சொல்லாலே னு ஒரு பாட்டு இருக்கே! வீரபாண்டியக் கட்டபொம்மன்?
    அப்புறம் நீல வண்ணக் கண்ணா வாடா! ம்ம்ம்ம்ம்??? நான் பெற்ற செல்வம்?? நீல வண்ணக் கண்ணி வாடி னு பாடலாம் இல்லை?? இன்னும் யோசிச்சுட்டுத் திரும்பவும் வரேன். அட, இப்போவே நினைவு வந்துடுச்சு, எம்.ஜி.ஆருக்கு அவங்க அம்மா தாலாட்டுப் பாடுவாங்களே, "இந்தப் பச்சைக்கிளிக்கு செவ்வந்திப் பூவாலே தொட்டிலும் கட்டி வைத்தேன்" அது கூடப்பாடி இருக்கலாம், என்ன போங்க, இவ்வளவு பாட்டு இருக்கறச்சே தமிழ் சினிமாவில் தாலாட்டே இல்லைனு சொல்லிட்டீங்களே!! :P:P:P:P

    ReplyDelete
  11. ஆனாலும் அர்ச்சனாவை இம்புட்டு சோதனைக்கு இப்பவே உள்ளாக்கனுமா. கொஞ்சம் இரக்கம் வையுங்க. பாவம்.

    இந்தக் கொடுமைக்குத் தூங்கிற மாதிரி நடிக்கலாம்னு நடிச்சிருக்கும் உங்க குழந்தை.

    ReplyDelete
  12. \\கண்டிப்பா மனசுக்குள்ள "லூசாப்பா நீ"ன்னு சொல்லிக்கிட்டே வேற வழியில்லாம தான் தூங்கிருப்பான்னு நெனக்கிறேன்.\\

    ஹா ஹா ஹா.

    நல்லாதானே இருக்கு.

    ReplyDelete
  13. மூன்றாம்பிறை கமல் ஸ்ரீதேவிக்குப் பாடின தாலாட்டை விட்டுட்டீங்களே!! என்ன போங்க, நீங்க?? ஒரு கண்ணே, கலைமானே யை எடுத்து வுட்டிருக்கலாமே! :)))))))) அந்தப் பாட்டு விசாலி கண்ணதாசன் அவங்களுக்காக கண்ணதாசன் எழுதினார்னு சொல்லிட்டு இருப்பாங்க!

    ReplyDelete
  14. காமெடியா கொண்டு போய் சீரியஸா முடிச்சுட்டீங்க...

    நம் வாழ்வை போலவே :(

    பாட்டியின் ஆன்மா சாந்தி அடையட்டும்.

    ReplyDelete
  15. பொட்டி தட்டுற புத்திய காட்டிடல தல....

    புரட்சி தலைவரின் பச்சைகிளி பாட்டை சொல்லலாம் என்று இருந்தேன். பதிவுலக புரட்சி தலைவி(வலி) அதை சொல்லிட்டாங்க ;))

    ReplyDelete
  16. தென் பாண்டி சீமையிலே பாட்டு பாடி பாருங்க. நல்லா பலன் கிடைக்கும். குறிப்பா அந்த ஹம்மிங்க் ரெம்ப முக்யம். :))

    4 அல்லது 5 மாசம் ஆயிட்டா வாயை உப்பி வெச்சுகிட்டு புர்ர்னு கையால குத்தி வெளையாட்டு காமிங்க. ஒரு வேளை குழந்தை சிரிக்க கூடும். :)))

    ஆயாவின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்கள். :(

    ReplyDelete
  17. /

    மேல் சொல்லிய இந்த காரணங்களுள் ஒன்றினால் தான் மகள் அழுகிறாள் போலிருக்கிறது என்று எனக்கு பதில் தெரிந்த FAQக்களைப் பரிசோதித்து விட்டு troubleshooting நடவடிக்கைகளில் இறங்கினேன். "குழந்தை அழுவுது. சீக்கிரம் வந்து கொஞ்சம் என்னான்னு பாரு" என்று சத்தமாகக் கத்துவது தான் என்னிடம் இருந்த FAQக்களுக்குச் சொல்லப்பட்டிருந்த முதல் விடை
    /

    :))))
    ROTFL

    மைண்ட்ல வெச்சிக்கிறேன். யூஸ் ஆகும்.

    ReplyDelete
  18. /
    முத்துலெட்சுமி-கயல்விழி said...

    லூசாப்பா நீன்னு தூங்கி இருப்பாளா..அப்ப எந்திருச்சு லைலா மாதிரி கத்துவாளா..?
    /

    ரிப்பீட்டு

    ReplyDelete
  19. பாட்டியின் ஆன்மா சாந்தி அடையட்டும்.

    ReplyDelete
  20. //பிள்ளையார் சார்பில் மிக மிக மிக வன்மையாய்க் கண்டிக்கிறேன். நறநறநறநறநறநறநற க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்//

    பிள்ளையாரின் ஏஜெண்ட் எங்கள் தலைவிஜி கி ஜெய் அவங்க தாயுள்ளம் கி ஜெய்

    //உங்க பொண்ணுக்கு ஒரு ரிப்பீஈஈஈஈஈஈஈட்டேஏஏஏஏஏஏஏஏஏஏ போடறேன். புத்திசாலி அவங்க அம்மாவைக் கொண்டிருக்கா போல! :P:P:P//

    காமெடி பண்ணறீங்க போங்க...சிப்பு சிப்பா வருது :))

    ReplyDelete
  21. //ரொம்பவே வேடிக்கையா எழுதிட்டுக் கடைசியிலே வேதனையும் கொடுத்திட்டீங்க. உங்க அம்மா, சித்தி ஆகியோருக்குப் பாட்டியின் பிரிவைத் தாங்கிக் கொள்ளும் மன வலிவை இறைவன் தருமாறு வேண்டிக் கொள்கின்றேன். உங்களுக்கும் குழந்தையின் சிரிப்பிலும், விளையாட்டிலும் பாட்டியைப் பிரிந்த சோகம் தாக்காமல் இருக்கும். வீட்டில் ஒரு குழந்தை இருந்தால் வெளிச்சம் போட்டாப்போல் மனசும் பளிச்சுனு ஆகும்.//

    கிண்டலும் பண்ணறீங்க, கண்ணீரையும் துடைக்கறீங்க...தலைவிக்கு நிகர் தலைவி தான். அதுக்கு ஒரு ஸ்பெஷல் "ஓஓஓஓஓஓ" போட்டுக்கறேன்.

    ReplyDelete
  22. //எம்.ஜி.ஆருக்கு அவங்க அம்மா தாலாட்டுப் பாடுவாங்களே, "இந்தப் பச்சைக்கிளிக்கு செவ்வந்திப் பூவாலே தொட்டிலும் கட்டி வைத்தேன்" அது கூடப்பாடி இருக்கலாம், என்ன போங்க, இவ்வளவு பாட்டு இருக்கறச்சே தமிழ் சினிமாவில் தாலாட்டே இல்லைனு சொல்லிட்டீங்களே!! :P:P:P:P
    //

    அட...அப்பா பொண்ணுக்குப் பாடற மாதிரி பாட்டு வேணும்னு சொன்னா எம்ஜிஆருக்கு அவங்க (திரை)அம்மா பாடுனதை எல்லாம் சொல்றீங்க?

    ReplyDelete
  23. //இந்தக் கொடுமைக்குத் தூங்கிற மாதிரி நடிக்கலாம்னு நடிச்சிருக்கும் உங்க குழந்தை.//

    ஹி...ஹி...வாங்க வேலன். எல்லாரும் சொல்றதுனால இனிமே இந்த கொடுமையை ஸ்டாப் பண்ணிக்கிறேன்.
    :)

    ReplyDelete
  24. //:)

    :(//

    சிரிச்சிக்கிட்டே அனுதாபம் தெரிவிச்சிக்கிட்டதுக்கு நன்னிப்பா கப்பி.

    ReplyDelete
  25. //\\கண்டிப்பா மனசுக்குள்ள "லூசாப்பா நீ"ன்னு சொல்லிக்கிட்டே வேற வழியில்லாம தான் தூங்கிருப்பான்னு நெனக்கிறேன்.\\

    ஹா ஹா ஹா.

    நல்லாதானே இருக்கு.//

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஜமால்.

    ReplyDelete
  26. //என்ன போங்க, நீங்க?? ஒரு கண்ணே, கலைமானே யை எடுத்து வுட்டிருக்கலாமே! :)))))))) அந்தப் பாட்டு விசாலி கண்ணதாசன் அவங்களுக்காக கண்ணதாசன் எழுதினார்னு சொல்லிட்டு இருப்பாங்க!
    //

    சூப்பர் பாட்டு. நச்சுன்னு புடிச்சிட்டீங்க. தமிழ் சங்கத்தால் தீர்க்க முடியாத சந்தேகத்தை தனி ஒருவியாய் தீர்த்த அவ்வையே...வாழ்க நீவிர்...வளர்க நிம் கொற்றம்.
    :)

    ReplyDelete
  27. //காமெடியா கொண்டு போய் சீரியஸா முடிச்சுட்டீங்க...

    நம் வாழ்வை போலவே :(

    பாட்டியின் ஆன்மா சாந்தி அடையட்டும்.//

    நன்றிப்பா புலி.

    ReplyDelete
  28. //தென் பாண்டி சீமையிலே பாட்டு பாடி பாருங்க. நல்லா பலன் கிடைக்கும். குறிப்பா அந்த ஹம்மிங்க் ரெம்ப முக்யம். :))//

    அப்படீங்கறீங்க? நெக்ஸ்ட் முயற்சி செய்யறேன் :)

    //4 அல்லது 5 மாசம் ஆயிட்டா வாயை உப்பி வெச்சுகிட்டு புர்ர்னு கையால குத்தி வெளையாட்டு காமிங்க. ஒரு வேளை குழந்தை சிரிக்க கூடும். :)))//

    அனுபவம்...அனுபவம் :)

    //ஆயாவின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்கள். :(//

    நன்றி அம்பி.

    ReplyDelete
  29. //:))))
    ROTFL

    மைண்ட்ல வெச்சிக்கிறேன். யூஸ் ஆகும்.//

    வாங்க சிவா,
    வீட்ல விசேஷங்களா?
    :)

    ReplyDelete
  30. //பாட்டியின் ஆன்மா சாந்தி அடையட்டும்.//

    நன்றி சிவா.

    ReplyDelete
  31. ஆரம்பத்துல லேசாக அரம்பிச்ச மனசு கடைசியில கனத்துப்போயிருச்சுங்க :(

    ReplyDelete
  32. கடைசி வார்த்தை பணித்தன இல்லை பனித்தன.

    நல்ல குரல்வளம் எல்லாம் வேண்டாம். சும்மா அப்படியே எடுத்து தோளில் போட்டுக்கிட்டுப் பேசிக்கிட்டு இருங்க போதும். அந்த உடம்பு சூடும் குரலில் தெரிந்து கொள்ளும் பாதுகாப்பும்தான் முக்கியம். இனிமையான பாடல் எது வேணாலும் பாடலாம் ஹம் பண்ணலாம். அனுபவம் பேசுகிறது! :))

    ஆயா பிரிவுக்கு அனுதாபங்கள்.

    ReplyDelete
  33. நான் சொல்ல வந்ததை ஏற்கனவே சொல்லிட்டாங்க. உன்னோட பாட்ட எப்படி நிப்பாட்டனும்னு தெரிஞ்சு வச்சிருக்க அர்ச்சனாவுக்கு நல்ல எதிர்காலம் இருக்கு.

    எங்க பாட்டியும் Nearly 100, well and good. இப்ப எல்லாம் நெறைய சின்ன வயசு flashbacks வருது. Life must go on.

    ReplyDelete
  34. என்ன இப்படி சொல்லிட்டீங்க!! இளையராஜாவின் இசையில் மனோவின் குரலில் சின்னக்கண்ணம்மா படத்தில் அற்புதமான பாட்டு ஒன்னு இருக்கு, தந்தை மகளுக்கு பாடுகிறது..

    'எந்தன் வாழ்க்கையின் அர்த்தம் சொல்ல பூக்களின் வண்ணம் கொண்டு பிறந்த மகளே என் மகளே'

    mp3 என்னிடம் உள்ளது, id கொடுங்கள், அனுப்பி வைக்கி்றேன்.

    -அரசு
    arasu.pct@gmail.com

    ReplyDelete
  35. கைப்ஸ், மொதல்ல அந்த பாட்டுல ஏதாச்சும் ஒண்ண பாடி வலையேத்துங்க.

    நீங்க பாடர லட்சணத்தை கேட்டுட்டு, இனி தொடர்ந்து,வேர பாட்டு பாடி உங்க டாட்டரை நீங்க டார்ச்சர் பண்ண அனுமதிக்கலாமா வேணாமான்னு நான் சொல்றேன்.

    சில நேரங்களில், சிலர், பாடாம இருக்கரதே நல்ல பாட்டு என்ற தத்துவத்தை உதிர்த்து விட்டு எஸ்கேப்புகிறேன்.. அவ்வ்வ் :)

    ReplyDelete
  36. எல்லா அப்பாவும் இப்படிதானா?
    எப்படி இந்த பதிவை மிஸ் பண்ணினேன்னு தெரியலே,இன்றுதான் உங்கள் பின்னூட்டத்தில் சொன்ன பிறகு பார்த்தேன்.
    ஆனா எனக்கு சரியா எழுத தெரியலேன்னு தெரியுது,அதே விஷயத்தை நீங்க எவ்வளவு அழகா நகைசுவையா சொல்லியிருக்கீங்க

    பாட்டியின் மறைவுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்

    ReplyDelete
  37. தல!

    "எந்தன் வாழ்க்கையின் அர்த்தம் சொல்ல பூக்களின் வண்ணம் கொண்டு பிறந்த மகளே என் மகளே!" ன்னு ஒரு பாட்டு இருக்கு!

    ReplyDelete
  38. :(

    பாட்டியின் மறைவுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்

    ReplyDelete
  39. என் பேவரைட்: சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா! ஏறத்தாழ சிச்சுவேஷனுக்கும் பொருந்தும்னு நினைக்கிறேன்..

    தாலாட்டுல முக்கியமான மேட்டர் என்னன்னா... நாம தூங்கிட்டா இவன் பாடறதை நிறுத்திருவான்ற நம்பிக்கையை குழந்தை மனசுல ஏத்திடணும். அப்புறம் பாட்டை நிறுத்தணும்ன்ற எண்ணத்துலேயே தூங்கிடும் குழந்தை!

    ReplyDelete
  40. //ஆரம்பத்துல லேசாக அரம்பிச்ச மனசு கடைசியில கனத்துப்போயிருச்சுங்க :(//

    ஆறுதல் சொன்னதுக்கு நன்றிங்க இளா.

    ReplyDelete
  41. //கடைசி வார்த்தை பணித்தன இல்லை பனித்தன. //

    நன்றிங்க கொத்ஸ்...திருத்திட்டேன்.

    //நல்ல குரல்வளம் எல்லாம் வேண்டாம். சும்மா அப்படியே எடுத்து தோளில் போட்டுக்கிட்டுப் பேசிக்கிட்டு இருங்க போதும். அந்த உடம்பு சூடும் குரலில் தெரிந்து கொள்ளும் பாதுகாப்பும்தான் முக்கியம். இனிமையான பாடல் எது வேணாலும் பாடலாம் ஹம் பண்ணலாம். அனுபவம் பேசுகிறது! :))//
    அருமையாச் சொல்லிருக்கீங்க. இதப் பத்தி நீங்க ஏன் ஒரு பதிவு போடக் கூடாது?

    //ஆயா பிரிவுக்கு அனுதாபங்கள்.//
    ஆறுதலுக்கு நன்றிங்க.

    ReplyDelete
  42. //நான் சொல்ல வந்ததை ஏற்கனவே சொல்லிட்டாங்க. உன்னோட பாட்ட எப்படி நிப்பாட்டனும்னு தெரிஞ்சு வச்சிருக்க அர்ச்சனாவுக்கு நல்ல எதிர்காலம் இருக்கு. //

    யூ ட்டூ ப்ரூட்டஸு????

    //எங்க பாட்டியும் Nearly 100, well and good. இப்ப எல்லாம் நெறைய சின்ன வயசு flashbacks வருது. Life must go on.//
    ஹும்...ஒரு அனுபவ முதிர்ச்சியோட பேசறாப்பல தெரியுது?
    :)

    ReplyDelete
  43. // அரசு said...
    என்ன இப்படி சொல்லிட்டீங்க!! இளையராஜாவின் இசையில் மனோவின் குரலில் சின்னக்கண்ணம்மா படத்தில் அற்புதமான பாட்டு ஒன்னு இருக்கு, தந்தை மகளுக்கு பாடுகிறது..

    'எந்தன் வாழ்க்கையின் அர்த்தம் சொல்ல பூக்களின் வண்ணம் கொண்டு பிறந்த மகளே என் மகளே'//

    தலைவர் மியூசிக் போட்ட பாட்டா? நான் கேள்வி பட்டதே இல்லையே? கேக்கணும்னு ஆவலா இருக்கே...

    //mp3 என்னிடம் உள்ளது, id கொடுங்கள், அனுப்பி வைக்கி்றேன்.

    -அரசு
    arasu.pct@gmail.com//

    மெயில் அனுப்பிட்டேன் சார். நன்றி.

    ReplyDelete
  44. //நீங்க பாடர லட்சணத்தை கேட்டுட்டு, இனி தொடர்ந்து,வேர பாட்டு பாடி உங்க டாட்டரை நீங்க டார்ச்சர் பண்ண அனுமதிக்கலாமா வேணாமான்னு நான் சொல்றேன்.//

    ஹி...ஹி...நான் ஏமாற மாட்டேனே? நாலு பேரு நாக்கைப் புடுங்கிக்கிற மாதிரி கேள்வி கேப்பாங்களே :))

    எனிவே...லிங்க் எல்லாம் பண்ணி பதிவு போட்டதுக்கு வளர நன்னி...கண்டிப்பா அதுனால ரெஸ்பான்ஸ் கூடியிருக்கு.
    :))

    ReplyDelete
  45. //எல்லா அப்பாவும் இப்படிதானா?//

    ஒரே குட்டை...ஒரே மட்டை...சேம் ப்ளட் :))

    //
    பாட்டியின் மறைவுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்//
    ஆறுதல் சொன்னதுக்கு நன்றிங்க பாபு.

    ReplyDelete
  46. //"எந்தன் வாழ்க்கையின் அர்த்தம் சொல்ல பூக்களின் வண்ணம் கொண்டு பிறந்த மகளே என் மகளே!" ன்னு ஒரு பாட்டு இருக்கு!//

    வாங்க தள,
    பாட்டின் முதல் வரியே அசத்தலா இருக்கே? என்ன படம்ங்க இது?

    ReplyDelete
  47. //:(

    பாட்டியின் மறைவுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்//

    நன்னி தள.

    ReplyDelete
  48. //என் பேவரைட்: சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா! ஏறத்தாழ சிச்சுவேஷனுக்கும் பொருந்தும்னு நினைக்கிறேன்.. //

    வாங்க சார்,
    குழந்தையை டார்ச்சர் பண்ணக் கூடாதுன்னு சில பேரு சொல்லறாங்க. ஆனா புதுப்புது தாலாட்டு பாட்டுகளையும் உங்களை மாதிரி சிலர் அறிமுகப் படுத்திருக்காங்க. ஞான் இப்போழ் எந்து செய்யாம்?
    :))

    //தாலாட்டுல முக்கியமான மேட்டர் என்னன்னா... நாம தூங்கிட்டா இவன் பாடறதை நிறுத்திருவான்ற நம்பிக்கையை குழந்தை மனசுல ஏத்திடணும். அப்புறம் பாட்டை நிறுத்தணும்ன்ற எண்ணத்துலேயே தூங்கிடும் குழந்தை!//

    ஹி...ஹி...உண்மை தான். எப்படியோ குழந்தை தூங்குது இல்ல...நமக்கு அது தானே வேணும். ஆனா தங்கமணிகள் எவ்வளோ சுவீட் வாய்சுல பி.சுசீலா மாதிரி பாடுனாலும் குழந்தைகள் லேசுல தூங்கறதில்லையே...அது ஏன்?
    :))

    ReplyDelete
  49. very sorry to hear about ur grandma.

    thalattu - how about "karpoora bommai onru", "thene thenpandi meene", "chinnanchiru kiliye",etc

    ReplyDelete