புதுசா வரப் போற 'குஷி-2' படத்துல ஒரு சீன். படத்தோட ஹீரோ வெட்டி(விஜய்), தேன் குடிக்கப் போன எடத்துல ஒரு வெளக்கைப் பாத்துட்டு அதுலேருந்து ஒரு சுடரை ஏத்திக் கொண்டாந்து தமிழ் மணக்கற எடத்துக்கும் வலை தொங்கற மத்த எடங்களுக்கும் பொதுவா ஏத்தி வைக்கிறாரு. சுடரை ஏத்தி வச்சிட்டுத் தேடிப் பாத்தா,வெளக்கை அணையாம பாத்துக்க ஜோதிகா எங்கேயும் தென்படலை. சரி, ஆபத்துக்குப் பாவமில்லைன்னு அந்தப் பக்கமா போன நம்ம 12பி நாட்டாமை ஸ்யாமைப் பாத்துச் சுடரை அணையாம மத்த எடங்கள்லயும் ஏத்தி வைங்கய்யான்னு குடுக்கறாரு. ஆனா நம்ம ஜோதிகா...சே...சே...12பிக்குச் சுடரை ஏத்தி வைக்கறவங்களைக் கூப்பிடணும்னு தோணலை...ஏந்தறவங்களைக் கூப்புடனும்னு தான் தோணியிருக்கு. அதனால "தல தேன்கூடு சுடர் அடுத்து ஏந்த போறது நீங்கதான்...என்னோட போஸ்ட் பார்த்திட்டு ஆக வேண்டியத பாருங்க"ன்னு கேட்டுக்கிட்டாரு. ஏந்தச் சொன்ன ஸ்யாமோட அன்புக்குக் கட்டுப்பட்டுக் கையில வாழை மட்டைக் கூட இல்லாம ரிஸ்க் எடுத்து ஏந்திருக்கேன் சாமிகளா.
இதான் சாக்குன்னு வாயைத் தொறக்க வச்சி நெருப்புக் கோழி முட்டை மாதிரி இருக்கற வெளக்கோடச் சேத்துச் சுடரை என் வாயில வைச்சி திணிச்சிடாதீங்கப்பு. சுடர் ஏத்துனதுக்கு ஆதாரமா அஞ்சு கேள்விக்குப் பதில் சொல்லணுமாம்லே? எதோ ராத்திரில வெளக்கை எரிய வுட்டுத் தூக்கக் கலக்கத்துல கிறுக்குனது...
1. கைப்புள்ளனு பேரு உங்களுக்கு எப்படி வந்துச்சு...சொந்த பேரா, தானா வந்த பேரா, காரணப்பேரா, இல்ல பட்டபேரா?
இந்த நக்கல் தானே வேணாங்கிறது? இருந்தாலும் இந்தப் பேரைக் கருவா வச்சி கற்பனை பண்ணுனப்பத் தோணுனது கீழே.
கைப்புள்ள - சொந்தப் பேரா இருந்திருந்தா :
அ. "ஹேப்பி பர்த்டே டூ யூ...ஹேப்பி பர்த்டே டூ யூ...ஹேப்பி பர்த்டே...டியர் கைப்புள்ள! ஹேப்பி பர்த்டே டூ யூ"
ஆ. "எழிலன்" - ப்ரெசெண்ட் மிஸ்
"ஜகன்னாதன்" - ப்ரெசெண்ட் மிஸ்
"ஜோசஃப்" - ப்ரெசெண்ட் மிஸ்
"கைப்புள்ள" - ...
"கைப்புள்ள" - ...
"க்கைப்புள்ள..."
"டேய் கைப்புள்ள! மிஸ் உன்னைத் தாண்டா கூப்புடறாங்க"
"யெஸ் மிஸ்...ப்ரெசெண்ட் மிஸ்"
"கைப்புள்ள!...லேட்டா வர்ற்தோட இல்லாம க்ளாசுலேயே தூக்கம் வேறயா?...அட்டெண்டென்சு எடுக்கறது கூடத் தெரியாமத் தூங்கறியா நீ? கெட் அவுட் ஆஃப் மை க்ளாஸ்"
இ. "குழந்தைகள் தினச் சிறப்பு நிகழ்ச்சியின் தொடர்ச்சியாக "நேருவும் குழந்தைகளும்" என்றத் தலைப்பில் இப்போது மேடையில் பேச வருவது எங்கள் பள்ளியின் எட்டாம் வகுப்பு அ பிரிவின் மாணவர் கைப்புள்ள"
ஈ. நாலாவது வருஷ ப்ராஜெக்ட் ரிப்போர்டின் அட்டையில்"A Model Study for Removal of Vortices in Lower Mettur Barrage Power House No.4 at Ooratchikkottai" - Final Year B.E. Project in Civil Engineering by K.Dyeaneshwaran, Kaipullai and A.P.Arun Prasad Raja
கைப்புள்ள - தானா வந்தப் பேரா இருந்திருந்தா :
"அகர முதல எழுத்தெல்லாம் அறிய வைத்தாய் தாயே! கைப்புள்ளன்னு பேர் தந்து அகிலம் அறிய வைத்தாய் நீயே"ன்னு சரஸ்வதி சபதம் ரேஞ்சுக்கு ஒரு பாட்டு பாடியிருக்கலாம்.
கைப்புள்ள - காரணப் பேரா இருந்திருந்தா :
அ. பத்தாம் வகுப்பு தமிழ் பாட நூலில் பாடம் எண்.10 'அஞ்சா நெஞ்சன் கைப்புள்ள'யில் இரண்டாவது பத்தியில்
"வண்ண வண்ணமாக வளைந்து நெளிந்து அடி வாங்குவதில் வீரனான அஞ்சாநெஞ்சன் கைப்புள்ள, குழந்தை வயதிலிருந்து கழுதை வயது வரை கை சூப்பும் பழக்கத்தைக் கொண்டிருந்தக் காரணத்தால் கைப்புள்ள என்று எல்லோராலும் பாசத்துடன் அழைக்கப் பட்டார். நாளடைவில் அவருடைய சொந்தப் பெயர் மறக்கப் பட்டு காரணப் பெயரினாலேயே அனைவராலும் அறியப் பெற்றார்."
(அதாவது நாளைக்கு வரலாற்றுல எடம் புடிச்சதுக்கப்புறம்...)
கைப்புள்ள - பட்டப் பேரா இருந்திருந்தா :
B.A, B.Sc, M.A, M.Sc மாதிரி B.K.(Bachelor of Kaipullaiology), M.K.(Master of Kaipullaiology) பட்டம் குடுக்கலாம்.
சரி சரி...ரொம்பக் கடிச்சிட்டேன்னு நெனக்கிறேன். 'கைப்புள்ள' கதாபாத்திரத்தின் குணநலன்கள்(!) எனக்கு ரொம்பப் புடிச்சதுனாலயும், 'கைப்புள்ள'ங்கிற பேரு வித்தியாசமா இருந்ததுனாலயும் அந்தப் பேரை எனக்கு நானே சூட்டிக்கிட்டேன்யா...சூட்டிக்கிட்டேன்யா.
2. வருத்தபடாத வாலிபர் சங்கம் னு ஆரம்பிச்சு,அதுக்கு ஒரு ஆபீஸ் புடிச்சி,போட்டு போர்டு மாட்டி, ஒரு பென்ஸ் கார் வாங்கி அதல ஏறி எங்கள தள்ள வெச்சு தெனமும் போய் அடி வாங்கிட்டு வரதுக்கு ஐடியா எப்படி தோனுச்சு?
மாட்டிக்கினியா? ஹிஸ்டரில நீ வீக்குன்னு தெரிஞ்சுப் போச்சு நைனா. எனக்கு எங்க ஐடியா தோணுச்சு? பென்ஸ் கார் வாங்கற ஐடியா பொன்ஸும் தேவும் சேர்ந்து யோசிச்சதுனால வந்தது. உண்மையில ஆப்பு வாங்குறது மட்டும் தான் நானு...வக்கிறதுக்கு ஒரு குரூப்பு ராப்பகலா உழைச்சிக்கிட்டு இருக்கு.
3.அகமதாபாத் சப்பாத்திஸ் பத்தி நச்சுனு நாலு வரில சொல்லுங்க?
மறுபடியும் கலத் சவால். கேள்வியே தப்பாயிருக்கே? அகமதாபாளையத்துல சப்பாத்திஸ் எல்லாம் ஃபேமஸ் இல்லப்பா...இந்தப் பக்கமெல்லாம் டோக்லா தான். மஞ்சக் கலர்ல கடுகு, பச்சை மிளகாய், கொஞ்சமா தேங்காப்பூ போட்டு கடலை மாவுல பண்ணிருப்பாங்க. அத சாப்புடும் போதெல்லாம், நம்ம புத்திக்கு மட்டும் என்னமோ இட்லி உப்புமா சாப்புடற மாதிரியே இருக்கும். சரி....சரி...டென்சன் ஆவாதே... நீ கேக்கற டோக்லாவும் நல்லாத் தான் இருக்கும். அக்டோபர் மாசத்துல நவராத்திரி சமயத்துல ரெண்டு குச்சி எடுத்துக்கிட்டுப் பாளையத்துப் பக்கம் வந்தீன்னா டோக்லாவோட டாண்டியா கூட ஆடலாம்.
4.இது பிப்ரவரி மாசம்ங்கறதால இந்த வருசம் ப்ரபோஸ் பண்ண கார்டு, கெக்கே பொக்கே எல்லாம் வாங்கி வெச்சுட்டீங்களா?
ஏம்ப்பா...இம்புட்டு ஆப்பையும் வாங்கிட்டு நான் சிங்கிள் பீசா நடமாடுறது கூட உனக்குப் பொறுக்கலையா? பொக்கே வாங்கச் சொல்லி ஐடியா குடுத்து ஒரேயடியா எனக்கு மலர் வளையம் வைக்க ஏற்பாடா? வளர்ந்தப் பயலுங்களே நம்மளைப் பாத்து அங்கிள்னு சொல்லிக் கேவலப் படுத்தறானுவ. இந்த லட்சணத்துல ப்ரபோஸ் பண்ணறேன்னு போயி அங்கேயும் போய் அசிங்கப் படணுமா? அதுவும் இல்லாம நம்ம பாளையத்துப் பக்கம் பார்க்ல காதல் பறவைகளாச் சுத்தற பொண்ணு-பசங்களைக் கலாச்சாரத்தைக் காப்பாத்தறோம்னு ஒரு குரூப்பு கெளம்பி அடிச்சித் துவைச்சிருக்காய்ங்க. கீழே இருக்கற நியூஸைப் பாருப்பா.
VHP Workers thrash young couples
ஆயிரம் தான் இருந்தாலும் நம்ம ஊருல நம்ம ஆளுங்கக் கையால அடி வாங்குறது வேற? பாஷை தெரியாம ஊருல அடி வாங்கிட்டு மனசுக்கு இதமா அய்யோ அம்மான்னு கத்தக் கூட முடியாம என்னத்துக்கு வீணாப் போய் அடியை வாங்கிக்கிட்டு? சின்னப்புள்ளத் தனமால்ல இருக்கு?
5.நம்ம ஊர் தலைவருங்கள்ள (இருந்த/இருக்கிற) யார உங்களுக்கு ரொம்ப்ப பிடிக்கும்..ஏன்?
"எழுத்தறிவித்தவன் இறைவன் ஆகும்"ங்கிற வாக்குக்கு ஏத்த மாதிரி வாழ்ந்து காட்டிய கர்மவீரர் காமராஜர். தனக்குக் கிடைக்காத கல்வி, பல்லாயிரக் கணக்கான ஏழைக் குழந்தைகளுக்குக் கிடைக்க வழிவகை புரிந்தவர். ஐஐடி சென்னை நிறுவப் படப் போற சமயத்துல அது ஆந்திராவில அமையணுமா இல்ல தமிழகத்துல அமையணுமான்னு பலத்த விவாதம் நடைப்பெற்றுச்சாம். ஆனா அப்படியொரு சிறப்பான கல்விக் கழகம் சென்னையில் வர வேண்டும் என்பதற்காக அப்போது முதல்வராக இருந்த காமராஜர் அனைத்து வசதிகளையும் செய்து தந்ததோடு, அப்போது அடர்ந்த வனப் பகுதியாக இருந்த கிண்டியில் ஏழு கி.மீ.சுற்றளவு கொண்ட ஒரு மிகப் பெரிய இடத்தையும் ஐஐடி வளாகம் அமைவதற்காக அளித்தார் என எங்கோ எப்போதோ கேள்விப் பட்டிருக்கேன். இது போல அவர் செய்த பல நல்ல காரியங்களைப் பற்றி டண்டணக்கா என்ற பதிவர் தன்னுடைய வலைப்பூவில் பதிந்திருக்கிறார்.
இந்தச் சுடரை(வாழைமட்டை இல்லாம) ஏந்த சொல்லற அளவுக்கு நான் இரக்கமில்லாதவனில்ல. அதனால வைகை வேந்தன் அன்புத் தம்பி ராயல் 'ராம்'சாமியைச் சுடர் ஏத்தும் சுடர்மணியாக இருக்குமாறு அன்புடன் அழைக்கிறேன்.
1. குரூ...பெங்களூருதல்லி நிமகே இஷ்டமான, ப்ரீத்தியான நாலு சமாச்சாரங்கள் சொல்ல பேக்கோ.
2. அவ்வப்போது ராயலைக் கவிதை எழுதத் தூண்டுதலாக இருப்பது என்ன?
3. உன்னோட வாழ்க்கையில நடந்த, இக்கட்டான சூழ்நிலையில் மாட்டி மீண்ட மாதிரி ஏதாவது ஒரு சம்பவம்/அல்லது நகைச்சுவை சம்பவம் ஒன்னைச் சொல்லப்பா?
4. மிசஸ் ராயல் பத்தி மிஸ்டர் ராயலின் கனவுகள் என்னென்ன?
5. தமிழ் திரையுலகில் உங்களைக் கவர்ந்த இரு திரைப்படக் காட்சிகளைச் சொல்லவும். ஏன் பிடிச்சிருக்கும்னும் சொல்லணும்?
செவ்வாக் கெழமையும் அதுவுமா ரொம்ப நாளைக்கப்புறம் சுடர் ஏத்(ந்)திருக்கேன். டச் வுட்டதுனால கொஞ்சம் கூடக் குறைய இருந்தாலும், சுடரை ஏத்தி வச்ச நம்ம வெட்டிக்குப் பதினாலாம் தேதிக்குள்ள ஒரு அமெரிக்கன் ஜோதிகா கெடைக்கணும்னு வாழ்த்தி, தன்னோட கடலை மேட்டர் எல்லாம் தைரியமா ப்ளாக்ல எழுதுன நம்ம 12பி, அவங்க தங்கமணி கிட்ட மொத்து வாங்காம தப்பிக்கனும்னு வேண்டிச் சுடரை அணையாம பாதுகாப்பாப் பக்குவமாக் கொண்டு போங்க சாமிங்களான்னு கேட்டுக்கறேன்.