Saturday, June 17, 2006

இல்லாத காதலிக்காக

கடந்த சில நாளா நமக்கு ஒரு ஆசைங்க. களுதை...இந்த காதல் கவிதை காதல் கவிதைங்கிறாங்களே...அதை ஒன்னாவது எப்படியாச்சும் எளுதிப் போடோணுங்கிறது தாங்க அது. ஊருக்குள்ர நாலு பேரு நம்மளை பெரிய மனுசன்னு மதிக்கத் தேவையில்ல? அதுக்குத் தாங்க. நியாயமான ஆசை தானுங்ளே? ஆனானப் பட்ட ப்ளாக்கையே நாம மேட்டரு இல்லாமல்லாம் எழுதும் போது, காதல் கவிதை எழுதறது என்ன பெரிய கம்ப சூத்திரம், அப்படியே புஸ்ஸுன்னு ஊதித் தள்ளிரலாம்னு மண்டைக்குள்ள ஒரே கொடச்சலு. ஆனா நம்ம கூட்டாளி ஒருத்தன் அப்பப்ப சொல்ற "ஆசை இருக்கு தாசில் பண்ண அம்சம் இருக்கு கழுதை மேய்க்க"ங்கிற பொன்மொழியும் வேண்டாத நேரத்துல நெனப்பு வந்துருச்சு.

கழுதை மேய்க்க...சாரி தாசில் பண்ண ஆசை வந்துருச்சு, என்ன பண்ணா ஒத வாங்காம மேய்க்க முடியும்னு யோசிச்சப்போ, காதல் கவிதை எழுதியிருக்குற எடத்துலெல்லாம் வேவு பார்க்கறது, "கவிஞ்சருங்க" யூஸ் பண்ணற வார்த்தையை எல்லாம் பொறுக்கி வச்சிக்கிறது, கிளாசிகல் ஸ்டைல்ல காதல் கவிதை எழுதணும்னா தேனு, மானு, வேல்விழி, கொடியிடை அப்படின்னு போட்டுக்கறது, இதுவே ஆரம்ப காலத்து பழனிபாரதி ஸ்டைல்ல வேணும்னா எஃப் எம்,அனகோண்டா,தோனி,ரூனி இந்த மாதிரி பொது அறிவு விசயத்துக்கு நடு நடுவால is, was போட்டு எப்படியாச்சும் ஒரு உவம-உவமேயம்-உவமானம் குடுத்துக்கறது, காதல்ல பல்பு வாங்கினவரு எழுதற மாதிரி எழுதனும்னா கொலைகாரி, சதாம் உசேன், சொல்லடி, செய்யடி இப்படின்னு, நேரா யாரையாச்சும் பாத்து சொன்னா விளக்குமாத்துக்கு வலி எடுக்கச் செய்யற வார்த்தைங்களை எல்லாம் போட்டு தெகிரியமா எழுதறது, இதுவே கொஞ்சம் கில்மாவா எழுதனும்னா அல்வா, ரங்கோலி, உதட்டுச் சிவப்பு, கூலிங் கிளாஸ் இந்த மாதிரியான குளுகுளு வார்த்தைங்களைப் போட்டுக்கறது, அப்படி இப்படின்னு குத்துமதிப்பா சேர்த்தோம்னா காதல் கவிதை மாதிரி ஒன்னு எப்படியும் வந்துரும்...அத ப்ளாக்ல போட்டு 'பெரிய மனுசன்' ஆகிடலாம்னு ஒரு அதிரடித் திட்டம் தயாராச்சு.

ஆனா பாருங்க...நமக்கு சில்பான்ஸாத் தோனுன இந்த காதல் கவிதை எல்லம் எழுதறதுக்கு மெய்யாலுமே நெறைய கிட்னி வேணும் போலிருக்கு. கிளாசிகல், செமிகிளாசிகல், கண்டெம்பரரி, கில்மா இப்படின்னு அததுக்குமுரிய கலைச் சொற்களை எல்லாம் சேர்த்து வச்சும் கூட நம்மால ஒன்னியும் கிழிக்க முடியலை. சத்தியமா தாவு தீர்ந்துடுச்சுங்க சாமியோவ். சே...சே...இந்த பழம் புளிக்கும்னு காதல் கவிதை கடையை ஏற கட்டறதுக்கு முன்னாடி ஏற்கனவே பெரிய மனுசனுங்களா இருக்கறவங்க கிட்ட கடைசியா ஒரு தடவை உதவி கேக்கலாம்னு வரப்போரம் குந்தியிருந்தவரு கிட்ட போய் கேட்டா, அதெல்லாம் ரொம்ப சுலபமுங்க...தானா வருமுங்கன்னு எதோ குக்கர்லேருந்து ஆவி சுலபமா வர்ற மாதிரி சொன்னாரு. கச்சேரி நடத்துறவரு, காதல் கவிதை எழுதறதுக்கெல்லாம் ஆட்டீன்(இதயம்ங்க...இது கூடவா புரியல்ல?) வேணும் அப்படின்னு நம்மளை "Iam a bad man" ரேஞ்சுக்கு கலாய்ச்சி விட்டுட்டாரு. என்னடா இந்த மதுரைக்கு வந்த சோதனை...ஆஃப்டரால் ஒரு காதல் கவிதை கூட நம்மால எழுத முடியலை அப்படின்னு சோர்ந்து போய் உக்காந்துட மாட்டேன் மகாஜனங்களே! உங்கள் கலாய்ப்புகளுக்குப் பாத்திரமான கைப்புள்ளயால ஒரு ருபையத்தையோ, ஒரு மேகதூதத்தையோ, இல்ல ஒரு ஜில்ஜில் நானூறையோ எழுத முடியா விட்டாலும் எங்கேருந்தாவது சுட்டாச்சும் சில காதல் கவிதைகளை உங்களுக்காக...கவனிக்க உங்களுக்காண்டி போட பாடுபடுவான். பாடுபடுவான் என்ன பாடுபடுவான்... பாடுபட்டுட்டான்யா... பாடுபட்டுட்டான்யா.

நான் இன்னிக்கு நாட்டு மக்களுக்காக கொண்டாந்திருக்குற காதல் கவிதைங்க சாதாரணமானது கிடையாதுங்க(நான் எழுதலியே...அதனால தான்..ஹி ஹி). காதல்னு சொன்னதும் ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே இருக்கும் ஒரு மென்மையான மெல்லிதான உணர்வு தான் ஞாபகத்துக்கு வரும். ஆனா பக்தி நெறியிலயும் இந்த காதலோட பங்கு இருக்குன்னு நம்ம எல்லாருக்கும் தெரியும். தன்னை காதலியாகவும் இறைவனைக் காதலனாகவும் உருவகப்படுத்திக்கிட்டு பலரும் பல பாடல்களைப் பாடியிருக்காங்க. முண்டாசு கவிஞர் தன்னை ஒரு பெண்ணா உருவகப்படுத்திக் கொண்டு கண்ணனைத் தன் காதலனா நினைச்சு எழுதுன இந்த பாடலைப் பாருங்க.

கண்ணன் - என் காதலன்

தூண்டிற் புழுவினைப்போல் - வெளியே
சுடர் விளக்கினைப் போல்,
நீண்ட பொழுதாக - எனது
நெஞ்சந் துடித்த தடீ!
கூண்டுக் கிளியினைப் போல் - தனிமை
கொண்டு மிகவும் நொந்தேன்;
வேண்டும் பொருளை யெல்லாம் - மனது
வெறுத்து விட்டதடீ!

பாயின் மிசை நானும் - தனியே
படுத் திருக்கை யிலே,
தாயினைக் கண்டாலும் - சகியே!
சலிப்பு வந்த தடீ!
வாயினில் வந்ததெல்லாம் - சகியே!
வளர்த்துப் பேசிடுவீர்;
நோயினைப் போலஞ் சினேன்; - சகியே!
நுங்க ளுறவை யெல் லாம்

உணவு செல்லவில்லை; - சகியே!
உறக்கங் கொள்ளவில்லை.
மணம் விரும்பவில்லை; - சகியே!
மலர் பிடிக்க வில்லை;
குண முறுதி யில்லை; - எதிலும்
குழப்பம் வந்த தடீ!
கணமும் உளத்திலே - சுகமே
காணக் கிடைத்ததில்லை

பாலுங் கசந்தடீ தடீ! - சகியே!
படுக்கை நொந்த தடீ!
கோலக் கிளிமொழியும் - செவியில்
குத்த லெடுத்த தடீ!
நாலு வயித்தியரும் - இனிமேல்
நம்புதற் கில்லை யென்றார்;
பாலத்துச் சோசியனும் - கிரகம்
படுத்து மென்று விட்டான்

கனவு கண்டதிலே - ஒருநாள்
கண்ணுக்குத் தோன்றாமல்,
இனம் விளங்க வில்லை - எவனோ
என்னகந் தொட்டு விட்டான்.
வினவக் கண்விழித்தேன்; - சகியே!
மேனி மறைந்து விட்டான்;
மனதில் மட்டிலுமே - புதிதோர்
மகிழ்ச்சி கண்டதடீ!

உச்சி குளிர்ந்ததடீ! - சகியே!
உடம்பு நேராச்சு,
மச்சிலும் வீடுமெல்லாம் - முன்னைப்போல்
மனத்துக் கொத்ததடீ!
இச்சை பிறந்ததடீ! - எதிலும்
இன்பம் விளைளந்ததடீ!
அச்ச மொழிந்ததடீ! - சகியே!
அழகு வந்ததடீ!

எண்ணும் பொழுதி லெல்லாம் - அவன்கை
இட்ட விடத்தினிலே!
தண்ணென் றிருந்ததடீ! - புதிதோர்
சாந்தி பிறந்ததடீ!
எண்ணி யெண்ணிப் பார்த்தேன்; - அவன்தான்
யாரெனச் சிந்தை செய்தேன்;
கண்ணன் திருவுருவம் - அங்ஙனே
கண்ணின் முன் நின்றதடீ!


பல நாளாய் காணாதத் தன் தலைவனானக் கண்ணனை நினைந்து வருந்தி, தன் தோழியிடம் முறையிடும் ஒரு பெண்ணின் வாய்மொழியாய் அமைந்துள்ளது இப்பாடல். இறைவனின் திருவடியை அடைவது குறித்தானக் கவிஞரின் மன வெளிப்பாடே இதில் சொல்லப் பட்டிருக்கும் உட்கருத்து. பல வருடங்கள் கழித்து அழகு தமிழில் ஒரு எளிய பாடலைப் படித்ததும் மகிழ்ச்சி மேலிட்டது. உங்களுக்கும் பிடித்திருக்குமென நினைக்கிறேன். பாரதியாரின் கண்ணன் பாட்டை இங்கு வாசிக்கலாம்.

"வாரணமாயிரம்" என்ற ஆண்டாள் பாசுரப் பாடலை கேளடி கண்மணி படத்தில் தான் முதன்முதலாய்க் கேட்டேன். இசைஞானி வெகு அருமையாக இசையமைத்திருப்பார். இசையுடன் இப்பாடலை முதலில் கேட்க நேரிட்டதால் இப்போது இப்பாடலைப் படிக்கும் போது கூட இசையோடு சேர்ந்து தான் படிக்கிறேன். இறைவனுடனான தன்னுடைய திருமணக் கோலத்தை எண்ணி மகிழும் ஆண்டாளின் இப்பாசுரத்தையும் மேலும் பல பாசுரங்களையும் இங்கு காணலாம்.

வாரண மாயிரம் சூழவ லம்செய்து,
நாரண நம்பி நடக்கின்றா னென்றெதிர்,
பூரண பொற்குடம் வைத்துப் புறமெங்கும்,
தோரணம் நாட்டக் கனாக்கண்டேன் தோழீநான்

நாளைவ துவைம ணமென்று நாளிட்டு,
பாளை கமுகு பரிசுடைப் பந்தற்கீழ்,
கோளரி மாதவன் கோவிந்த னென்பான்,ஓர்
காளைபு குதக்க னாக்கண்டேன் தோழீநான்

இந்திர னுள்ளிட்ட தேவர்கு ழாமெல்லாம்,
வந்திருந் தென்னைம கட்பேசி மந்திரித்து,
மந்திரக் கோடியு டுத்திம ணமாலை,
அந்தரி சூட்டக்க னாக்கண்டேன் தோழீநான்

நாற்றிசைத் தீர்த்தங்கொ ணர்ந்துந னிநல்கி,
பார்ப்பனச் சிட்டர்கள் பல்லாரெ டுத்தேத்தி,
பூப்புனை கண்ணிப்பு னிதனோ டென்றன்னை,
காப்புநாண் கட்டக்க னாக்கண்டேன் தோழீநான்

கதிரொளி தீபம் கலசமு டனேந்தி,
சதிரிள மங்கையர் தாம்வந்தெ திர்கொள்ள,
மதுரையார் மன்ன னடிநிலை தொட்டு,எங்கும்
அதிரப் புகுதக் கனாக்கண்டேன் தோழீநான்

மத்தளம் கொட்டவ ரிசங்கம் நின்றூத,
முத்துடைத் தாம நிரைதாழ்ந்த பந்தற்கீழ்
மைத்துனன் நம்பி மதுசூதன் வந்து,என்னைக்
கைத்தலம் பற்றக் கனாக்கண்டேன் தோழீநான்

வாய்நல் லார்நல்ல மறையோதி மந்திரத்தால்,
பாசிலை நாணல் படுத்துப் பரிதிவைத்து,
காய்சின மாகளி றன்னானென் கைப்பற்றி,
தீவலம் செய்யக்க னாக்கண்டேன் தோழீநான்

இம்மைக்கு மேழேழ் பிறவிக்கும் பற்றாவான்,
நம்மையு டையவன் நாராய ணன்நம்பி,
செம்மை யுடைய திருக்கையால் தாள்பற்றி,
அம்மி மிதிக்கக் கனாக்கண்டேன் தோழீநான்

வரிசிலை வாள்முகத் தென்னைமார் தாம்வந்திட்டு
எரிமுகம் பாரித்தென் னைமுன்னே நிறுத்தி,
அரிமுக னச்சுதன் கைம்மேலென் கைவைத்து,
பொரிமுகந் தட்டக் கனாக்கண்டேன் தோழீநான்

குங்கும மப்பிக் குளிர்சாந்தம் மட்டித்து,
மங்கல வீதி வலம்செய்து மணநீர்,
அங்கவ னோடு முடஞ்சென்றங் கானைமேல்,
மஞ்சன மாட்டக்க னாக்கண்டேன் தோழீநான்

ஆயனுக் காகத்தான் கண்ட கனாவினை,
வேயர் புகழ்வில்லி புத்தூர்க்கோன் கோதைசொல்,
தூய தமிழ்மாலை ஈரைந்தும் வல்லவர்,
வாயுநன் மக்களைப் பெற்று மகிழ்வரே


மேலே உள்ள பாடலில் இந்த 'அந்தரி', 'வரிசந்தம்' இச்சொற்களுக்குப் பொருள் யாருக்காச்சும் தெரிஞ்சாச் சொல்லுங்க.

கடைசியாக சுஃபி குருவான கபீர்தாஸ் 'வ்ரஜ் பாஷா' என்ற வட்டார வழக்கில் பாடிய 'தோஹா' (தமிழில் இரண்டடியார், ஆங்கிலத்தில் கப்லெட் 'Couplet')ஒன்றைக் காணலாம். நெசவாளரான கபீர்தாஸ் முறையான கல்வி இல்லாதவர், தானறிந்த ஞானக் கருத்துகளை இரண்டடிகளாக அவர் பாடுவதை, அவரது சீடர்கள் கேட்டு எழுதி வைத்துள்ளது தான் இன்று தோஹாக்களாக உள்ள இப்பாடல்கள். இறைவனின் பெருமைகளை அறிந்து அதை பாடுபவராக இருந்த போதிலும், கபீர்தாஸ் உருவ வழிபாட்டிலும், இறைவனின் பல்வேறு வடிவங்களிலும் நம்பிக்கையற்றவர். அவரைப் பொறுத்தமட்டிலும் இறைவன் 'நிற்குண' வடிவமானவன்.(Nirguna - attributeless). அவ்வாறு தன்னுள் இரண்டறக் கலந்திருக்கும் இறைவனைத் தன் காதலனாக உருவகப்படுத்தி அவர் பாடிய ஒரு பாடல்.

"ப்ரீத்தம் கோ பதியான் லிகூன் ஜோ கஹு ஹோய் விதேஸ்
தன்மே மன்மே நைன்மே வாகோ காஹே சந்தேஸ்"


இதன் பொருள் "என்னை விட்டு நீ பிரிந்திருந்தால் தலைவா என் உள்ளக்கருத்தை எடுத்துரைக்க உனக்கு மடல் வரைய இயலும், ஆயின் என்னுள் ஊனாய் உயிராய்க் கலந்துள்ளவனே உனக்கு என்ன மடல் நான் வரைய?"

54 comments:

  1. Kalakkareenga thala. Oru kavithai elutha neenga patta paatta nalla eluthi irukkenga.

    ReplyDelete
  2. //விளக்குமாத்துக்கு வலி எடுக்கச் செய்யற வார்த்தைங்களை எல்லாம் போட்டு தெகிரியமா எழுதறது,//

    //ஒரு ஜில்ஜில் நானூறையோ //

    இப்படியெல்லாம் தமாசு பண்ணிட்டு சீரியஸான இலக்கியம் பேசிட்டீங்கப்பு

    வாழ்க... வாழ்க...

    சரி, இதென்ன சின்னப்புள்ளத்தனமா நம்ம க்ளாஸ் எல்லாம் மிஸ் பண்ணிக்கிட்டு?

    (ஹி...ஹி... போட்டிக்கு ரெண்டு கதை எல்லாம் அனுப்பிச்சிருக்கோம். கைப்பு நம்ம பதிவு பக்கமே வரலையேன்னு ஒரு ரிமைண்டர் :-)))

    ReplyDelete
  3. //Kalakkareenga thala. Oru kavithai elutha neenga patta paatta nalla eluthi irukkenga//

    வாங்க அனுசுயா மேடம்,
    நீங்க தான் முதல் போணி. பாடுபட்டும் காதல் கவிதை இன்னும் கனவாத் தாங்க இருக்கு.
    :)

    ReplyDelete
  4. //இப்படியெல்லாம் தமாசு பண்ணிட்டு சீரியஸான இலக்கியம் பேசிட்டீங்கப்பு//

    அப்படியா? மிஸ்! மிஸ்! தெரியாம பண்ணிட்டேன் மிஸ், முட்டிக் கால் போடற பனிஷ்மெண்ட் குடுத்துடாதீங்க.
    :)

    //சரி, இதென்ன சின்னப்புள்ளத்தனமா நம்ம க்ளாஸ் எல்லாம் மிஸ் பண்ணிக்கிட்டு?//

    இன்னிக்கு லஞ்சுக்கப்புறம் உங்க கிளாஸுக்கு வந்துடறேன் மிஸ்.

    ReplyDelete
  5. Ayya Kaipulla Naan innum chinna pullathan. Eppa paaru madam, madamnu sollathenga ayya. :(

    ReplyDelete
  6. //Eppa paaru madam, madamnu sollathenga ayya. :(//

    எல்லாம் ஒரு ரெஸ்பெட்டுக்காவத் தானுங்க. இந்த தடவை மட்டும் பாவம் பாத்து வுட்டுடுங்க. அடுத்த தடவை கவனமா இருந்துக்கறேன்.
    :)

    ReplyDelete
  7. தல படிச்சு முடிக்கிரத்துக்குள்ள போதும் போதுனு ஆயிடுசிச்சு நீ எம்புட்டு கஸ்ட பட்டு எழுதுதிருப்ப கைவலிக்குதா தல

    ம் ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

    ReplyDelete
  8. இன்னிக்கு என்ன சங்கத்து ஆளுங்க எல்லாம் காதல் நினைப்பாவே இருக்காங்க. என் வலைப்பூவிற்கு விஜயம் செய்யவும்.

    ReplyDelete
  9. //இன்னிக்கு என்ன சங்கத்து ஆளுங்க எல்லாம் காதல் நினைப்பாவே இருக்காங்க.//

    Because Love has no season nor reason.
    :)

    //என் வலைப்பூவிற்கு விஜயம் செய்யவும்//
    தங்கள் சித்தம் என் பாக்கியம். ஆணையிடுங்கள்.

    ReplyDelete
  10. //தல படிச்சு முடிக்கிரத்துக்குள்ள போதும் போதுனு ஆயிடுசிச்சு நீ எம்புட்டு கஸ்ட பட்டு எழுதுதிருப்ப கைவலிக்குதா தல//

    வாய்யா மின்னலு...அனானியா ஆட்டத்தைத் தொடங்கினாலும் பாசக்காரனாத் தான்யா இருக்கே? கை வலிக்குது தான்...என்ன பண்ண? அதெல்லாம் பாத்தா பொழப்பை நடத்த முடியுமா?
    :)

    ReplyDelete
  11. கைப்பு மாதிரி 'வாலிப' வயசு உடன்பிறப்பு எழுதின காதல் கவிதையே.. இப்படி இருக்கே..

    கீதாக்கா, நீங்களுமா?!! உங்க வீட்டுப் பக்கம் வர்றதுக்கே பயம்மா இருக்கு... :)

    ReplyDelete
  12. இல்லாத காதலிக்காக தலைப்பை பார்த்தவுடன் என்னமோ ஏதோனு வந்தா இப்படி கவுத்துடீங்களே. முண்டாசு கவிஞனின் கவிதையை போட்டதால் நோ கமெண்ட்ஸ்.

    ReplyDelete
  13. கைப்புள்ள தலைப்ப பாத்தா "தல" ஒரே பீலிங்ஸ்ல இருக்கு போல தெரியுது:-)

    ReplyDelete
  14. //கீதாக்கா, நீங்களுமா?!! உங்க வீட்டுப் பக்கம் வர்றதுக்கே பயம்மா இருக்கு... :)//

    நீங்களுமாவா? என்னை அவங்களோட ஒப்பிடறீங்களா? அவங்க பெரிய கை, ஏதோ அடக்கி வாசிச்சிட்டிருக்காங்க. நம்ம லெவலுக்கு நாம எதோ வண்டி ஓட்டிட்டிருக்கோம்.

    ReplyDelete
  15. //இப்படி கவுத்துடீங்களே. முண்டாசு கவிஞனின் கவிதையை போட்டதால் நோ கமெண்ட்ஸ்.//

    நீ தான்யா கவுக்கறே! முண்டாசு கவிஞர் பாட்டைப் போட்டா கமெண்ட் வரும்னு நம்பி போட்டா, நோ கமெண்ட்ஸ்னு சொல்லறியே? உன்னை என்ன பண்ணாத் தகும்?
    :)

    ReplyDelete
  16. //கைப்புள்ள தலைப்ப பாத்தா "தல" ஒரே பீலிங்ஸ்ல இருக்கு போல தெரியுது:-)//

    பின்னறியேய்யா...ஒரு வருத்தப்படாத வாலிபனின் மனசை இன்னொரு வருத்தப்படாத வாலிபனாலத் தான் புரிஞ்சிக்க முடியும்
    :)

    ReplyDelete
  17. //நெசவாளரான கபீர்தாஸ் முறையான கல்வி இல்லாதவர், தானறிந்த ஞானக் கருத்துகளை இரண்டடிகளாக அவர் பாடுவதை, அவரது சீடர்கள் கேட்டு எழுதி வைத்துள்ளது தான் இன்று தோஹாக்களாக உள்ள இப்பாடல்கள்.//

    தல உன்னோட ஞான கருத்தை எல்லாம் நீ இப்பவே புக்கா போட்டுட்டா பின்னாடி வர்ர சந்ததியினர் அதை படிச்சி பயனடையலாம் முயற்ச்சி செய் தல !!!

    (அப்பாடா உசுப்பேத்தியாச்சி)

    ReplyDelete
  18. டேய் மோகன் மச்சி பேக் டூ பார்ம் போல இருக்கு....அடிச்சு ஆடுடா...

    ரொம்ப நாளைக்குப் பிறகு ஒரு பக்கா அக்மார்க் கைப்புள்ள காலிங் பதிவு.

    போட்டுத் தாக்குடா:)

    ஆனா அந்த தலைப்புத் தான் சத்திய்மா என்னாலே நம்பமுடியவில்லைலைலைலை.....

    ReplyDelete
  19. கைப்புள்ள, அனுபவம் வேணுங்கறது இல்லை கருத்துச் சொல்றதுக்கு. பரவாயில்லை. நம்ம தமிழ் நாட்டிலும் அன்பை வெளிப்படுத்துபவர்கள் இருக்கிறார்கள். உங்களுக்கு நிஜமாவே அனுபவம் இல்லை என்பதால் புரியவில்லை. கைப்புள்ளதானே!

    ReplyDelete
  20. //ஆனா அந்த தலைப்புத் தான் சத்திய்மா என்னாலே நம்பமுடியவில்லைலைலைலை.....//

    ஏண்டா செல்லம் நம்ப முடியலை?
    :)

    ReplyDelete
  21. //வர்ர சந்ததியினர் அதை படிச்சி பயனடையலாம் முயற்ச்சி செய் தல !!!//

    மின்னலு! ஞானக் கருத்தைச் சொல்றதுக்கெல்லாம் கிட்னி நெறைய வேணும்யா. அது வளர்ந்ததுக்கு அப்புறமா புக் போடலாம்.

    ReplyDelete
  22. //உங்களுக்கு நிஜமாவே அனுபவம் இல்லை என்பதால் புரியவில்லை. கைப்புள்ளதானே!//

    ஹி...ஹி. ஆனா மேடம்! உங்க பதிவுல போட்ட பின்னூட்டத்துக்குப் பதிலை நீங்க கஷ்டப் பட்டு Tata Indicom தொல்லைங்களுக்கு நடுவுல இங்கே வந்து போடணும்னு அவசியமில்லை. கமெண்ட் போட்டா அதுக்கு பதிலை எதிர்பார்த்து திரும்ப போறது நம்ம பழக்கம் தான். உங்களுக்கு வேற எதுக்கு வீண் சிரமம்?
    :)

    ReplyDelete
  23. மழைல நனைய முடியுமான்னு நான் கேட்ட கேள்விக்கு பதிலே இதில இல்லை. அந்த கருமம் உனக்கும் வந்துருச்சு போல. தேவா, கவுனி....என்னமோ நடக்குது.. அப்புறம் சொல்ல மறந்துட்டேன் கவிதை ஜூப்பர்.

    ReplyDelete
  24. இன்னிக்கு தாங்க உங்க வலைப்பூ வாசிக்கிறேன். வேடிக்கையா எழுதறீங்க. கடைசில காதல் கவித வந்துச்சா வரலியான்னு சொல்லலீங்களே.

    சரி, உங்க கேள்விக்கு: அது வரிசந்தம் இல்ல, வரிசங்கம். trumpet மாதிரி அந்தக் காலத்துல ஒரு பெரிய சங்கு மாதிரி இருக்குமே, அதான். மங்கல விழாக்களுக்கு, ஏன் பொங்கல் வைக்கும்போது கூட சங்கு ஊதுவாங்களே, அது இந்தக் காலத்துக் கடல் சங்கு. வரிசங்கம் -- அந்தக் காலத்து trumpet-னு நினைக்கிறேன்.

    மத்தளம் கொட்டவ ரிசங்கம் நின்றூத,
    முத்துடைத் தாம நிரைதாழ்ந்த பந்தற்கீழ்
    மைத்துனன் நம்பி மதுசூதன் வந்து,என்னைக்
    கைத்தலம் பற்றக் கனாக்கண்டேன் தோழீநான்

    மணமேடைக் காட்சியை நினைச்சுப் பாருங்க. அதான் இந்தப் பாடல்.

    ReplyDelete
  25. //மழைல நனைய முடியுமான்னு நான் கேட்ட கேள்விக்கு பதிலே இதில இல்லை.//
    மழைல நனைஞ்சா ஜல்ப்பு வரும், ஜுரம் வரும்...லவ்ஸு வரும்ங்கிறதை எல்லாம் ஒத்துக்கவே முடியாது. மழை பெய்ஞ்சுச்சுன்னா ரெயின் கோட் போட்டுக்கிட்டு ஒரு எக்ஸ்ட்ரா பாதுகாப்புக்கு குடையையும் கையில வச்சிக்கிட்டு, மழை வுடற வரைக்கும் எதாவது மண்டபத்துக்கடியில ஒதுங்குற பார்ட்டிங்க நாங்க...நீங்க மின்னலே மாதவனுக்குச் சொல்ல வேண்டியதெல்லாம் இங்கே சொல்றீங்க. :)

    //அந்த கருமம் உனக்கும் வந்துருச்சு போல. தேவா, கவுனி....என்னமோ நடக்குது.. //
    சாமீ...இங்கே சுத்துமுத்தும் பதினெட்டு பட்டியிலயும் நெட்டையும், மொட்டையும், குட்டையும், சொட்டையுமா எங்க பாத்தாலும் பயலுங்க தான்...இதுல நீங்க சொல்ற கருமம் எல்லாம் எங்கேருந்து வர்றது?

    //கவிதை ஜூப்பர்//
    உங்க உதவியினால எழுதுனது பாருங்க ஜூப்பராத் தேன் இருக்கும். ஆனா வெவசாயி...உங்க துரோகத்தை மட்டும் மறக்க மாட்டேன்யா...எங்கே இவனுக்குக் காதல் கவிதை எழுதற வித்தையெல்லாம் சொல்லிக் குடுத்தா ஊருக்குள்ர பெரிய மனுசனாயிடுவான்னு பொறாமையில நீரு எனக்கு போவாத ஊருக்கு வழியைக் காட்டுனதை மறக்க மாட்டேன்யா...மறக்க மாட்டேன்.

    ReplyDelete
  26. தல பொரட்டி பொரட்டி எடுத்திட்டீங்க....சூப்பரப்பூ...இனிமே காதல் கவிதை (இனிமே எங்க...ஹூம்ம்ம்) வேணும்னா உங்ககிட்ட நேரா வந்திர்றேன்...

    கொண்டாடா கப்ப....கைப்புள்ளைக்குத் தான் கப்பு....

    ReplyDelete
  27. //இன்னிக்கு தாங்க உங்க வலைப்பூ வாசிக்கிறேன். வேடிக்கையா எழுதறீங்க.//
    வாங்க சேதுக்கரசி மேடம்! உங்க பேரைப் பாத்ததும் எங்க ஸ்கூல் தமிழ் மிஸ் ஞாபகம் வந்துடுச்சு. உங்க பேரே தான்...பின் பாதியில் ஒரு சிறு மாற்றம். முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி.

    //கடைசில காதல் கவித வந்துச்சா வரலியான்னு சொல்லலீங்களே.//
    அது மட்டும் ரகசியம் :)

    //அது வரிசந்தம் இல்ல, வரிசங்கம். trumpet மாதிரி அந்தக் காலத்துல ஒரு பெரிய சங்கு மாதிரி இருக்குமே, அதான். மங்கல விழாக்களுக்கு, ஏன் பொங்கல் வைக்கும்போது கூட சங்கு ஊதுவாங்களே, அது இந்தக் காலத்துக் கடல் சங்கு. வரிசங்கம் -- அந்தக் காலத்து trumpet-னு நினைக்கிறேன்.//

    வரிசங்கம் தான் சரி. பதிவில் பாடலில் கூட வரிசங்கம் என்று தான் இருக்கிறது. திருத்தியதற்கும், சொல்லின் பொருள் புரிவித்ததற்கும் மிக்க நன்றி. உங்க கிட்ட ஒரு கேள்வி - நீங்களும் தமிழ் டீச்சரா?

    ReplyDelete
  28. //கொண்டாடா கப்ப....கைப்புள்ளைக்குத் தான் கப்பு....//
    Here he is...the greatest...the grandest...magnificent...SEXIEST...Ladies and Gentlemen...please welcome the undisputed King of Heavyweight Comedy....the great....வேதாளம்...சே...விக்ரமாதித்யா...
    டூபு.....க்கு!
    (ஹெவி வெயிட் பாக்சிங் பாத்திருந்தாத் தான் மேலே உள்ளது புரியும்)

    நீங்க என்னை தலனு கூப்பிடறதா...வேணாம் டுபுக்கு சார் வேணாம். என்னை சாமி குத்தத்துக்கு ஆள் ஆக்கிடாதீங்க. உங்களை மாதிரி ஹெவிவெயிட்டுங்களுக்கு முன்னாடி நான் ஒரு சின்ன கொசு. எதோ அப்பிடி இப்பிடி ஒரு ஓரமா பறந்துட்டு போறேன்...கப்பெல்லாம் குடுத்து நம்மளுக்கு பேகான் ஸ்ப்ரே அடிச்சிராதீங்க.

    "ஜெமினி' கணேசரே? முன்ன கேட்ட கேள்விக்கு நீங்க பதிலே சொல்லல்லை? "ஜெமினி நட்சத்திரம்" முடிய ஒரு நாள் தான் இருக்கு. இப்பவாச்சும் சொல்லுங்க
    :)

    ReplyDelete
  29. அட குளிரடிக்கிறீயளே சாமி...நானும் சின்னப்புள்ளதேன்....இப்படியெல்லாம் சொல்லி நம்மள கவுத்தாதீங்கப்பூ...இருந்தாலும் இம்பூட்டு வார்த்தை சொல்லிருக்கீயக...ரொம்ப நன்றி...

    //நன்றி டுபுக்கு சார். நீங்களும் "ஜெமினி கணேசர்"னு தெரியும். செப்பண்டி... மீரு புட்டின ரோஜு ஏ ரோஜு? //

    - அடி ஆத்தீ..நீங்க எதோ ரோஜா செடியப் பத்தி கேக்கறீங்கன்னு நினைச்சேன். இப்போத்தான் ஒரு ஜெமினி டீ.விய புடிச்சு மொழிபெயர்த்தேன். ஜெமினி நட்சத்திரம் ஆரம்பிச்ச நாலாவது நாள் தான் நான் புட்டின ரோஜு.

    ReplyDelete
  30. மேடமா??? என் பேரைப் பார்த்ததும் உங்க ஸ்கூல் தமிழ் மிஸ் ஞாபகம் வந்தா அதுக்கு நான் என்ன பண்றது? நோ மேடம் ப்ளீஸ்.

    ReplyDelete
  31. //Dubukku said...
    ...நானும் சின்னப்புள்ளதேன்....//

    //சேதுக்கரசி said...
    மேடமா??? ....நோ மேடம் ப்ளீஸ்//

    சங்கம் விரிவடைஞ்சுகிட்டே இருக்கு. கைப்புள்ள இப்படி சங்கத்துக்காக உழைக்கறத பாத்தா, பேச்சே வரல்லப்பா... (சிவாஜி கணேசன் ஸ்டைல்ல படிக்கவும்) அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் (இது தல ஸ்டைல்ல)

    :-)

    ReplyDelete
  32. என்ன அப்பு, நம்ம வீட்டு பக்கம் ஆளையே காணோம். உங்க பெயர சொல்லனு மனக்குறையா..........இருந்தா சொல்லு அப்பு, தனி பதிவா போட்டு விடலாம்

    ReplyDelete
  33. //நானும் சின்னப்புள்ளதேன்//
    அப்படியே சைக்கிள் கேப்ல ஆட்டோ ஓட்டிட்டீங்களே! இது தாங்க ஹெவிவெயிட்டுக்கும் கொசுவுக்கும் உள்ள வித்தியாசாம். கத்துக்கறேன்...பழகிக்கறேன்.
    "ஒரு நாள் நானும் டுபுக்கைப் போல ஹெவிவெயிட் ஆகிடுவேன்
    டுபுக்கைப் போலே சைக்கிள் கேப்பில் ஆட்டோ ஓட்டிடுவேன்"
    :)

    // ஜெமினி நட்சத்திரம் ஆரம்பிச்ச நாலாவது நாள் தான் நான் புட்டின ரோஜு. //
    அப்படியா belated புட்டின ரோஜூ சுபாகான்க்ஷகளூ!

    ReplyDelete
  34. //நோ மேடம் ப்ளீஸ். //
    வாங்க சேதுக்கரசி மேட...தப்பு...தப்பு...வாங்க சேதுக்கரசி(வெரல் நுனி வரைக்கும் வந்துருச்சுங்க...கஷ்டப்பட்டு நிறுத்துனேன்),
    ஐயோ! உங்க மனசையும் நான் புண்படுத்திட்டேனா? மேடம்னு கூப்பிடுறது ஒரு மரியாதைக்காகத் தாங்க. பேரைச் சொல்லி கூப்பிடுறதுக்கு நம்ம அச்சம், மடம், நாணம்... அப்புறம்... அப்புறம்... இந்த பயிர்ப்பு இதெல்லாம் எடம் குடுக்க மாட்டேங்குது. வேற ஒன்னும் இல்லை.

    முதல் வருகையிலேயே உங்களை டென்சன்ஸ் ஆப் இந்தியாவுக்கு உள்ளாக்கிட்டேன். தப்பா எடுத்துக்காதீங்க.
    :)

    ReplyDelete
  35. //சங்கம் விரிவடைஞ்சுகிட்டே இருக்கு. //

    ஒற்றர்படைத் தலைவர் சொன்னா அதுல எதாவது ஒரு உண்மை இருக்கும். அப்போ டுபுக்கு சார் கிட்டயும், சேதுக்கரசி கிட்டயும் சங்கத்து மெம்பர்ஷிப் ஃபார்மை நெரப்பி வாங்கிக்கச் சொல்றீங்க?
    :)

    ReplyDelete
  36. ////என்ன அப்பு, நம்ம வீட்டு பக்கம் ஆளையே காணோம்.//
    ஒத வாங்க கூப்பிடுறவங்களுக்கு மத்தியில வீட்டுக்கு வர வெத்தலை பாக்கு வெச்சு அழைக்கிறியேப்பா...இன்னிக்கு தலையை அடமானம் வெச்சாச்சும் உம் வூட்டு பக்கம் வந்துர்றேன்.

    //உங்க பெயர சொல்லனு மனக்குறையா..........இருந்தா சொல்லு அப்பு, தனி பதிவா போட்டு விடலாம்//
    அப்புறம் எதாவது கேட்டுப் புடுவேன்...நம்ம பேரு தான் பல மேட்டர்லயும் சிக்கி சந்தி சிரிக்குதே...இதுல என் பேரைச் சொல்லலைன்னு எனக்கு என்னய்யா மனவருத்தம் இருக்கப் போவுது?

    போய்யா ஐ.நா சபைக்கு எதனா ஆக வேண்டிய வேலை இருந்தா செஞ்சுக் குடுத்து நல்ல பேர் எடு...இப்பிடி வேண்டாததை எல்லாம் யோசிச்சு ஒடம்பைக் கெடுத்துக்காதே.
    :)

    ReplyDelete
  37. அய்யோ என்னது.. சங்கம்கிறீங்க, உறுப்பினர் விண்ணப்பம்கிறீங்க.. இப்பத்தான் நெசமாவே டென்சனாக்குறீங்க.. எனக்கு வலைப்பூ அலர்ஜிங்க.. நான் முந்தியெல்லாம் வலைப்பூ பக்கமே தலைவைக்கமாட்டேன், இப்பத்தான் கொஞ்சூண்டு தமிழ்மணாம் பக்கம் அப்பப்ப வர ஆரம்பிச்சிருக்கேன், அதுக்குள்ள இப்புடி பயமுறுத்துறீங்களே?

    ReplyDelete
  38. //இப்பத்தான் கொஞ்சூண்டு தமிழ்மணாம் பக்கம் அப்பப்ப வர ஆரம்பிச்சிருக்கேன், அதுக்குள்ள இப்புடி பயமுறுத்துறீங்களே?//

    வாங்க சேதுக்கரசி,
    பயப்படாதீங்க. வலைப்பூ அலர்ஜியைப் போக்குவதும் எங்கள் சங்கத்தின் செயல்பாடுகளில் ஒன்று. உங்கள் டென்சனையும் அலர்ஜியையும் போக்க எங்கள் சங்கத்து மகளிர் அணியினர் ஆவன செய்வார்கள். ஒரு தரம் சங்கத்துப் பக்கம் போய் தான் பாருங்களேன்.
    வருத்தப்படாத வாலிபர்கள் சங்கம்

    ReplyDelete
  39. தல.. என்னென்னவோ ஆட்டம் ஆடி கலக்கின,,.. இப்ப இந்த ஆறு ஆட்டத்தையும் ஒரு கை பாரு தல..
    இங்கன பாரு. நான் எவ்வளோ பாசக்காரண்னு தெரியும்.,.
    http://manathinoosai.blogspot.com/2006/06/6.html

    ReplyDelete
  40. தல, போன தடவை வீட்டிக்கு வந்த போது கண்ணுல சுனாமி கொப்பளிக்குதுனு சொல்லி என்னை ரொம்ப பீல் பண்ண வைச்சுட. அந்த பீலிங்க் தாங்காம அடுத்த பதிவ போட்டுடேன். அதையும் பாத்துட்டு இந்த தடவை கொஞ்சம் பெரிதாக பீல் பண்ணீட்டு போ...

    ReplyDelete
  41. hahaa, kalasarareenga kaipulla..
    indoorla irunthumaa oru kuttiya pickup panna mudiyala..? :)

    ReplyDelete
  42. தல காதல் கவிதை எழுதறேன்னு பில்ட் அப் குடுத்திட்டு அகநானூறு புறநானூறு ரேஞ்க்கு எழுதிருக்களேப்பு....இத எழுதி முடிக்கறதுக்குள்ள கை மூளை எல்லாம் ரனகளம் ஆகியிருக்குமே...

    ReplyDelete
  43. யோவ் வாயத் தொறக்கவுடாம டச் பண்ணியே தாக்குறீங்களேயா..இதெல்லாம் சங்கத்து டெக்னிக்கா?? சரி அப்பு நான் இனிமே வாயே தொறக்கல... :))

    ReplyDelete
  44. //இங்கன பாரு. நான் எவ்வளோ பாசக்காரண்னு தெரியும்.,.
    http://manathinoosai.blogspot.com/2006/06/6.html//

    ஹமீது!
    என்னோட ஆறு பதிவையும் போட்டுட்டன். இங்கே பாருங்க.
    http://kaipullai.blogspot.com/2006/07/blog-post.html

    ReplyDelete
  45. //அதையும் பாத்துட்டு இந்த தடவை கொஞ்சம் பெரிதாக பீல் பண்ணீட்டு போ...//
    ஃபீல் பண்ணியாச்சேய்
    :)

    ReplyDelete
  46. //hahaa, kalasarareenga kaipulla..
    indoorla irunthumaa oru kuttiya pickup panna mudiyala..? :)//

    முடியலை...எனக்குத் தெரியலை.
    :)

    ReplyDelete
  47. //தல காதல் கவிதை எழுதறேன்னு பில்ட் அப் குடுத்திட்டு அகநானூறு புறநானூறு ரேஞ்க்கு எழுதிருக்களேப்பு....//
    காப்பியடிச்சது போட்டதுக்கே இவ்ளோ ஃபீலிங்ஸா? உண்மையிலேயே நான் எழுதிட்டா உங்க பாராட்டுல எனக்கு காலே தரையில நிக்காது போலிருக்கே?

    //இத எழுதி முடிக்கறதுக்குள்ள கை மூளை எல்லாம் ரனகளம் ஆகியிருக்குமே...//
    மேல சொன்னதுல நம்ம கிட்ட இருக்கறதுங்க மட்டும் ரணகளம் ஆனது என்னவோ உண்மை தான்.
    :)

    ReplyDelete
  48. //சரி அப்பு நான் இனிமே வாயே தொறக்கல... :))//

    நீங்க அப்பிடியெல்லாம் சொல்லப் பிடாது
    :)

    ReplyDelete
  49. Neenga sonna aaru vizhayamum attagasama irrunthathu....

    "ஒரு வாட்டி நம்ம கூட்டாளி காட்டான் 'செல்வான் கான்' யாஹூ மெசஞ்சர்ல ஆன்லைன் வந்தப்போ"

    Athu ennanga perru Selvaankhan konjam vithiyasama irrukku.....

    Kaipullai, kalavalli sagavasam koodathunga......

    Ghilli

    ReplyDelete
  50. //Athu ennanga perru Selvaankhan konjam vithiyasama irrukku.....//

    வாங்க கில்லி!
    இதுக்குப் பதில் "ஆறு போட கூப்புட்டாக"ப் பதிவுல சொல்லறேன். ரைட்டா?
    :)

    //Kaipullai, kalavalli sagavasam koodathunga......//
    அது என்னங்க கலாவள்ளி சகவாசம்? ஒன்னும் புரியலியே?

    ReplyDelete
  51. //கைப்ஸ், 50//

    அஞ்சுக்கும் பத்துக்கும் ஒரு காலத்துல லோல் பட்டுக்கிட்டு கெடந்தேன். இப்ப அம்பது போடறது எல்லாம் நம்ம பதிவைப் படிக்கிறவங்களோட ஆதரவு தான்.

    இந்த தபா அம்பது அடிச்சு குடுத்த தங்காச்சி பொன்ஸுக்கும் டான்க்ஸு.
    :)

    ReplyDelete
  52. எப்படீங்க இவ்வளவு பெரிய பதிவு டைப் பண்றீங்க, அதுவும் செய்யுள் வரி மாதிரி கவிதை வரிகள்........அசந்துட்டேன்

    ReplyDelete
  53. //எப்படீங்க இவ்வளவு பெரிய பதிவு டைப் பண்றீங்க, அதுவும் செய்யுள் வரி மாதிரி கவிதை வரிகள்........அசந்துட்டேன்//

    ஹி...ஹி...அதுல பாதி கண்ட்ரோல் சி கண்ட்ரோல் வி தாங்க. மூளையைக் கசக்கி எழுதுனது என்னமோ கொஞ்சம் தான். ஆனா பதிவு என்னமோ பெருசு தான்...ஒத்துக்கறேன். தங்கள் வருகைக்கு நன்றி திவ்யா.

    ReplyDelete