Tuesday, January 17, 2006

சொல்றோம்ல : பாண்டிச்சேரி

பாண்டிச்சேரி என்ற ஊரின் பெயர் ஆங்கில/ஃபிரெஞ்சு எழுத்துப் பிழையால் வந்தது என்றால் நம்ப முடிகிறதா? பாண்டிச்சேரி என்று ஒரு ஊரே உண்மையில் கிடையாது. ஆரம்ப காலம் தொட்டே அதற்கு 'புதுச்சேரி' என்று தான் பெயர். புதுச்சேரியை அக்காலத்தில் ஆண்டு கொண்டிருந்த ஃபிரெஞ்சு நாட்டவர் புதுச்சேரி என்பதனை 'Poudichéry' என்று எழுதினர். 'Poudichéry' என்ற சொல்லில் உள்ள 'u' வை எந்த புண்ணியவானோ 'n' என்று படிக்க அது 'Pondichéry' ஆனது. நாளடைவில் எழுதும் போதும் படிக்கும் போதும் 'Pondichéry' என்பதனை உபயோகப்படுத்தத் துவங்க இல்லாத ஒரு ஊரான 'பாண்டிச்சேரி' உருவானது. நம்மவர்கள் அதையும் சுருக்கி 'பாண்டி' ஆக்கிவிட்டார்கள். சென்னையிலிருந்து பாண்டிச்சேரி(மன்னிக்கவும்...புதுச்சேரி) செல்லும் அனைத்து பேருந்துகளிலும் 'பாண்டி' என்றே எழுதக் கண்டிருக்கிறேன். புதுச்சேரி அரசு பேருந்துகளில் மட்டும் 'என் பேர் சப்பாணி இல்லை கோபாலகிருஷ்ணன்' என்று சொல்லும் விதமாக புதுச்சேரி என்று எழுதியிருக்கும். ஆனாலும் மெட்ராஸ் சென்னை என்றும் பாம்பே மும்பை என்றும் ஏற்றுக் கொள்ளப் பட்ட அளவுக்கு 'புதுச்சேரி' வெற்றி பெறவில்லை என்றே தோன்றுகிறது. எங்கோ எப்போதோ படித்த பெயர் காரணத்தை இன்று விகிபீடியாவிலும் ஊர்ஜிதப் படுத்திக் கொண்டேன்.

கீழ்கணட ஊர்களின் பெயர்களைப் பாருங்கள். ஆங்கிலேயர்கள் நம்மூர் பெயர்களை இவ்வாறு எழுதினார்கள்/படித்தார்கள்.
Wandiwash- வந்தவாசி
Tinnevelly- திருநெல்வேலி
Pallamcottah- பாளையங்கோட்டை
Tranquebar- தரங்கம்பாடி
Punjalamcoorchy - பாஞ்சாலங்குறிச்சி

இப்பெயர்களை எல்லாம் ஆங்கில மொழிபெயர்ப்பாக அப்படியே தமிழில் வாசித்தால்?....வண்டிவாஷும், பஞ்சாலம்கூர்ச்சியும் நல்லாவா இருக்கு? ஏதோ நம்ம புண்ணியம் 'பாண்டிச்சேரி'யோடு தப்பித்தோம்.

1 comment:

  1. ஆமாம், சென்றவிடமெல்லாம் தங்கள் அடையாளங்களை விட்டுச் சென்றுள்ளார்கள் ஆங்கிலேயர்கள்.

    ReplyDelete