எனக்கு இன்னும் நல்லா ஞாபகம் இருக்கு. அப்பல்லாம் ஸ்கூல் முடிஞ்சதும் மே மாசம் ஒவ்வொரு வருஷமும் தென்னாற்காடுல இருக்கற கிராமத்துக்கு எங்க ஆயா(அம்மாவோட அம்மா) வீட்டுக்கு போறது வழக்கம். அங்க ஆயா அவங்க மாமனார் கட்டின ஸ்கூல்ல நிர்வாகியாவும் டீச்சராவும் இருந்தாங்க. டீச்சர் பேரன்கிறதனாலயும் மெட்ராஸ்காரன்கிற்தனாலயும் எப்பவும் நமக்கு தனி மரியாதை தான். ஆயாவுக்கு அவங்க மாமனார் ஸ்கூல நடத்தறதுல ஒரு தனி ஈடுபாடு. அதனால அந்த ஊர்ல தனியாவே இருந்தாங்க. துணையா மணினு ஒரு நாய் இருந்துச்சு.
ஊருக்கு போறதுனா எனக்கு எப்பவுமே கும்மாளம் தான். அதுக்கு முதல் காரணம் புக்ஸ ஒன்னரை மாசத்துக்குத் தொட வேணாம் . மனசுக்கு பிடிச்சதை இஷ்டத்துக்கு செய்யலாம். தங்கர் பச்சான் படத்துல வர்ற பாஷையைப் பேசற ஊரு...அதை கேக்கறதுக்குனே பசங்க கிட்ட பேச்சு கொடுக்கறது. துடைப்பக்குச்சியில நுனாக்காயை சொருகி வானத்துல அடிக்கறது...அது விசுக்குனு ஒரு சத்தத்தோட ராக்கெட் வேகத்துல பறந்து போகும்...யாரோட காய் ரொம்ப தூரம் போகுமுனு போட்டியே நடக்கும். சாயந்திரம் ஆத்தக் கடந்து குடிகாட்டுல பலூன் வாங்கறது, வீட்டுக்கு திரும்பும் போது கரும்பு காட்டு நரிக் கதை கேக்கறது, ராத்திரி பசங்களோட சேர்ந்து தவளை அடிக்கறது இப்படினு மெட்ராஸ்ல கிடைக்காத சின்ன சின்ன சந்தோஷம் நிறைய.
ஆயா தனியா இருந்ததுனால அவங்களுக்கு சின்ன சின்ன உதவியெல்லாம் அவங்க ஸ்கூல் பசங்க செய்வாங்க. சுப்பிரமணியும் அவங்களோட ஸ்டூடண்ட் தான். அமைதியான அடக்கமான பையன்னு ஆயா அடிக்கடி சொல்லுவாங்க. செம்பட்டை தலையும் கிழிஞ்ச டவுசருமா வெடவெடனு இருப்பான். அவனோட வலது கை கட்டைவிரலில ஒரு விரல் எக்ஸ்ட்ரா இருக்கும். அத முதல் தடவை பார்த்ததுலேருந்தே எனக்கு ஒரு மாதிரியா இருந்துச்சு. "ஏம்மா அந்த பையன் கையில மட்டும் ஆறு விரல் இருக்கு. எனக்கு பார்க்கவே புடிக்கலை" அப்படினு சொன்னா "உஷ்! அந்த மாதிரியெல்லாம் பேசக் கூடாது" அப்படினு அதட்டுவாங்க. தோட்டத்துல கீரை பறிச்சு கொடுக்கறது, நுங்கு சீவி தர்றது இப்படினு சின்ன சின்ன வேலை எல்லாம் செஞ்சு தருவான்.
"சுப்பிரமணி! மெட்ராஸிலேருந்து பாப்பாவும் பேரப் பிள்ளைகளும் வந்திருக்காங்க! அப்பா கிட்ட சொல்லி இளநீ சீவி தர சொல்லறியா?"னு ஆயா கேட்டா ரெண்டு கையையும் கட்டிக்கிட்டு "சரிங்க டீச்சர்"னு சொல்லி விறுவிறுனு ஓடி அவனே இளநியையும் கொண்டாந்துடுவான். அப்பல்லாம் ஆயா இந்த மாதிரி உதவி செய்யற பசங்களுக்கு பொட்டுக்கடலை ஒரு கைப்பிடி அள்ளிக் கொடுப்பாங்க. சுப்பிரமணிக்கு பொட்டுக்கடலை கொடுத்தா மட்டும் எனக்கு கோபம் கோபமா வரும். அதுக்கு காரணம் அவனோட அந்த ஆறாவது விரல். இத்தனைக்கும் அவனுக்கும் எனக்கும் எந்த பிரச்சனையோ சண்டையோ இல்லை. ஆறாவது விரல் இருந்ததுனால எனக்கு அவனைப் பிடிக்கலை. அவன் மேல வெறுப்பு ஒவ்வொரு நாளும் கூடுச்சே தவிர குறையலை.
கிராமத்து பம்புசெட்ல இறங்கி குளிக்கணும்னு எனக்கு ரொம்ப நாள் ஆசை. ஆனா சின்னப் பையன்கிறதனால ஆயா எப்பவும் என்னை தனியா விடமாட்டாங்க. ஒரு நாள் யார்கிட்டயும் சொல்லிக்காம பம்பு செட் தொட்டியிலே குளிக்கப் போனேன். அங்க சுப்பிரமணி குளிச்சுட்டு இருந்தான். அவனைப் பார்த்ததும் கோவம் வந்தாலும் நான் எதுவும் பேசாம தொட்டியில இறங்கப் போனேன். சுப்பிரமணி என்னைப் பார்த்து "ராஜா! தண்ணியில இறங்காதே! அங்கே பாசி பிடிச்சிருக்கு. வழுக்கி விழுந்துடுவே!" அப்படினு சொன்னான். "டேய்! உன் வேலையைப் பாரு! எனக்கு எல்லாம் தெரியும்" அப்படினு அவனப் பார்த்து கத்தினேன். எனக்கு பிடிக்காத ஒருத்தன் எனக்கே புத்தி சொல்லறதா? "வேணாம் ராஜா போகாத!"னு திரும்பவும் சொன்னான். எனக்கு கோபம் பொத்துக்கிட்டு வந்துச்சு. "சீ!வாயை மூடு" அப்படினு கத்திட்டு நான் தொட்டி பக்கம் போனேன்.
சுப்பிரமணி உடனே"டீச்சர்! ராஜா தொட்டியில எறங்கப் போறான்"னு கத்துனான். "டேய்! உனக்கு என்னடா நான் என்ன பண்ணா?"அப்படினுட்டு அவன் பக்கம் வந்து அவன் தலைமுடியைப் பிடிச்சு இழுத்து கும் கும்முனு அவன் வெறும் முதுகுல என் கைமுட்டியால குத்தினேன். அவ்வளவு வெறி எங்கிருந்து வந்துச்சுனு தெரியலை. அவன் என்னை விட பெரிய பையனாயிருந்தாலும் டீச்சர் பேரன்றதுனால என்னை ஒண்ணும் செய்யாம அங்கிருந்து அழுதுகிட்டே போயிட்டான். அப்போ என் வெறி அடங்குனாலும் உடனே எனக்கு பயம் தொத்திக்கிச்சு. வீட்டுக்கு போனதும் நல்ல பூசையிருக்குன்னு. இதை நினைச்சுக்கிட்டே நான் மெதுவா வீட்டுக்குப் போனேன். ஆனா நான் பயந்த மாதிரி எதுவும் நடக்கலை. சுப்பிரமணி இந்த விஷயமா யாருகிட்டேயும் எதுவும் சொல்லலை. எதனால அப்படி ஒரு அரக்க குணம் மனசுல தோணுச்சுனு இப்போ யோசிச்சு பார்த்தா அதுக்கு பதிலே கிடைக்க மாட்டேங்குது.
அதுக்கப்புறம் கொஞ்ச வருஷம் சுப்பிரமணியைப் பாக்கற வாய்ப்பே கிடைக்கலை. நான் ஊருக்குப் போன போதும் சுப்பிரமணி ஆயா வீட்டுக்கு வரலை. அவன் ஏழாவதோட படிப்பை நிறுத்திட்டு அவங்க அப்பாவோட வயல் வேலை செய்யறதா கேள்வி பட்டேன். எப்பவாச்சும் ஆறு விரல் இருந்ததுக்காக ஒருத்தன் மேல இவ்வளவு வெறித்தனமா நடந்துக்கிட்டோமேனு நினைச்சா கொஞ்சம் கஷ்டமாயிருக்கும். ஒரு நாள் சுப்பிரமணி திடீர்னு மெட்ராஸ்ல எங்க வீட்டுல வந்து நிக்கறான். பார்த்தா கூட ஆயாவும் இருக்காங்க...அவங்க கீழ் தாடையிலே கட்டு போட்டிருக்கு. எங்களுக்கெல்லாம் ஒரே அதிர்ச்சி...என்னாச்சோ? ஏதாச்சோனு. "நேத்து ஸ்கூலுக்கு கிளம்பும் போது, நிலைப்படில தடுக்கி விழுந்துட்டேன்மா! தாடையிலே நல்ல அடி. சுப்பிரமணியும் அவங்க அப்பாவும் தான் என்னைக் கூடவே இருந்து பார்த்துக்கிட்டாங்க. தையல் போட்டிருக்கு" என ஆயா சொல்லிக் கொண்டிருக்கும் போதே அவங்களுக்கு கண் கலங்கிடுச்சு. அதை பார்த்த அம்மாவும் அழ ஆரம்பிச்சிட்டாங்க.
சுப்பிரமணி செஞ்ச உதவியோட முழு அளவு புரியலைன்னாலும் செல்போனும், ஏன் வீட்டில போனே இல்லாத அந்த நேரத்தில அவன் இல்லாட்டி ஆயா ரொம்ப கஷ்டப் பட்டிருப்பாங்கனு மட்டும் புரிஞ்சது. "தாங்க்ஸ்" என்று சொல்லி அவன் உதவியை அப்போதும் கொச்சைப் படுத்தினேன். அலட்டிக் கொள்ளாமல் மெலிதாக ஒரு புன்னகை பூத்தான். கொஞ்ச நேரம் இருந்துவிட்டு சுப்பிரமணி ஊருக்குக் கிளம்பத் தொடங்கினான். "போயிட்டு வரேங்க டீச்சர்! போயிட்டு வரேங்க அக்கா!" என்று கைகூப்பினான். கூப்பின கைகளிலேருந்து கோபுரம் வச்சது போல எட்டிப் பார்த்துக் கொண்டிருச்சு அந்த 'ஆறாவது விரல்'.
நன்றி சோமசுந்தரம்,
ReplyDeleteஅடிக்கடி வாங்க
தல இதை ஏற்கனவே படிச்சிட்டேன்.
ReplyDeleteசில காரணங்களால நல்ல குணமிருந்தும் சுத்தமா பிடிக்காதது எல்லாருக்கும் உள்ளதுதான். அது பக்குவமடையாத வயசு! ஆனால் இதை நீங்க பின்னாடி நினைச்சு வருத்தப்பட்டிங்களோ அப்பவே சரியாயிடுச்சி எல்லாம்.
இது மாதிரி அழகான நிகழ்ச்சிகள் அடிக்கடி எழுதுங்க கைப்ஸ்.