தபால் தலை சேகரித்தல்(Philately), நாணயங்கள் சேகரித்தல்(Numismatics) - இவ்விரண்டு பொழுதுபோக்குகளுக்கு அடுத்த படியாக உலகளவில் மூன்றாவது அதிகப் பிரபலமான பொழுதுபோக்கு தான் இந்த Deltiology. சரி Deltiology என்றால் என்ன? தபால் அட்டை சேகரிக்கும் பொழுதுபோக்கைத் தான்
Deltiology என்கிறார்கள்.
தபால் அட்டை என்றதும், முன்னொரு காலத்தில் 25 பைசாவுக்குக் கிடைத்த புலி முத்திரை அச்சிடப்பட்ட "நான் நலம் நீ நலமா" என்று நாலு வரி ஆத்திர அவசரத்துக்கு எழுதிப் போடும் தபால் அட்டையையோ, தூர்தர்ஷனில் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்த சூப்பர் ஹிட் முக்காப்லாவில் அவர்கள் கொடுப்பதாகச் சொல்லும் அயர்ன் பாக்ஸையோ, டிவி பொட்டியையோ, வாஷிங் மெஷினையோ, நம்பி பதில் எழுதிப் போட்ட இரண்டு ரூபாய் மதிப்பு கொண்ட போட்டி தபால் அட்டையையோ(Competition Postcard) நினைத்துக் கொள்ளாதீர்கள். நான் சொல்வது படத் தபால் அட்டைகளைப் பற்றி(Picture Postcards). இவ்வகை தபால் அட்டைகளை ஹிகின்பாத்தம்ஸ், ஒடிசி, லேண்ட்மார்க் போன்ற பெரிய புகழ்பெற்ற புத்தகக் கடைகளில் நீங்கள் கண்டிருக்கலாம். நானும் இத்தபால் அட்டைகளை(Picture Postcards) புத்தகக் கடைகளில் சிறுவயதில் கண்டிருந்தாலும், அதை பற்றித் தெரிந்து கொள்ள பெரிதாக ஏதும் முயற்சி மேற்கொள்ளவில்லை. தாஜ்மஹால், குதூப் மினார் போன்ற வரலாற்றுச் சின்னங்களுக்குச் சுற்றுலா சென்ற போது அவ்விடங்களிலும் இச்சின்னங்களின் புகைப்படங்கள் அச்சிடப்பட்டத் தபால் அட்டைகளை வாங்கியிருக்கிறேன். ஆனால் அவை நான் எடுத்துச் செல்லும் ஃபிலிம் கேமராவின் மீது நம்பிக்கை இல்லாது, படங்கள் எதுவும் சரியாக வரவில்லை எனில் இப்படங்களாவது இருக்குமே என்ற எண்ணத்தில் மட்டுமே நான் வாங்கியவைகளாக இருந்தன.
சிறுவயது முதலே தபால் தலைகளை நான் சேகரித்து வந்திருக்கிறேன். ஆனால் அதுவும் கூட சரியான வழிகாட்டலும் இலக்குமின்றி ஏனோ தானோவென்று செய்து வந்தேன். நான்கு வருடங்களுக்கு முன் எங்கள் அலுவலகத்தில் வேலை செய்து வந்த ஒருவர் தந்த ஊக்கத்தின் பேரில் தபால் தலை சேகரிப்பை முறையாக குறிப்பிட்ட சில தலைப்புகளில் மட்டும் செய்யத் தொடங்கினேன். அச்சமயத்தில் தபால் தலைகளை எங்கிருந்து பெறுவது என்ற ஒரு கேள்வி எழுந்தது. தபால் தலைகளை eBay போன்ற வலைத்தளங்களில் பணம் கொடுத்தும் வாங்கலாம். ஆனால் பள்ளிக் கூடத்தில் படிக்கும் போது மற்ற சிறுவர்களுடன் தபால் தலைகளைப் பரிமாற்றம் செய்து கொண்டது போன்ற வழி ஏதேனும் இருக்கிறதா என்று நண்பன் திருமுருகனைக் கேட்ட போது
Postcrossing எனும் வலைத்தளத்தை எனக்கு அறிமுகம் செய்து வைத்தார். சிறுவயதில் ஒரு செயின் கடிதம் எங்கிருந்தோ வரும் கேள்வி பட்டிருக்கிறீர்களா? அக்கடிதத்தில் ஐந்து விலாசங்கள் இருக்கும். அதில் கடைசி விலாசத்துக்கு நீங்கள் ஒரு தபால் அட்டையை அனுப்ப வேண்டும். அதன் நீங்கள் அக்கடிதத்தில் உங்கள் பேரையும் சேர்த்து கொண்டு மேலும் ஐந்து பேருக்கு அனுப்ப வேண்டும். இவ்வாறு நீங்கள் அனுப்பினால் உங்களுக்குத் தபால் அட்டைகள் உலகின் பல மூலைகளிலிருந்தும் வரும் என்று சொல்லியிருக்கும். நான் கூட எட்டணாவுக்கு ரஜினி கமல் படங்கள் போட்ட தபால் அட்டைகளை அனுப்பி வைத்தேன். ஆனால் எனக்கு பதிலுக்கு ஒன்றும் வரவில்லை. அதன் பின்னர் தபால் அட்டை அனுப்பும் மோகம் நின்று போனது.
Postcrossing தளத்தை நண்பன் அறிமுகப்படுத்திய போது நமக்கு இதன் மூலம் எதுவும் பதிலுக்கு வருமா என்ற ஒரு சந்தேகம் இருக்கத் தான் செய்தது. ஆனால் அத்தளத்தின் மூலம் நண்பன் தனக்கு தபால் அட்டைகள் வந்திருப்பதாகவும், அதன் மூலமாக பல புதிய விஷயங்களைத் தெரிந்து கொள்ளும் வாய்ப்பு இருப்பதாகவும் உறுதியளித்தான். சரி இதன் மூலம் தபால் அட்டைகளில் ஒட்டப்பட்டு வரும் தபால் தலைகளைச் சேகரிக்கலாமே என்று நானும் ஒரு கணக்கைத் துவக்கினேன். நிற்க. அதற்கும் முன் இது ஆம்வே(Amway) போன்றோ அல்லது Goldquest போன்றோ ஆள்பிடிக்கும் ஒரு விளம்பர முயற்சி இல்லை. உலகம் முழுவதும் இரண்டு மில்லியன் தபால் அட்டைகளுக்கும் மேலாகப் பரிமாற்றம் நடந்து முடிந்திருக்கும் ஒரு சேவையைப் பற்றிய தகவல் தான். மேலும் தபால் அட்டைகள் சேகரிப்பைப் பற்றியும் அதன் மூலம் தெரிந்து கொள்ளக் கூடிய விஷயங்களைப் பற்றியும் விளக்கக் கூடிய ஒரு அறிமுகப் பதிவு தான். இதில் எந்த வியாபார நோக்கமும், எனக்கு உங்களுக்கு இதை அறிமுகப் படுத்துவதின் மூலமாக எந்த பொருளாதார லாபமும் இல்லை :)
இது வேலை செய்வது எப்படி என்று பார்ப்போம்.
1. முதலில் நீங்கள் ஒரு Postcrossing கணக்கு(User ID) துவங்க வேண்டும். எல்லாம் இலவசம் தான்.
2. நீங்கள் ஒரே சமயத்தில் ஆறு தபால் அட்டைகள் வரை அனுப்பலாம். எந்த விலாசத்துக்கு அனுப்ப வேண்டும் என்று அந்த தளத்திலேயே உங்களுக்குத் தகவல் கிடைக்கும். மேலும் உங்களுக்கு மின்னஞ்சலும் வரும்.
3. நீங்கள் அனுப்பப் போகும் ஒவ்வொரு தபால் அட்டைக்கும் ஒரு அடையாள எண் இருக்கும்(Postcrossing ID). இது நீங்கள் விலாசம் வேண்டும் போது அந்த விலாசத்தோடு சேர்த்தே அத்தளத்திலேயே உங்களுக்குக் கிடைக்கும்.
4. உங்கள் தபால் அட்டை கிடைக்கப் பெற்றதும், தபால் அட்டையில் உள்ள ID கொண்டு உங்கள் தபால் அட்டை கிடைக்கப் பெற்றவர் பதிவு செய்வார்.
5. நீங்கள் அனுப்பிய ஒரு தபால் அட்டை சென்று சேர்ந்துள்ள படியால், நீங்களும் ஒரு தபால் அட்டை பெறுவதற்கு தகுதி உடையவர் ஆகிறீர்கள்.
உங்களுக்கு இந்த தபால் அட்டை எங்கிருந்து வரும் என்பது தான் இதிலுள்ள சுவாரசியமே. ஏதோ ஒரு நாட்டிலிருந்து யாரோ ஒருவர் உங்களுக்கு ஒரு Picture Postcard அனுப்பி வைப்பார். அவருடைய நாட்டினைப் பற்றி, அங்குள்ள கலாச்சாரத்தினைப் பற்றிச் சில தகவல்களை எழுதி உங்களுக்கு அனுப்பி வைப்பார்(நீங்களும் உங்கள் தபால் அட்டைகளை அனுப்பும் போது இதையே தான் செய்திருப்பீர்கள்). இது கேட்பதற்கு ஏதோ சின்னப்பசங்க விளையாட்டு மாதிரி தோன்றினாலும், மிகவும் உபயோகமானதும், பயனுள்ளதுமான ஒரு நல்ல பொழுதுபோக்கு இது. பொட்டித் தட்டுவது மட்டும் தான் என்னுடைய வாழ்க்கை என்று ஏனோ என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. தபால் அட்டைகளைச் சேகரிக்கத் தொடங்கியதிலிருந்து நமக்கு தெரிந்தது எவ்வளவு குறைவானது என்பது புரிகிறது. I would say its also a humbling experience. இதற்கு எவ்வளவு செலவாகும். ஒரு picture postcard குறைந்த பட்சமாக ஐந்து ரூபாய் முதல் கிடைக்கிறது. ஆறு, எட்டு, பத்து, முப்பது என பல வகைகளிலும் அளவுகளிலும் இவ்வட்டைகள் கிடைக்கின்றன. விலையுயர்ந்த அட்டையைத் தான் அனுப்ப வேண்டும் என்றோ இந்த தலைப்பில் தான் அனுப்ப வேண்டும் என்றோ விதிமுறைகள் ஏதுமில்லை. ஆனால் இது நம் நாட்டைப் பற்றி நாம் ஒரு வெளிநாட்டவருக்குத் தெரியப்படுத்தும் முயற்சி என்பதால் நம் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் விதமான அட்டைகளை அனுப்புவதை நான் வழக்கமாகக் கொண்டிருக்கிறேன். ஒரு அட்டைக்கு எட்டு ரூபாய் தபால் தலை ஒட்ட வேண்டும் ஆக ஒரு அட்டைக்கு 13 ரூபாய்கள்(ஐந்து ரூபாய் அட்டை என்றால்) செலவு. ஒரு மாதத்தில் நீங்கள் ஆறு அட்டைகளை அனுப்புவதை வழக்கமாகக் கொண்டீர்கள் ஆனால் ஒரு மாதத்துக்கு 78 ரூபாய் செலவு. ஒரு பாரில் உக்காந்து ஹேப்பி ஹவர்சில் பீர் அடிப்பதை விட குறைவான செலவு தான். ஆனால் இதன் மூலம் கிடைக்கும் போதையை அனுபவித்தால் தான் தெரியும்.
தபால் தலைகளைச் சேகரிப்பதற்காக இத்தபால் அட்டைகளைச் சேகரிக்கத் தொடங்கிய நான் இப்போது தபால் அட்டைகளையே தனியாகச் சேகரிக்கத் தொடங்கிவிட்டேன். இது வரை 44 அட்டைகள் எனக்கு உலகத்தின் பல்வேறு மூலைகளிலிருந்தும் வந்திருக்கின்றன. அவற்றில் சில உங்கள் பார்வைக்கு.

பிரான்சு நாட்டில் இருந்து வந்த ஈஃபிள் கோபுரம் தபால் அட்டை

வின்ஸ்டன் சர்ச்சில், பாப்லோ பிகாசா, அன்னை தெரசா போன்ற புகழ்பெற்ற பிரபலங்களைப் புகைப்படம் எடுத்த யூசுப் கார்ஷ்(Yousuf Karsh) என்ற புகழ்பெற்ற கனேடிய புகைப்படக்காரரைப் பற்றி நான் தெரிந்து கொள்ள உதவிய தபால் அட்டை.

சஸ்ஸெக்ஸ் எனும் ஊரின் அழகிய சுற்றுலா தளங்களைக் காட்டும் கிரெட் ப்ரிட்டன் நாட்டு தபால் அட்டை.

போர்ச்சுகல் நாட்டு தலைநகரான லிஸ்பன் இப்படித் தான் இருக்குமாம். இங்கெல்லாம் போய் பார்க்கும் வாய்ப்பு எத்தனை பேருக்கு கிடைக்கும்?

Postcrossingஇல் அதிக பட்ச உறுப்பினர்களைக் கொண்ட நாடு பின்லாந்து. அந்நாட்டின் பிரபல ஓவியரான காஜ் ஸ்டென்வால்(Kaj Stenvall) என்பவரது சிறப்பு இது போன்ற வாத்து ஓவியங்கள். சாதாரண மனிதர்கள் செய்யும் அத்தனை செயல்களையும் ஒரு வாத்து செய்தால் எப்படி இருக்கும் என்பதே இவருடைய கற்பனை. ஸ்டென்வாலுடைய ஓவியங்கள் பதிப்பிக்கப்பட்ட தபால் அட்டைகளைத் தேடி சேகரிப்பவர்கள் பலர் இருக்கிறார்கள்.

ஹாரி பாட்டர் தபால் அட்டை ஹாலந்து நாட்டிலிருந்து

ஃபின்லான்ந்து நாட்டின் குளிர்காலத்தை நமக்கு விளக்கிக் கூறும் தபால் அட்டை.
மேலே இருப்பவை எல்லாம் எனக்கு கிடைத்தவை. நம் இந்திய நாட்டு தபால் அட்டைகளைப் பார்த்தால் உங்களுக்கே நம் நாட்டின் மீது ஒரு பெருமை ஏற்படும். மற்ற நாட்டவர்களிடமிருந்து நாம் எவ்வளவு வேறுபட்டிருக்கிறோம் என்றும், நாம் காட்டுவதற்கும் பெருமை படுவதற்கும் நிறைய இருக்கிறது என்பதும் விளங்கும். கீழே இருப்பவை நான் சிலருக்கு அனுப்பிய தபால் அட்டைகள். நம் நாட்டில் இப்பொழுதுபோக்கு அவ்வளவாகப் பிரபலம் அடையாது இருந்தாலும், சில தயாரிப்பாளர்கள் தொடர்ந்து இந்திய picture postcardsஐ வெளியிட்டுக் கொண்டு தானிருக்கிறார்கள்.

ஸ்ரீரங்கம் கோயிலில் உள்ள ஒரு சிற்பம்.

கோவா மாநிலத்தில் கண்டோலிம் கடற்கரையில் சூரியன் மறையும் நேரம்.

பாண்டிச்சேரியைப் பற்றிய ஒரு அட்டை. இவ்வகை அட்டைகளை Multi-view cards என்கிறார்கள். ஒன்றுக்கும் மேற்பட்ட காட்சிகள் இந்த ஒரு அட்டையில் இருக்கிறதென்பதால்.

இராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜெய்சல்மேர் கோட்டை.

யானை...Postcrossingஇல் இந்தியாவிலிருந்து வரும் யானை தபால் அட்டைகளுக்காகப் பல விசிறிகள் இருக்கின்றார்கள் என்பது நான் அனுபவித்துத் தெரிந்து கொண்ட ஒன்று.
இவை எல்லாம் தபால் அட்டையின் ஒருபுறம் தான். அதன் பின்புறம் கண்ணுக்குத் தெரியாத யாரோ ஒருவர் உங்களுக்காகக் கைபட எழுதி அனுப்புவதை வாசிக்கையில் ஒரு உவகை வருமே...அதை நான் எப்படி சொல்லி புரிய வைப்பது என்று தெரியவில்லை. என்னால் முடிந்த அளவுக்கு தபால் அட்டை சேகரிப்பைப் பற்றி ஒரு அறிமுகத்தை கொடுத்து விட்டேன். உங்கள் மனதில் இது ஒரு ஆர்வத்தைத் தூண்டியிருந்தால் நான் மகிழ்ச்சி அடைவேன். Postcrossing தளத்தில்
என்னுடைய பக்கத்தையும் எனக்கு வந்த அட்டைகளையும் இங்கே பாருங்கள். இது பற்றி மேலும் என்னென்ன செய்யலாம் எப்படி செய்யலாம் என்று தகவல் வேண்டும் என்று பின்னூட்டமிட்டு ஊக்கமளித்தால் மேலும் எழுதுகிறேன் :)