Thursday, September 28, 2006

இது ஒரு "அசைவ" பதிவு

எச்சரிக்கை : ரொம்ப நாளா யோசிச்சி யோசிச்சி யெஸ்-நோ, யெஸ்-நோனு புத்தி குழம்பி, கடைசியா 'ஒன் ஃபைன் டே' என்னோட மிருக இச்சைகள் மேலோங்குனதால இந்தப் பதிவு. நானும் சாதாரண ஒரு மனுஷன் தானே! அதுனால தான். இப்படி பட்ட மேட்டர்ஸ் ஆஃப் இந்தியா பதிவை கஷ்டப் பட்டு எழுதிட்டு "Readers' discretion is advised"னு ஒரு வார்னிங் குடுக்கலைன்னா ஊருக்குள்ள பெரிய மனுசனா மதிக்க மாட்டாங்க. அதுனால "This presentation does not contain graphic images, it may be suitable for all readers, but still readers' discretion is advisedங்கோ சாமியோவ்"

தமிழ்நாட்டை விட்டு வெளியூருக்குப் போய் பொழப்பைத் தேடுற என்னை மாதிரி பேச்சிலர் பசங்களோட மாஸ்லோ முக்கோணத்துல(Maslow's triangle)என்னென்ன அடிப்படை தேவைகள் இருக்கும்னு நெனக்கிறீங்க? கஷ்டப்பட்டு(அட நம்புங்கப்பா!) வேலை செஞ்சிட்டோ படிச்சிப்பிட்டோ வந்தாக்கா ராத்திரி ஒண்டறதுக்கு ஒரு எடம், எட்டு மணி நேரமோ பத்து மணி நேரமோ ஆபீசுல நேரத்தைப் போக்க நாலு சேத்தாளிவ, வவுத்துக்கு ரெண்டு வேளை சோறு(மூணாவது வேளை தான் ஆபிசுலேயே போட்டுடறாங்களே)...இது தானே? இதுக்கு மேல வர்ற எந்த தேவையையும் இதெல்லாம் முக்கோணத்துல அடுத்தக் கட்ட ஒஸ்தி ரக தேவைன்னு தூர தள்ளிடலாம். ஆனாலும் இந்த மூனு அடிப்படை தேவைகள்லயும், இந்த மூனாவதாச் சொன்ன விஷயம் சில சமயத்துல ரொம்ப கஷ்டம் குடுக்கும். தமிழ் நாட்டுக்குள்ளேயே வேற ஒரு ஊர்ல வேலை பாத்தீங்கன்னா இந்த பிரச்சனை அவ்வளவு பெருசாத் தெரியாது. ஆனா என்னைய மாதிரி வடநாட்டுல போயி குப்பையைக் கொட்டுற பயலுங்களைக் கேட்டுப் பாருங்க...கதை கதையாச் சொல்லுவாங்க. குறிப்பா நீங்க அசைவம் சாப்புடறவரா இருந்து அமாவாசைக்கும் பௌர்ணமிக்கும் "நோ நான் வெஜ் டுடே"னு நான்-வெஜ் ஓட்டல்காரர்களே சொல்லக் கூடிய ராஜஸ்தான், குஜராத் போன்ற மாநிலங்கள்ல இருந்தீங்கன்னா...அய்யோ பாவம்.

ஒரு பொருளோட அருமை எப்பங்க ஒருத்தனுக்குத் தெரியும்? அது தூரத்துல இருக்கும் போதோ இல்ல அது நமக்கு கெடக்காமப் போனாலோ தானே? நம்ம கதையும் அப்படித் தாங்க. வீட்டுல சிக்கனும், மீனும் செஞ்சி வச்சி சாப்புடு சாப்புடுன்னு வலிய வலிய விருந்து வச்சாலும் இன்னிக்கு சாம்பார் ஏன் வக்கலைன்னு கேட்கற அரக்க குணம் படைத்தவன் தான் அடியேன். வீட்டுல இருந்த போதும் அசைவ சமாச்சாரங்கள் எதையும் "ராஜ்கிரண்" மாதிரியெல்லாம் வச்சி வெளாசனதும் கெடயாது. எல்லாம் ரெண்டு துண்டு மூனு துண்டு தான். ஆனா அது கூட கெடக்காம போகும் போது வர்ற 'craving' இருக்கே...ரொம்ப கொடுமையா இருக்கும். வீட்டுல நாளு கெழமையெல்லாம் பாத்து சாப்புட்டாலும், வீட்டை விட்டு வெளியே போயிட்டா வெள்ளி சனின்னு பாக்காம, அசைவம் எப்ப கெடச்சாலும் தின்ன சொல்லும். அசைவம் சாப்புடறவங்க யாராயிருந்தாலும் நாம தமிழ்நாட்டுல, வீட்டுலியோ இல்ல ஓட்டலிலேயோ சாப்பிடற அசைவ உணவுக்கு வெளி மாநில அசைவ உணவுகள் ஈடாவாதுங்கறதை ஒத்துப்பாங்க.

என்ன தான் நீங்க பஞ்சாபி, மொகலாய் மெக்சிகன், இட்டாலியன், தாய், சைனீஸ்னு அசைவம் சாப்பிட்டாலும் தமிழ்நாட்டுல தமிழ்நாட்டு ஸ்டைல்ல சாப்புடற மாதிரி வருமா? உதாரணத்துக்கு இந்த மீன் குழம்பையே எடுத்துக்குவோமே? வெறும் வெங்காயம், தக்காளி, மொளகா தூள், கொஞ்சம் வடகம் போட்டு வேற எங்கேயாச்சும் மீன் குழம்பு கெடக்குமா? வட இந்தியாவுக்கெல்லாம் போனீங்கன்னா இஞ்சி பூண்டு மசாலாவுல மீனைப் போட்டு சிக்கன், மட்டன் குருமா மாதிரி வச்சிடுவாங்க. அந்த மாதிரி இஞ்சி பூண்டு மசாலாவுல மீன் குழம்பு வச்சா ஏனோ நமக்கு புடிக்கிறதே இல்ல. இந்த மீன் குழம்பு விஷயத்துல கிட்டத்தட்ட நம்ம டேஸ்டுக்கு ஒத்து வர்றது "மேங்களூரியன்" உணவகங்கள்ல கெடைக்கிற "மீன் கஸ்ஸி" தாங்க(கொஞ்சம் தேங்கா தூக்கலாவும் புளி கம்மியாவும் இருக்கும்). அதே போல பட்டர் சிக்கனோ, கடாய் சிக்கனோ இல்ல கீரை போட்டு வைக்கிற 'சாக்வாலா முர்க்' இதெல்லாம்(அப்புறம் சிக்கனுக்கு மட்டுமே வாயில நுழையாத பல பேர்கள்) எனமோ அந்த நேரத்துக்குச் சப்பாத்தியோட சாப்பிட நல்லாருந்தாலும், மிளகு போட்டு ஒரு சிக்கன் குழம்பை வச்சு அதை நெல்லு சோத்துல பெசஞ்சு கூட ஒரு வஞ்சிர மீன் வறுவலோடவோ இல்ல ஒரு எறா வறுவலோடவோ நல்லா சாப்புட்டுட்டு ஞாயித்துக் கெழமை மதியானம் கும்முன்னு ஒரு தூக்கம் போட்டு எந்திரிச்சா...ஆஹா அதுவல்லவோ சொர்க்கம்? இல்லன்னா என்னிக்காச்சும் குடும்பத்தோட பொன்னுசாமில போய் ஒரு சிக்கன் பிரியாணி, ஒரு காடை ஃபிரை(குடும்பத்தோட போனா அம்மா அப்பா வாங்குற ஐட்டத்துலயும் சில துண்டு நமக்கு வந்து விழுந்துடும்...அப்ப செம வெரைட்டியோ வெரைட்டி தான்) இதெல்லாம் ஒரு வெட்டி வெட்டிப்பிட்டு ஒரு ஸ்வீட் பீடாவை மெல்லும் போது கிடைக்கும் அந்த திருப்திக்குப் பேரு என்னங்கோ?

ஹ்ம்ம்ம்ம்...ஆனா படிக்கிறதுக்கு புது தில்லி போன நேரத்துலேருந்தே, இந்த மாதிரி ரசிச்சி சுவைச்சி அசைவம் சாப்புடறது எல்லாம் மறந்து போச்சுங்கோ. ஹாஸ்டல்ல இருக்கும் போது வாரத்துல என்னிக்காச்சும் ஒரு நாள் ஒரு பீஸ் சிக்கன் உள்ள "சிக்கன் கறி" கெடக்கும். என்னோட ஃபிரெண்டு ஒருத்தன் இந்த விசயத்துல ரொம்ப லக்கி. அவனோட டிப்பார்ட்மெண்ட்ல வேலை செய்யற தமிழ்காரரு ஒருத்தரு ஞாயித்துக் கெழமை ஆனா அவனை அவங்க வீட்டுக்குக் கூப்பிட்டுருவாரு. மதியானம் சிக்கன், மட்டன், மீன், முட்டைன்னு மூக்குப் பிடிக்கத் தின்னுட்டு அந்த பய சாயந்திரம் ஹாஸ்டல்ல வந்து அவங்க வீட்டுல என்ன விருந்துன்னு மெனு சொல்லுவான் பாருங்க...அப்படியே ஆத்திரம் ஆத்திரமா வரும்(படையப்பா மாதிரி படம் புடிக்கிறேன்னு போட்டோ படம் எடுத்தே ஆப்பு வச்சானே அதே பய தான்). அதுக்கப்புறம் வேலை செய்ய ஆரம்பிச்சு கொஞ்சம் கையில துட்டு பாக்க ஆரம்பிச்சதும் "நன்றி கடவுளே இன்னிக்கு வெள்ளிக்கிழமை", "மரகத செவ்வாய்கிழமை"(நான் போன அன்னிக்கு எதோ ஹேலோவீன் பார்ட்டியாம்...ஹேலோவீன்னா என்னன்னு அன்னிக்குத் தான் தெரிஞ்சிக்கிட்டேன்), "கபாப் பேக்டரி", "ராஜிந்தர் தா டாபா", "பார்க் பலூச்சி" அப்படின்னு பல இடங்கள்ல போய் தின்னுருந்தாலும், இங்கே எங்கேயும் நம்ம மண்ணின் மகிமை நமக்கு தெரியாதுங்க. டெல்லி சாகர் ரத்னா க்ரூப்போட(நம்ம சரவண பவன் மாதிரி) "ஸ்வாகத்"னு ஒரு அசைவ உணவகத்தை தெறந்துருக்காங்க(இங்கே செட்டிநாடு, மங்களூரியன், கேரள ஸ்டைல்ல அசைவம் கெடக்கும்), ஆனா நம்ம நேரம்... அது ஆரம்பிச்ச கொஞ்ச நாள்லேயே நான் டெல்லியிலிருந்து இந்தூருக்கு வந்துட்டேன்.

நமக்கும் இந்த மாதிரி சவுத் இண்டியன் ஸ்டைல் அசைவம் சாப்பிட்டுட்டு யாரு கிட்டவாச்சும் மெனு சொல்லி வெறுப்பேத்தனும்னு ரொம்ப நாளா ஆசைங்கோ. எப்பவாச்சும் அந்த மாதிரி சாப்பிட சான்ஸ் கெடச்சுதுன்னா வெறுப்பேத்த எவனும் ஆள் கெடைக்க மாட்டான். கல்லைக் கண்டா நாயைக் காணோம் நாயைக் கண்டா கல்லைக் காணோம் கதை தான். ஆனா நாம நாயா இருக்கும் போது, கல்லு எப்பவும் சுலபமாக் கெடச்சிடும் போல. நாம வாங்கி வந்த வரம் அப்படி போலிருக்கு? இப்படித் தான் பாருங்க...போன மாசம் மும்பைல க்ளையண்ட் ஆபிஸ்ல இருந்தேன். அங்கே என் பின்னாடி சீட்டுல ஒக்காந்துருக்கற ஒரு ஆண்ட்டி எப்பவும் யாரோடவாச்சும் எதனா போன்ல பேசிட்டே இருப்பாங்க...அப்படி என்ன தான் மணிக் கணக்காப் பேசுவாங்களோ தெரியாது. நாம தான் கடுமையான உழைப்பாளியாச்சே. அதோட நான் உண்டு என் ப்ளாக் உண்டுன்னு இருக்கறவனாச்சே நானு? இதுல அவங்க என்ன பேசறாங்கன்னு "e(a)vesdrop" பண்ண நமக்கு ஏது நேரம்? ஆனா ஒரு நாளு சாயந்திரம் பாருங்க...ஆபிஸ் விடற நேரம் என் பின்னாடி சீட்டு ஆண்ட்டி அவுங்க வீட்டுக்குப் போன் பண்ணிப் பேசுனது என் காதுல விழுந்தது. ஒடனே நான் ஒட்டுக்கேட்டேன்னு நெனக்காதீங்கப்பா...ஒரு வழிப்போக்கனா நான் பாட்டுக்கு என் போக்குல ஒக்காந்துருக்கும் போது தற்செயலா, மிகத் தற்செயலா என் காதுல தெளிவா விழுந்தது.

"ஹோம்வர்க் எல்லாம் பண்ணிட்டியா?"
".............." (அடங்க! அந்தப் பக்கம் பேசறது எனக்கு எப்படிங்க கேக்கும்? இதெல்லாம் கொஞ்சம் ஓவரு! அத சிம்பாலிக்காச் சொல்றதுக்காவத் தானே அடைப்புக்குறிக்குள்ள நெறைய புள்ளிஸ்டாப்பு எல்லாம் வச்சிருக்கோம்?)

"எல்லாத்தயும் பண்ணி முடிச்சிட்டா என்ன...அந்த ஹிஸ்டரி போர்ஷனை எடுத்து வச்சு ரிவைஸ் பண்ணு. இன்னும் கொஞ்ச நேரத்துல வந்துடுறேன்"
".............."
"ஹ்ம்ம்ம்...சரி சரி...க்ராண்ட்மா கிட்ட குடு"
".............."
"மம்மி! நான் வரும் போது நைட்டு டின்னருக்கு எறா வாங்கிட்டு வந்துடறேன். நீங்க படாட்டாவை வேக வச்சி வையுங்க. தக்காளியையும் வெங்காயத்தையும் பொடியா அரிஞ்சு வச்சிடுங்க"
"............."
படாட்டான்னா மராட்டியில உருளைக்கிழங்குன்னு இந்தூர்ல இருக்கும் போது தெரிஞ்சிக்கிட்டேன். அவங்க வீட்டுல நைட்டு எறா கொழம்புன்னு தெரிஞ்சதும் ஜனகராஜ் மாதிரி "யம்மாடி! எனக்குக் கூட இந்த எறான்னா ரொம்ப புடிக்கும். ஆனா படாட்டாவையும் எறாவையும் போட்டுகொழம்பு வச்சா நல்லாவா இருக்கும்? அந்த காம்பினேஷன் வர்க் அவுட் ஆவாது. பேசாம உருளைக்கெழங்கை எடுத்து ஃபிரிஜ்ல வச்சிட்டு, எறாவையும் முருங்கைக்காயையும் மல்லித்தூளைப் போட்டு வெங்காயம் கொஞ்சம் தக்காளியோட எண்ணையில தாளிச்சி, உப்பு மஞ்ச மொளகாத்தூள் போட்டு சட்டுன்னு ஒரு கொழம்பு வச்சிப் பாரு...சூப்பரா இருக்கும்"னு சொல்லறதுக்கு இந்த நாக்கு இருக்கில்ல நாக்கு... அது டிப் வரைக்கும் வந்துடுச்சு. அப்புறம் எதுக்கு நம்ம தொழில் ரகசியத்தை எல்லாம் மராட்டிய தேசத்துக்குப் பரப்பனும்னு அப்படியே கையதைக் கொண்டு மவுத் அதைப் பொத்திக்கிட்டு கப்சிப்னு அடங்கிட்டேன். ஆனா ஒன்னு மட்டும் எனக்கு இன்னமும் புரியலைங்க...பகலெல்லாம் மராட்டியில போன் பேசற அந்த ஆண்ட்டி எதுக்கு அன்னிக்கு அவங்க வீட்டுல இந்தியில பேசுனாங்கன்னு தான். எது எப்படியோ...வழக்கம் போல நமக்கு மெனுவைக் கேட்டு சந்தோஷப் பட்டுக்கற பொழப்புத் தான், இதுல மராட்டி எறாவா இருந்தா என்ன இந்தி எறாவா இருந்தா நமக்கென்ன?

அப்படியே கட் பண்ணாக்கா ஒரு ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி நான் டெல்லியில இருக்கும் போது நடந்தது நெனப்பு வந்துச்சுங்க. இதே எறா முருங்கைக்காய் கொழம்புக்கு ஒருநாள் ரொம்பவே ஆஸ்பட்டு "அல்கபீர்ஸ்"(Al-Kabeers') குளிர்பதனம் செய்யப்பட்ட "ஃப்ரோசன் எறா" வாங்கி வச்சிட்டேன். ஆனா நான் இருந்த ஏரியாவுல முருங்கைக்காய் எல்லாம் கெடக்காதுன்னு வண்டியை எடுத்துக்கிட்டு முனிர்கா ராமா ஸ்டோர்ஸுக்குப் போனேன். முனிர்காவுக்குப் போனா டெல்லியில இருக்குற நெனப்பே வராது...எதோ தமிழ்நாட்டுலேயே இருக்குற ஒரு ஃபீலிங் வரும். அந்தக் கடை வாசல்ல எப்பவும் நம்ம காய்கறி ஐட்டங்களான முருங்கைக்காய், கறிவேப்பிலை, கீரை இதெல்லாம் கெடக்கும். அங்கே முருங்கைக்காயைக் கூறு கட்டி வச்சி வித்துட்டு இருந்தாரு ஒரு ஆளு. முறுக்கி பாக்கத் தேவையில்லாத படிக்கு நல்லா பிஞ்சு முருங்கைக்காயாத் தான் இருந்துச்சு....ஆனா பத்து முருங்கைக்காய் உள்ள ஒரு கூறு அஞ்சு ரூவான்னு இல்ல சொல்லறாரு? நானு, என் கூட இருந்த இன்னொரு பையன் ரெண்டு பேரும் சாப்புடறதுக்கு ஒரு பாக்கெட் ஃப்ரோசன் எறாவைப் (என்னா ஒரு கால் கிலோ இருக்கும்) போட்டு கொழம்பு வைக்க பத்து முருங்கைக்காயா? இத்தினி முருங்கைக்காய்ல முருங்கைக்காய் எறா போட்டு கொழம்பு வச்சிட்டு, முருங்கைக்கா ரசம், முருங்கைக்கா பொரியல், முருங்கைக்கா தயிரு எல்லாம் பண்னலாமே? இம்புட்டை வாங்கிட்டு நாம என்ன பண்ணறது அப்படின்னு நெனச்சி வாங்கலாமா வேணாமான்னு தயங்கி மயங்கி நின்னுட்டு இருந்தேன்.

இந்த நேரம்னு பாத்து, பாவம் ஒரு பய கொழம்பி போய் கெடக்கானேன்னு நெனச்சி என் பின்னாடி நின்னுட்டு இருந்த நடுத்தர வயசுள்ள ஒரு அம்மா "நல்ல பிஞ்சு முருங்கைக்காங்க! மாசமா இருக்கறவங்களுக்கு பொரியல் செஞ்சு குடுத்தா ஒடம்புக்கு ரொம்ப நல்லது'ன்னு ஒரு ரெகமெண்டேஷனும், இலவசமா ஒரு பேறுகால சமையல் குறிப்பும் குடுத்தாங்க. "ஆஹா கெளம்பிட்டாங்கைய்யா கெளம்பிட்டாங்கய்யா! இப்ப மாசமா இருக்குறவங்களுக்கு நான் எங்கே போறது... முருங்கைக்கா பொரியல் வச்சிக் குடுக்க. இருந்தாலும் பரவால்லை பிற்காலத்துல என்னிக்காச்சும் யூஸ் ஆகும்"ன்னு மனசுக்குள்ள நெனச்சிக்கிட்டேன். அதோட எனக்கு வந்த பயங்கரமான சிரிப்பைக் கஷ்டப் பட்டு அடக்கிக்கிட்டு "இல்லீங்க முருங்கைக்கா எறா போட்டு கொழம்பு வக்கலாம்னு ..."உண்மையையே அப்படியே இழுத்து சொன்னேன். "ஓ அப்படியா?...அதுக்கு கூட இந்த காய் நல்லாத் தான் இருக்கும்"அப்படின்னாங்க. முந்தானை முடிச்சு பாக்கியராஜுக்கு அப்புறம் முருங்கைக்காயோட பயன்களை எடுத்து சொல்லி என் ஞானக்கண்ணைத் திறந்த அந்த அம்மா சொன்னா சரியாத் தான் இருக்கும்னு நம்பி முருங்கைக்காய் ஒரு கூறு வாங்கிக்கிட்டேன். அவங்க சொன்ன மாதிரியே கொழம்பு நல்லாத் தான் இருந்துச்சு...என்னா ஒன்னு? ரெண்டு பேரு சாப்புட கால் கிலோ எறாவுக்கு அஞ்சு முருங்கைக்கா போட்டு கொழம்பு வச்சதுல எறாவே கண்ணுக்குத் தெரியல..."எங்கெங்கும் முருங்கை மய(ர)ம் தான்!"

Saturday, September 09, 2006

எதிலும் இங்கு இருப்பான்...

பாரதி படத்துல வர்ற "எதிலுமிங்கு இருப்பானவன் யாரோ?"ங்கிற பாட்டை சமீபத்துல பல நாளுக்கப்புறம் கேட்டேங்க. முன்னல்லாம் கேட்டப்ப தெரியாத ஒரு பிரமிப்பு இந்த முறை அந்த பாட்டோட பாடல் வரிகளைக் கேட்டப்போ உணர முடிஞ்சதுங்க. இறைவனின் எங்கும் நிறைந்த தன்மையை உணர்த்தற மாதிரி இருந்தது. இவ்வளவு நாள் கூர்ந்து கவனிக்காம விட்டுட்டோமேனு இருந்துச்சு. அந்த பாட்டை இப்ப இந்தப் பதிவுல போட்டிருக்கேன். நீங்களும் கேட்டுப் பாருங்க. சித்தூர்கட்லயும், உதய்பூர்லயும், தனேஷ்வர் தேவ் என்கிற இடத்துலயும் எடுத்த சில புகைப்படங்களையும் போட்டுருக்கேன்.

படம் : பாரதி(2000)
பாடியவர் : மது பாலகிருஷ்ணன்
பாடலாசிரியர் : புலமைபித்தன்


எதிலும் இங்கு இருப்பானவன் யாரோ?
எனக்குள் அவன் இருப்பான் அறிவாரோ?
தவழும் நதியைத் தரித்த முடியான்
அடியும் முடியும் அறிய முடியான்
எளிய அடியர் ஓதும் வேத நாதமாகி
எதிலும் இங்கு இருப்பானவன் யாரோ?
எனக்குள் அவன் இருப்பான் அறிவாரோ?

வரிப்புலி அதள் தறித்தவன் எழில் கண்டேன்
பிறப்பெனும் பிணி அறுப்பவன் துணை கொண்டேன்
தமிழ்க்கவி தரும் எனக்கொரு வரம்
தரத் திருவுளம் வேண்டும்
சகத்தினுக்கெனைத் தரத் தகும் நெறி
வகுத்திடத் துணை வேண்டும்

ஆலம் கருநீலம் என தெரியுமொரு கண்டன்
அண்டும் திருத்தொண்டன் எனும்
அடியார்க்கொரு தொண்டன்
பற்றுத் தளைக்கு நெருப்பவன்
ஒற்றைக் கணத்தில் அழிப்பவன்
நெற்றித் திரைக்குள் நெருப்பை வளர்த்து
எதிலுமிங்கு இருப்பானவன் யாரோ?
எனக்குள் அவன் இருப்பான் அறிவாரோ?

தொடக்கமும் அதன் அடக்கமும் அவன் வேலை
நடப்பதும் அதை தடுப்பதும் அவன் லீலை
உடுக்களில் சரம் தொடுத்தவன் தலை
முடிக் கணியவும் கூடும்
பெருக்கலும் அதை வகுத்தலும் அதை
கழித்தலும் அவன் பாடம்
மாறும் யுகம் தோறும்
அவன் கணக்கின் படியாகும்
மண்ணும் உயர் விண்ணும்
அவன் ஒருகை பிடியாகும்

சட்டம் அனைத்தும் வகுத்தவன்
திட்டம் அனைத்தும் தொகுத்தவன்
முற்றப் படித்து முடித்த ஒருத்தன்
எதிலும் இங்கு இருப்பானவன் யாரோ?
எனக்குள் அவன் இருப்பான் அறிவாரோ?
தவழும் நதியைத் தரித்த முடியான்
அடியும் முடியும் அறிய முடியான்
தெளிய அடியர் ஓதும் வேத நாதமாகி
எதிலுமிங்கு இருப்பானவன் யாரோ?
எனக்குள் அவன் இருப்பான் அறிவாரோ?


1
2
3

4
5

6
7

8

9
10

11
12
13

14
15

16
17

18


படக்குறிப்பு

1. அரண்மனை வடிவமைப்பில் அமைந்த தற்கால கட்டிடம், ஷம்பூபுரா, சித்தூர்கட் மாவட்டம், ராஜஸ்தான் - 06.08.2006
2. தால்பாட்டி(Dhal Bhati) தயாராகிறது - சாப்பிடற ஐட்டம் தாங்க. தனேஷ்வர்ஜி, ராஜஸ்தான் - 06.08.2006
3. போட்டோவுக்கு ஆர்வமாய் போஸ் கொடுக்கும் குழந்தைகள்
4. பாறை இடுக்கில் மலர்
5. தனேஷ்வர்ஜி பிக்னிக் தலத்தருகில் ஏரி
6. மரத்தடியிலிருந்து அருள்பாலிக்கிறாங்க
7. காரோடும் வீதியில ஆவினங்களும் அழகு தான், ஷம்பூபுரா, 06.08.2006
8. நாத் துவாராவிலிருந்து உதய்பூர் செல்லும் வழியில், 09.08.2006
9. இனிமே ராஜஸ்தான் வெறும் பாலைவனம்னு சொல்லுவியா? சொல்லுவியா?
10. உதய்பூர் நகர சாலை
11. வரலாறு காணாத மழை வெள்ளத்தில தளும்பும் உதய்பூர் ஏரி
12. சாப்புட்டுட்டு புள்ளைக்குட்டியோட ஹாயா உக்காந்து இருக்கும் போது எதோ ஒரு எடுவட்ட நாய் கல்லை வீசிப் படம் புடிக்குது...வுடு ஜூட்
13. இப்ப பறந்து போறோம்...ஆனா என்னிக்காச்சும் ஒரு நாள் உனக்கு ஆப்பு வைப்போம்டி!
14. ராஜஸ்தான்ல ஒரு ஒட்டகம் தான் கண்ணுல மாட்டுச்சுன்னு சொன்னா நம்பற மாதிரியா இருக்கு?
15,16,17,18 மும்பை-தில்லி தேசிய நெடுஞ்சாலை எண் 8, 09.08.2006

Thursday, September 07, 2006

சவுத் இண்டியன்ஸால மட்டும்...?

பெனாத்தலார் வ.வா.சங்கத்தில் எழுதிய அட்லாஸ் வாலிபன்? பதிவைப் பார்த்ததும் ஒரு பதிவு நினைவுக்கு வந்துச்சு. மின்னஞ்சல்களில் ஃபார்வர்டுகள் தாராளமாக வந்துக் கொண்டிருந்த ஒரு காலத்தில், ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களிலிருந்து எனக்கு வந்த ஒரு ஆங்கில படைப்பு. எழுதுனது யாருன்னு தேடிப் பாத்ததுல தெரிஞ்சது, அதை எழுதுனது ஒரு வலைப்பதிவர்னு ...அவரோட பேரு சிடின் வடுகுட். எக்கச்சக்கமா படிச்சுப் போட்டு ஒரு பன்னாட்டு கம்பெனியில வேலை பாத்துப்புட்டு, அதெல்லாம் புடிக்காம இப்ப ஒரு முழு நேர ப்ளாக்கர்/எழுத்தாளர் ஆகிட்டாரு. அவரைப் பத்தி தி ஹிண்டுல கூட செய்தி வந்துருக்கு. நெறைய பேருக்கு இவரைப் பத்தி ஏற்கனவே தெரிஞ்சிருக்கும்.

http://www.hindu.com/2006/07/25/stories/2006072515020200.htm

பெனாத்தலாரோட பதிவைப் பாத்த உடனே, இந்தப் பதிவு தான் ஞாபகத்துக்கு வந்துச்சு. பதிவுல எழுதியிருக்குற மேட்டர் என்னன்னா "நம்ம சவுத் இண்டியன் பசங்களால மட்டும் ஏன்யா ஒரு கேர்ள்பிரெண்டு தேத்த முடிய மாட்டேங்குறது தான்". பீட்டரான இங்கிலீசுல தனக்கே உரிய நகைச்சுவையான பாணியில கலக்கலா எழுதியிருப்பாரு.
அவரோட பதிவுலேருந்து ஒரு சிறு பகுதி :

"Our futures are shot to hell as soon as our parents bestow upon us names that are anything but alluring. I cannot imagine a more foolproof way of making sure the child remains single till classified advertisements or that maternal uncle in San Francisco thinks otherwise. Name him "Parthasarathy Venkatachalapthy" and his inherent capability to combat celibacy is obliterated before he could even talk. He will grow to be known as Partha. Before he knows, his smart, seductively named northy classmates start calling him Paratha. No woman in their right minds will go anyway near poor Parthasarathy. His investment banking job doesn't help either. His employer loves him though. He has no personal life you see.

By this time the Sanjay Singhs and Bobby Khans from his class have small businesses of their own and spend 60% of their lives in discos and pubs. The remaining 40% is spent coochicooing with leather and denim clad muses in their penthouse flats on Nepean Sea Road. Business is safely in the hands of the Mallu manager. After all with a name like Blossom Babykutty he cant use his 30000 salary anywhere. Blossom gave up on society when in school they automatically enrolled him for Cookery Classes. Along with all the girls."

முழு பதிவையும் படிக்க இங்கே சுட்டுங்க :
"The Travails of Single South Indian men of conservative upbringing"

நம்ம பெனாத்தலாரும் இதே மேட்டரைப் பத்தி நேத்து எழுதிட்டாரா? அதை படிச்சதும் இந்த பேச்சலர் மனச்சுக்கு ஒரே "ஃபீலிங்ஸ் ஆஃப் சித்தூர்கட்" ஆகிப் போச்சு நைனா. சிடினோட ஆங்கிலப் பதிவை அப்படியே தமிழ்ல உல்டா பண்ணி நம்மூரு காரப் புள்ள காவ்யா விஸ்வநாதன் பண்ண ப்லெஜியரிஸம்ங்கிற கில்மா வேலை பண்ணிடலாமான்னு கூட யோசிச்சிட்டு இருந்தேன். ஆனா அப்படிப் பட்ட கில்மா வேலை பண்ணறதுக்கு இப்படி பட்ட கில்மா வேலை எல்லாம் பண்ணலாம்னு ரோசனை குடுத்த கோவி.கண்ணனுக்கு நன்றி. எல்லாப் பதிவுகளையும் படிச்சுப் பாருங்க...நல்லாருக்கும்.

Sunday, September 03, 2006

தடிப்பசங்க #6

காட்சி 6 : டிசிபி ராகவன் பேசறேன்

டிரிங்...டிரிங்...டிரிங்...டிரிங்...

டெலிபோன் மணி போல சிரிக்கிறது சாட்சாத் டெலிபோன் மணியே தான்.

"ஹலோ"

"ஹலோ. நான் டிசிபி ராகவன் பேசறேன்"

"......"

"ஹலோ. நான் டிசிபி ராகவன் பேசறேன்"

"மீ டூ"

"என்னது மீ டுவா? நான் டிசிபி ராகவன் பேசறேன்னு சொன்னேன்".

"ஏன் நீங்க டிசிபி ராகவனாயிருக்கும் போது,
டிசிபியோட அப்பாவும் ஒரு டிசிபியா இருக்கக் கூடாதா?"

கேட்சி தி பாயிண்ட் ஆச்சே. என்ன சொல்ல முடியும்? கப்சிப்...

"சரிங்க டிசிபி...சென்னை சிட்டியில சட்டம் ஒழுங்கு எல்லாம் எப்படியிருக்கு"

"மொதல்ல சல்யூட் அடி...நீ மொதல்ல சித்தூர்கட் ஜூரிஸ்டிக்சனைப் பத்தி சொல்லு"

"நீங்களும் டிசிபி...நானும் டிசிபி. ரெண்டு பேருக்கும் ஒரே நம்பர் ஆப் ஸ்டாரு. நமக்குள்ள எதுக்குங்க சல்யூட்"

"இருந்தாலும் நான் சீனியரு..."

"கும்ட்டுக்கறேன் ஐயா! செக் எழுதி அனுப்பி இருக்கேன். கொஞ்சம் சின்ன டிசிபி கிட்ட சொல்லி உங்க வூட்டாண்ட எதனா டிராப் பாக்ஸ்ல போட்டுட சொல்லுங்க. இந்த ஊருல டிராப் பாக்ஸ் எங்கே இருக்குன்னு தேடி கண்டுபுடிக்கிறதுக்குள்ள டியூ டேட்டே முடிஞ்சுடும் போலிருக்கு"

"சரி. போட்டுட சொல்றேன். என்ன சாப்பிட்டியா?"

"ஊஹும் இனிமே தான்"

"சரி இருப்பா...ஒரு ரெண்டு வார்த்தை ஏட்டம்மாவோடயும் பேசிடு...போன் பக்கத்துலயே நிக்கிறாங்க, இல்லன்னா அப்பனும் புள்ளயும் மட்டும் பேசிட்டு வச்சிட்டீங்களான்னு என்னை உண்டு இல்லன்னு ஆக்கிடுவாங்க"

"ஹலோ"

"நான் டிசிபி ராகவன் பேசறேன்"

"என்ன திடீர்னு டிஜிபி?"

"டிஜிபி இல்ல டிசிபி"

"எதோ ஒன்னு. இப்ப என்ன திடீர்னு?"

"வேட்டையாடு விளையாடு பாத்ததுலேருந்து போலீஸ் ஆபீசர் ஆகறதுன்னு முடிவு பண்ணிட்டேன்"

"என்னது முடிவு பண்ணிட்டியா? ஏன் எதாவது லஞ்சம் கிஞ்சம் வாங்கப் போறியா?"

"நான் சீரியஸாத் தான் சொல்றேன்! ஒரு நேர்மையான போலீஸ் ஆபிஸர் ஆகப் போறேன். அதுக்கப்புறம் கிரைம்னா கிலோ என்ன வெலைன்னு கேக்கப் போறீங்க பாருங்க!"

"உக்கும். ஒனக்கும் ஒன் தம்பிக்கும் என்ன படம் பாக்குறீங்களோ அதுல எவன் என்ன பண்ணறானோ அந்த மாதிரியே ஆவனும்...அவனுங்க பண்ணற மாதிரியே பண்ணனும். அப்போலேருந்து இப்ப வரைக்கும் சினிமா படத்தப் பாத்துட்டு ஏர்போர்ஸ் பைலட்டு, ப்ளாக் கேட், போலீசு, ஆட்டோகாரன், பால்காரன், மாடு மேய்க்கிறவன், பைக் ஓட்டறவன்னு நீங்களும் தான் ஒவ்வொரு படத்துக்கும் ஒரு கதை சொல்றீங்க. அதையெல்லாம் இத்தனை நாளா நாங்களும் கேட்டுட்டு தானே இருக்கோம்?"

"சரிடா மகனே! ஒரு போலீசு ஆபிசர் ஆகு, கொடியவர்களைப் போய் பந்தாடுன்னு வெற்றித் திலகம் வச்சு வழியனுப்புறீங்களா? எப்ப பாத்தாலும் இத மாதிரி எதாச்சும் தடை சொல்லி தடை சொல்லித் தான் எங்க கனவு கோட்டையெல்லாம் இடிஞ்சு நாசமாப் போச்சு. சின்ன வயசுல நீங்க எங்க ஆசைகளைப் பாத்து எள்ளி நகையாடாம இருந்துருந்தா நாங்க அப்பவே பைலட்டோ இல்ல போலீசோ ஆயிருப்போம்"

"சரிடா மகனே! போலீசு ஆகி நல்லா லஞ்சம் வாங்கு"

"அம்மா. சும்மா இப்பிடி நக்கல் தான் பண்ணுவீங்க?"

"(சிரிச்சிக்கிட்டே)பின்ன என்ன பண்ண சொல்றே? இவ்ளோ வருஷத்துக்கு அப்புறம் போலீஸ் ஆவறதுக்கு எதுக்கு டெல்லியில போய் படிச்சுட்டு இப்போ ஜெய்பூர்ல ஒக்காந்து போய் வேலை செஞ்சிட்டு இருக்குறியாம்? ஓடியாடற வழியைக் காணோம். இதுல போலீஸ் ஆயி என்னத்தப் பண்ணப் போறீங்களோ? தொப்பை இருந்துட்டா மட்டும் போலீசு ஆயிட முடியாது கண்ணா...இப்பல்லாம் போலீசு காரங்களையே நெறைய எக்சர்சைஸ் பண்ணச் சொல்றாங்களாம்".

"மொதல்ல பெத்த மகன் வேலை செய்யிற ஊரு பேரைச் சரியாச் சொல்லுங்க"

"நாங்க படிச்ச மூணாப்புக்கெல்லாம் எங்களுக்கு அவ்வளவு தான் வரும். சரி! இவ்வளவு வயசுக்கு அப்புறம் எப்படி போலீசுல சேருவே?"

"படிப்படியா ஒழைச்சு முன்னேறி தான். சூர்யவம்சம் சரத்குமார் மாதிரி, அண்ணாமலை ரஜினி மாதிரி"

"படிப்படியான்னு சொல்லிட்டு கான்ஸ்டபிள், ஏட்டு, சப் இன்ஸ்பெக்டர் எல்லாம் ஆகாமயே நேரா டிஜிபி ஆவப் போறேங்கிறே?"

"ஐயோ! எப்பவும் சின்னதாவே யோசிங்க"

"சரி! நீ டிஜிபியோ டிசிபியோ ஆனதும் அப்படியே என்னையும் ஒரு சிஐடி ஆக்கிடு"

"புள்ள வேலை செய்யிற ஊரு சித்தூர்கட்டையே ஜெய்ப்பூர்ன்னு சொல்றீங்க. உங்களுக்கு எஜிகேசன்ஸ் பத்தாது. உங்க வூட்டுல இருக்காரே எங்கப்பாரு...சென்னை சர்க்கிள் டிசிபி, அவரு சொன்ன ஏட்டு போஸ்டே ஒங்களுக்கு அதிகம். இந்த அழகுல சிஐடி கேக்குதா சிஐடி?"

"போலீசே ஆவலை அதுக்குள்ளவே ஒங்களுக்கு இந்த பந்தா..."

"அம்மா திடீர்னு எனக்கு ஒரு மெகா ஐடியா வந்துருக்கு... நாம ஏன் குடும்பத்தோட போலீசு வேலைல சேர்ந்து நாட்டுக்குச் சேவை செய்யக் கூடாது?"

"குடும்பத்தோடவா?"

"ஆமா...குடும்பத்தோட போலீஸ் புடிச்சாத் தான் தப்பு. குடும்பத்தோட போலீஸ் ஆனா தப்பில்லை"

"மொதல்ல நீங்க டிஎஸ்பி ஆவுங்க...அப்புறம் நாங்க போலீஸ்ல சேர்றதைப் பத்தி யோசிக்கிறோம்"

"ஒன்னு டிஜிபிங்கிறீங்க இல்ல டிஎஸ்பிங்கிறீங்க...ஒங்களுக்கு மனசுக்குள்ள என்ன தெனாலி பட ரமேஷ் கண்ணான்னு நெனப்பா?"

"(சிரிச்சிக்கிட்டே)அதெல்லாம் எங்களுக்குத் தெரியாது. போலீஸ்ல நான் சேர்ந்துட்டா, ஒன் தம்பிக்கும் ஒங்க டாடிக்கும் போலீஸ் டிஐஜி வந்து சமைச்சுப் போடுவாரானு சொல்லு...ஒக்காந்த எடத்துலேருந்தே அதை கொண்டாங்க இத கொண்டாங்கன்னு வேலை வாங்குறானே ஒன் தம்பி அவனுக்கு வேலை செய்ய யாராவது இன்ஸ்பெக்டர் வருவாங்களான்னு சொல்லு. நான் இப்பவே போலீஸ்ல சேந்திடறேன்?"

"கொஞ்சமாச்சும் நாட்டு மேலயும் இந்த சமுதாயத்து மேலயும் உங்களுக்கு அக்கறை இருக்குதா. எப்ப பாத்தாலும் சமைக்கிறதும், சாப்பிடறதுலயுமே இருங்க. ராஜஸ்தான்லேருந்து ரோமிங்ல எஸ்டிடி போட்டு பேசிட்டு இருக்குறேன்...இப்பிடி கிண்டல் பேச்சு பேசிட்டு இருக்கீங்களே?"

"இருக்குற வேலை எல்லாத்தயும் வுட்டுட்டு ராஜஸ்தான்லேருந்து எஸ்டிடி போட்டு, போலீஸ் ஆகப் போறேன்னு நீ பிளேடு போட்டுட்டு இருக்கே...உன் கிட்ட எப்பிடி பேசுவாங்களாம்?"

"இப்ப கிண்டல் பண்ணிட்டு இருக்கீங்க. ஒரு நாள் இல்லன்னா ஒரு நாள் அதோ போறாங்க பாரு பச்சை புடவை கட்டிக்கிட்டு ஒரு அம்மா...அவங்க தான் டிசிபி ராகவனோட அம்மான்னு ஊருல எல்லாரும் பெருமையாப் பேசத் தான் போறாங்க...நீங்களும் பாக்கத் தான் போறீங்க"

"மொதல்ல உங்க தொப்பையைத் தூக்கிட்டு ஓடிப் போயி நாலு திருட்டுப் பசங்களைப் புடிச்சி காட்டுங்க...அப்புறம் பாக்கலாம்"

சே! யாருமே என்னைய புரிஞ்சிக்க மாட்டேங்கிறாங்குளே? சின்ன வயசுல "இது தாண்டா போலீஸ்" பாத்துட்டு போலீஸ் ஆகனும்னு வந்த ஆசை, இப்ப "வே.வி." பாத்ததும் திரும்ப வந்து நம்மளை கவ்விக்கிச்சு. ஆனாலும் இந்த வாட்டி போலீஸ் ஆகாம வுடறதில்லைன்னு டிசிபி ராகவரு உறுதியா இருக்காருங்க. இளா, அமுதன்னு பேரு வச்சிட்டு திரியறவிங்கிய எல்லாம் எதுக்கும் கொஞ்சம் சாக்கிரதையாவே இருந்துக்கங்கப்பு. கோவத்துல போட்டுற கீட்டுற போறேன்? அப்ப மேலே படிச்ச நக்கலும், கிண்டலும் என்னான்னு கேக்கறீங்களா...அது "Another episode in a Police Officer's Life"